Thursday 29 October 2020

தொல்காப்பிய நாற்று தமிழ்த்தென்றல் காற்று

 

            தொல்காப்பிய நாற்று தமிழ்த்தென்றல் காற்று

 

              

                முன்னுரை

 

கருத்துக்களம் தமிழ் இயலன் நடத்திய ZOOM நிகழ்வு

 

 

இன்பம தெங்கும் நிலைகொண் டிருக்கவும்

துன்பமது தூசெனத் தூரமாய்ப் போகவும்

மன்பதை போற்றும் கவிவளம் கொண்டவென் 

இன்றமிழ்த் தாயே துணை

 

 

நாற்றிசைக் காற்றுக்கும் நல்லபெயர் வைத்தவன் தமிழன். வடக்கில் இருந்து வரும் காற்று வாடை. வாட்டி எடுக்கும் குளிரைக் கொண்டது. காரணம். பிணவறையில் இருக்கும் வடமொழி  உள்ள  பக்கமிருந்து வருகிறது. ஆனால் தெற்கில் உள்ள  பொதிகை மலை உச்சியிலிருந்து புறப்படும் தென்றல் உடலுக்கும் உள்ளத்திற்கும் உவகைதரும் குளுமை கொண்டது காரணம்.முத்தமிழுக்கும் இலக்கணம் சொன்ன  குள்ள முனி வாழ் மலையிருந்து வருகிறது முச்சங்கத்தால் வளர்க்கப்பட்ட செழுந்தமிழ் பேசும் நிலத்திலிருந்து வருகிறது. அத்தமிழ்த்தென்றல்  காற்றைச் சுவாசிப்போம் தொல்காப்பிய நாற்றை நேசிப்போம்.தமிழுக்காய் தன்தலையை மட்டும் கொடுக்கத் துணிந்தவன் கொங்கு நாட்டுக் குமணன்.ஆனால்  தமிழுக்காய் தன் குடும்பத்தையே  தத்தம் செய்பவர் தமழ் இயலன் அவர்களுக்கும், ஊரடங்கால் உவப்பத் தலைகூடி உரை நிகழ்த்த முடியாத புலவர்களை ஊடகத்தால் ஒருங்கிணைத்து  மகிழ்விக்கும் காந்தி லெனின் சம்பத்குமார்  பண்பரசன் தமிழ்முல்லை அவர்களுக்கும், எண்ணக் குவைகளை காப்பியக் களத்தில் கொட்டவும் அள்ளி எடுத்துச் செல்லவும் இணையத்தில் இணைந்துள்ள என் அருமைச் சான்றோர் அனைவர்க்கும் தொல்காப்பியர் அன்பர் அடிப்பொடி ஆ.காளியப்பன்

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்                                                                                                                            பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து                                                                                                              பொலிமின் என தொல்காப்பியர் வாழ்த்தோடு வணக்கம் கூறுகிறேன்.எனக்கு இம்மன்றம் இட்ட தலைப்பு தொல்காப்பிய நாற்று தமிழ்த்தென்றல் காற்று. எனவே தொல்காப்பியரை வாழ்த்தி உரையைத் தொடங்குவதே சிறப்பு தொல்காப்பியத்திற்கு  உரை எழுதிய பேராசிரியர் கூறும் வாழ்த்தைடே நாமும் கூறுவோம்

 

ஒல்காப் பெரும்புகழ்த்  தொல்காப் பியனடி

பல்காற் பரவுதும் எழுத்தொடு

சொல் காமரு பொருள் தொகை திகழ் பொருட்டே. என்று தொல்காப்பியரை வாழ்த்துவோம்

  முச்சங்கத்தில் முதற்சங்கம் தென்மதுரையில் இருந்தது. அச்சங்கத்தில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த குமரனும் நிதியின் கிழவனும் அகத்தியனும் ஆய்ந்தனர் தமிழை. அருந்தமிழ் சங்கத்தையும் அத்தனை நூல்களையும்  அப்படியே விழுங்கியது ஆழிப்பேரலை.

 

        விட்டபணி தொடரக் கபாட புரத்தினில் தொல்காப்பியரும், வெள்ளூர்க் காப்பியனும் துவரைக்கோனும் இரண்டாம் தமிழச்சங்கம் அமைத்துத் தமிழை ஆய்ந்தனர்.ஆழிப்பேரலைக்கு அப்படி என்னபசியோ அந்தச் சங்கத்தையும் அப்படியே விழுங்கியது. இறவாப்புகழுடைய ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம் மட்டும் தப்பியது. அதுவே இதுவரை உலகில் கிடைத்த முழுமையான முதல் நூல்  தொன்னூல் நம்வாழ்வுக்கு நன்னூல் போற்றுதலுக்கு உரிய பொன்னூல்  அன்று தொற்று இன்று வரை நிலை பெற்றுள்ள மன்னூல்.நம் தமிழ்நூல்களுக்கெல்லாம் முன்னூல் இதற்கு ஈடுஇணை எந்நூல்?   உலகில் முழுமையாய்க் கிடைத்த முதல் நூல்; திருக்குறளின் முன்னோடி; ஆழிப்பேரலைக்கு அகப்படா நூல்; அனல் புனல் அத்தனையும் வென்ற நூல்; அதங்கோட்டாசான் தடைக்கு விடை கூறி வெளிவந்த நூல்;பனம்பாரனாரின் பாயிரம் கொண்ட நூல்; எல்லா இயங்களுக்கும்(இயம்=இசம்) வேராய் விளங்கும் நூல்;உயிருக்கு விளக்கம் உரைத்த உயிரியல் நூல்; வள்ளுவனையும் கம்பனையும் வளைத்துப் போட்ட நூல்; சிலம்பு தந்த இளங்கோவைச் சிந்திக்க வைத்த நூல்;அறிவியல் துறைகள் அத்துணையையும் அடக்கியநூல்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைப் பகரும்நூல்; நாகரிகச் சிறப்பை நவிலும் நூல்; இடைச்சங்கத்தாருக்கும்,கடைச் சங்கத்தாருக்கும் இதுவே இலக்கண நூல்; இன்றைக்கும் அந்நிலைதான்; இத்தனை பெருமைகளையும் இயல்பாய்க் கொண்டு விளங்குவது அதுவே தொல்காப்பியம் .மற்றவர்கள் மரத்தினில் வாழும் போதே மாளிகை கட்டி வாழ்ந்த தமிழனின் வரலாற்றைக் காத்தது தொல்காப்பியம்..அந்த தொல்காப்பிய நாற்றே விளைந்து மற்ற இலக்கண நூல்களுக்கெல்லாம் வித்தாய்  அமைந்தது

உலகில் எல்லா மொழியிலும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் இருக்க வாழ்வுக்கும் இலக்கண சொல்வது தொல்காப்பியம் மட்டுமே.

 

தொல்காப்பியம் என்பதைத் தொன்மை+காப்பியம் என்று பிரித்தால் தொன்மையான காப்பியம்  அதாவது பழைமையான காப்பியம்  என்ற பொருள் ஆகிறது ஆனால்காப்பிங்களுக்கு உரிய இலக்கணம் ஆகிய வாழ்த்துமுதல் உறுதி கூறுதல் முடிய உள்ள 30 கூறுகளை முறையாக உரைக்காததால் இது காப்பியம் ஆகாது எனவே தொல்காப்பியம் என்பதை தொல்+காப்பு+ இயம் என்று மூன்றாகப்பகுப்பதே சாலச்சிறந்தது. தொல் என்றால் பழைமை காப்பு என்றால் காப்பது இயம் என்றால் ஒலி,சொல்,தன்மை,குணம்,பண்பு,ஒழுக்கம்,மரபு என்றெல்லாம் பொருளுண்டு.எனவே தொல்காப்பியம் என்றால் பழமையான ஒலியைக் காப்பது, பழமையான எழுத்தைக் காப்பது, பழமையான சொல்லைக் காப்பது, பழமையான பண்பாட்டைக் காப்பது, பழமையான தன்மையைக் காப்பது, பழமையான குணத்தைக் காப்பது, பழமையான ஒழுக்கத்தைக் காப்பது, பழமையான மரபைக் காப்பது

   பழைமையான மரபைக்காக்க எழுந்த நூலே தொல்காப்பியம். அதனால்தான் நூலின் தொடக்க இயலே நூல்மரபு என்று தொடங்கி இரண்டாவது இயல் மொழி மரபு என்றும் ஐந்தாவது இயல் தொகை மரபு என்றும்,பதிமூன்றாவது இயல் விளிமரபு என்றும் மரபு மரபு என்று நான்கு இயல்களை அமைத்த தொல்காப்பியர் நூலின் இறுதி இயலை மரபியல் என்றே முடித்துள்ளார். எழுத்திகாரத்தில் மூன்று இயல்கள் மரபை குறித்தும் சொல்லதிகாரத்தில் ஓரியலை மரபைக் குறித்தும் பொருளதிகாரத்தில்  ஓரியலை மரபைக் குறித்தும் அதாவது மூன்று இயல்களிலும் மரபைக்காத்துள்ளார்.இவற்றுடன் என்ப என்மனார் புலவர் என்றெல்லாம் முந்நூற்றுக்கும்  மேலான இடங்களில் தமக்கும் முன்னோர் மரபினை ஏற்றுமுடித்துள்ளார். எனவே தொல்காப்பியம் மரபினைக்காக்க எழுந்த நூலே எனலாம்.இதை அவரது நூறப்பாவாலும் அறியலாம்

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை

மரபு வழிப்பட்ட சொல்லினான 1590

மரபு நிலைதிரியின் பிரிது பிரிதாகும் 1591

மரபுநிலை திரியா மாட்சிதாகி

விரவும் பொருளும் விரவும் என்ப 991

 

பிறப்பு மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics) எனப்பெயர்

தொல்காப்பியர் பெயர்க்காரணம் தொன்மை ஆன காப்பியக்குடியில் தோன்றியமையால் இப்பெயர் பெற்றதாக இளம்பூரணர் இயம்புவர்

பழமைமிக்க காப்பியக் குடி என்னும் ஊரில் பிறந்தமையால் இப்பெயர் பெற்றார்என்றும்  காப்பியன் என்பது இயற்பெயர் தொல் என்பது அடைமொழி என்பாரும் உளர்.

 

 

 

காலம் : காலத்தில் கருத்து வேறுபாடு இவரது காலத்தை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக உரைக்கின்றனர் முனைவர் இராச மாணிக்கனார் கிமு 300 என்கிறார். கே.என் சிவராசுப்பிள்ளை கி.பி 4 ஆம் நூற்றாண்டு என்கிறார்

 டாக்டர் சி. இலக்குவனார் கிமு ஏழாம் நூற்றாண்டு என்கிறார். கா.வெள்ளைவாரணார் கிமு5320 என்கிறார் ரா.ராகவ ஐயங்கார்கிமு இரண்டாம் நூற்றாண்டிற்கு  முன்னவர் என்பர் நாவலர் பாரதியார் 3000 ஆண்டுகளுக்கு  குறையாது என்பார் எனினும் தமிழ்ச்சான்றோர்கள் கிமு 711 ஆண்டு சித்திரை வெள்ளுவா என்று வகுத்துக்கூறியதால் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று தொல்காப்பியர் நாளாக தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் கொண்டாடி வருகிறது அறிஞர் பெருமக்கள் அவரது காலத்தை ஆய்ந்து காணும்வரை இதே நாளை தொல்காப்பியர் நாளாகக் கொண்டாடுவோம்.

 

பேச்சு மொழி எல்லா உயிர்க்கும் பொது ஆனால் எழுத்து மொழியோ மாந்தருக்கு மட்டும் உரியது பேச்சு மொழி பேசுபவன் கேட்பவன் ஆகிய இருவரை மட்டுமே தொடர்புபடுத்தும் பேசும்போது மட்டுமே நிற்கும் ஆனால் எழுத்து மொழியோ மூன்று இடத்திற்கும் மூன்றுகாலத்திற்கும் பொருந்தக்கூடியது  பேச்சு மொழியை வழக்கென்றும் எழுத்துமொழியைச் செய்யுள் என்றும் கூறுவர் எல்லா நூல்களும் எழுத்து மொழிக்கும் மட்டும் இலக்கணம் கூற  உலக வழக்கிற்கும் இலக்கணம்  கூறுவது தொல்காப்பியம் மட்டுமே என்பதை அதிலுள்ள பாயிரம் வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் என்று பகர்கிறது 

 

பண்டிதர் கூட்டத்திலும் பல்கலைக்கழக ஏட்டிலும் உள்ள தொல்காப்பியத்தை காட்டு வேலை செய்யும் பாமரனுக்கும் காட்ட வேண்டும் என்பதே எனது நோக்கம். பாமரன் அறிவதால் பயன் என்ன என்று கேட்கலாம்.தொல்காப்பியம் வெறும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் சொல்லவில்லை. வாழ்வுக்கும் இலக்கணம் கூறுவதால்  அவனும் அறிந்து தான் ஆகவேண்டும். அவனும் வாழ்ந்துதான் ஆகவேண்டும். இதைத்தான் யாம்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் நோக்கில் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத்தோன்றி பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇ நம்மை ஆற்றுப் படுத்துகின்றார். மனித வாழ்வின் இறுதி நோக்கம்  சிறந்தது  பயிற்றல் இறந்தது பயனே என்ற தம்கொள்கைப்படி மானிட வாழ்வுக்கே இலக்கணம் உரைக்கிறார்.

     அப்படி வாழவின் பொருளைக் கற்றுக் கொள்ள துணைசெய்வன எழுத்தும் சொல்லுமே என்பதால் தமது  இலக்கணத்தை எழுத்து சொல் பொருள் என மூன்றாகப்பகுத்தார்  ஒவ்வொரு   அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்கள் அமைந்தே தீரவேண்டும் என்று கருதியே பிரித்தார். என்பது வெளிப்படையாகத்தெரிகிறது. நானூற்று எண்பத்து மூன்று நூற்பாக்களைக் கொண்டது   எழுத்ததிகாரம் அதற்கும் ஒன்பது இயல்கள்  456 நூற்பாக்களைக் கொண்டது   சொல்லதிகாரம் அதற்கும் ஒன்பது இயல்கள்.ஒன்பது என்ற எண்ணிக்கை வரவேண்டும் என்பதற்காகவே எழுத்துக்கும் சொல்லுக்கும் புறநடையாக  எச்சவியலை வைத்தார்.காரணம்  ஒன்பது என்ற எண்ணிக்கை வரவே எனக் கருதலாம்.அதேசமயம் 656 நூற்பாக்களைக் கொண்டது பொருளதிகாரம் இதற்கும் ஒன்பது இயல்களையே கொண்டு முடித்துள்ளார். இப்படிக்கூறும்போது தொல்காப்பியத்தின் நூற்பாக்களின் எண்ணிக்கை1595 என்று இளம்பூரணர் கணக்குப்படி ஆகிறது. சிலர்1610 என்றும் 1612 என்றும் நூற்பாக்களின் எண்ணிக்கையைக் கூறினாலும் தொல்காப்பியர் ஒன்பது என்ற எண்ணையை பெரிதும் போற்றுவதால் தொல்காப்பிய நூற்பாக்களின் எண்மிக்கை 1611 என்றுகொள்ளுதலே சாலச்சிறந்தது பேராசிரியர் இவ்வெண்ணிக்கையையே கொண்டுள்ளார்.தொல்காப்பியர் ஒன்பதைப் பெரிதும் போற்றுதற்கும் ஏதோ ஒருகாரணம் இருக்கத்தான் வேண்டும்.உலகில் எல்லாப் பொருள்களுக்கும் தன்நிலை ஆதலும் தான் சார்ந்தவையின் நிலையாதலும் இருதன்மை உண்டு ஆன்மாவிற்கும் இலக்கணத்திற்கும் இத்தன்மை உண்டு அதை உணர்த்துவதான் ஒன்பதின் தன்மை  ஒன்பதுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் அதன்கூட்டுத்தொகை கூட்டிய எண்ணாகவே இருக்கும்  ஒன்பது உடன் ஒன்றைக் கூட்டினால் பத்து அதன் கூட்டுத்தொகை ஒன்று ஒன்பது உடன் இரண்டைக் கூட்டினால் பதினொன்று  அதன் கூட்டுத்தொகைஇரண்டு ஒன்பது உடன் மூன்றைக் கூட்டினால் பன்னிரண்டு அதன் கூட்டுத்தொகை மூன்று ஒன்பது உடன் ஒன்பதைக் கூட்டினால் பதினெட்டு அதன் கூட்டுத்தொகை ஒன்பது அதேசமயம் ஒன்பதுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் பெருக்குத்தொகையின் கூடுதல் ஒன்பதாகவே இருக்கும், இப்படி ஒன்பதிற்கு தந்நிலை ஆதலும் தான்சார்ந்த நிலையாதலும் ஆகிய இருதன்மையும் உள்ளது.அதே நிலை ஆன்மாவிற்கும் இலக்கணத்திற்கும் உள்ளது எனவே எழுத்து தனித்து இருக்கும்போது தன்நிலையிலும் சொல்லுடன் சேர்ந்து வரும்போது  சொல்நிலையும் அடைகிறது அதேபோல் சொல் தனித்திருக்கும் இருக்கும் தன்நிலையிலும் பிறசொற்களோடு சேர்ந்துவரும்போது பொருள் நிலையும் அடைக்கிறது.எனவே  தொல்காப்பியர்க்கு ஒன்பதின் மீது  ஈடுபாடு உள்ளது என்று அறியலாம் ஆனால் இந்த மரபு வேறு எந்த நூலிலும் பின்பற்றப்படவில்லை ஆனால் தொல்காப்பியத்தை அடியொற்றி வந்த திருமந்திரம் இந்த மரபைப் பின்பற்றுகிறது திருமந்திரம் 9 தந்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பதின் பெருமையை உணர்ந்தவர் திருநாவுக்கரசர் அவரும் இரண்டு பாடல்களில் ஒன்பது ஒன்பது என்று பாடி உள்ளார்

 

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன

ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை

ஒன்பது போலவர் போலக் குழற்சடை

ஒன்பது போலவர்  பாரிடந் தானே  விடந்தீர்த்த திருப்பதிகம் 4 ஆம்திருமுறை

 

ஒன்ப தொன்பதி யானை யொளிகளிறு

ஒன்ப தொன்பது பலகணம் சூழவே

ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை

ஒன்பது ஒத்துநின் றென்னு ளொடுங்குமே 9 தனித் திருக்குறுந்தொகை

5 ஆம்திருமுறை

 

தொல்காப்பிய நாற்று தமிழ்த் தென்றலாக  வள்ளுவத்திலும் சிலம்பிலும் திருமந்திரத்திலும் இராமாவதாரத்திலும் வீசுவதை பார்க்கலாம்

 நாம் இப்போது யாப்பிலக்கணத்தில் செய்யுள் அடிகளை வரையறுக்கும்போது  இரண்டு சீர்களாய் வருவதை குறளடி என்பது போல சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்று சீர்களின் எண்ணிக்கையை வைத்து பெயர் வைக்கிறோம்

ஆனால் தொல்காப்பியத்தில்  எழுத்துக்களின் எண்ணிக்கையை வைத்தே அடிக்குப்பெயர் வைக்கப்படுகிறது.

பத்தெழுத்தென்ப நேரடிக்களவே

ஒத்த நாலெழுத்து ஒற்றலங் கடையே

இப்படி நேரடியில் 12 எழுத்துகளைப் பெற்று வருவது கட்டளை எனப்படும் திருமூலர் தாம் இயற்றிய 3000  பாடல்களையும் இந்த விதிக்கு சற்றும்  மாறாமல்   கட்டளை அடியால் எழுத்தி உள்ளார். 13 எழுத்து வந்தாலும் சரி 11 எழுத்து வந்தாலும் தவறு இந்தத் தொல்காப்பியர் விதியைப் பின்பற்றியவர் திருமூலர்

திருக்குறளில் வீசும்தென்றல்

 

இலக்கணம் உண்டெனில் அதற்கு எடுத்துக்காட்டு வேண்டும். தொல்காப்பிய இலக்கணத்திற்கு திருக்குறளே எடுத்துக்காட்டு

 

 தொல்காப்பியரின் பொருளதிகாரம் இலக்கியத்தை இலக்கண வடிவில் கூறியுள்ளது திருக்குறள் இலக்கணத்தை இலக்கிய வடிவில் கூறியுள்ளது இரண்டும் ஒருபொருள் காணும் இருகண்கள் ஆகும்

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு 

என்று தொல்காப்பியர் உரைத்ததை அடியொற்றியே திருவள்ளுவரும் தமது நூலை அறம் பொருள் இன்பம் என்று பகுத்துள்ளார்..

 

 

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்(தொல்பொருள்89) என்று தொல்காப்பியர் உரைத்ததை அடியொற்றியே திருவள்ளுவரும்   மனித வாழ்வை  புறவாழ்வு   அக வாழ்வு  என இரண்டாகப்பிரிக்கிறார் அறம்பொருளை புறம் என்றும் காமத்துப்பாலை    களவு என்றும்  கற்பென்றும் இருவகைப்படுத்துகிறார். திருக்குறளின் இன்பத்துப்பாலும் களவு, கற்பு என இரண்டு இயல்களாகவே பிரிக்கப்பட்டுள்ளது   தொல்காப்பியர் கூறும் சிறந்தது பயிற்றல் இறந்த்தின் பயனே எனும் விதிப்படி                                                               

   ஆணும்பெண்ணும்    ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு அறிவறிந்த மக்களைப் பெற்று, விருந்தினரைப் பேணி இல்லறத்தின் இறுதியாகப் புகழ் பெறுதலே ஆகும். இதனை மனதில் கொண்டே வள்ளுவரும் இல்லறவியலின் இறுதி அதிகாரமாக புகழ் என்னும் அதிகாரத்தை அமைத்தார்    தொல்காப்பியத்தில் கூறப்படும்  உரிப்பொருள்

 

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங் காலை திணைக்குரிப் பொருளே 960   என்று தொல்காப்பியர் கூறவதை வரிசைமாறாமல்  தி

 

 

சிலப்பிகாரத்தில் வெட்சித்திணையில் ஒருபாடலே வஞ்சிக்காண்டம்

பொருளுடைப்பக்கம் அருளுடைப்பக்கம்

 

நாடவற் கருளிய பிள்ளை யாட்டும்

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று

இருமூன்று வகையிற் கல்லொடு புணர

 

 குன்றக்குரவை காட்சிக்காதை  கால்கோட்காதை நீர்ப்படைக்காதை நடுகற்காதை  வாழ்த்துக்காதை வரந்தருகாதை

 

   தொல்காப்பியம் (பாமரருக்கு) ஏன் அறியப்படா நூலானது,பண்டிதர் மட்டுமே புரிய முடி.யும்.அஃது ஓர் இலக்கண நூல்.அதைப் பயில்வது சிற்றுளி கொண்டு பெருமலை பிளப்பதற்கு ஒப்பாகும் என்று உரைத்து வைத்தனர். வாழைப் பழமாய் உள்ளதைப் பலாக்கனி எனச் சொல்லி மிரட்டினர்.அதனால் படிப்பு மட்டுப்பட்டோர் பயந்து நின்றனர். உரை எழுதியோர் தன் மொழிப்புலமையை வெளிப்படுத்த, உத்தி என்னும் விதி காட்டி, தம் எண்ணத்தை எல்லாம் கொட்ட நினைத்ததால், பரண்மேல் போடப்பட்டது. மொத்தத்தில் அனைவராலும் எழுத்திலும்,சொல்லிலும் எடுத்து ஆளப் படாததே முதற்காரணம்

 

ஏன் தொல்காப்பியத்தை முதன்மைப் படுத்தவேண்டும்? எழுத்தையும் சொல்லையும் அவை தரும் பொருளையும் புலவர்கள் படிக்கட்டும். நமக்கு எதற்கு? என்ற மழுங்கிய வாதத்தை விட்டு உண்மை யாதென உணர்வோம். தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப் பெரும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்று வரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழி நூல்களும்,சார்பு நூல்களும் தோன்றின. இருப்பினும் இதனை விஞ்சியநூல் இதுவரைத் தோன்றவில்லை. எல்லா நூல்களையும் திருக்குறள் ஆண்டது. திருக்குறளையே ஆண்டது தொல்காப்பியம். தொல்காப்பிய இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு இலக்கியம் திருக்குறளே

 

முடிவுரை

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்னும் ஐந்திரம் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியம் ஆதாரம் இல்லை) கண்டிருந்தார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம்மிடையே உலா வருகின்றது.தமிழ் மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்கும் தொல்காப்பிய பாமரரும் அறியும் நோக்குடன்தொல்காப்பியர் பேரவை பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழிக் கயிலைமாமணி சாந்தலிங்க இராமசாமி அடிகளார் பேரூர் ஆதீனம் அவர்களால் மக நன்னாளில் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று தொல்காப்பியர் நாள் கொண்டாடப்படுகிறது. இத்தகு பெருமைமிகு தொல்காப்பியத்தை ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் இருக்கச் செய்வதே தொல்காப்பியப் பேரவையின் நோக்கம். நோக்கம் நிறைவேறத் தமிழ்கூறு நல்லுலகம் உதவுக. !

 புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment