Tuesday 25 October 2016

இலக்கணம்

                                                சந்திப்பிழை (வலிமிகும்,மிகா இடங்கள்)
மெய்எழுத்துகள் மொழிக்கு முதலில் வாரா. அவை உயிர் எழுத்துகளுடன் கூடிமொழிக்கு முதலில் வரும்.நிலைமொழி ஈற்றில் உயிர்மெய்எழுத்துகள் வரும் போது (உயிர்எழுத்தே வரும்.)அப்படி உயிர் எழுத்து மொழிக்கு இறுதில் நிற்கும் போது வருமொழியின் முதலில் க,ச,த,ப என்ற எழுத்துகளின் வர்க்கங்கள் வரும் போது அவை மிகுமா?மிகாதா? என்பது பற்றிப் பார்ப்போம்.
   இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
   க ச த ப மிகும் விதவாதன மன்னே. என்பது நன்னூல்(165)
அந்த விதிப்படி சந்திப்பிழைபற்றி விளக்குகிறேன்.             
1) இரண்டாம் வேற்றுமை உருபு ஐ வரும் போது வல்லினம் மிகும்
எ-டு கோவிலை+கட்டினான்= கோவிலைக் கட்டினான்
     தொழிலை+செய்தான்=தொழிலைச் செய்தான்
     பழத்தை+ தின்றான்= பழத்தைத்தின்றான்
     பாடத்தை+படித்தான்= பாடத்தைப்படித்தான்
2)நான்காம் வேற்றுமை கு வரும் போது வல்லினம் மிகும்
     பெண்ணுக்கு+ கொடுத்தான்= பெண்ணுக்குக் கொடுத்தான்
3)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வரும் போது வல்லினம் மிகும்
     காணா+கடவுள்= காணாக் கடவுள்
4)இ என முடியும்வினையெச்சச் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
     ஓடி+போனான்= ஓடிப்போனான்
5)ஆய் எனமுடியும் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
          மெதுவாய்+ தாங்கு=மெதுவாய்த்தாங்கு
6)இருபெயரொட்டுப் பண்புத்தொகை சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்.
     சாரை+பாம்பு= சாரைப்பாம்பு
7)செய என்ற வாய்பாட்டில்அமையும் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
     தர+செய்தான்= தரச்செய்தான்
8)அ இ  என்ற சுட்டு எழுத்துகள் வரும் போது வல்லினம் மிகும்.
      அ+குதிரை=க்குதிரை
      இ+குதிரை=க்குதிரை
9)எ என்றவினா எழுத்து  வரும் போது வல்லினம் மிகும்.
எ+குதிரை=எக்குதிரை
10) எந்த,அந்த,இந்த என்ற சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
     எந்த+சிறுவன்= எந்தச்சிறுவன்
     அந்த+பையன்= அந்தப்பையன்
     இந்த+தம்பி= இந்தத்தம்பி
11) வன்தொடர் குற்றியலுகரச் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
    மீட்டு+தந்தான்=மீட்டுத்தந்தான்
12)நெடில்தொடர் குற்றியலுகரச் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
     தீ+குணம்= தீக்குணம்
13)அப்படி,இப்படி,எப்படி,அங்கு,இங்கு,எங்கு,இனிஎன்றசொற்கள்வரும்போதுவல்லினம் மிகும்
     அப்படி+சொன்னான்=அப்படிச் சொன்னான்
     இப்படி+கொடுத்தான்=இப்படிக்கொடுத்தான்
     எப்படி+தந்தான்=எப்படித்தந்தான்
     இனி+படிப்பான்=இனிப்படிப்பான்
14மற்ற,மற்றை,மற்று அன்றி,இன்றிஎன்றசொற்கள்வரும்போதுவல்லினம் மிகும்
     மற்ற+காரியம்=மற்றக்காரியம்
     இவரின்றி+செய்யார்=இவரின்றிச்செய்யார்
15).ய்,ர்ழ் என்ற எழுத்துகள்  வரும் போது வல்லினம் மிகும்
     நாய்+கால்= நாய்க்கால்
     தயிர்+குடம்=தயிர்க்குடம்
     தமிழ்+செய்யுள்=தமிழ்ச்செய்யுள்
  நாளை வலிமிகா இடங்கள் பற்றிப்பார்ப்போம்
இன்றைய இலக்கணம் 25-10-16     
                      வலிமிகா இடங்கள்
1).அது இது எதுஎன்ற என்றசொற்கள்வரும்போதுவல்லினம்
   அது கண்டாய்,இது செய்தாய் எது பார்த்தாய்
2)முதல் வேற்றுமையில் வரும்போதுவல்லினம்
     புலி கண்டது
     எலி கீச்சிட்டது
3)மூன்றாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை விரியில்வல்லினம் மிகாது.
     கண்ணகியோடு சென்றான்
     எனது தம்பி
 4)விளித்தொடர்களில் வல்லினம் மிகாது
     அண்ணா கேள்
     தாயே தா
5)பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.
     ஓடிய குதிரை
     பார்த்த பெண்
6)செய்யிய,செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் முன் மிகாது.
     உண்ணிய கண்டான்
உண்ணுபு தந்தான்
7)இரண்டாம் வேற்றுமைத்தொகையில் மிகாது.
     நாடு கண்டான்
8)படி என முடியும் வினையெச்சத்தின் முன் மிகாது.
     தரும்படி சொன்னான்
வரும்படி கேட்டான்
9) அகர ஈற்று வினைமுற்றுக்களுடன் புணரும் போது வல்லினம் மிகாது.
     சென்றன கழுதைகள்
     ஒடிந்தன சிறகுகள்
10) வியங்கோள் வினைமுற்றுக்களுடன் புணரும் போது  வல்லினம் மிகாது.
     வாழ்க தமிழ்
     வாழியதமிழ்
11) வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
     ஊறுகாய்
12) அவ்வளவு,இவ்வளவு, எவ்வளவு என்ற சொற்களின் முன் வல்லினம் மிகாது.
     அவ்வளவு கண்டான்
     இவ்வளவு தந்தான்
     எவ்வளவு பெற்றான்.
13) ஆ,,ஏ என்னும் ஈறுகளையடைய வினாப் பெயர்களுடன் மிகாது.
     அவனா கண்டான்
     இவனோ தந்தான்
அவனே பார்த்தான்
14) எண்ணுப் பெயர்களுடன் வல்லினம் மிகாது
     ஒன்று கொடு
     எட்டு தா
     நான்கு பிள்ளை
15) பல,சில என்னும் அகரவீற்று அஃறிணைப் பெயர்களுடன் வல்லினம் மிகாது.
     சில கழுதை,
     பல தலைகள்
16)வன்றொடர் ஒழிந்த ஏலைய குற்றியலுகரங்கள் முன் வல்லினம் மிகாது
     ஆறு தலை
எஃகு சிறியது

செய்து போனான்
               




பொறாமை

                   
                                பொறாமை (அழுக்காறு)     
     அறம் என்பது அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல் இந்நான்கும் இல்லாது இருப்பதே.அவற்றுள் பொறாமை(அழுக்காறு)கொண்டவன் தருமத்திலிருந்து தவறுவதோடு தன்னையும் தன் சுற்றத்தையும் அழிப்பவன் ஆகிறான். பொறாமை கொண்டவன் என்ன ஆவான்..பொறாமை என்ற சொல்லை திருப்பி படித்துப் பாருங்கள். ஆம்அப்படித்தான் போவான். இனிய சொற்களைப் பேசுகிறவன் அதிக நண்பர்களைப் பெற்று இருப்பதைப் போல பொறாமை இல்லாதவனே புகழைப் பெறுகிறான்
     வானமே இடிந்து வீழ்ந்தாலும் அஞ்சாதவன் பொறாமைப்படும் போது அவன் மனம் கல் மலை ஒன்று  வெப்பத்தால் உருகி குழம்பாவது போலவும் பூமிக்குள் உள்ள வெப்பம் வெளிப்படுவதைப் போலவும் புழுங்கும்.. பொறாமை கொண்டவன் மானம் ,குலம்,கல்வி தானம் உயர்ச்சி வீரம் புகழ் அனைத்தையும் மறந்த பேடி ஆகிறான். பொறாமை கொண்ட துரியோதனன் என்ன ஆனான் என்பதை நாம் அறிவோம்.பொறாமை கொண்டவன் வீட்டில் திருமகள் தன் தமக்கை மூதேவியைக்  குடி அமர்த்தி விட்டு, தான் வெளியேறி விடுவாள்..பொறாமை தன் செல்வத்தை அழிப்பதோடு தீய வழியில் மனதைச் செலுத்தும். பொறாமை கொண்டவன் பெருஞ்செல்வந்தன் ஆனதாக வரலாறு இல்லை.பிறர் வாழ்வு கண்டு பொறாமை கொண்டவன் சுற்றாத்தார் உடுக்கத்துணியும் உண்ண உணவும் இன்றித் தவிப்பார்கள்.பொறாமை கொண்டவன் தன் வளர்ச்சியை எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறான்.எனவே நாம் பிறர் ஆக்கம் கண்டு பொறாமை கொள்ளாது நம் வாழ்வையும் வளத்தையும் எண்ணிச் செயல் படுவோம்

    செல்வம் வரும் போது நாடக அரங்குக்குக்  கூட்டம் வருவதைப் போல மெதுவாக வரும். போகும் காலத்தில் நாடகம் முடிந்தவுடன் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு போவதைப் போல ஒரே அடியாகப் போய்விடும்.செல்வம் நம்மிடம் வரும்போதே செல்வோம்(உன்னைவிட்டுச் செல்வோம்)என்று வருவதால்தானே அதற்குச் செல்வம் எனப் பெயர் வைத்தோம் நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைவன் என்றாலும் நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்டக் காட்டுக்குப் போகத்தான் வேண்டும். மாமரத்தின்  உச்சியில் ஏறி மடார் எனக்  காட்டாற்று வெள்ளத்தில் குதித்து கையில் மணல் கொண்டு வந்து காரிகைகளுக்குக் காட்டிய காளை கடைசியில் ஒருநாள் தடியூன்றித்  தள்ளாடி நடக்கத்தான் போகிறான். ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன் கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன் என்பதை உணர்ந்து இருக்கும் செல்வத்தை இல்லார்க்கு ஈந்து பொறாமை இன்றிப் புகழோடு வாழ்வோமாக. 
புலவர்.ஆ.காளியப்பன் 

Thursday 20 October 2016

இதுஎன்ன தமிழ்மொழியா? எவன்மொழிக்கோ அடிமைதானா?

இதுஎன்ன தமிழ்மொழியா? எவன்மொழிக்கோ அடிமைதானா?
சுழியத்தில் தொடங்கிப் பிறையாய் வளைந்து
நின்றும் கிடந்தும் இருக்கும் அகரம்
உலக மொழிக்கே முதலெழுத் தானது
எல்லா ஒலிக்கும் எழுத்து வேண்டுமெனக்
சமக்கிரு தத்தைத் தந்தவர் தமிழர்
அரபியர் வந்தே அருந்தமிழ் கற்றனர்
வளர்தமிழ் எண்ணை வையத்தில் பரப்பினர்
உலக மொழியெலாம் உயிரும் மெய்யுமாய்
ஊடுருவி நிற்பது ஒண்டமிழ் மொழியே
தமிழை அழிக்கத் தரணியில் யாருளர்?                                  
தமிழ்நாட்டுத் தமிழனே தடியெடுத்து நிற்கின்றான்
இந்திப் பேயை ஒழிக்க நினைத்து
ஆங்கில  அரக்கிக்கு அடிமைப் பட்டனர்
அமுதத் தமிழானது ஆங்கில நஞ்சாய்!
சித்தி மகளைத்தான் அத்தைமகள் ஆக்கினர்  (சித்தியும்,அத்தையும்Aunty)
பரங்கியர் ஆட்சி பாரதத்தில் போனாலும்
நம்தமிழ் நாட்டில் நல்லாட்சி செய்கிறான்
தமிழா? தங்கிலீசா? தலைகுனி தமிழா!
விலைமகளை விரும்பி விற்றாய் அன்னையை
கலைத்தமிழ் அன்னையைக் காக்கப் புறப்படு  அடக்கி வைப்போம்                              அலைபேசி
அறிவியல் குழந்தைகள் ஆயிரம் உண்டு
அலைபேசி என்பது அதன்கடைக் குட்டி
அவணியே குனிந்து அதனைக் கொஞ்சுது
பிறந்த போதோ பேச்சுமட்டும் இருந்தது
வளர்ந்த பின்பு வையத்தை வளைத்தது
சொந்தக் குழந்தையோ சோகம் கொள்ள
இந்தக் குழந்தையை ஏந்தினர் கையில்
பைத்தியம் ஆகியே செய்தொழில் மறந்தனர்
தொட்டில் குழந்தையும் கட்டில் கிழவனும்
கட்டுண்டு கிடப்பது கையளவுப் பெட்டியில்
அரசனும் ஆண்டியும் அதனிடம் மயங்கினர்
கரவிரல் கொண்டே கண்டனர் உலகை
சுயசிந்தனை என்பதைச் சுத்தமாய்த் துடைத்து
மூளையின் ஆற்றலை முடக்கிப் போட்டது
ஊணும் உறக்கமும் மறக்கச் செய்து
உறவையும் நட்பையும் ஒதுங்கச் செய்தது
உரையாடல் விளையாடல் ஒழிந்து போனது
மாதும் சூதும் மயக்குவது போலவே
காதுக்குள் பேசியே காலத்தைக் கொல்வது
கணவன் மனைவி உறவைக் கெடுத்ததால்
குழந்தைப் பிறப்பும் குறைந்து போனது
களவையும் கற்பையும் கற்றுக் கொடுக்குது
கலியுகம் அழிக்கக் கங்கணம் கட்டுது
அமிழ்தையும் நஞ்சையும் கலந்து கொடுக்கும்                                                  அலைபேசி அதனையே அடக்கி வைப்போம்.
                புலவர்ஆ.காளியப்பன்!