Saturday 15 September 2018

பேரூர் ஆதீனம் அவர்களுக்குக் கையறு நிலைப்பாடல்


  சிவத்தொடு கலந்த சிவமே போற்றி!
உலகம் உய்யவே உளமிகக் கொண்டு
     ஊண்தனை ஊட்டிடும் உழவரும் நீரே!
மலரது மாட்சியாய் மாந்தர் மனமதில்
     மாசிலா ஒளியாய் ஒளிர்பவர் நீரே!
இலமென வந்த ஏழையர் தமக்கு
     இன்முகம் காட்டும் வள்ளலும் நீரே!
பலரும் போற்றிப் பரவும் தேவே!
     பணிந்தோம் உம்மைப் பரமனடி போற்றியே!        1

என்னைப்போல் உள்ள எண்ணற்ற புலவரை
     எம்தமிழ் நாட்டிற்கு ஈந்த வள்ளலே!
உன்னைப்போல் யாருளார் உயர்தமிழ் வளர்க்கவே
      உள்நா வறண்டுபோய் நிற்கிறோம் ஐயனே!
நின்னால் தானே நிமிர்ந்தோம் தமிழரென
     நின்னடி தொழுதே வணங்கி நிற்கிறோம்
கன்னல் மொழியால் களிப்பினைத் தந்தவரே!
     கவலைக் கடலுள் ஆழ்த்திச் சென்றீரே!             2.

அனைத்துயிரும் வாழவே அனுதினம் உழைத்திடும்
     அரும்பணிச் செம்மலே அடிபணி கின்றோம்
தினைத்துணை தீங்குமே சிந்தையில் கொள்ளாத்
     திடமான எண்ணத்தைத் தந்த தெய்வமே!
மனிதனை மையமாய்க் கொண்டிவண் பணிசெயும்
     மாணிக்கக் குன்றே மலரடி தொழுகின்றோம்
இனிமேல் யாருளார்  எங்களைக் காத்திட
     இதயம் வலிக்குதே எழுந்து வாராயோ!.            3

அங்கம் தன்னில் லிங்கம் தரித்தே
     அருளொடு அறத்தினை அருளும் நாயகரே!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
     எங்கும் என்றும் நிலைக்க அருள்வாயே!
பங்கமிலா வாழ்வினைப் பாரோர் பெற்றிடப்
     பண்புகொள் சொல்லினை என்றும் பகர்ந்தாயே!
கொங்கர் வாழ்வு குறைவின்றிச் சிறக்க
     கொடுக்கும் அருளாசிக் குன்றமே குலைந்தாயே!          4         

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும்
     தீந்தமிழ் நாட்டு தெய்வமாம் முருகனும்
புரிநூல் குறுமுனி அகத்தியப் புலவனும்
     புன்மைதீர் சிந்தைகொள் தொல்காப் பியனும்
விரித்து உரைத்த சங்கத் தமிழை
     வையத்தில் வளர்க்கவே கல்லூரி வைத்ததை
அரிய செயலாய் அகிலமே போற்றுதே
     அன்பின் கொழுந்தே அடிதனைப் பணிகின்றோம்!    5.

ஆரிய மொழியின் அர்ச்சனை தன்னை
     அருந்தமிழ் மொழியில் மலர்வழி பாடாக்கி
நேரிய வழியில் குடமுழக்கு நிகழ்த்தி
     நெற்றிக்கண் ஈசனார் பாசுரம் அனைத்தும்
சீரிய தமிழர் நிகழ்வில் எல்லாம்
     செப்ப வழிகண்ட செந்தமிழ்த் தேவே!
பாரிடம் எங்கும் பைந்தமிழ் வளரவே
     பணிதனைச் செய்த பரமனே பணிகின்றோம்!       6.

உலகப் பொதுமறை தன்னைப் போற்றியே
     உயர்மிகு பொழிவுகள் நிகழ்த்திய மன்னனே!
பலபரிசை நல்கினீர் பயிலும் மாணவர்க்கே   
     பல்சமய மாந்தரும் பாராட்டும் வேந்தே!
நலம்பெற நாட்டினில் நன்மாரி பெய்ய
     யாகங்கள் நிகழ்த்திய எங்கள் அரசே!
அலமரும் மக்களின் அல்லல் நீங்கிட
      அருளாசி தந்த எங்கள் கோவே!                  7

பிறந்தாலே முக்திதரும் பேரூர்த் திருநகரில்
     பிஞ்ஞகன் கழல்போற்றும் சாந்தையர் திருமடம்
அறச்சாலை தன்னில் அன்றாடம் நீங்காமல்
     அன்னம் பாலிப்பு அளித்திடும் அருளாளா!
திறந்தே இருந்திடும் தாளறியா நெடுங்கதவம்
     திருக்கூட்ட வரவை எதிர்நோக்கி நின்றிடும்!
துறவிகள் கூடியே துதித்துப் போற்றிடும்
     துவராடைச் செல்வமே      துதிக்கிறோம் நாளுமே!           8 

சிறப்பொடு பூசனை நடவாக் கோவிலைச்
     சீர்திருத்தித் திருக்குட நீராட்டு செய்வித்தீர்
மறந்திடச் செய்தீர் உயிர்ப்பலி தன்னை
     மாக்களைக் கொல்லல் மக்களும் தவிர்த்தனர்                
அறவே நீக்கினாய் சாதிக் கொடுமையை
     அனைத்து சமயத்தார் அண்டினர் உம்மிடம்
பறவைகள் நாடிடும் பழமரம் ஆனதே
     பேரூர்த் திருமடம் உனது அருளாலே!.             9

விண்ணகத் தேவரும் வேண்டிக் கொண்டதால்
      விரிசடைக் கடவுள் மேன்மை விளங்கிட
மண்ணகத் தேவர் சாந்தலிங்கர் உரைத்த
     நாற்பெரு நூல்களை நவிலச் சென்றனையே!
தண்டமிழ்க் குறளும் பன்னிரு திருமுறையும்
     தேவர்க்குச் செப்பவே தேடிச் சென்றனையே!
அண்டர் நாயகர் அன்பினில் கலந்து
     அவனுடன் அவனாய் ஆக்கிக் கொண்டனையே!          10

தொல்காப்பியர் பேரவைத் தொண்டன் சொல்லிய
     பாடல்கள் பத்தும் பதமலர் காணிக்கை!
இல்லவர் உள்ளவர் வேற்றுமை நீக்கி
     இன்னுரை பகர்ந்த இறைக்குக் காணிக்கை!
கல்லா ஏழையர் கற்ற அறிஞரும்
     கைதொழு தேத்தும் கடவுளின் காணிக்கை!
வில்வம் சூடிய விரிசடைக் கடவுளின்
     திருவடி கலந்த சிவமே காணிக்கை!                    11        

 திருவடி வணங்கி நிற்கும்
தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் பேரவை,
முத்தம்மாள் நிலையம்
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232                                                         Email amuthankaliappan@gmail.com                  
                                                     

         













    

      


No comments:

Post a Comment