Sunday 13 June 2021

பாலை நிலம் உண்டா?

 

                         பாலை நிலம் உண்டா?

   பாலை என்றவுடன் சகாரா,தார் போன்ற பாலை வனங்களை நினைத்துக்  கொண்டு, மணல் நிரம்பிய பகுதி என்றும் அங்கு ஒட்டகம் பேரீச்சம் பழம் இருக்கும் என்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது.

அங்குள்ள மக்கள் குறிஞ்சி மற்றும் முல்லை நிலமக்களாகவே இருப்பர். அவர்களே வறுமை காரணமாக ஆறலைக் கள்ளவர்களாக மாறிடுவர். அம்பும், வில்லும் கைக்கொண்டு திரிவதால் எயினர் எனப்பட்டனர். எயில் என்றால் அம்பு என்று பொருள். எனவே இவர்களது தெய்வம் கொற்றவையாக அதாவது காளியாகத் தானே இருக்க முடியும்

    குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலம் ஆகும். இதனால்தான் நடுவண் ஐந்திணை நடுவண தொழிய எனப் பாலைக்கு தனிநிலம் இல்லை என்றார். இருந்தாலும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை இயல்புகளைக் கூறுகிறார் அங்குள்ள மக்கள் மாக்கள் யாவும் குறிஞ்சியிலும் முல்லையிலும இருந்தவையே. அவை வலிமை இழந்து இருக்கும் குறிஞ்சிக்குறவனும் முல்லை இடையனும் ஆறலைக் கள்வராய் மாறி அலைவார்கள். ஆறலை என்பதற்கு வழியில் துன்பம் செய்வதாகவும் அலைந்து வணிகம் செய்வதாகவும் கொள்ளலாம்.

வேளாண்மைசெய்ய முடியா நிலைமையால் உணவுக்கு வழிதேடி வழிப்பறியும் உயிர்க் கொலையும் செய்து பிழைப்பர். வறண்டு போன நிலத்தில் வாழ்வோர் ஈர மனம் இல்லாமல் போவது இயற்கையே.

 

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெரும் மணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(தொல் பொ.அகத்5 ) என்ற நூற் பாவின்படி பாலைத்திணை நீங்கலாக ஏனைய நான்கு திணைகளுக்கும் நிலம் இன்ன தன்மையன அதற்குரிய தெய்வங்கங்கள் யாவையெனக் கூறிய  தொல்காப்பியர் பாலைத்திணைக்கு நிலத்தையும்  தெய்வத்தையும் சுட்டவில்லை

ஆகவே  நிலம் நான்கு அவை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்  அதனால்  உலகை நானிலம்  என்றனர்.

 

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப  (பொருள்1)

 

   திணை என்றால் ஒழுக்கம் என்றுபெயர் ஒழுக்கம் ஐந்து குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் இந்த ஐந்து திணையையும் அகன்ஐந்திணை என்பர். கைக்கிளை பெருந்திணையை அகப்புறம் என்பர் புறப்பொருள் வெண்பா மாலை புறத்திணையிலேயே அடக்கி விடுகிறது. இவற்றிற்குப் பாலைத்திணை போலவே நிலமும்  தெய்வமும் கிடையா.  அத்துடன் காலமும் கிடையாது. திணை என்பது வேறு நிலம் என்பது வேறு. திணைப்பெயரும் நிலப்பெயரும் ஒன்றாக அமைந்ததால் பாலைத்திணை என்பதை பாலை நிலம்  என்பதால்தான்  பாலைநிலம். உண்டா? இல்லையா? என்ற வினா எழுகிறது..

ஒழுக்கம் வகை. அவை குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் இவற்றுள் நடுவனதாக உள்ள பாலை ஒழுக்கத்திற்கு நிலம் இல்லை ஆனால் காலம் உண்டு.     

அவற்றுள்

நடுவன் ஐந்திணை நடுவணது ஒழியப்

படுதிரை  வையம்  பாத்தியப் பண்பே என்னும் நூற்பாவால் நடுவில் நிற்கும் பாலை ஒழித்தே ஏனைய நான்கிற்கும் நிலம் உள்ளது என்கிறார் தொல்காப்பியர்.  தொல்காப்பியரே பாலைக்கு நிலம் இல்லை என்று கூறியபிறகு பாலை என்ற ஒரு தனிநிலம் இல்லை என்பதை அறியலாம்.

       பாலையை நிலமாகத் தொல்காப்பியர் குறிப்பிடா விட்டாலும் பாலை நிலம் உண்டாகும் முறையைச்   சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் முல்லையும் குறிஞ்சியும் முறைமை யில் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப்
பாலையென்ப தோர்படிவங் கொள்ளும்  எனப்பாலை நிலம் உருவாவதாகத் (காடுகாண் காதை: 146) தெரிவிக்கின்றன. குறிஞ்சி முல்லை நிலங்கள் மட்டும் பாலையாக மாறுவதில்லை. நான்கு நிலங்களுமே பாலையாக மாறும் என நம்மாழ்வார் குறிப்பிடுகின்றார்.

 நானிலம் வாயக்கொண்டு நன்னீரற மென்று கோது கொண்ட வேனிலஞ் செல்வன் சுவைத்து உமிழ் பாலை”  என நம்மாழ்வார் பாடியுள்ளதும் (திருவிருத்தம்:26) குறிப்பிடத்தக்கது.

பாலை நிலம், நானிலங்களில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் தற்காலிகமாக உருவாவது என்பது நம்மாழ்வாரின் கருத்து. மழையின்றி வேனிலன் செல்வன், அதாவது சூரியனின் வெப்பம் மிகும் போது நானிலங்கள் பாதிக்கப்பட்டு வறட்சி மேலிட்டுப் பாலை நிலம் உருவாவதாக நம்மாழ்வார்  குறிப்பிடுகிறார்

 

முதற் பொருளாகிய நிலத்தை இழந்து முரண்பட்டு பாலை நிற்கிறது. இந்த முரண்பாட்டைச் சிலப்பதிகார அடிகள் பாலை நிலத்தை குறிஞ்சி முல்லை என்ற வேறு இரண்டு நிலங்களின் கோடை காலத் திரிபு நிலையாக் கூறியுள்ளார்.. குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது  மலையும் காடும் கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போய்த் தன் தன்மை இழந்து சுரமும் சுரம் சார்ந்த இடமும் ஆகிய பாலை நிலமாகுகிறது எனவே, இதனைத் தனி நிலமாகக் கருதாமல் நிலங்கள் நால்வகையாகவே கொள்ளப்படுகின்றன. புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது.

 

   பாலைவனங்களைக் குளிர்ப் பாலைவனங்கள் என்றும் சூடான பாலைவனங்கள் என்றும் பாகுபடுத்துவர். குளிர் பாலைவனங்கள் உறைபனியால் மூடப்பட்டவையாகும். இதற்கு எடுத்துக்காட்டு சீனாவின் வடபகுதியில் உள்ள கோபி பாலைவனமாகும். பாலைநிலம் உண்டாக மனிதச் செயல் பாடுகளே  முதன்மையான காரணமாகக் கூறப்படுகின்றன.   தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பாலை நிலமானது தற்காலிக பாலைவனங்களே ஆகும்.

      இந்நிலம் சுரம், காடு மறுபுலம், செம்புலம், வன்பால் என்ற பலபெயர்களால்

 இலக்கியங்களில் சுட்டப்படும்.  வறம் கூர் கடம், வெம்பரல் அதர குன்று, வெம்முனை அருஞ்சுரம் என்று அகநானூற்றில் பாலை நிலம் குறிப்பிடப்படுகிறது

 

திருவள்ளுவரும்  .

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளர்த் தற்று.என்று பாலைநிலத்தைச் சுட்டுகிறார்

 

   தொல்காப்பியரின் ஒவ்வொரு திணையுமே ஒரு குட்டி உலகம் போன்றது; சுயசார்புடையது;  (பாலையின் தொழில்  நீங்கலாக) தனித்தே இயங்கும் தன்மையது. நிலப்பாகுபாட்டைப் பொருத்தவரை  உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடியது. ஒவ்வொரு திணையுமே தாவரம், விலங்கு, மக்கள், தெய்வம், பறை, யாழ், தெய்வம்  போன்ற தனித்த  கருப்பொருட்களுடையவை. அந்தந்த நிலத்தின் சிறப்பு மலரின் பெயராலேயே அறியப்படுபவை. பாலை என்பதை வெறும் மணற்பரப்பாகக் கொள்ளாமல் ,மற்ற திணை திரிந்து மக்கள், மரங்கள், விலங்குகள் செழித்து வாழ முடியாவிட்டால்  அது பாலையாகும் என்று சொல்கிறார் தொல்காப்பியா்.     

   குறிஞ்சி நிலப்பகுதியான இமயமலைப் பகுதியில் கடுங்குளிராலும், செழிப்பான மேல்மண் இல்லாதாலும் பாறை மேல் தாவரங்கள் வாழ முடியாமல் உண்டான "பாலை" நிலம் அதிகம்.(குறிஞ்சி திரிந்து பாலை) நெய்தல் திரிந்த பாலைக்கு  உதாரணம் சாக்கடல்(அல்லது கருங்கடல்)ஆகும்.உப்பின் அடா்த்தியால் மற்ற கடல் போல் உயிரினங்கள் இல்லை. நமது தனுஸ்கோடி கூட ஒருவிதத்தில் நெய்தல் பாலை தான்.  முல்லை திரிந்த பாலைக்கு   ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகள் எடுத்துக்காட்டு ஆகும். மருதம் திரிந்த பகுதிக்கு பனி சூழ்ந்த துருவ நிலங்களைச் சொல்லலாம். தஞ்சை வயல்கள் கூட காவிரி வற்றினால் பாலையாக மாறலாம். கடினமான சூழ்நிலையில் வாழ்வதால் உயிருள்ள கருப்பொருட்கள் யாவும் சற்று வன்மையான தகவமைப்பில் இருக்கும். தெய்வம் கூட சற்று  சினத்துடனே (கொற்றவை) இருக்கும். இத்திணை மக்கள் கூட களவு, கொள்ளை,, வழிப்பறி,  கொலை போன்ற தீச்செயல்  புரிந்தே வாழ்வா். (வழிபறித்துத் தான் வாழவும் முடியும்).தாவரங்கள் கூட முட்களுடனோயோ, கடினமான இலைகளுடனோயோ  இருக்கும். இருப்பதிலேயே உவப்பான நிலம் மருதம் அடுத்து முல்லை ஆகும். இங்கே அதிக ஒய்வு கிடைத்ததால் கலைகள் வளர மிக்க உதவிய நிலம் போன்ற பல செய்திகளை தொல்காப்பியம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தருகிறது. குளிரிபாலை இருப்பதால் தான் பின்பனிகாலத்தை பாலையின் பெரும்பொழுது என்றார். தொல்காப்பியர்

பாலைக்குத் பெரும் பொழுதாக இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற்காலம் (ஆனி, ஆடி), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி). ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். சிறுபொழுது நண்பகல் (காலை 10 மணி - பிற்பகல் 2 மணி)   

    ஒவ்வொரு நிலப்பகுதியிலும் வாழும் மக்கள் அவ்வவ்பகுதியின் அடிப்படையிலும் பொருள் ஈட்டும் முறை அமைதல் வேண்டும் என்று தொல்காப்பியர் விரும்பியது புலப்படுகிறது. இயற்கைக் காரணங்களினாலும் மனிதனின் சுய நலத்தாலும் நானிலங்களும் தம் நிலையில் மாற்றம் அடைந்து பாலையாய் ஆனபோது அங்கு வாழும் மக்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர் பொருளீட்டும் பொருட்டு யாவரும் எங்கும் தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றனர்.

     எனவே நிலத்தின் அடிப்படையில் பொருளீட்டி வாழ்வதே சிறப்பாக அமையும் இதனால் தான் நான்காகப் பாகு படுத்தினாரோ தொல்காப்பியர் என்று தோன்றுகிறது  ஒவ்வொரு நிலப்பகுதியிலும் வாழும் மக்கள் அவ்வவ் பகுதியில் கிடைக்கும் மூலப்பொருள்கள் அடிப்படையிலேயே தத்தம் தொழில்களை மேற்கொண்டுள்ளமையை நோக்கும் போது நிலச்சூழல் அடிப்படையிலும் உழைப்பின் அடிப்படையிலும் பொருள் ஈட்டும் முறை அமைதல் வேண்டும் என்று தொல்காப்பியர் விரும்பியது புலப்படுகிறது.

பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நிலங்களையும், இவை மயங்கி வரும் பாலை எனும் மற்றொரு நிலத்தையும் பகுத்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்நிலங்களில் வாழ்ந்த மக்களின் தொழிலையும், ஒழுக்கத்தையும்,  உணவு ஈட்டலையும் சமூக நடத்தையையும் தெய்வங்களையும் வகுத்திருந்தார்கள் என அறிகிறோம். அந்நிலங்களின் பண்புகளைச் சார்ந்தே சொல்லப்படும். பாலை நிலத்தின் விலங்குகள் குறிஞ்சி முல்லை நில விலங்குகளான வலியிழந்த புலி, யானை, மான், செந்நாயுமே காணப்படுகின்றன. பறவைகள்   கழுகு    பருந்து (எருவை), புறா, காக்கை, கூகை (குடிஞை, ஆந்தை).பாலை, இருப்பை முருங்கை, மராம், பெண்ணை, இலவம் உழிஞை, ஓமை, இலுப்பை, ஆகியவை பாலை நிலத்தில் வளரும் மரங்கள்.கள்ளி போன்ற தாவரங்கள் இங்கு நன்றாக வளரக் கூடியன நீர் நிலைகள்  குறிஞ்சி நிலத்தில் உள்ள நீர்வற்றிய சுனை, கான்யாறு   நீரில்லாகுழி, நீரில்லாகிணறு                                              

     பாலை நிலத்தின் கருப்பொருட்கள் தெய்வம் பாலைக்கடவுள் துர்க்கை. பிங்கல நிகண்டு கொற்றவை என்றும்  கூறும். கொற்றவை (கானமர் செல்வி)

தலைமக்கள் மக்கள் விடலை,காளை,மீளி

பொதுமக்கள்மறவர்,எயினர்சவரர்,கிராதர், கானவர், குறவர்புளினர்,வேடர் எயிற்றியர், பேதையர், மறத்தியர் .

மலர்கள்: மராம்பு எருக்கு, களரி, யாவிரை, இருப்பை மராம்பு குரா, மரா, பாதிரி

ஊர் முனையிடம், குறும்பு பாலடுத்துயர் நிலம் முறம்பு ,பதுக்கை- மூதூர், முதுபதி

உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள் பதியில் கவர்ந்த பொருள்

பண்: பஞ்சுரப் பண் (பாலை) பண்.பஞ்சுரப் பண் (பாலை)   பாலைப்பண்

பறை : ஆறலை, சூறைகோள் முழவு, கறங்கு, யாழ், சில்லரி, கிணை, துடியாழ்: பாலையாழ் யாழ்த்திரம் அராகம் நேர்திறம் உறுப்பு, குறுங்கலி,ஆசான்.

தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல் வழிப்பறி (ஆறலைத்தல்)

      பாலுக்கு வெம்மை(கழகஅகராதி) என்ற பொருளும் உண்டு.வெம்மை மிக்க நிலத்தைப் பாலை என்றனர். அங்கு மக்களுக்கு உணவாகும். எவ்விதப்பயிரும் தளிர்க்காது .இதைத்தான் வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று என அன்பில்லா   வாழ்க்கைக்குச் சான்றாக வள்ளுவர் (குறள்78) காட்டுகிறார்.

பாலைநிலம் என்பது  நிலையானது அல்ல. இயற்கை மாற்றத்தாலும் மனிதன் மனமாற்றத்தாலும் ஏற்படுவதே பாலை.

 

தொல்காப்பியர் நானிலம் பற்றிய கொள்கையையே அகத்திணையியலில் முன்னிறுத்துகிறார் (தொல்.அக.சூ.2). ஆனால், சங்க அகப்பாடல்களில் பாலைத்திணை பற்றிய பாடல்களே மிகுதியாக இடம் பெறுகின்றன தமிழில் சங்ககால நூல்களில் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சேர மன்னன் கலித்தொகை நூலில் தொகுத்த பாலைக்கலி என்னும் பிரிவில் வரும் 35 பாடல்களும் மற்ற சங்க நூல்களில் வரும் பாலைத் திணை பற்றிய பாடல்களும் சங்க கால பாலை நில மக்களின் வாழ்வியலையும் சேர்த்தே கூறுவது குறிப்பிடத்தக்கது                                           

பாலை நிலமும்  எந்த ஒரு நிலம் பாலை ஆக மாறியதோ அதுவாகவும் ஒருகாலத்தில் மாறலாம். 12 ஆண்டுகள் வற்கடம்(மழையின்றி வறுமை) ஏற்பட்ட பின் பாண்டிநாடு செழிக்கவில்லையா?

  வளைகுடா நாடுகள் பாலைவனந்தான் முன்னொரு காலத்தில். இப்போது அதைவிட செழிப்புமிக்க நாடுகள் உண்டா? காவிரியாறு நீர் இல்லாமல் போனால் முப்போகம் விளையும் தஞ்சை பாலை நிலம் ஆகலாம். வறுமை ஏற்படும் போது மக்கள் தன் நிலையிலும் ஒழுக்கத்திலும் தவறுதல் இயல்பே.

   விளையும் பயிர்கள் இடையே முளைக்கும் களைகள் போல  சமுதாயத்தில் சில கொலையிற் கொடியவர்கள் இருக்கலாம். அவர்கள் அரச தண்டணைக்கு அஞ்சி இங்கு மறைந்து வாழ்வர். அவர்கள் அறத்திற்கு மாறாக இருந்ததால்  மறவர் எனப்பட்டனர். இவர்களை அரசன் சில சமயம் போர் வீரர்களாகப் பயன் படுத்து உண்டு. அதனால் வீரர்

மறவர் எனப்பட்டனர். இவர்களிடம் குறிஞ்சி மக்களாகிய குறவர் பழக்கமும் முல்லை நிலமக்களாகி இடையர் பழக்கமும் இருக்கும். இவர்கள் கொற்றவையைச் தெய்வமாக வழிபடுவர்.  அதனால்தான் கொற்றவை வழிபாட்டின் போது குறிஞ்சியிலும் முல்லையிலும் கிடைத்த  நோலை(எள்ளுருண்டை) அவரை, மொச்சை இவற்றின் புழுக்கல்(சுண்டல்), பிண்டி(அவல்), நிணம், குருதி, குடர், நெய், தேன். முதலியவற்றைப் படைத்தனர்  வெட்சிதானே குறிஞ்சியது புறனே(தொல்1002) வெட்சியின் ஒழுக்கம் நிரை கவர்தல். ஆனிரை கவரச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது  திருமுருகாற்றுப்படை, தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகனைக் "கொற்றவை சிறுவ" "பழையோள் குழவி"] என்னும் தொடர்களால் குறிப்பிடுகிறது.

  அங்குள்ள விலங்குகள் யாவும் குறிஞ்சியிலும் முல்லையிலும இருந்தவையே அவை வலிமை இழந்து இருக்கும் இந்த நிலங்களே மாறி மீண்டும் குறிஞ்சியாகவோ முல்லையாகவோ மாற வாய்ப்பு உள்ளது  எனவேதான் பாலை நிலத்தை நிலமாகக் கூறாமல் விட்டார் என்றாலும்  அந்நிலமக்களின்   ஒழுக்கத்திற்கு இலக்கணம் கூறியுள்ளார்  நிலத்தை நான்கு  நால்வகை நிலத்தில் ஐவகைத்திணையைக்கூறுகிறார்

     ஆகவே உலகமுழுவதும்  உள்ள நிலையான நில அமைப்பு நான்கே என்றார் தொல்காப்பியர். அவரை இன்றுள்ள அறிவியல் அறிஞர்களுக்கு எல்லாம்  பேரறிஞர் எனலாம்.  

 பதிவு புலவர் ஆயகாளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993