Thursday 11 February 2021

அளபெடை

 

                           அளபெடை

         இலக்கணம் வேண்டுவோர்க்கு                                      சார்பெழுத்துகள் பத்து என்று நன்னூல் உரைக்கிறது.

அவற்றுள் உயிரளபெடை ஒற்றளபெடை பற்றிய இலக்கணம்.                           

      செய்யுள்களில் அடிகளில் அளபெடை அமைய வருவது அளபெடைத் தொடை ஆகும்.இதுவும் ஓரழகே. எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை.எனப்படும்.               மாத்திரை கால அளவு : இயல்பாகக் கண் இமைக்கும் நேரமோ அல்லது கை நொடிக்கும் நேரமோ ஒரு மாத்திரை அளவு என்று அழைக்கப்படும். குறில் எழுத்துக்களை ஒரு மாத்திரை அளவிலும், நெடில் எழுத்துக்களை 2 மாத்திரை அளவிலும், மெய்யெழுத்துக்களை அரை மாத்திரை அளவிலும் கூற வேண்டும். ஆனால், சில செய்யுள்களில் அவற்றின் பொருளுக்கேற்ப சில எழுத்துக்களை அதன் கால அளவிலிருந்து நீட்டி உரைக்க வேண்டும். இதுவே அளபெடை என்று அழைக்கப்படும்                                               

    பாடல்களை இசைக்கும் போதும், பிறரை விளிக்கும் போதும்,
முறையீடு செய்யும் போதும், துன்பத்தினால் புலம்பும் போதும்,
பண்டங்களை கூவி விற்பனை செய்யும் போதும் சில எழுத்துக்களை நீட்டி ஒலிப்பர் இவையே அளபெடை என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.  

     அன்றாட வாழ்வில் நாம் காணும் சில உதாரணங்களாக

கோயிலில் தேவாரம் பாடுபவர் பொன்னா....அர் மேனியனேஎஎ!....” என நீட்டி முழக்குவதும்,
வீதியில் தயிர் விற்கும் பெண் தயிரோஒஒஒ... தயிரு...எனக் கூவுவதும்
 
தூரத்தில் செல்லும் நபரை அண்ணேஏஏஏ....ய்என விளித்தழைப்பதும் அளபெடையே!
அழுகையினூடே ஓலமிடுவதும் அளபெடையே !
குக்கூஉஉஉ....என குயில் கூவுவதும் ,
கொக்கரக்கோஒஒஒஎன சேவல் கூவுவதும், காள்ள் காள்ள் எனக் கழுதை கூச்சலிட்டுக் கத்துவதும் கூட அளபெடையே!
ஆனால் இங்கு செய்யுளில் வரும் அளபெடைகளை மட்டுமே பேசுகிறோம்   

 

      அளபெடை  என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டுதல். நயம் கருதி இவை செய்யுள்களில் பயன்படுத்தப்படுகின்றன. மோனை, எதுகை போன்ற பெரும்பாலான தொடைகளைப் போலவே அளபெடைத் தொடையும் செய்யுள் அடிகளின் முதற் சீரிலேயே அமைகின்றன.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.

என்னும் குறளில் அளபெடைத்தொடை அமைந்துள்ளது காண்க.                          

 

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.

     இங்கே அடிகளின் முதற் சீரின் முதல் எழுத்தே அளபெடுத்து அமைந்துள்ளது. எனினும் அச் சீரின் எவ்வெழுத்து அளபெடுத்து அமைந்தாலும் அது அளபெடைத் தொடையே ஆகும்.                                 

       நெடில் எழுத்துகளே அளபெடுக்கும். நெடில் எழுத்து அளபெடுக்கும் போது, அந்த நெடில் எழுத்திற்கு இனமான குறில் எழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதன் அருகில் எழுதப்படும். செய்யுளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ள இடங்களில் நீட்டி ஒலிக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும். நெடில் எழுத்து இரண்டு மாத்திரை அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும்.

     இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பனவாகும், ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால், முறையே இகரம், உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும்.  

. 1.பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே  இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர்

2. செய்யுளில் ஓசை குறையும் போதும், சீரும், சீர்களுடன் இணையும் தளைகளும் சிதையும்போதும்செய்யுள் இலக்கணத்தில் குற்றம் ஏற்படும். அதனைக் களையவும் அதனை நிறைவு செய்வதற்கும், செய்யுளின் ஓசை இனிமையாக அமையும் பொருட்டும், செய்யுளின் சிலவிடங்களில் அளபெடைகள் அமைத்து இயற்றப்படுகின்றன.

3.அளபெடுத்தல் என்பது, செய்யுளிலுள்ள நின்றசீர், வருஞ்சீர்க்கு ஏற்பத் தன்   அமைப்பில் மாற்றம் செய்து கொள்ளும்  வகையாகும் இவற்றை எழுத்துப் பாங்கு நோக்கி  உயிரளபெடை, ஒற்றளபெடை என இரண்டாகப் பகுத்துக் காண்பர்

.இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே (நன்னூல் 91)

(இதன் பொருள்: செய்யுளில் ஓசை குறையும்போது சொல்லுக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் நெடில் எழுத்து நீண்டு ஒலிக்கும். அதற்கு அடையாளமாகக் குறில் எழுத்து எழுதப்படும்.   ஒரு நெடில் தனக்கு இனமான குறிலை    உடன்சேர்த்துக் கொள்ளும்.  குறிலாக இருந்தால், அது நெடிலாக   மாறித் தன்னினத்தை அளபெடுத்துக்  கொள்ளும்.)

அளபெடைச் சொற்களைச் சொல்லும் போது, நெடில் எழுத்தைத் தனியாகவும் அதனோடு ஒட்டி வரும் குறில் எழுத்தைத் தனியாகவும் ஒலிக்கக் கூடாது. இரண்டு எழுத்துகளின் ஓசையும் ஒட்டி வரும்படியே நீட்டி ஒலிக்க வேண்டும். அளபெடையில் எழுத்துகளை விட்டு இசைப்பது ஓசை இனிமையைக் கெடுக்கும்.                                                      

     பொதுவாகச் செய்யுளில் ஏற்படும் ஓசைக் குறைவை நிறைவு செய்யவே அளபெடுக்கிறது. எனினும் வேறு காரணங்களுக்காக அளபெடுப்பதும் உண்டு. உயிரளபெடை நான்கு வகைப்படும்.

1. இயற்கை அளபெடை
2.
சொல்லிசை அளபெடை
3.
இன்னிசை அளபெடை
4.
செய்யுளிசை அளபெடை

    இயற்கை அளபெடை இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர். ஆடூஉ,, மகடூஉ,,   குழு <குழுவு என்னும் சொல் குழூஉ எனத் தொன்று தொட்டு மருவி வந்துள்ளது மரூஉ, ஒரூஉ, குழூஉக்குறி குரீஇ, பேரூர்கிழாஅன் இவை இயல்பாகவே அளபெடையாக அமைந்த சொற்கள் ஆகவே இவற்றை இயற்கை அளபெடை என்றனர்.

 

இவ்வாறன்றி . செய்யுளில் ஓசை குறையும் போதும்.ஒரு பெயர்ச்சொல்லை வினையெச்சப்பொருளாக மாற்றவும், கேட்பதற்கு இனியமையாக இருப்பதற்காவும் உயிரெழுத்துகள் அளபெடுப்பதை உயிரளபெடை என்பர். சில சமயம் இரண்டு அளபெடைகள் பெற்று வருவதும் உண்டு.

உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு  (குறள்1200)

செய்யுளிசை அளபெடை செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையை நிறைவு செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும்.                                                                  

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்                                                  பெய்யெனப் பெய்யும் மழை. (குறள்55)                                               

     இந்தக் குறளில் தொழாள் என்று இயல்பாக இருந்தால், அது ஒரே அசையாக நிரை அசை ஆகிவிடும். வெண்பாவிற்குரிய செப்பலோசையும்  கெடும். இந்த இடத்தில் ஓசை கெடாமல் இருக்க நிரை, நேர் என்ற இரு அசைகள் தேவை. தொழாஅள் என்று அளபெடுத்தபின், தொழா என்பது நிரை அசையாகவும், அள் என்பது நேர் அசையாகவும் அமைந்து ஓசையை நிறைவு செய்கின்றன.இவ்வாறு செய்யுளில் ஓசை குறையும்போது உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் அளபெடுத்து வருவது  செய்யுளிசை அளபெடை  எனப்படும்.

     செய்யுளிசை அளபெடை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும். செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.

 பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்                           

நற்றாள் தொழாஅர் எனின் என்று வரும் இவையும் செய்யுளிசை அளபெடை ஆகும்.                              

 

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை                                             ஆஅதும் என்னு மவர் (குறள்653)  இக்குறளில் '' என்னும் உயிர்நெடில் தனக்குரிய இனக்குறில் '' வைஅளபெடுத்துள்ளது. இரண்டாவது அடியில்'' என்னும் உயிர்நெடில் தனக்கு இனமான'' குறிலை அளபெடுத்துள்ளது.
     

    அளபெடுக்காத நிலையில், ' ஓதல்'என்னும் சீர் 'தேமா' -வில் உள்ளது. வெண்பா இலக்கணப்படி, நின்ற சீர் 'மா' - வில் இருந்தால் வருஞ்சீரில் 'நிரை' (மாமுன்நிரை) வருதல் வேண்டும். ஆனால்,,வரும்சீரில் ' வேண்டும் ' என 'நேரில்' அமைக்க விரும்பிய வள்ளுவர் , நின்ற சீரை , வரும்
சீருக்குத் தளைதட்டாமல் அமைக்கும் பொருட்டு, ஓதல் என்பதனை, 'ஓஒதல்' என விளச்சீராக்கி ('கூ விளம் ' ஆக்கி 'விளமுன் நேர்' வரச்செய்து வெண்பா இலக்கணத்தைச் சரிசெய்துள்ளார் என்பதனை அறியவும். 

சொல்லிசை அளபெடை ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்                            வரன்நசைஇ இன்னும் உளேன்.(குறள்1263)  இக்குறளில். நசை என்பது விருப்பம் என்று பொருள்படும். அதையே நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்றுபொருள் தரும். இதுவே சொல்லிசை அளபெடை ஆகும்.  தொகை தொகைஇ (தொகுத்து) வளை வளைஇ (வளைத்து) வினையெச்ச வாய்பாட்டை இசையாக்கி ஒலித்துக் காட்டுவது சொல்லிசை அளபெடை ஆகும்.        

மேற்கண்ட குறளில், 'உரனைசை'என்னும் சீரும், 'வரனசை' என்னும் சீரும்,
கருவிளச் சீர்களாக அமைந்து வெண்பா இலக்கணம் சரியாகத்தான் உள்ளன. ஆயினும், 'நசை' (விருப்பம்)என்னும் பெயர்ச்சொற்களை,'நசைஇ' (விரும்பி) என வினையெச்சச் சொற்களாக மாற்றுவதற்கென்றே இவ்விரண்டு சீர்களும் அளபெடுத்திருக்கின்றன.இதைத்தான் சொல்லிசை அளபெடை என்கிறோம்.

இன்னிசை அளபெடை. மேற்சொன்ன இரு காரணங்களும் இல்லாமல் வெறுமனே இனிய இசைக்காக இசை கூட்டி எழுதுதல் இன்னிசை அளபெடை.செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அந்நெட்டெழுத்து அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்                                                           

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை(குறள்15)இக்குறளில் கெடுப்பதும்  என இருப்பினும் வெண்பாவிற்குரிய தளை தட்டுவதில்லை இருப்பினும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் பொருட்டு கெடுப்பதும் என்ற சொல்லில் உள்ள து”  என்ற குறில்எழுத்து, தூ என நெடில் எழுத்தாகி, அந்நெட்டெழுத்து கெடுப்பதூஉம் என அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.                                                                 

 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்(குறள்166) .இந்தக் குறளில் உள்ள உடுப்பதூஉம் உண்பதூஉம் என்ற இரண்டும் இன்னிசை அளபெடைகளே.   இவ்வாறு செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காகக் குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.

-- நெல்லுக்கு                                                                      நூறோஒநூ றென்பா ணுடங்கிடைக்கும் என்னும் பாடலில் வெண்பாவினுள் நாலசை ஆயிற்று அவ்வாறு வருதலுக்கு இலக்கணம்விதி இன்மையால் செப்பலோசை பிழைத்து நிற்குமாததாலால் ஈண்டு உயிரளபெடையை அலகு பெறாது கொள்க.

                   ஒற்றளபெடை

ஒற்றளபெடை சில வேளைகளில், ஓர் ஒற்றெழுத்தும்   தானே அளபெடுத்துக் (இரட்டித்துக்)    கொள்வதும் உண்டு ஒற்றெழுத்துகள் பதினெட்டும் அளபெடுப்பதில்லை ங,ஞ,ண,ந,ம,ன வ,ய,ல,ள மற்றும் ஃ என்னும் ஆய்த எழுத்தும் ஆகிய 11 எழுத்துகள் மட்டுமே அளபெடுக்கும்.புள்ளி பெறும் மெய்யெழுத்துடன் சேர்த்து மூன்று புள்ளிபெறும் ஆய்த எழுத்தும் ஒற்று எழுத்து எனப்பட்டது. எனவே ஒற்றளபெடை என்னும் போது ஆய்த எழுத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ங ஞ ண ந ம ன வயலள ஆய்தம்

அளபாங் குறிலிணை குறிற்கீழ் இடைகடை

மிகலே யவற்றின் குறியாம் வேறே.(நன்னூல்92)

இதன் பொருள் பாட்டில் ஓசை குறையின் குறிலிணைக்கீழும்,குறிலின் கீழும் மொழிக்கு இடையிலும் கடையிலும் நின்ற ஙம் முதலிய பத்தும் ஆய்தமுமாகிய பதினோரெழுத்தும் அவ்வோசையை நிறைக்கத் தத்தம் மாத்திரையின் மிக்கு ஒலிக்கும். அப்படி அளபெடுத்தமையை அறிதற்கு அவற்றின் பின் அவ்வெழுத்துகளே வரிவடிவில் வேறு அறிகுறியாய் வரும்.

எ-டு

இலங்ங்கு வெம்பிறைசூ டீசனடி யார்க்குக்

கலங்ங்கு நெஞ்சமிலை காண்

 

எங்ங்கு இறைவனுள னென்பாய் மனனனேயா

னெங்ங் கெனத்திரிவா ரிந்

 

மடங்ங் கலந்த மனனனே களத்து

விடங்ங் கலந்தானை வேண்டு

 

அங்ங் கனிந்த வருளிடத்தார்க் கன்புசெய்து

நங்ங் களங்கருப்பார் நாம்

இவற்றுள் இலங்கு என்பதிற் குறிலிணைக்கீழ் இடையிலும் எங்ங்கு என்பதிற் குறிற்கீழ் இடையிலும் ஙகரம் அளபெடுத்தது மடம் என்பதிற் குறிலிணைக்கீழ்க் கடையிலும் அம்என்பதிற் குறிலிற்கீழ்க்கடையிலும் ஙகரம் அளபெடுத்தது. எங்ங் கிறைவனுளன் என்பாய்
  
மனனேயான்,
  
எங்ங் கெனத்திரிவா  ரில்."
    
இக்குறள் வெண்பாவில், "எங்ங்குஇறைவன்" என்பது,

"எங்ங் கிறைவன்"என்று ஆகி, ஓசையை நிறைந்துள்ளது.
இது, தனிக்குறிலை (அடுத்துவந்தஒற்று (ங்) ஆனது , "ங்ங்" -என அளபெடுத்தது(அதாவது, ஒற்று இரட்டித்தது).
அடுத்து," இலங்ங்கு  வெண்பிறைசூ  டீசனடி
 
யார்க்குக்
 
கலங்ங்கு  நெஞ்சமிலை  காண்."      இந்தக் குறள் வெண்பாவில்,
'
இலங்ங்குகலங்ங்கு' என்று, குறிலிணைக்கு (இல , கல) அடுத்து வந்த
ஒற்றாகிய 'ங்' - , 'ங்ங்' -என அளபெடுத்துள்ளதைக் காண்க.
     
மேற்கண்ட சொல்லாகிய 'இலங்கு'என்பதில் ஒற்று அளபெடுக்காமல் இருந்தால், புளிமா- ஆகும். புளிமாவானால்,வெண்பா இலக்கணம் தவறாகும். அதனால்'இலங்ங்கு' என்று ஒற்று அளபெடுத்துக்கருவிளம் ஆகி, (இலங்/ங்கு - என்றாகி) வெண்பா இலக்கணத்தைவிளமுன் நேர் எனச் சரிசெய்துள்ளது.
'
கலங்ங்கு' என்னும் சீரும் இதனையே
ஒக்கும். இங்கு, ஈற்றசையாகிய 'ங்ங்கு'
என்பது இரு குறிலெழுத்துகள் போலக்  கருதுதல் வேண்டுமென்க.

ஆய்த எழுத்து அளபெடுத்தமைக்குச் சான்று

விலஃஃகி வீங்கிரு ளோட்டமே மாத

ரிலஃஃகு முத்தி னினம்

 

எஃஃகி லங்கிய கையரா யின்னுயிர்

வெஃஃகு வார்க்கில்லை வீடு

இவற்றுள். விலஃஃகி என்பதிற் குறிலிணைக்கீழ் இடையிலும் எஃகு என்பதிற் குறிற்கீழ் இடையிலும் ஆய்தம் அளபெடுத்தது

பதினோரொற்றும் குறிலிணைக் கீழிடை குறிற்கீழிடை குறிலிணைக் கீழ்க்கடை குறிற்கீழ்க்கடை எனும் நான்கிடத்தும் அளபெடுக்க ஒற்றளபெடை நாற்பத்தி நான்கு ஆயிற்று.ஆய்தம் குறிலிணைக் கீழ்க்கடை குறிற்கீழ்க்கடை வாராமையால் ஒற்றளபெடை நாற்பத்திரண்டு என்க.

 

ஒற்றிணை இரட்டித்து இஃதும்ஓர் அளபெடை

என்பார்உளர்:எமக்கு இனிதுஅஃது அன்றே தண்டபாணி சுவாமிகள் அறுவகை இலக்கணம்

 கண்ண டண்ண்ணென் கண்டும் கேட்டும் என்பன போன்ற ஒற்றளபெடைகள் அரிதாகவே பயின்று வருகின்றன.இலக்கண நூல்களில் மேற்கோளாகக்   காட்டப்படும் செய்யுள்கள் அனைத்தும் உரையாசிரியர்களால் இலக்கணத்தை விளக்க வேண்டியே இயற்றப்பட்டனவாகும். அவை இயற்கையாய் எழுந்த இலக்கியங்கள் அல்ல. எனவே இவ்வெடுத்துக் காட்டுச் செய்யுள்களை எந்த இலக்கியத்தைச் சார்ந்தவை என்று கூறஇயலா.

 

" திருக்குறளில் முதல் மூன்று வகையான
அளபெடைகளும் நிறைந்துள்ளன.
இசைநிறை அளபெடைகள் மொத்தம்
ஐம்பத்து நான்கு (54) உள்ளன.
 இவ்வாறான அளபெடைகள் அமையப்பெற்ற குறள்களின் எண்களைக் கீழ்க்காணவும்.

02, 12, 14, 38, 46, 55, 238, 257, 347, 653, 702,
809, 824, 840, 848, 876, 921, 933, 1052, 1053,
1059, 1070, 1087, 1088, 1090, 1097, 1098,
1104, 1108, 1115, 1143, 1176, 1194, 1198,
1200, 1204, 1210, 1245, 1292, 1295, 1301,
1305, 1324.


(2)
இன்னிசை அளபெடைகள் மொத்தம்
     
முப்பத்தாறு (36) ஆகும்.இதுபோன்ற அளபெடைகள் அமையப்
பெற்றக் குறள்களின் எண்கள் வருமாறு:-

15, 31, 32, 166, 227, 230, 422, 425, 460, 461,
544, 546, 599, 641, 644, 713, 797, 812, 816,
820, 830, 845, 913, 928, 929, 931, 938, 940, 
982, 1005, 1009, 1036, 1079, 1194, 1215, 
1292- (
இக்குறளில் ,'செறாஅர்' -மட்டும்).
(3)
சொல்லிசை அளபெடைகள்:-
திருக்குறளில் காணப்படும் இவ்வகையானஅளபெடைகள் மொத்தம் ஆறு (6) மட்டுமே.
இவ்வகையான அளபெடைகள் அமையப்
பெற்ற குறள்களின் எண்கள்:-
91, 94, 182, 660, 1040, 1263.



.
பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்   9788552993,8610684232