Friday 26 August 2022

தொல்காப்பியம் கூறும் தாவர மரபியல்

         தொல்காப்பியத்தில்   தாவரவியல்  மரபு

               புலவர் ஆ.காளியப்பன்

தொல்காப்பிய நூலின் பணியே  முன்னோர் தொன்மையை அதாவது மரபினைக் காப்பதே  ஆகும். அதனால் தான் தொல்காப்பியர் தமது நூலின் முதல் இயலை நூல் மரபு எனத்தொடங்கி , இறுதி இயலை மரபியல் என முடிக்கிறார்.அதுமட்டுமின்றி  நூல்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு, மரபியல் என்று தம் 27-இயல்களில் 5 இயல்களுக்குப் பெயர் சூட்டியுள்ளார். அதே சமயம் மரபு என்னும் சொல்லை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிட்டு உள்ளார் அவற்றுள் மரபியல் என்னும் இயலில் பலமரபுகளைக் கூறி உள்ளார்.

தலைமுறை தலைமுறையாக வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தில் யானும் ஒருவன்என்ற சொற்கள்  நினைவுக்கு வருகின்றன. பொதுவாகத் தாவரங்கள் விதை மூலமாகவோ பதியன் மூலமாகவோ தான் உற்பத்தி செய்யப்படும். ஆனால் வாழையின் அடிவாழையிலிருந்து கன்றுகள் உற்பத்தியாகின்றன. அதே போல் அருளாளர்கள் தானே பிறக்கிறார்கள் அவர்கள் கூறுவதைப் பின்பற்றுவதே மரபு.  

      மரபு என்பது உடலிலும், உணர்விலும், அறிவிலும், சமுதாயத்திலும், மொழியிலும் மரத்துப்போன ஒன்று. அது பூக்கும், காய்க்கும், பழுக்கும், விதையாகும், அதன் கால்வழியில் தோன்றும் இனத்தில் ஊறி மரத்துக் கிடக்கும்.  ஒரு காலத்தில் செய்யப்படுகின்ற செயல்களில் உண்மையும் நன்மையும் மேன்மையும்  இருப்பின் அவை பின்வரும் தலைமுறையினரால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு வழிவழியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன. இவையே பின்னாளில் மரபாக நிலைத்து விடுகின்றன.

   பழைமையைப் பேணுவதும், முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும், மரபின் முக்கியக் கூறுகள் ஆகும். ஊர்தோறும் நாடுதோறும் மக்களினம் வாழும் இடந்தோறும் இம்மரபுகள் நீக்கமற நிறைந்துள்ளன. மரபு அல்லது பாரம்பரியம் (Heredity) எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிடமிருந்து, சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும்

பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியே மரபு’ (Tradition) என்கிறது தமிழ் அகராதி.

மரபியல்  தனிநபர்கள் மற்றும் மக்கள்தொகையின் முன்னேற்றத்தைப் பெறுவதற்கு  உற்பத்தி நுட்பங்களையும் மரபியலின் தளங்களையும் ஆய்வு செய்து பயன்படுத்துவது. மரபியலின் ஒரு பகுதியாகும் இதில்  தாவரவியல் மரபு பற்றிப் பேசப்படுகிறது .மரத்தையும் தெய்வமாக வழிபட்டனர் அதனைத் தொல்காப்பியம் கந்தழி எனக்கூறும்  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சி்றப்பாகும்.  

மரபு என்னும் இச்சொல் இலக்கணம் என்ற பொருளிலும் தொன்று தொட்டு வருகிறது.  மொழி முன்னோர் கூறிய மரபு வழியில் பேசப்படுகிறது.

மரபு என்பதை எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே (நூற்பா எண் 387என்கிறது நன்னூல். அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் மரபாகும்என்பதே இதன் பொருள். சொல்லையும் பொருளையும் மட்டும் அல்லாது அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் அவ்வாறே பின்பற்றுவதும் மரபே.

   ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேர்பொருளை உணர்த்தாமல் தொடரும் பயன்பாட்டில் வழிவழியாக வேறு குறிப்புப் பொருளினைத் தந்து நிற்கும்போது அவற்றை மரபுத்தொடர் அல்லது மொழி மரபு என்பர்.  முன்னோர் ஒரு குறிப்பிட்ட தகவலை அல்லது கருத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்திய சொற்தொடரை வழிவந்தோரும் பயன்படுத்துவதால் மரபுத்தொடர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். பொதுவாக வழங்கும் தொடர்களும், வட்டாரம் தோறும் - சமூகம் தோறும் சிறுசிறு வேறுபாட்டுடன் வழங்கும் தொடர்களும் ஆக தமிழில் ஆயிரக் கணக்கான மரபுத் தொடர்கள் உள்ளன.  இந்த மரபுத்தொடர்கள் கருத்தழகும் நடையழகும் கொண்டவை. மரபுநிலை திரிந்தால் மொழி பலவாகச் சிதையும்.
இதனைத் தொல்காப்பியர் "மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல்"
 என்று குறிப்பிடுகிறார்

 

மரபு என்ற சொல் இன்று மரபியல், மரபினம், மரபுக் கூறு, மரபுக் கலை, மரபுத் தொடர், மரபு நோய், மரபணு என்று பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருவதை  அறியலாம். கால் மரத்துப்போனால் உணர்வு தெரியாது. ஒருவன் தலைகீழாக நடக்கலாம். அது பயிற்சி. எல்லாரும் காலால் நடப்பது மரபு. பலருக்குக் காலால் நடப்பது  மரத்துப் போயிருக்கிறது. அதுபோலத் தமிழ்மொழியில் மரத்துப்போன செய்திகளைக் கூறுவது மரபியல்.இது தொல்காப்பியத்தை நிறைவு செய்யும் இயல். மரபியல் முன்னோரின் மொழிமரபு வலிமையானது என்பதை விளக்குவது. மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும். அந்த அடிப்படையில் ஓரறிவுடைய மரம் புல் இவற்றின் தொடர்புடைய தாவர மரபுப் பெயர்களைப் பார்க்கலாம்.

   மரபியலில் மரபு என்ற சொல்லால் வழங்கப்படுவன இருதிணை பொருள் குணனாகிய இளமை ஆண்மை பெண்மை என்பன பற்றி நெடுங்காலமாக வழங்கி வரும் சொல் மரபுகளே.             மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும்.

மரபுநிலை திரிந்துவரிற் பொருள் வேறுவேறாகும். அம்மரபுப்படியே நாம் பேசவும் எழுதவும்வேண்டும்  

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

            நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. 27   

    தொல்காப்பியர் ஓரறிவு உயிர்களாகிய தாவரங்களுக்கு விளக்கம் சொல்வதைப் பார்ப்போம்.

ஓரறிவுயிராவது உடம்பினாலறிவது ; ஈரறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் அறிவது ; மூவறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் அறிவது ; நாலறிவுயிராவது உடம்பினானும் , வாயினாலும், மூக்கினானும், கண்ணினானும் அறிவது, ஐயறிவாவது உடம்பினானும், வாயினானும், மூக்கினானும், கண்ணினானும், செவியினானும் அறிவது ; ஆறறிவுயிராவது உடம்பினானும், வாயினானும், மூக்கினானும், கண்ணினானும், செவியினானும், மனத்தினானும் அறிவது இவ்வகையினான் உயிர் ஆறுவகை ஆயின. இவ்வாறு அறிதலாவது  உடம்பினால் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும். நாவினாற் கைப்பு, காழ்ப்பு, துவர்ப்பு , உவர்ப்பு, புளிப்பு, மதுரம் என்பன அறியும் மூக்கினால் நன்னாற்றம் தீயநாற்றம் அறியும். கண்ணினால் வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை, கருமை, நெடுமை, குறுமை, பருமை, நேர்மை, வட்டம், கோணம், சதுரம் என்பன அறியும். செவியினால் ஓசை வேறுபாடும், சொற்படும் பொருளும் அறியும்.

      மனத்தினாலறியப்படுவது இதுபோல்வன வேண்டுமெனவும். இது செயல் வேண்டுமெனவும், இஃது எத்தன்மையெனவும் அனுமானித்தல். அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல்.இவ்வகையினான் உலகிலுள்ளவெல்லாம் மக்கட்கு அறிதலாயின. இனி அவற்றுள் ஓரறிவுயிர்களாகிய புல்லையும் மரத்தையும் பற்றிய மரபுகளைக் காண்போம்.    .

புல்லும் மரனும் ஓரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. என்று ஓரறிவுயிர் எனப்படுபவை  புல்லும் மரனும் என்றும்  இந்த இருவகையும் உடம்பினாலறியும்;  தாவரத்தின் வேறுபட்ட பிறப்பினவாகிய மக்கள், விலங்குகளின்  குழந்தைகல்   ஓரறிவினவாய் விளங்கும். எக்காலத்திலும் ஓரறிவினாவாக விளங்கும் எலும்பில்லாத  புழுவும் ஓரறிவுயிரே.

ஓரறிவு உயிர்களின் இளமைப்பெயர்களைத் தொல்காப்பியர்

 

பிள்ளை குழவி கன்றே போத்து எனக்

கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே. 24  என்கிறார் ஆனால்
நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே. 25 என்று கூறி நெல்லையும் புல்லையும் விலக்குகிறார்.

அந்தப் புல்லையும் புறக் காழனவே புல் என மொழிப. 86                                                                            

ஓரறிவுடையன. புறவயிர்ப் புடையனவற்றைப் புல் என்று சொல்லுவர்  .அவையாவன; தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலாயின(86)  புல் எனப்படும்

அதன் உறுப்புகளைத்

தோடே மடலே ஓலை என்றா

ஏடே இதழே பாளை என்றா

ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்

புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர். 88 தோடு முதலாகச் சொல்லப்பட்ட உறுப்பின் பெயரெல்லாம் புல்லாகிய உறுப்பின் கண்ணே வருமென்றார்.

இதனானே புறவயிர்ப்பும் உள்ளுயிர்ப்புமில்லாதனவற்றுள் ஒருசாரன. இவ்வகைப்பட்ட உறுப்புப்  பெயருடையனவாகி இவையும் புல்லெனப்படும்  அக்கிளைப்பிறப்பு பிறவும் உள என்பதால்    புறக்காழும் அகக்காழும் இன்றி புதலும் கொடியும் போல்வன அவை  கொட்டி தாமரை கழுநீர் வாழை  என்பன

அகக் காழனவே மரம் என மொழிப. 87  மரமென்பது அகவயிர்ப்புடையன,  

இருப்பையும் புளியும் ஆச்சாவும் முதலாயின மரம் எனப்படும்; இங்ஙனம் புறத்தும் அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும் அகில்மரம் போல்வன இடையிடை பொய்பட்டும் புல்லும் மரனும் வருவன உள.மரத்தின் உறுப்புகளை

இலையே தளிரே முறியே தோடே  

சினையே குழையே பூவே அரும்பே

நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம்

          மரனொடு வரூஉம் கிளவி என்ப. 89  

இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை, முதலானவை மரப்பெயரொடு வரும். (87) காய், பழம், தோல், செதிள், வீழ் என்னும் என்னும் பெயர்களும் மரத்தோடு தொடர்புடையவை. (88)

புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன இவ்வுறுப்புப்பெயர் உடையன மரமெனப்படுமென்று கொள்க.அவையாவன; முருக்கு தணக்கு முதலாயின. மூங்கில்கள் மரங்களின் பல இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவை மரங்களென அழைக்கப்படுவதில்லை.

   புல்மரம் என்னும் இருவகைத் தாவரங்கட்கும் பொதுவாக வழங்கும் உறுப்புக்களின் மரபுப்பெயர்களைத் தொகுத்துக் கூறுகின்றது.  

    காய், பழம், தோல், செதிள், வீழ் என்பன புல்லும் மரமும் ஆகிய இருவகைத் தாவரங்கட்கும் பொதுமையின் உரியனவாகும்.

தாழை பூவுடைத்தாகலானும் கோடுடைத்தாகலானும் புறவயிர்ப்பின்மையானும் மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை' என்றார் இளம்பூரணர். (கூo) 1. புல், மரம் என்பவற்றின் உறுப்பு ஒதியவாற்றால் இவை புல்லின்கண்ணும் மரத்தின்கண்ணும் பெருவரவினவாய் வருதலில் இவ்வுறுப்புக்கள் புல், மரம் என்னும் அவ்விரண்டற்கும் பொதுவென்பதாம்.

காயே பழமே தோலே செதிளே

வீழொடு என்று ஆங்கு அவையும் அன்ன. 90                                            

 

வேர்கள், அடிமரம், கிளைகள், சிறுகிளைகள், இலைகள் என்பவை மரத்தின் பகுதிகளாகும். மரத் தண்டு, தாங்குவதற்கானதும், நீர், உணவு முதலியவற்றைக் கடத்துவதற்குமான மென்சவ்வுகளைக் (காழ் (xylem) மற்றும் உரியம் (phloem)) கொண்டது.

பல கிளைகள் அல்லது தண்டுகளுடன் கூடிய, மரத்தைப் போலவே வடிவமுடைய தாவரமொன்று, அளவில் மிகவும் சிறிதாக இருக்கக்கூடும். இது செடியென்று அழைக்கப்படுகின்றது. எனினும் மரத்துக்கும், செடிக்கும் இடையில் சரியான வேறுபடுத்தும் எல்லை கிடையாது.  

 

 ..


மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும்.

மரபுநிலை திரிந்துவரிற் பொருள் வேறுவேறாகும். அம்மரபுப்படியே நாம் பேசவும் எழுதவும்வேண்டும்  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சி்றப்பாகும்.அவற்றிற்குத் தனித்தனிப் பெயர்கள்  

அந்த அடிப்படையில் ஓரறிவுடைய மரம் புல் இவற்றின் தொடர்புடைய மரபுப்பெயர்களை பார்க்கலாம்
           புல் மரம் இவற்றின் இளமைப்பெயர்

நாற்று: நெல், கத்தரி புகையிலை  முதலியவற்றின்  இளநிலை;

கன்று: மா, புளி, வாழை தென்னை முதலியவற்றின் இளநிலை;

குருத்து: வாழையில் இளநிலை;

பிள்ளை: தென்னையின் இளநிலை

மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை;

பைங்கூழ்: நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.

துளிர் அல்லது தளிர்: நெல், புல் முதலியவற்றின் கொழுந்து:

முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து;

குருத்து : சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து

கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.

              தாவரங்களின் கிளைப்பிரிவுகள் -  

கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;

கொம்பு அல்லது கொப்பு: கவையின் பிரிவு:

கிளை: கொம்பின் பிரிவு:

சினை: கிளையின் பிரிவு:

போத்து: சினையின் பிரிவு:

குச்சு: போத்தின் பிரிவு:

இணுக்கு: குச்சியின் பிரிவு.

                 இலைக்கான மரபுப் பெயர்கள்

இலை: புளி, வேம்பு,  பலா, மூங்கில் வாழை மா  முதலியவற்றின் இலை:                                                             

தாள்: நெல்,புல் முதலியவற்றின் இலை:

தோகை: சோளம், கரும்பு முதலியவற்றின் இலை;

ஓலை:, பனை ஈச்சம்   முதலியவற்றின் இலை;

கீற்று தென்னை முதலியவற்றின் இலை

சண்டு: காய்ந்த தாளும் தோகையும்;

சருகு: காய்ந்த இலை.

தழை என்று வேம்பு இலையினையும் கூந்தல் என்று, கமுகின் இலையினையும்

மடல் என்று,  தாழை இலையினையும் ,  தட்டை என்று,   சோளம் கம்பு இவற்றின் இலையினையும் கூறுகிறோம்.

                     பூவின் பல்வேறு நிலைகள்

     அரும்பு: பூவின் தோற்றநிலை;

  • போது:மொட்டு: பூ விரியத் தொடங்கும் நிலை;
  • முகை: பூ விரிந்த நிலை;;
  • மலர்: பூவின் மலரத் தொடங்கும் நிலை;
  • அலர்: பூவின் மலர்ந்த நிலை;
  • செம்மல்: பூ வாடின நிலை
  • வீ: மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை;

                       காய்களின் இளநிலை

பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு

பிஞ்சு: இளம் காய் அவரைப்பிஞ்சு முருங்கைப் பிஞ்சு,  வெள்ளரிப் பிஞ்சு                                                                           கத்தரிப்பிஞ்சு

வடு: மாம்பிஞ்சு

மூசு: பலாப்பிஞ்சு

கவ்வை: எள்பிஞ்சு

குரும்பை: தென்னை, பனை

முட்டுக் குரும்பை: சிறு குரும்பை

இளநீர்: முற்றாத தேங்காய்

நுங்கு முற்றாத பனங்காய்

நுழாய்: இளம்பாக்கு

கருக்கல்: இளநெல்

கச்சல்: வாழைப்பிஞ்சு

       காய்களின் மேல் உள்ளபகுதி

தொலி: மிக மெல்லியது;

தோல்: திண்ணமானது;

தோடு: வன்மையானது;

ஓடு: மிக வன்மையானது;

குடுக்கை: சுரையின் ஓடு;

மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி;

உமி: நெல்,கம்பு முதலியவற்றின் மூடி;

கொம்மை: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி.

             குலை பெயர்கள்                                                                      கொத்து: அவரை, துவரை முதலியவற்றின் குலை;

குலை: கொடி முந்திரி போன்றவற்றின் குலை;

தாறு: வாழைக் குலை; சீப்பு: வாழைத்தாற்றின் பகுதி.

கதிர்: கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்;

அலகு அல்லது குரல்: நெல்,தினை முதலியவற்றின் கதிர்:

கெட்டுப்போன காய்க்கு வழங்கும் சொற்கள்:

 கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்:

தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்:

அல்லிக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்;

         கெட்டுப்போன கனிக்கு வழங்கும் சொற்கள்:

சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்:

சிவியல்: சுருங்கிய பழம்:

சொத்தை: புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி;

வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு:

அளியல்: குளுகுளுத்த பழம்:

அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்:

சொண்டு: பதராய்ப் போன மிளகாய்.

                 தாவரங்களின் தொகுப்பிடம்

சவுக்கு தோப்பு, , பலா தோப்பு  தென்னந்தோப்பு, கம்பங்கொல்லை,  சோளக்கொல்லை, தேயிலைத் தோட்டம், பூந்தோட்டம் வாழைத்தோட்டம் ஆலங்காடு  பனங்காடு, , 

தாவர அடி பெயர்கள்

தாள்: நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

தண்டு: கீரை, வாழை முதலியவற்றின் அடி;

கோல்: நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி

தூறு:குத்துச்செடி,புதர் முதலியவற்றின்அடி

தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

கழி : கரும்பின் அடி

கழை மூங்கிலின் அடி

அடி: புளி, வேம்பு முதலியவற்றின் அடி

காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள்.                           

சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி);                                                             விறகு: காய்ந்த சிறுகிளை;                                                                 வெங்கழி: காய்ந்த கழி;                                                       

கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.

          தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்:                                                               

                    மணிவகை

 கூலம்: நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள் ;

பயறு: அவரை, உளுந்து முதலியவை ;

கடலை: வேர்க்கடலை, கொண்டைக்கடலை முதலியவை;

விதை: கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து;

காழ்: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து;

முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து;

கொட்டை: மா, பனை முதலியவற்றின் வித்து;

தேங்காய்: தென்னையின் வித்து;

முதிரை: அவரை, துவரை முதலிய பயறுகள்.

இவ்வாறு மரபினைக் காக்க வந்த தொல்காப்பியம் ஒரறிவு உயிர்களாகிய புல் மரம் ஆகியவற்றின் மரபுப்பெயர்களைக் காட்டி உள்ளது நாமும் அம்மரபினை மீறாது காப்பியத்தின வழியைக் கடைப்பிடிப்போம்.  பதிவு தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்  பேரூராதீனம்

.

மரம் என்ற சொல் பயிலும் குறள்கள் யாவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - குறள்: 78
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான் கண் படின் - குறள்: 216
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகையான் கண் படின் - குறள்: 217
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து - குறள்: 879
நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று - குறள்: 1008

மண்ணோடியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்து கண்ணோடாதவர் - குறள்: 576
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரமக்கள் ஆதலே வேறு - குறள்: 600
அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லாதவர் - குறள்: 997
நாண் அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - குறள்: 1020
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மாஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று - குறள்: 1058