Saturday 15 September 2018

கையறுநிலை திருவள்ளுவர் நாராயணசாமி


  நமைவிட்டுப் பிரிந்த நாராயணசாமியின்             பெரியார் படிப்பகம்,
நினைவேந்தல் நிகழ்வு                     காந்திபுரம், கோவை,
தொல்காப்பியர் பேரவையின் தொடக்க உறுப்பினர்      11-05-2018.
தொல்காப்பியப் பூங்கா நூலினைக் கைத்தந்து
தோள்மேல் சால்வையும் அணிவித்தார் அழகாக
நாள்தோறும் பேரவைதான் நன்றாய் வளர்வதற்கு
ஒருவரும் அறியாது உறுபொருள் தந்தவர்
கருஞ்சட்டைப் படையில் வெண்தாடி வேந்தர்க்காய்ப்
பச்சைத் தமிழனாய்ப் பதாகை தூக்கியவர்
அச்சமிலாத் தமிழனுக்கு அஞ்சலி செய்கின்றோம்!
சொன்மலர் தூவியே தொழுது பணிகின்றோம்!
நஞ்சம்மாள் காளியண்ணன் நற்றவப் புதல்வரே! 
நாக ரத்தினத்தின் நற்றுணை நாயகரே!
அந்தமிலா பேரறிவும் ஆழ்ந்த புலமையும்
இந்தப் புவியில் உன்னைப்போல் யார்பெற்றார்?
உந்து சக்தியாய் உலகிற்கு இருந்தவுன்னை
அந்தக் காலன்தான் அழைத்துச் சென்றானே!
ஆரியப் பாம்படிக்க ஈரோட்டுக் கோலெடுத்தாய்!
அருந்தமிழ் வளர்க்கவே கலைஞர் கரம்பிடித்தாய்!
மானமுறு தமிழருக்கு மறுமலர்ச்சி வேண்டுமென
மாதவிதழ் ஒன்றினை வெளியிட்டுச் சிறந்தவரே!
முந்தியவர் தமிழர் உலகிற்கு என்றுதான்
எந்நாளும் உரைக்கும் ஏற்றம் உடையவரே!
சிந்தனை யாளர் பேரவையைக் கூட்டியே
முந்தைய விதியென்று உரைக்கும் மூடரை
நிந்திக்கத் தயங்கா நிமிர்ந்த நெஞ்சினனே!
மந்தம் ஆக்கியது மனிதரை மதமென்றாய்!
நந்தமிழர் வாழ்வில் நலம்பல பெற்றிடவே
எந்நாளும் உழைத்தவரே ஏனோய்வு எடுத்தாய்?  
வள்ளுவன் குறளுக்குத் தெளிவுரை நீர்தானே!                                           









உள்ளுவதும்  செய்வதும் ஒன்றென இருப்பவரே!
கள்ளாமையும் கல்லாமையும் கற்பித்த வள்ளுவனை
உள்ளாத நாளெல்லாம் வீணான நாளென்றாய்!
வள்ளுவமே வாழ்க்கையாய் வாழ்ந்து காட்டியவா!  
வள்ளுவர் புகழ்பரப்ப வானுலகம் சென்றாயோ?
உள்ளங்கவர் நாயகா! நாராயண சாமியே!
வள்ளுவன் குறள்போல வையம் உள்ளவும்     
வள்ளுவரை நேசித்த வண்டமிழா உன்பேச்சை
உள்ளத்தில் இருத்தியே உழைப்போம் உன்வழியே!  

தனக்குவமை இல்லாத பகுத்தறிவுப் பகலவனின்
   தாளினுக்கு மலர்சூட்ட தனியாகச் சென்றாயே!
மனக்கவலை உற்றே மாந்தர் நாங்கள்
மாநிலம் தன்னில் மயங்கி நிற்கிறோம்
உனக்கிது தகுமோ? ஓலமிட்டு அழுகின்றோம்
எங்களை விட்டுநீ எப்படித்தான் சென்றாயோ!
இனவுணர்வை எங்களுக்கு ஊட்டிய ஏந்தலே!
   இனிமேல் யாருளார் உன்னைப்போல் எங்களுக்கே!

படிமிசை குறளினைப் பகர்ந்த வள்ளுவர்         (படி-உலகம்)
அடியவர்க்(கு) அடியனாய் ஆட்படுத்திக் கொண்டு
செடியாய வல்வினைகள் தீர்க்கும் பெரியாரின்     (செடி-கொடிய)
அடியை அடைந்து அமைதி கொண்டாயே!
                   இப்படிக்கு
                நீங்கா நினைவில்
         தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன் எம்ஏ.,எம்எட்.
              (தொல்காப்பியர் பேரவைத்தலைவர்)
         அகவைமுதிர்ந்த தமிழறிஞர் புலவர் ப.வேலவன்
              (தொல்காப்பியர் பேரவைச் செயலாளர்)
         கவிச்சுடர் கா.உமாபதி எம்ஏ.,பிஎஸ்ஸி.,பிஎட்,எம்ஃபில்
             (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்).

No comments:

Post a Comment