Saturday 28 April 2018

ஓய்வு கவிதை


                   ஓய்வு                                 
ஐம்பத்தெட்  டானது அரசுப்பணி   போனது
அத்தனை வருவாயும்  அரைவாசி  ஆனது
மக்களும்  மனைவியும் மதிக்கத்  தவறினர்
                  என்னுங்கோ என்பவள் யே!எனக்  கேட்டாள்
ஏழுமணி  ஆனது ஐந்துமணிக்  காப்பி 
கோப்பை  ஒருகையில் தினத்தாள் மறுகையில்
என்றே பழகி இருந்தவனுக் கிப்போது
எத்தனை ஏசல்கள் எத்தனை ஏவல்கள் 
மரமே நடுங்கும்  மார்கழிப் பனியில்
பாலொடு  தினத்தாள் வாங்கி வரும்பணி
தொட்டிக்குத் தண்ணீர்  தோட்டியிடம் குப்பையைக் 
கொட்டி  வருவதும் கால்மிதியைத்  தட்டுவதும்
வீதிவியா பாரியைக் கூவி நிறுத்துவதும் 
வீட்டார்  படுத்தபின் வெளிக்கதவைப் பூட்டுவதும் 
அன்றாட அலுவல்கள்   அத்தோடு மட்டுமா
தொலைபேசி மின்சாரக்  கணக்கெல்லாம் வைத்திருக்கும்
தலைமை எழுத்தர்  வீட்டில் உள்ளோர்க்கு
சுட்டிப்பய   லாயியங்கும் குட்டிப் பணியாள்நான்
பேரனை மடிவைத்து குளித்தாள் மனைவி 
ஆணுக்குள்ள ஆசையும்  அத்தோடு அறுந்தது
ஐம்பத்தெட்டு ஆனது அத்தனையும் போனது

அடக்கி வைப்போம் அலைபேசியை கவிதை


அடக்கி வைப்போம் அலைபேசியை
அறிவியல் குழந்தைகள் ஆயிரம் உண்டு
அலைபேசி என்பது அதன்கடைக் குட்டி
அவணியே குனிந்து அதனைக் கொஞ்சுது
பிறந்த போதோ பேச்சுமட்டும் இருந்தது
வளர்ந்த பின்பு வையத்தை வளைத்தது
சொந்தக் குழந்தையோ சோகம் கொள்ள
இந்தக் குழந்தையை ஏந்தினர் கையில்
பைத்தியம் ஆகியே செய்தொழில் மறந்தனர்
தொட்டில் குழந்தையும் கட்டில் கிழவனும்
கட்டுண்டு கிடப்பது கையளவு பெட்டியில்
அரசனும் ஆண்டியும் அதனிடம் மயங்கினர்
கரவிரல் கொண்டே கண்டனர் உலகை
சுயசிந்தனை என்பதைச் சுத்தமாய்த் துடைத்து
மூளையின் ஆற்றலை முடக்கிப் போட்டது
ஊணும் உறக்கமும் மறக்கச் செய்து
உறவையும் நட்பையும் ஒதுங்கச் செய்தது
உரையாடல் விளையாடல் ஒழிந்து போனது
மாதும் சூதும் மயக்குவது போலவே
காதுக்குள் பேசியே காலத்தைக் கொல்வது
கணவன் மனைவி உறைவைக் கெடுத்ததால்
குழந்தைப் பிறப்பும் குறைந்து போனது
களவையும் கற்பையும் கற்றுக் கொடுக்குது
கலியுகம் அழிக்கக் கங்கணம் கட்டுது
அமிழ்தையும் நஞ்சையும் கலந்து கொடுக்கும்
அலைபேசி அதனை அடக்கி வைப்போம்!

கோல்கள் கவிதை


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.என்று  படித்தபோது உதித்த கவிதை
   கோல்கள் எத்தனை கோல்கள்!
அறத்திற்கு ஆதியான மன்னன் கோலை
பயனடைந்தோர் செங்கோல் என்றே கூற
பாதிக்கப் பட்டோர் தாமும் நாளும்
பயனிலாக் கொடுங்கோல் என்று கூற
இருவரும் கன்னக்கோல்  திருட னென்பார்
உண்மையை உணர்ந்த சான்றோர் என்றும்
ஆசானின் பிரம்பு கோலுக்கு அஞ்சாதான்
காவலரின் லத்திக் கோலால் மொத்துண்டார்
நட்டுவனார் இசையாம் திறவு கோலும்
கட்டிய பாட்டாம் ஊன்று கோலும்
கைதட்டி பாராட்டும் தூண்டு கோலும்
கிட்டாத நடன மங்கைதான் பெற்ற
தலைக்கோல் பட்டமும் வீணே யாகும்
கண்ணிலான் பெற்ற வெண்மைக் கோல்போல்
காந்தியின் கையிலுள்ள வளைந்த கோலும்
காட்டினவே பாதைனை நாட்டிற் கன்று
அன்புக்கு அளவுகோல் உண்டோ பாரில்
நட்புக்கு கத்திரிகோல் (பிடி)வாத மாகும்
கிட்டிக்கோல் போட்டுதான் நெருக்கும் போதும்
சூட்டுக்கோலால் சூட்டினை வைத்த போதும்
வைக்கோல் தின்னா மாட்டை வாயில்லாச்
சீவனென்று வற்புறுத்தி வேலை வாங்கா
ஒளைக்காக் கோல்கூட மிஞ்சா உழவன்
கவைக்கோலால் எளிதில் தள்ளி முள்ளின்
வாதினை வசமாய் வெட்டல் போல 
ஆவியாய்ப் போகும்  குளத்து நீரைத்
தெரமாக்கோல் போட்டு மூடிச்  சேரவே
பெவிக்கோலால் ஒட்டு வேண்டும் என்று
மந்திரிக்கு புத்தி சொன்ன மேதாவி
ராசுக்கோலுக்கு பஞ்சப்படி குறைத்தல் நியாயம்
சன்னக்கோல் நெம்புகோல் போட்ட போதும்
சடுதியில் நகராத கோப்புத் தானும்
துன்னு கோலாய்  லஞ்சம் நுழைந்தால்
அங்குசக் கோலுக்கு அடங்கும் யானையாகி
துலாக்கோல் நானென்று உரைப்போர் சகுனி
தாயக் கோலாய் மாறிப் போவார்  
கொத்தனார் மட்டக்கோல் கொஞ்சமும்மா றாதய்யா
மந்திர வாதியின் கையுள்ள கருப்புக்கோலால்
மணியத்தின் அடிக்கோல் கவர்கோலாய் மாறுதய்யா
பாட்டியின் புட்டுக் கோலும் பஞ்சாய்
இராகிக் களியினைக் கிளறும் களிக்கோலும்
குக்கரின் கூச்சலாலே மறைந்துதான் போனதய்யா
முக்கோல் தண்டக்கோல் கொண்ட முனிவனும்
கைக்கோலுக்கு அஞ்சும் குரங்காய்  நாளும்
காசுக்கு அடிமையாகி காலத்தைக் கழிக்கிறாரே!
      ஆக்கம் புலவர் ஆ.காளியப்பன்

தொல்காப்பியம் நமக்குக் கிடைத்த முதல்நூல் --


        நமக்குக் கிடைத்த முதல்நூல் -- தொல்காப்பியம்
       =================================================== 
   உலகின் முதல் நூல்;திருக்குறளின் முன்னோடி; ஆழிப்பேரலைக்கு அகப்படா நூல்; அனல்  புனல்  அத்தனையும் வென்ற நூல்; அதங்கோட்டாசான் தடைக்கு விடை கூறி வெளிவந்த நூல்; பனம்பாரனாரின் பாயிரம் கொண்ட நூல்; எல்லா இயங்களுக்கும் (இயம்=இசம் கம்யூனிசம், சோசலிசம் உள்பட)வேராய் விளங்கும்நூல்;உயிருக்கு விளக்கம் உரைத்த நூல்; வள்ளுவனையும் கம்பனையும் வளைத்துப் போட்ட நூல்; சிலம்பு தந்த இளங்கோவைச் சிந்திக்க வைத்த நூல்;இடைச்சங்கத்தாருக்கும், கடைச் சங்கத்தாருக்கும் இதுவே இலக்கண நூல்; இன்றைக்கும் அந்நிலைதான்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைப் பகரும்நூல்; நாகரிகச் சிறப்பை நவிலும் நூல்; ' இத்தனை பெருமைகளையும் இயல்பாய்க் கொண்டது; முழுமையாய்க் கிடைத்த முதல்நூல்; அதுவே தொல்காப்பியம். தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம். காப்புத் (காவல்) பழந்தமிழர் பண்பாட்டைத் தொன்மையைக் காக்கும் நூல். 
   தொல்காப்பியம் ஏன் அறியப்படா (பாமரருக்கு)நூலானது,பண்டிதர் மட்டுமே புரிய முடி.யும். அஃது ஓர் இலக்கணநூல்.அதைப் பயில்வது சிற்றுளி கொண்டு பெருமலை பிளப்பதற்கு ஒப்பாகும் என்று உரைத்து வைத்தனர்.வாழைப் பழமாய் உள்ளதைப் பலாக்கனி எனச் சொல்லி மிரட்டினர்.அதனால் படிப்பு மட்டுப்பட்டோர் பயந்து நின்றனர்.உரை எழுதியோர் தன் மொழிப்புலமையை வெளிப்படுத்த, உத்தி என்னும் விதி காட்டி, தம் எண்ணத்தை எல்லாம் கொட்ட நினைத்ததால், பரண்மேல் போடப்பட்டது. மொத்தத்தில் அனைவராலும் எழுத்திலும், சொல்லிலும் எடுத்து ஆளப் படாததே முதற்காரணம். 
     ஏன் தொல்காப்பியத்தை முதன்மைப் படுத்தவேண்டும்? எழுத்தையும் சொல்லையும் அவை தரும் பொருளையும் புலவர்கள் படிக்கட்டும். நமக்கு எதற்கு என்ற மழுங்கிய வாதத்தை விட்டு உண்மை யாதென உணர்வோம்.
   தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப் பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும்,  இன்று வரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான  நூல் இதுவே. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழி நூல்களும் சார்பு நூல்களும் தோன்றின. எல்லா நூல்களையும் திருக்குறள் ஆண்டது. திருக்குறளையே ஆண்டது தொல்காப்பியம்.                  
   தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றின் இலக்கணங்களை முறைபடக் கூறுவது.உலக மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் இருக்க தமிழ் மொழிக்கு மட்டுமே வாழ்வியல் கருத்துகள் பொதிந்து கிடக்கும் பொருளதிகாரம் தொல்காப்பியரால் அமைந்தது.பண்டைத் தமிழர் வாழ்வியலை அகம், புறம் என வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த புகழ் ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும்.அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விவரிக்கும். இப்படி வளமாக வாழ்ந்த  தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இஃதுஒளிர்கின்றது(த.பி.பா)  
.  
                                                                     


     தொல்காப்பியம் என்னும் நூலை 'ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்படுபவரும் தி.மு.(திருவள்ளுவருக்கு முன்) அறுநூற்றி எண்பதாம்  கி.மு.711 உலகம் ஒப்பியது.) ஆண்டு வாக்கில் வாழ்ந்த வருமான தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கண நூலை இலக்கிய வடிவில் படைத்தருளினார். நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்னும் ஐந்திரம் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியம் ஆதாரம் இல்லை) கண்டிருந்தார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம்மிடையே உலா வருகின்றது.தமிழ் மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்கும் தொல்காப்பியம்,இப்பேரவை பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழிக் கயிலைமாமணி சாந்தலிங்க இராமசாமி அடிகளார் பேரூர் ஆதீனம் அவர்களால் மக நன்னாளில் தொடங்கி வைக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று தொல்காப்பியர் நாள் கொண்டாடப்படுகிறது. இத்தகு பெருமைமிகு தொல்காப்பியத்தை ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் இருக்கச் செய்வதே தொல்காப்பியப் பேரவையின் நோக்கம். நோக்கம் நிறைவேறத் தமிழ்கூறு நல்லுலகம் உதவுக. ஒவ்வொரு திங்களும் முதல் ஞாயிறு முற்பகலில் பேரூர்த் தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரியில் பேரவையின் அமர்வு நடைபெறும்.அனைவரும் வருக!
     தொல்காப்பியமே துணை!                தொல்காப்பியரே வழிகாட்டி!
                              
             
   ஆக்கம் தொல்காப்பியச்செம்மல்
           புலவர் ஆ.காளியப்பன்,எம்ஏ.,எம்எட்.,
            தொல்காப்பியர் பேரவைத் தலைவர்    ,     
            முத்தம்மாள் நிலையம்,
            பூலுவபட்டி(அஞ்),
      கோயமுத்தூர் 641101
                              அலைபேசி 9788552993 / 8610684232
                          மின்அஞ்சல் amuthankaliappan@gmail.com
                          pulavarkaliappan.blogspot.in