Friday 30 October 2020

 https://youtu.be/nVNSNRam_g0 

தீரன்சின்னமலை வரலாறு காணொலியாக மேலே காணும் UTUBE வழியே காண்க

Thursday 29 October 2020

களவு

 

                              களவியல் 1-12-2019

காதல் காதல் காதல்

காதல் போமாயின்

சாதல் சாதல் சாதல்

’’காதல் ஒருவனைக் கைப்பிடித்தே... அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தேன்னு பாரதி சொல்லியிருக்கிறார்

இந்த உலகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் வியப்பான ஒருநிகழ்வு தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு,  பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் அந்தக் காதல் வாழ்வுதான்

. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை,  பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது. அகத்திணை என்பது காதல் வாழ்க்கை.    இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மைப் பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பகத் தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை. ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஓர் ஆண்.  பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல. இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான்.                                1.

 

 

ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும், குடிநீரும் போல ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இந்த வேறுபாட்டைத் தான் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசி வரை ஓர்  உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் அவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.ஒருவர்மீது ஒருவர் குறையாத அன்பு உடையவர்களாக இருத்தல் வேண்டும்

காதல் இன்பத்தைத் துய்ப்பதில், களவு, கற்பு என்ற இரு வேறு நிலைகள் உள்ளன. காதலனும் காதலியும் தொல்காப்பியர் கூறும் பால் வரைத் தெய்வம்(விதி) என்ற ஊழின்  துணையால், முன்பின் அறியாதவர்களாக இருந்தாலும் ஒரிடத்தில் சந்தித்துக் காதல் கொள்ளுகின்றனர் .கலந்து இன்பம் துய்க்கின்றனர்.  இதனைக் களவு என்று. அகப்பொருள் இலக்கணம் கூறும்.  பிறர் பொருளைக் கவர்வது இரண்டு வகை ஒன்று களவு மற்றொன்று சூது.களவு என்பது பிறர் பொருளை அவர் அறியாது கவர்தல். சூது என்பது சூழ்ச்சியால் பிறர் பொருளைக் கவர்வது இவை இரண்டும் அறத்திற்குப் புறம்பானவை. ஆனால் தொல்காப்பியர் கூறும் களவு அறத்திற்கு மாறில்லாதது. அறமாகவே கொள்ளப்படுவது                      2.

 

 

 

ஏனென்றால் பிணி மூப்புகளின்றி, எப்பொழுதும் ஒரு தன்மையராய், உருவும் திருவும் பருவமும் குணமும் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமையுடையவராய் தலைமகனும் தலைமகளும், பிறர் கொடுப்பவும் பெறவுமின்றி, ஊழ் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது." தமது மகள் பிறர்க்கு உரியவள் என்று  பெற்றோரால்   கொடுக்கப்பட பெறுவதற்குரிய தலைவியை, அவர் கொடுப்பக் கொள்ளாது, இருவரும் கலந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் பிறர் அறியாது புணர்தலின் களவு எனப் பெயர் பெற்றது களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை. நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும்  தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது"

இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள்  பிறகு, பல்லோரறிய மணந்துகொள்வர். இதனைக் கற்பு என்று கூறுவர், இதனையே களவும் கற்று மற என்றனர் அறநிலைவழாமல் நிற்றலால் இஃது அறமெனப்பட்டது.              3.

 

களவெனப் படுவது யாதென வினவின்                                                        வளைகெழு முன்கை வளங்கெழு கூந்தல்

முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு

தளையவிழ் தண்டார்க் காமன்  அன்னோன்

விளையாட் டிடமென வேறுமலைச் சாரல்

மானினங் குருவியொடு கடிந்து விளையாடும்

ஆயமும் தோழியும் மருவி நன்கறியா

மாயப் புணர்ச்சி என்மனார் புலவர்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம் காணுங் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.  எனவே காதல் காலத்தில்

ஆசை மிகுதல், ஒருவர் மட்டும் நினைத்தல், நினைவால் உடலும் உள்ளமும் மெலிதல், இன்னது செய்தால் இன்னது நேருமோ என எண்ணுதல், நாணம் வரம்பைக் கடத்தல், பார்க்கும் பொருள்களிலெல்லாம் காதலர் நினைவே வருதல், தன்னையே மறந்து பித்தாதல், எண்ணச் சோர்வால் மயங்கி விழுதல், காதல் நிறைவேறாதபோது சாகத் துணிதல் முதலான நினைவலைகள் களவுக் காலத்திலில் காதலர் உள்ளத்தில் மோதிக்கொண்டே இருக்கும்.                             4

 

ஊழ்வினையால் காதல் காட்சி நிகழும். காதலர் ஒப்புமையால் ஒன்றியிருந்தால் சிறப்பு. காதலன் காதலியை விடச் சிறந்திருந்தாலும் குறையில்லை. [2] காதலி சிறந்தவளாய் இருந்தால், கிடைப்பாளோ எனக் காதலனுக்கு ஐயம் தோன்றும். [3] தெய்வமோ என அவன் ஐயுறும்போது சில குறிப்புகளால் இவள் பெண்மகள் என உணர்ந்துகொள்வான். [4] அவர்கள் பார்வையில் இசைவு புலப்படும். [5] ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு.  

களவியல் செய்திகளைக் 'காதலர் செய்திகள்' எனப் புரிந்துகொள்ள வேண்டும். காதலன் காதலியிடம் பேச்சுக் கொடுத்தல், தன் சொல்லுக்கு அவளைக்  கட்டுப்படுமாறு செய்தல், கட்டுப்பட்டால் இன்ன நன்மை என விளக்குதல், அவளது புன்னகையின் பொருளை  உணர்ந்துகொள்ளுதல், அவளை நினைத்துத் தான் மெலிவதை உரைத்தல், அவள் இல்லாவிட்டால் தனக்கு நிகழப்போகும் தீங்கை எடுத்துரைத்தல், தன் கைவிடாத் தன்மையை அவளுக்குத் தெளிவுபடுத்துதல் முதலான பேச்சுக்களால் காதலன் காதலியை வயப்படுவான் காதலியைத் தொடுதல். அவள் அழகைப் பொய்யாகப் பாராட்டுதல். அவள் ஒப்புதலுடன் அணைத்துக்கொள்ளல். அவளிடம் வருவதற்குத் தனக்கு நேர்ந்த இடையூறுகளை எடுத்துரைத்தல். அவள் உறவு கிடைக்கவில்லையே எனப் பெருமூச்சு விடுதல். உடலுறவு கொள்ள முயல்தல், காதலியைத் துய்த்தல், ஆசை அடங்காமை என்னும் இவை எட்டும் ஒரு வகை. மேலும்                                        5

 

பெற்றவழி மகிழ்தல், அவள் பிரிந்து செல்லும்போது கலங்குதல், நிகழவேண்டியதை எடுத்துரைத்தல், தன்னைக் குறை கூறும் பாங்கனுக்கு எடுத்துரைத்தல், பாங்கன் உதவியை வலியுறுத்தல், தன் ஊர், பேர், அவள் இல்லாவிட்டால் தனக்கு நேரும் கெடுதி முதலானவற்றைக் கூறித் தோழியின் உதவியை நாடல், தோழி தன் தலைவியை இணங்கச்செய்தல், தலைவி இணங்காவிட்டால் மீண்டும் மீண்டும் கெஞ்சுதல், இணங்கியபின் அரவணைத்தல், அவள் தயங்கும்போது தனக்கு நேரும் கெடுதியையும், தன் பெருமைகளை எடுத்துரைத்தல், மடலேறிப் பெறுதல் பற்றி நினைவூட்டுதல் முதலானவை அப்போது பேசப்படும். செல்லும் வழியில் நிகழும் சிலவும் உண்டு   களவு என்பது இன்ப உணர்வின் அடிப்படையில் நிகழக் கூடியது. தலைவியிடம் தோன்றும் ஏழு வகையான வேறுபாடுகள் தலைவிக்கும் தலைவனுக்கும் உள்ள உறவைக் காட்டிக் கொடுத்துவிடும். அவை (1) உடலில் தோன்றும் மணம், (2) தோற்றத்தில் பொலிவு, (3) உணவு செல்லாமை, (4) மறைவாகச் செயல்படுதல், (5) தோழியை விட்டு விலகிச் செல்லுதல், (6) தோழியிடம் புதுமையாகப் பழகுதல், (7) புணர்ச்சியை எதிர்பார்க்கும் உணர்ச்சி வெளிப்படுதல் ஆகியவை அந்த ஏழு.மெய்யாகவும் பொய்யாகவும் பார்க்கும் பார்வை.அவனை அறியாதவள் போல நடித்தல்பொதுப்பட உலகியல் பேசுதல்விலக்க முடியாமல் அவனை விலக்கல்அவனைப் பின்னர் வா என்று கூறுதல்அவனை ஏமாற்றிப் பித்தனாக்கல்முன்பே உள்ள உறவைக் கூறி அச்சுறுத்தல். இக் களவு ஒழுக்கம் நான்கு வகையாகப் பகுத்துக் கூறப்படும்          6

பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993

கூற்றுக்குரிய மாந்தர் தொல்காப்பியம்

 

               கூற்றுக்குரிய மாந்தர்     தொல்காப்பியம் -   2-8-20  36 ஆம் அமர்வு

தண்டமிழ் செழிக்க தொல்காப்பியர்  பேரவையைத் தோற்றுவித்து, இட்டலிங்கம் சேர்ந்திட்ட கயிலைக்குருமணி தாள் போற்றி, அப்பேரவையின் மூன்றாம்ஆண்டு நிறைவு விழாச் சிறப்புற நடந்தேற அருளுரை வழங்கிய பேரூர் ஆதீனம் திருத்தாள் போற்றி, வாழ்த்துரை  வழங்கிய சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் திருத்தாள் போற்றி, தொல்காப்பியத்தை உலகறியச் செய்வதில்  முன்னேர் பிடித்து உழைத்து வரும் அமெரிக்கா நியுசெர்சியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தையும் அதன் புகழ் உலகெங்கும் பரவிட இணைய தளத்தை அமைத்து மிகச்சிறப்பாகப் பணியாற்றி வரும்  நாச்சி.க நிதி ஐயா அவர்களையும் முனைவர் உமாபதி ஐயா அவர்களையும் வழிபடு தெய்வம் நிற்புறம் காக்க எனப் போற்றுகின்றேன்.

தலைமை உரையை வழங்கிய செக்கிழுத்தசெம்மல் வ.உ.சி அவர்களின் கிளைவழிப் பெயரர் தமிழ்வாணன் ஐயா அவர்களையும்,டாக்டர் எம்ஜிஆர் ஜானகி அம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சத்தியபிரியா அவர்களையும் மற்றும் நன்றி உரை வழங்க உள்ள முனைவர் சண்முகபிரியா பாரதி, வாழ்த்துப்பா இசைத்த திரு இராசேசு வரேற்புரை வழங்கிய கவிச்சுடர் கா.உமாபதி இணைப்புரை வழங்கும் வழக்குரைஞர் இந்துமதி,செல்வன் சேந்தன் அமுதன்  மற்றும் கவிதை வழங்கும் கவிதாயினிகலைநிலா  இணையத்தில் இவ்வமர்வு நிகழ்வுகளைக்  கேட்டுப் பாராட்ட உள்ள தமிழ்ச்சான்றோர்கள் ஆகியோர் அனைவரையும் வாழ்த்தி வணங்குகின்றேன்,

 

5-9-2017 மக நன்னாளில் தொடங்கப்பட்ட  தொல்காப்பியர் பேரவை தடையின்றி மடைமாறாமல் சென்று மூன்றாம் ஆண்டு நிறைவு விழாக் காண்கிறது. கைக்கினை முதலா என கயிலைக் குருமணிமணி திருவாக்கால் தொடங்கப்பட்டது அன்றுமுதல் இன்றுவரை தொல்காப்பிய நூற்பாக்களைப் பாமரனும அறிந்து கொள்ளும் வகையில் 35 தலைப்புக்களில் முழங்கியபின் 36 ஆவது தலைப்பாக கூற்றிற்கு உரிய மாந்தர் யாரெனப் பேசப் போகிறோம்.

   அந்த அடிப்படையில் கூற்றினைப் பற்றி கூறுபோட்டுக்கூற உள்ளேன். கூறும் கூற்று கூறுகெட்டு போகையிலே கூற்றுவன் வந்து உடலை விட்டு உயிரைக் கூறுப் போட்டுச் செல்வான். என்பதை யாவரும் அறிவோம்,   சிலருக்குக் கூற்றே கூற்றவனாக அமைவதும் உண்டு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

  கூற்று என்பது பலபொருள் குறித்த ஒரு சொல்லாகும். அஃது  இயல்பு, கூறுபாடு, துறை,  கூறுதல் ,சொல், மொழி, காலன் நமன்  கொலைத்தொழில் செய்வது எனப் பல  பொருள்களைக் குறிக்கும்,

   அதே சமயம் தொல்காப்பியர் கூற்று என்பதைக் கிளவி கிளத்தல் கிளந்த, ,கூறல், மொழிதல் எனப்பல சொற்களால் குறிப்பார், தொல்காப்பியர் கூற்று என்னும் சொல்லை எழுத்ததிகாரத்தில் எந்த இடத்திலும் கூறவில்லை

 

 சொல்லதிகாரத்தில் 5 இடங்களிலும் பொருளதிகாரத்தில்  14 இடங்களிலும் கூற்று என்னும் சொல்லைப் பயன் படுத்துகிறார் 

கூற்று என்றால் பேச்சு இதை ஆங்கிலத்தில் speach என்பார்கள் ஸ்பீச்சும் பேச்சும் ஒரே ஒலிப்பு முறைதான். கூற்றாவது ஒன்றைப் பற்றி வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ வெளிப்படுத்துவது.

  தொல்காப்பியம் உலக வழக்கிற்கும் செய்யுள் வழக்கிற்கும் நாடக வழக்கிற்கும் இலக்கணம் கூறுவது. தொல்காப்பியர் கூற்று என்பதை நாடக வழக்கிற்காக கூறி உள்ளார். நாடகத்தின் கூறுகளுள் முதன்மையானது உரையாடல்.அதாவது ஒருவர் கூற்றிற்கு மறுமொழி பகர்வது.  கூற்றமும் மாற்றமும் என்பது உரையாடல் வடிவத்தைக் குறிப்பதாகத் தொல்காப்பியம் கூறுகிறது.தொல்1412)

  தொல்காப்பியத்தில் நாடகத் தலைமைக் கூறுகளாக, கூற்று  நிகழ்த்தும் சூழல், இயற்கைக் குறியீடுகள், கூற்று நிகழ்த்தும் அகமாந்தர், கேட்போரிடம் உரைத்தல் போன்றவை காணப்படுகின்றன. கூற்றால் காதல் மாந்தரின் உள்ளோட்டங்களாகிய உணர்வுகள் உணர்ச்சிகள் வேட்கைகள் பற்றி அறியலாம்.

   இங்கு கூற்றாவது அகத்திணைக்கு  உரிய பேச்சு நிகழ்த்துவது இன்னார் எனக்கூறுவது அவற்றுள்  களவில் கூற்றுக்குரியர் யார் என்றும் கற்பில் கூற்றுக்குரியர் யார் என்றும் இரண்டிலும் கூற்று நிகழ்த்துவோர் யார் என்றும் தொல்காப்பியர் தனித்தனியாக்க் கூறுகிறார்

            தொல்காப்பியர்  கூற்று நிகழ்த்துவோர் 12 பேர் எனச்சட்டுகிறது. அகத்திணை களவு கற்பென இருவகைப்படும். அவற்றுள் களவில் கூற்று நிகழ்த்துவோர் யாரெனக் காண்போம்

பார்ப்பான் பாங்கன் தோழி,செவிலி

சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியோடு

அளவியல் மரபின் அறுவகை யோறும்

களவினில் கிளவிக்கு உரியர் என்பர் 1445

களவினில் கூற்று நிகழ்த்துவோர் பார்ப்பான் பாங்கன் தோழி,செவிலி கிழவன் கிழத்தி ஆகிய அறுவரும் ஆவர்

 

கற்பில் கூற்று நிகழ்த்துதற்குரியர் யார் என்றால்

பாணன் கூத்தன் விறலி பரத்தை

யாணம் சான்ற அறிவன் கண்டோர்

பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா

முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇஇத்

தொல்நெறி மரபின் கற்பிற்குரியர் 1446 என்கிறது நூற்பா

 

இதன்பொருள்,களவில் கூறபட்ட பார்ப்பான் பாங்கன் தோழி,செவிலி கிழவன் கிழத்தி என்னும் அறுவரோடு பாணன் கூத்தன் விறலி பரத்தை அறிவன் கண்டோர் அறுவரும் சேர்ந்து 12 பேர் கற்பில் கூற்று நிகழ்த்துவர்

 

ஊரிலுள்ளாருஞ் சேரியிலுள்ளாரும். அயன் மனையுள்ளாரும் நோய்ப்பக்கங் குறிப்பினாலறிவாரும்  தந்தையுந்தமையனும் களவு கற்பு இரண்டிலும் வெளிப்படையாக் கூற்று நிகழ்த்துதல் இல்லை                                          ஊரும் அயலும் சேரி யோரும்

நோய்மருங்கு அறிஞரும் தந்தையும் தன்னையும்

கொண்டு எடுத்து மொழியப்படுதல் அல்லது

கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும் 1447 என்பது நூற்பா

 

பெற்ற தாயாகிய நற்றாய்  தலைவன் தலைவியோடு நேரடியாகப் பேசுதல் இல்லை. கிழவன் தன்னொடும் கிழத்தி தன்னொடும்

நற்றாய் கூறல் முற்றத்  தோன்றாது 1448என்பது நூற்பா

 

தலைவனும் தலைவியும் உடன்போக்கு நிகழ்த்தும் போது இடைச்சுரத்தில் கண்டோர் நற்றாய் தோழி செவிலி. இவரொடும் தலைவனொடுந் தலைவியொடுங் கண்டோர்  கூற்றுநிகழ்த்துவர். அதற்கான நூற்பா

ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு

கண்டோர் மொழிதல் கண்ட தென்ப  1449

 

இடைச்சுர மருங்கில் கிழவன் கிழத்தியொடு

வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன என்பதால்

இடைச்சுரத்தில் செல்லும்போது தலைமகன் தலைவிக்கு நீதிநூற்கருத்துகளை எடுத்துச்சொல்வது உண்டு என்றும் அறியலாம்

 

இவ்வாறு கூற்று நிகழ்த்துவோரைக் கூறிய தொல்காப்பியர் கூற்றினைக் கேட்போர் யார் யாரெனக் கூறிகிறார்  கூற்றிற்கு உரிய 12 பேரில் தலைவன் தலைவி  நீங்கலாக உள்ள 10 பேரும் கூற்றினைக் கேட்போர் ஆவர்.                                                                                                                                                                                                                                                                                                                  

மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்

நினையுங் காலைக் கேட்குநர் அவரே  1452

 பார்ப்பார் அறிஞர் ஆகிய இருவர் கூற்றுகளையும் அனைவரும் கேட்பர்

பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி

யார்க்கும் வரையார் யாப்பொடு  புணர்ந்தே 1453

மக்களைத்தவிர

மக்கள் அல்லாதோர்களையும் கேட்டற்குரிய  பொருள்களாக தொல்காப்பியர் கூறுகிறார். அவை

 

ஞாயிறு திங்கள் அறிவே நாணே

கடலே கானல் விலங்கே மரனே

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே

அவையல பிறவும் நுதலிய நெறியால்

சொல்லுன போலவும் கேட்குந போலவும்

சொல்லி யாங்கு அமையும் என்மனார் புலவர்.

இந்த அமர்விலே   தொல்காப்பியர் கூறும் கூற்றிற்குரிய மாந்தர்களைப் பற்றி அறிந்தோம்   அவர்கள் எந்த எந்த இடங்களில் கூற்று நிகழ்த்துவர் தனித்தனியாக  அடுத்த அமர்வுகளில் காண்போம் இதுவரை உங்களோடு உரையாடியவர்  புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் நன்றி வணக்கம்