Wednesday 9 January 2019

வழிபடு தெய்வம்-தொல்காப்பியம்



                       தொல்காப்பிய முத்துகள்1
நம் அன்றாடப் பயன்பாட்டுக்கு உரிய செய்திகள் தொல்காப்பியத்துள் பல உள்ளன.நாம் ஒவ்வொருவரும் வீட்டிலும் அலுவலகத்திலும் வணக்கம்,வாழ்க, வாழ்க வளத்துடன் என்று நாளும் பயன்படுத்துகிறோம். இவற்றிற்குப் பதிலாகக் கீழ்வரும் தொல்காப்பிய அடிகளை நாம் பயன்படுத்தலாம்.
வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின்!   (தொல்.பொருள்.செய்யுள்422)
இதன்பொருள்: நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னையும் உன் குடும்பத்தையும், சுற்றத்தையும் பாதுகாக்கட்டும்! குற்றமற்ற செல்வத்துடன் மக்களையும் குடிவழியினரையும், நீ பெற்று, வழிவழி சிறந்து நீடுவாழ்வாயாக!.
“வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப” எனச்சுருக்கி உரைப்பினும் நலமே!

பத்துப்பொருத்தம் பார்த்தாரா தமிழர்?


பைந்தமிழர் கண்ட மண(ன)ப் பொருத்தம் பத்து   
பெருமையும் உரனுமாகிய (பழிபாவங்களுக்கு அஞ்சும் தன்மையும்,சிறந்த அறிவும்) குணங்களை யுடைய தலைமகனும் அச்சமும் மடனும் (இளமையும்) நாணுமாகிய குணங்களையுடைய தலைவியும் இணைந்து வாழ்வதற்கான பத்துப் பொருத்தங்களைப் பெற்றவர்களையே ஒத்த கிழவனும் கிழத்தியும் என்கிறார்.தொல்காப்பியர்.
           தினம்,கணம்,மகேந்திரம்,ஸ்திரிதீர்க்கம்,யோனி,ராசி,ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜு,வேதை என்னும் பத்துப் புரியாப் பொருத்தங்களைப் பார்த்துத் திருமணம் செய்ததால் குடும்பநல நீதிமன்றங்கள் குறைந்த பாடில்லை இதன்மூலம் அப்பத்துப் பொருத்தங்கள் பார்ப்பதால் பயனில்லை என்பதை
அறியலாம். அப்பொருத்தங்கள் தமிழர் நெறியும் அல்ல. பழந்தமிழர் கண்ட பத்துப் பொருத்தங்களை தொல்காப்பியம் உரைக்கிறது அவை
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல்-மெய்ப்-25)  
      இவற்றுள் பிறப்பு என்பது நற்குடியில் கொளற்குரிய மரபில் தலைமகனும் கொடைக்குரிய மரபில் தலைவியும் பிறந்திருத்தல் வேண்டும். குலத்தளவே ஆகும் குணம் என்று ஔவையும், இனத்துளதாகும் அறிவு வள்ளுவரும் கூறுவதால் ஒத்த இனத்தினராய் இருவரும் இருந்தால் உணவு, வழிபாடு, சடங்கு போன்றவற்றில் சிக்கல்கள் தோன்றா. எனவே பிறப்பு ஒத்திருத்தல் வேண்டும்.
குடிமை என்பது பண்பாடு ஒழுக்கமும் வாய்மையும் நாணும் (சான்றோர் பழிக்கும் செயலைச் செய்ய வெட்கப்படுதல்) தவறாமையே நல்லபண்பாடு நகைச்சுவை உணர்வும், ஈகை குணமும், இன்சொல்லாகிய பேச்சும், ஒருவரையும் எள்ளி இகழாமையும் ஆகிய நான்கும் பண்பாடு என்கிறார் வள்ளுவர். இத்தகைய பண்பாட்டில் ஒத்திருத்தல்
3. ஆண்மை என்பது ஆண்தன்மை அல்ல. ஆளுமைத்திறன்.(ஆள்+மை). இல்லறத்தை இனிதே கொண்டு செல்லும் ஆளுமைத்திறன், இயற்றலும் ஈட்டலும் தலைவற்கு ஆளுமை. காத்தலும் வகுத்தலும்  தலைவிக்கு ஆளுமை.
4. ஆண்டு என்பது அகவை. அஃதாவது தலைவற்குப் குழந்தைப்பருவம் நீங்கி பதினாறு ஆண்டும் (  20அல்லது21 வயது) தலைவிக்குக் குழந்தைப்பருவம் நீங்கிப் பன்னிரண்டாண்டும்  (16அல்லது17வயது) நிரம்பி இருத்தல் திருமணத்திற்குரிய பருவமாம் ஏனெனில் இவ் வயதில்தான் இருவரும் பூப்பும் மலர்ச்சியும் எய்துவதோடு உலகியலைப் புரிந்து கொள்ளும் திறனும பெறுகின்றனர்). வயதில் தலைமகளை விடத் தலைமகன் மூத்தோனாய் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கவே  மிக்கோ னாயினும் கடிவரை யின்றேஎன்கிறார் தொல்காப்பியர்.
    அகவையிற் காற்கூறு  குறைதல் ஒப்புமை யகவை ஆகும் .(கண்ணகி கோவலன் திருமணம் இவ்வயதில் தான் நிகழ்ந்தது எனச் சிலம்புகூறுகிறது.)

5. உருவுஎன்பது: வனப்பு(அழகு). அஃதாவது தோற்றமும் எழிலும் ஏற்றமுற விளங்கும் நிலை.கணவனும் மனைவியும் இணைந்து செல்லும் போது காண்போர் அனைவரும் பொருத்தமான இணையர் எனவியக்கும் அழகும் உருவ ஒற்றுமையும் பெற்றிருத்தல்..
6. நிறுத்த காமவாயில் என்பது  ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பின் ஈர்ப்பு இருவர் மாட்டும் நீங்காத் தன்மையை உடைய காம ஒழுக்கத்திற்குரிய உள்ளக்கிளர்ச்சி. தலைவனது உள்ளக்கிளர்ச்சியும் தலைவியின் உள்ளக் கிளர்ச்சியும் ஒருங்கு ஒத்து இருத்தல்.
7. நிறை :  அன்பு,நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்னும் எல்லாவிதமான நற்குணங்களால் நிறைந்திருக்கும் தன்மையோடு.அடங்கி இருத்தல். நிறை எனப்படுவது மறை பிறர்க்கு உரையாமை என்பதால் பிறர் குற்றத்தை வெளிப்டையாய்க் கூறாது நெஞ்சினுள் வைத்துக் காப்பாற்றுதல்
8. அருளாவது  பிறர் வருத்தம் அறியும் கருணை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதால் ஒருவர் ஒருவரின்  குறையினை நிறைவாக ஏற்றொழுகும்  மனத்திட்பம்.
வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்      (குறு-196) என்பது தலைவன் தலைவியின் குறையை நிறையாகக் கொண்ட மனமாட்சியைப் புலப்படுத்தும்.
9. உணர்வு :  ஒருவர் மற்றவர் தம் உள்ளக் குறிப்பை  அறிந்து செயல்படும்   நுண்ணறிவு. இரண்டு கண்களும் ஒரே பொருளைக் காணுதல் போல இருவர் நோக்கமும் ஒன்றாய் இருக்கும் தன்மை. உணர்வு என்பதனை அறிவு எனக்கொண்டால் கல்வி கேள்விகளால் தேடிய அறிவு ஒத்திருத்தல் என்றும் கொள்ளலாம்                                                                                  10. திரு : செல்வத்திலும் செல்வாக்கிலும் இருவரும் ஒத்திருத்தல். (மாசாத்துவான்,மாநாய்கன் போல)                                  
    எனவே ஒருவனும் ஒருத்தியும் என்றும் இணைபிரியாமல் ஒருமணப்பட்டு இனிது இன்புற்று வாழ்வதற்கு இப்பத்துமே ஏற்ற பொருத்தங்கள் ஆகும். இத்தகு பத்துப் பொருத்தங்களையும்   பாங்குறப் பெற்றவர்களே வையத்துள் வாழ்ந்து சீரிமிகு மக்கள் இனத்தை உருவாக்குவர். இவ்வாறே தமிழ்க் குடும்பங்கள் அமைதல் வேண்டும் என்பதே தமிழ்ச் சான்றோர்களின் பேராவல்ஆகும். பதிவு புலவர்.ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் பேரவை