Thursday 26 December 2019

தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன் வரலாறு வ


கொங்கு நாட்டுப் புலவர் ஆ.காளியப்பன்(வரலாறு)

சங்கத் தமிழ்பேசும் கோவை கிழக்காக
மங்காப் புகழ்மிகு மருதமலை வடக்காக
சிங்கம் வாழ்ந்திடும் ஐயாமலை தெற்காக              
கங்குபோல் ஒளிர்ந்திடும் வெள்ளிமலை மேற்காக           

எல்லையாய்   விளங்கிட இவற்றிற்கு இடைப்பட்ட
முல்லையும் குறிஞ்சியும் முக்கடாய் விளங்கிடும்           
நெல்லைப் பயிர்செய்யும் மருதத்து நடுவில்                              
கல்லையே  புழுதியாக்கும் காராளர் நிறைந்தது

வில்லை ஓட்டுவீடுகள் விளங்கு பூலுவபட்டி
அல்லும் துன்பமும் அற்ற அவ்வூரில் 
இல்லார் துயர்களையும் ஆதி குலத்தில்
தில்லை ஈசனைச் சிந்தையுள் இருத்திய

வனக்காவலர் பழனிக் கவுண்டர் ஒடையாத்தாள்
மனதிற்கு உகந்த மகனாம் ஆறுக்குட்டி
தினக்கூலி செய்தாலும் தீங்கிலாக் காளையெனக்
குணமிகு முத்தம்மாள்  குலபெண்ணாக வந்தாரே

படையல் இட்டார் பத்திர காளிக்கு (குலதெய்வம்)
விடையேறி  சிவனை வேண்டிய வரத்தால்
துடைத்தெரிந்து துன்பத்தை தோன்றினார் காளியப்பன்
மடைதிறந்த வெள்ளமென மகிழ்ந்தனர் சுற்றத்தார்

ஆயிரத்து தொள்ளாயிரத்து  ஐம்பத்து நான்கில்(13-05-1954)
தேய்பிறைச் சித்திரை(8) விசாகம் செவ்வாயில்
ஆய்மயில் வாகனன் அவதரித்த நன்னாளில்
தாய்தந்தை மகிழ்வெய்த தரணியில் பிறந்தார்

நோஞ்சானாய் இருந்தாலும் நோய்நொடிகள் இல்லாது
காஞ்சிமா நதிதன்னில் மீன்பிடித்து விழுதினை
ஊஞ்சலாய் பற்றியே விளையாடும் ஒருமகனைத்
தீஞ்சுவைத் தமிழ்பயிலச் சேர்த்தார் பள்ளியிலே

விடுமுறை வந்துவிட்டால் வேலைக்குச் சென்றிடுவார்
கடும்வெயில் படுமழை பாராது உழைத்தார்
கொடுவாள் கையேந்தும் கருப்பராயன் கோவிலுக்குத்
தொடுத்த மாலையுடன் தொடர்ந்து சென்றாரே

பிணக்கேது மின்றியே பள்ளிக்கும் சென்றதனால்
கணக்காயர் நஞ்சுண்டன் ராமசாமி உதவியால்
உணவோடு உடைபெற்று உயர்ந்தார் கல்வியில்
தன்னுடைய திறமையால் தக்கவைத்தார் முதலிடத்தை                       
    
சாந்தலிங்கர் கல்லூரி வார்த்த தமிழ்ப்பாலும்
சாந்தலிங்க  ராமசாமி அடியார் அருளாலும்                      
சாந்தமிகு வையா புரியார்   இலக்கணமும்                        
ஏந்தலுக்கு ஈந்ததே புலவர் பட்டத்தை
                                                                    
புதுக்கோட்டைக் கல்லூரி புலவர் பட்டயத்தை
இதுவென்று எழுத்தால் ஈந்தது இவருக்கு
அதுமுதல் வேலை தேடியே  மும்பைமுதல்            
மதுதேடும் வண்டாய் மாநிலத்தில் அலைந்தாரே

திருமகளைத் தேடியே பலதொழிலைச் செய்கையிலே                       
கருவில் வைத்தீன்ற தாயுந்தான் மறைந்தார்                    
தெருக்கடைச் சிக்கலால்  சிறைக்கும் சென்றார்
குருவாய்க் கல்விதந்தார் சேரிவாழ் இளைஞர்க்கு

பஞ்சணைப் பள்ளிமீது பால்கொண்ட கையினோடு
கஞ்சர்கள் கன்னியோடு களிப்பினில் மூழ்கிநிற்க
நஞ்சினை உண்டவர்போல் நாமெல்லாம் வெந்த
கஞ்சிதனை குடிப்பது எதனால் ஐயா

உழைப்பினை விற்றுவிட்டு வாயற்று இருப்பதாலே
பிழைப்பினைப் பறிகொடுத்து பேசாது இருப்பதாலே
இளைத்தோம் என்றுகவி புனைந்தார் அப்போதே
காளையாய் இருக்கையில் கவிஞர் ஆனாலும்

கன்னியையும் கடவுளையும் கவியால் புனையாது
பண்ணையாள் படியாள் பற்றியே சிந்தித்தார்
திண்ணமாய் ஒருநாள் தொழிலாளி ஆளுவான்
அன்றுதான் துன்பம் அடியோடு போகுமென்றார்

பெரியார் கொள்கை     பெரிதாய் வளர்ந்தது  
அறியாத மக்கள் அதனையே நம்பினர்
அரிக்கும் கரையானாய் ஆட்சியர் மாறியதால்
தெரியாது போயிற்று தமிழன்னை சீர்மைகளே 

வள்ளுவர் கோட்டத்தால் வளரவில்லை வண்டமிழும்
பள்ளியிலும் கோவிலிலும் தண்டமிழைப் புறந்தள்ளி
மெல்லச் சாகடிக்க மேன்மேலும் முயலுவதை
நல்லதமிழ் கவியாலே நாளும் சாடியவர்

இந்தச் சிந்தனையால் எதிரியானார் பலருக்குச்
சொந்த பந்தமும் தூரத்தில் நிறுத்தியது
கந்துவட்டிக் காரனும் காசுதர மறுத்திட்டான்
முந்துவது காசென்று மூளையில் உதித்ததால்                                  
                                                                                           
நடத்துநர் பயணச்சீட்(டு) ஆய்வாளர் அஞ்சலகம்
நடத்தும் அதிகாரி நாளிதழ் முகவரென
இடம்காலம் எண்ணாமல் எப்பணியும் செய்தார்
தடத்தில் துணைவரத் தாரத்தைக் கைபிடித்தார்

இத்தனைக்கு இடையிலும் எம்ஏபி லிட்டும்
சித்தம் களிகூர இந்தியில் டிப்ளமோ
மெத்தப் படித்தே மேன்பட்டு விளங்கியதால்
உத்தமர் இவரென ஆசிரியர் ஆக்கினர்

இடைநிலை ஆசிரியர் பணியுதறி எந்நாளும்
இடையறா இன்பமீனும் இன்றமிழ் கற்பிக்க
கொடையாளி கோர்ட்டார் பள்ளியில் பணியேற்றார்
படைத்தார் சாதனையைப் பல்லோரும் போற்றிடவே

மாவட்ட முதலென்றும் மாநில முதலென்றும்
ஆவதற்கு மாணவரை ஆக்கி விட்டதனால்
ஏவாதே எப்பணியும் எந்நாளும் செய்ததனால்
தாவிலா (உதவி) தலைமை ஆசிரியர் ஆக்கினரே(தாவு=குற்றம்)

காந்திகலா நிலையம் கரங்கொடுத்(து) உதவியதால்
இந்துமதி உமாபதி இருமகவைப் படிக்கவைத்தார்
ஐந்துபாடமும் கற்பித்துச் சேர்த்தார் செல்வத்தை
நைந்தது இவர்வாழ்வு மாரடைப்பு வந்ததனால்

ஏழை மாணவர்க்கு எந்நாளும் உதவியதால்
தாழையாய் மணம்பரப்பி தரணியில் உயர்ந்தார்கள்
பாளையாய்  போனதில்லை இவரிடம் பயின்றவர்கள்
நாளைய தலைமுறை நன்றாகும் இவருழைப்பால்

அருந்துணை அம்சவேணி  அறிவுத் திறத்தால்
வருவாய் கூடியதால் வளமனை கட்டினார்
திருவளர் புதல்வியுடன் சேர்த்தார் ராசேசை(மருமகன்)
முருகுமிகு சேந்தனமுதன் முதற்பேரன் ஆனானே

ஓய்வூ தியங்கூட ஒருவகைச் சம்பளந்தான்
தாய்மொழித் தமிழுக்கும் சமுதாய நலனுக்கும்
ஓய்விலா(து) உழைத்தால்தான் உணவே ஒட்டுமென்பார்
பாயில் படுத்தவுடன் தூக்கம் வருமென்பார்.

இப்படிச் சிந்தித்து எடுத்தார் ஒருமுடிவை
தப்பாது தமிழர் வாழ்வு சிறந்திடவே
முப்பாலும் முனைவன் மொழிதொல் காப்பியமும்
எப்பாலும் பரவிட ஏற்றமுறை கண்டாரே                                              

இலக்கியத்தின் வேரான இன்றமிழின் இலக்கணத்தைத்
துலக்கமுறச் செய்யவே தொல்காப்பியர் பேரவையைப்
பலசான்றோர் உடனிணைந்து சாந்தலிங்க அடிகள்
நலமிகு கல்லூரியில் நன்னாளில் தொடங்கினரே

மெய்கண்டார் வழிவழி மேன்மைகொள் அடியாராம்
கயிலைக் குருமணி இராமசாமி அடிகளாரும்
உய்யவே உலகமது உள்ளதில் அருள்கூர்ந்து
மெய்யன்பால் தொடங்கினார் தொல்காப்பியர் பேரவையே!

முப்பொருள் தன்னை மூவிலக் கணமாய்ச்
செப்பிய காப்பிய இலக்கணம் தன்னை
இப்புவி உள்ளோர் எளிதில் புரிய
செப்புகின்ற திறன்மிகு காளியப்பன்
தனக்குத் தண்டமிழ் ஐக்கியச் சங்கம்
மனமுவந்து தந்தது மாசறு விருதாம்                                 
தொல்காப்பியச் செம்மல் தொடரட்டும் அவர்பணி
நல்லுலகு தன்னில் நலமுடன் வாழ்க
தொல்காப்பியமே  துணை! தொல்காப்பியரே வழிகாட்டி!                                              
         தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வெளியிட்டு உள்ள யாப்பறி புலவர்கள்   என்ற நூலில் புலவர் ஆ.காளியப்பன் வரலாறு