Wednesday 31 March 2021

தீரன் சின்னமலை வீரவரலாறு

 

                    மாவீரன் தீரன் சின்னமலை                                                முன்னுரை: வீரமும் ஈரமும் விளைந்த மண். வெற்றியாளர் பலரைப் பெற்றுமண். துச்சமென நினைத்தாரை மிச்சமில்லாமல் அழித்தமண். தஞ்சமென வந்தவரை அஞ்சேல் என்று காத்த மண். இத்தகைய மண்ணில் மூவேந்தர் ஆட்சி கரைந்தபின், நவாப்புகள் நாய்க்கர்கள் இசுலாமியர் இறுதியாக பரங்கியரும் பரவலாக வந்தனர்.

பரங்கியர் ஆட்சி மட்டும் நம் பண்பாட்டையும், பழக்க வழக்கத்தையும் மரபுகளையும் தெய்வ வழிபாட்டையும்,திசை திருப்ப முயன்றன. கோணி தூக்கி வந்தவன் காணியாளத் தொடங்கினான்.இதை வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள்  பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் மற்றும் தீரன் சின்னமலை, முதலியோர் இவர்கள் எல்லோருள்ளும் வெள்ளையரை விரல் விட்டு ஆட்டியவன். தீரன் சின்னமலை. இந்தக்கொங்கன் வரலாற்றை  உலகோர் உணரவேண்டும் என்பதற்காக முனைந்து நிற்பன தமிழையும் சமயத்தையும் இருகண்களாகக் கொண்டு விளங்கும் பேரூர் ஆதீனமும் சிரவை ஆதீனமும். அவர்களின் அருளாணைப்படி  மாவீரன் தீரன் சின்னமலை சீர்மிகு வரலாற்றைச் சிந்திப்போம்..

ஊரும் பேரும்இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு கொங்கு நாடு. அதில் குறிஞ்சி முல்லை மருதம்  இருந்தாலும்  நெய்தல் இல்லா நிலம். நெய்தலும் உண்டெனச் சொல்லும் நெய்தல் தொழிலாலும் ஊத்துக்குழி நெய்யாலும் மங்கலம் கொள்ளும் மஞ்சளாலும் சிறந்து விளங்கும் மாவட்டம் ஈரோடு.

      உயர் திமிழையும் ஊசிக் கொம்பையும் பெற்ற காளைகளுக்குப் பெயர் போனது காங்கேயம் வட்டம். அவ்வட்டத்தின்  நடுப்புள்ளியே மேலப்பாளையம். அவ்வூரில் மண்ணின் துகளின்றி மற்றொரு துகளில்லா, மானமொடு ஒழுக்கத்தால் நலம் சிறந்த குடி பைரங்குடி (அன்னபறவை பொறித்த கொடி பயிரன் கூட்டத்து நாட்டார்களின் தனிக்கொடி).அக்குடியின் இரத்தினமே இரத்தினசாமி.உலகு புகழ் ஓதாலங்குடி முத்தாக வந்தவர் தாம் பெரியாத்தா. மாமன் பெண்ணையே மணந்து மனையறம் பூண்டார்.அதனால், தனது சொந்த ஊரான ஓடாநிலை அருகே உள்ள வாழைத் தோட்டத்து வலசிற்குச் சென்று வாழ்க்கையைத்தொடங்கினர். இணையர் இருவரின் குறைதீரவும் கொங்கர் உளம் மகிழவும் ஏப்ரல் 17, 1756 தீர்த்தகிரிக் கவுண்டர்  சித்திரையில் பிறந்து முத்திரை பதித்தார். வீமனைப் போல் ஓர் அண்ணனையும் மூன்று தம்பியரையும் கொண்டவர். அதனால் வீமனைப் போல் உடல் வலிமையும் பெற்றிருந்தார். பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் புலவர்களை  ஆதரித்து, அவர்கள் வறுமை நீங்கும் அளவிற்கு அவர்களின் கவி மற்றும் புலமைக்காக ப் பரிசில் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களின் மரபில் தீர்த்தகிரி கவுண்டர் வந்ததால், அவர்  தீர்த்தகிரிச் சர்க்கரைஎன்றும் அழைக்கப்பட்டார் தம்பா கவுண்டர் என்கிற பெயரும் உண்டு.                         

சின்ன மலை ஆனார்: தந்தையின் மார்பையும் தாயின் மடியையும் மைதானமாய்க் கொண்டு விளையாடிய குழந்தைப் பருவம் நீங்கி, ஓடும் பாம்பை குதியால் மிதிக்கும் குமரப்பருவம் அடைந்தார். அவ்வயதுக்கு ஏற்றவாறு  மல்யுத்தம், தடிவரிசை, விற்பயிற்சி, வாட்பயிற்சி, சிலம்பாட்டம்  கவண் எறிதல் சுருள்கத்தி வீச்சு குதிரை ஏற்றம் போன்ற போர்ப் பயிற்சியைச் சிவந்தாரையர் என்பார் வழி வந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.தாம் பல தற்காப்புக் கலைகள் அறிந்திருந்தாலும்,  அக்கலைகளைத்  தம் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப் பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஒரு படையைத் திரட்டினார்.

     அப்போது மைசூரை ஆண்ட ஐதர்அலி கொங்கு நாட்டிலும் தன் ஆட்சியை விரித்திருந்தான்.கொங்குக் குடிகள் மீது வரிகளை விதித்ததோடு கொடுமைகளும் பல செய்தான்.அவன் கொடுமைகளுக்கு அஞ்சி  இசுலாமிய மதத்திற்கு  மாறியவர்களும் உண்டு.கோவையிலே கோட்டையையும் அமைத்தான். இன்றும் முஸ்லீம்கள் நிறைந்த இந்தப்பகுதி கோட்டைமேடு என்று அழைக்கப்படுவதை அறிவோம்.அலியின் ஆட்கள் தீவட்டிகளைப் பிடித்து வந்து கொள்ளை இட்டதால் தீவட்டிக் கொள்ளையர் என்றும் அழைக்கப்பட்டனர். அவன் பேரூர் பட்டிப் பெருமான் கோவிலைக் கொள்ளை அடிக்கப் பல முறை முயன்றான், ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டு முடியாமல் போனது. பட்டிப் பெருமான் அருளை எண்ணி வியந்தான். கோயிலுக்கு வெளியில் நின்று வணக்கம் செய்தான். அதனை மக்கள் தீவட்டி சலாம் என்றனர். அதை நினைவூட்டும் வகையில் இன்றும் பேரூர்க் கோயிலில் நடை அடைத்தபின் தீவட்டி சலாம் செய்யப்படுவதை அறியலாம்.

   இப்படித் தீவட்டிக் கொள்ளையால் வந்த பொருள்களையும் மக்களைச் சாட்டையால் வரிந்து வாங்கிய வரிப்பணத்தையும்  சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றதைத் தீர்த்தகிரிக் கவுண்டர் அறிந்தார்; ஆத்திரம் கொண்டார்; அட்டைப் பூச்சியாய் ஐதரலியைக் கருதினார்.கரையான் புற்றைக் கருநாகம் கைக்கொள்வதா? சிறுசிறு தேனீக்கள் பலநாட்கள் முயன்று கட்டிய தேனடையை ஒரு சிறுநரி நுகர்வதைப் போல ஏழை மக்கள் செல்வம்  எல்லாம் மைசூர் செல்வதைத் தடுத்தே ஆகவேண்டும் என்று எண்ணினார்.. காலம் கருதி எண்ணி இடத்தாற் செய்தால் ஞாலம் கருதினும் கை கூடும் என்ற வள்ளுவர் வாக்கை மனதில் கொண்டு அதற்கான  இடத்தையும் காலத்தையும் எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்.

    அன்று சென்னிமலையும், சிவன்மலையும் பிரம்மாண்டமாக காட்சியளித்தன.அங்கே நடக்கப் போவதை உணர்ந்து இயற்கையே இன்புற்றிருந்தது. மேகக்கூட்டம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒன்று கூடலாயின. மரம், செடி, கொடி என அனைத்தும் மெய் சிலிர்த்தன. விலங்குகளும் பறவைகளும் விருப்பம் போல் திரிந்தன. மக்களின் உழைப்பு பிறருக்கல்ல என்பதில் உறுதியாய் நின்றன. அதை நிரூபிக்கும் பொருட்டு அப்பகுதியில் வேட்டையாடச் சென்ற,இளைஞர் கூட்டம் அலியின் குதிரைகள் வரும் வழிபார்த்து அணிவகுத்து நின்றனர்.அவர்கள் எதிர்பார்த்தது போலவே சீறிப் பாய்ந்து வந்தன. அந்தக் குதிரையில் வந்தவர்கள் கொங்கு நாட்டார் வரிப்பொருளை குதிரைகளில் வாரி வந்தனர்.அவர்கள் தங்கள் வழியின் குறுக்கே இளைஞர்கள் குதிரைகளில் அணிவகுத்து நிற்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆதலால், பெரும் இளைஞர் கூட்டம் கண்டு, குதிரையின் கடிவாளங்களை இழுத்து நிறுத்தினர் மன்னரின் வீரர்கள்.செய்வது அறியாது திகைத்தனர். திண்தோள் மறவர் கூட்டம் கண்டு கலங்கினர்.   

      மல்யுத்தம், விற்பயிற்சி, சிலம்பாட்டம், தடிவரிசை கற்ற.மிடுக்கான இளைஞர்களின் தோற்றம் கண்டு, ஹைதர் அலியின் குதிரைகளின் கால்கள் பின்னோக்கிச் சென்றன.

அவர்களை வழிமறித்த குதிரைப்படையின் தலைவனான  இளைஞனைக் கண்டதும், ஹைதர் அலியின் வீரர்களுக்குப் பயம் பற்றிக் கொண்டது. இதயத்துடிப்பு அதிகமானது.கால்கள் நடுங்கின. கைகள் உதறல் எடுத்தன.மொத்த வரிப்பணத்தையும் வீர இளைஞன் கால் அடியில் வைத்துப் பணிந்தனர். மன்னருக்கு என்ன மாற்றம் உரைப்போம் என்று மன்றாடினர்.  .

   . அவ்விளைஞனிடம் பயம் என்பது துளியும் இல்லை. ஆனால், துணிவு இருந்தது இளமைத் துடிப்பும் இருந்தது. வானம் இடிந்து வீழினும் பூமி பிளந்து போயினும் அச்சமென்பதை அறியா அந்த தீர்த்தகிரிக் கவுண்டர் பேசத் தொடங்கினார்.  

 எங்கள் மக்கள் முதுகெலும்பு உடைய உழைக்கிறார்கள். அவ்வுழைப்பின் ஊதியம் அவர்களுக்கே சொந்தம்.அவர்கள் ஏன் வரிப்பணத்தை உங்களுக்குச் செலுத்த வேண்டும். வரிப்பணத்தை எடுத்துச் செல்லும் கூட்டமே! சென்னி மலைக்கும், சிவன் மலைக்கும் இடையில் ஒரு சின்ன மலைபறித்தது என ஹைதர் அலியின் மனதில் பதியும்படி சொல்லுங்கள்என்றார்.    அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவர்கள் ஆனந்தக் கண்ணீர்  வடித்தார்கள். சூரரை வதைக்க வந்த முருகன் போல் எங்களைக் காக்க வந்த தீரன் சின்ன மலை என்று போற்றினர்.   அன்று முதல், அவர் தீரன் சின்னமலைஎன்று அழைக்கப்பட்டார்.                                               

ஆங்கிலேயர் ஆணவம் அடக்கல் ஏழ்மையால் பாதிக்கப்பட்டு கிடந்த மக்கள் வாழ்த்தால் அந்த மாபெரும் வீரரின் எண்ணம் விளையாட்டு களத்திலிருந்து போர்க்களத்திற்கு அவரை இட்டுச்சென்றது. தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார் பகவனுக்கு பகைவன் நண்பன் என்ற அடிப்படையில் வெள்ளையரை எதிர்ப்பவர் எவராயினும் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.                             

     திசம்பர் 7, 1782 -இல் ஐதர்அலி மறைந்தார்.கள்ளி வயிற்றில் தோன்றிய அகில் போல்,அவர் மகன் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்தார்.திப்புவுடன் நட்புக் கொண்டார் சின்னமலை.இருவர் எண்ணமும் ஒன்றாய் இருந்தது. “கோணி தூக்கி வந்த பறங்கியன் நம் காணியாள்வதா?” என்று திப்பு சுல்தான் கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக்கடும்போர் செய்து வந்தார்.மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார்.சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில், சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    மூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான்தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் உத்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம், நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார். என்னதான் நெப்போலியன் உதவிப் புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். போதாதகாலம், கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார், நடுகல்லானார்.                              

படையைப்பெருக்கல்: திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். திப்பு சுல்தானை இழந்ததால், ஆங்கிலேயரை வெளியேற்றப் போர்பயிற்சி தேவைப்பட்டது ஏற்கனவே  ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை-பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில்  பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள்  போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார். ஓடாநிலை கோட்டையைப் போர்பயிற்சி தளமாக்கினார்.  . பின்னர், கி.பி 1799ல் தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்துக்கொண்டார். ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் இன்றியமையா இடம் பெற்றிருந்தனர்

துணைநலம்:  தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு, கொங்கு நாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.                      என்னதான் வினைநலம் இருப்பினும் துணை நலமும் வேண்டும் அல்லவா? அதனால் ஒத்த எண்ணம் உடையாரை ஒருங்கு திரட்டும் பண்பு சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது.  அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர்.  போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து.  சூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்த லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்கச் சின்னமலை திட்டமிட்டார். அவர் எண்ணிய எண்ணம் ஈடேறவில்லை. சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத  காரணத்தாலும்,  முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதாலும் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.                           

வெற்றிமேல் வெற்றி: 1801ல், பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ்வெல் தலைமையில் வந்த ஆங்கிலேயர்களைப் பவானி -காவிரிக்கரையில் எதிர்த்த   வெற்றிக் கண்டார்.. அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையை தவிடு பொடியாக்கத்  தடிகாரப் போர் முறை பயன்படுத்த பட்டது. தடியைப் பயன்படுத்தி போரிடும் முறை கொங்கருக்கே உரியது. கம்பு சுழற்றுவதைப் போன்று  இல்லாது தடியை லாவகமாக சுழற்றுவதே ஒரு கலை. தடிகார படை என்ற ஒரு(unit) படையே சின்னமலையிடம் இருந்தது.1803ல் அரச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையைக் கையெறி குண்டுகள் வீசி வெற்றிக்  கண்டார்.  1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன்  நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். அவர் தோழனும் மெய்யக்காப்பாளனும் ஆன கருப்பசேர்வை. தீரன் சின்னமலையிடம் திறை வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை விரட்டியடித்தார். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் உத்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார் இன்றைய கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.  

சூழ்ச்சி வென்றது: வெள்ளையர்களுக்குச்  சிம்ம சொப்பனமாக இருந்த சின்னமலையை, எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர் அசைக்க முடியாத ஓடாநிலை கோட்டையைத். தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படையைக் கொண்டு வந்தனர். அக்கால கட்டத்திலேயே கொரில்லா போர் தந்திர முறைகளைப் பயன்படுத்தியிருந்தது நம் நாயகனின் படை. அதில் தோல்வியைத தழுவியது சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி தீரன் சின்னமலை தம் மக்களின் நிலை காக்க ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலைக்குச் சென்றார்.

  கருமலை வனப்பகுதியில்  பதுங்கியிருந்தார் புலிபதுங்குவது பாயத்தானே!  எத்தனையோ வலிமை மிக்க அரசர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடி பணிந்த போதும் வலிமையாக எதிர்த்து வெற்றிகளையும் கண்ட மாபெரும் வீரரை வீழ்த்த துரோகம் என்னும் கேவலமான உத்தியைப் பின்பற்றியது  ஆணிவேராய் பாய்ந்த தீரனின் வளர்ச்சி  கண்டு, சூழ்ச்சி வலையை விரித்தனர் 

       .அவருடைய சமையல்காரரான நல்லப்பனை விலைக்கு வாங்குகினர் சின்னமலையைப்  பிடிக்க முடியாமல், சமையல் செய்ய உடன் இருந்த பங்காளி நல்லையன் மூலம் தீர்த்துக் கட்டச் சதி திட்டம் திட்டினார்கள் ஆங்கிலேய படை . பிறகு நல்லப்பனின் வீட்டில் சுரங்கு குழி அமைத்து காத்திருக்கிறது . சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தை காட்டி நன்னிலம் காக்கும் நன்மகனை உணவு உண்ணும் போது நயவஞ்சகமாகக் கைது செய்தனர். தீரன் சின்னமலை என்னும் அந்த மாவீரனையும் மற்றும் அவரது  சகோதரர்களையும். கைது செய்து, சங்ககிரிக் கோட்டைக்குக்  கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர்  கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர்   1805 ஆம் ஆண்டு ஆடிப் பெருக்கன்று தமிழர் தம்மூத்தோர்க்கு நீத்தார் கடன் செய்து கொண்டிருந்தனர். அந்த நாளில் தீர்த்தகிரிக் கவுண்டரை தூக்கிலிட்டுத் தீர்த்தனர்  நீத்தார் பட்டியலில் சேர்த்து விட்டனர் விண்ணிலிருந்து வீரத்தின் விதையை தூவுகிறார் மாவீரன் சின்னமலை.ஆனாலும், சின்னமலையின் சரித்திரம் சரியவில்லை சின்னமலையின் வீரம், நாட்டை காக்கும் தீரம். அது ஆடிப்பெருக்காய் ஒவ்வொரு ஆற்றிலும் கரைபுரண்டோடியது. அவர் மக்கள் உள்ளத்தில் நாட்டுப்புறப் பாடலாய் வாழலானார்

உடன் பிறந்து கொல்லும் நோய்: சிலர் தான் செய்த தியாகத்தாலும் வீரத்தாலும்  சரித்திரத்தில் இடம்பிடிப்பர்.சிலர் தாங்கள் செய்த துரோகத்தால் இடம் பிடிப்பார். காந்தியை நினைக்கும் போதெல்லாம் கோட்சேவையும் நினைக்கின்றோம். ஏசுவைக்காட்டிக் கொடுத்த யூதாசும், கட்ட பொம்மனைக்காட்டிக் கொடுத்த எட்டப்பனும் பிரபாகரனைக் காட்டிக்கொடுத்த கருணாவும் சரித்திரத்தில் இடம் பிடித்ததைப் போலவே சின்னமலையைக் காட்டிக் கொடுத்த நல்லையன் என்ற கெட்டவனும் இடம் பிடித்தான்.அதற்குப் பரிசாக ஆயிரம் வள்ள பூமிகளை தானமாக அளித்து தீரன் சின்னமலைக்கு அளிக்க வேண்டிய ராஜ மரியாதையைக் காட்டி கொடுத்த நல்லையனுக்கு உருவாக்கி கொடுத்தது பிரிட்டிஷ் அரசு. சின்ன மலையின் போர்ப் படைத் தளபதி மாவீரண் அகமுடையார் வகுப்பைச் சேர்ந்த கருப்பசேர்வை பற்றியும் சின்னமலைக்கு விசுவாசம் மிக்க ஒற்றனாக இருந்து வெள்ளையர்களிடம் சிக்கிய போதும் சின்னமலையைக் காட்டிக் கொடுக்காமல் உயிரை விட்ட அருந்ததியார் இனத்துப் பொல்லான் பற்றியும்  நாம் இந்நேரத்தில் நினைக்க வேண்டும் பொதுவாக பிரிட்ஷ்காரன் யாரையாவது தூக்கிலிட நினைத்தால் உத்தரவு போட்டு தான் தூக்கிலிடுவான். அப்படியிருக்கும் போது தீரன் சின்னமலை எப்போது , இறந்தார் என்று எந்த அடிப்படை ஆதாரமும், ஆவணமும் இல்லை. அதற்கான அரசு ஆவண குறிப்பு எதுவும் இல்லை என்பதையும் நினைக்கவும். புலவர் குழந்தை அவர்கள் தான் முதன் முதலில் தீரன் சின்னமலை வரலாறு குறித்து எழுதினார்                                                    

மறப்பணிக்கிடையிலும் அறப்பணி: இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை சென்னிமலை தேர் விழாவிற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சின்னமலையின் பண்பு நலன்கள் குறித்தும் சின்னமலை கோயில் கொடை பற்றியும் வெட்ப்பட்ட கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் இன்னமும் கூட இருக்கிறது.  

நினைவும் நிகழ்வும்: வீரச்சாவு அடைந்தவர்களுக்கு நடுகல் நட்டு வழிபடுதல் தமிழர் மரபு. அந்த அடிப்படையில் அஞ்சா நெஞ்சன் தீரன் சின்னமலை நினைவாக அரசு செய்த சிறப்புகளையும் அறிதல் வேண்டும். தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியைத்  தலைமையிடமாக் கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் உண்டாக்கினர் தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னை கிண்டியில் திருஉருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது .தமிழக அரசின் சார்பில், ஓடாநிலைக் கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.  2007 ல் தமிழ்நாடு அரசு தீரன் சின்னமலைக்கு நினைவாலயத்தை  ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் ரூ.30 லட்சம் செலவில் தீரன் சின்னமலையின் எஞ்சிய இரண்டு ஏக்கர் நிலத்தில் கட்டியது.. இது தீரன் சின்னமலை மணிமண்டபம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது . 2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில்,  இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. அது டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது.அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் அணிதிரண்டு தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.

மங்கலம்: கொங்கு நாட்டின் வீரத்தலைமகன்! வீரத்தின் விளைநிலம்! சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞனின் வழிகாட்டி. நம் குறைதீர்த்த தீர்த்தகிரி புகழ்பாடுவோம். சின்னமலையின் பெரும் புகழ்பாடுவோம் வடநாட்டுத் தலைவர்களைக் கொண்டாவதைக் குறைப்போம் தமிழ்நாட்டுத் தலைவர்களைப் போற்றுவோம் என்ற அடிப்படையில் தீரன் சின்னமலை வரலாற்றைப் பற்றி கட்டுரை வடிக்க திருவுளம் கொண்ட பேரூர் ஆதீனத்தையும்,சிரவை ஆதீனத்தையும் வணங்கி நிறைவுகிறது இக்கட்டுரை.       

         விண்ணிலிருந்து வீரத்தின் விதையைத்

            தூவும் மாவீரன் சின்னமலையே!

                வாழ்க! நின் புகழ்

                    ஓங்குக!

தொல்காப்பியச் செம்மல்புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,

தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்

முத்தம்மாள் நிலையம்,பூலுவபட்டி(அஞ்சல்),கோயமுத்தூர் 641101.அலைபேசி 9788552993 / 8610684232 Email amuthankaliappan@gmail.com www tholkappiyam.org pulavarkaliappan.blogspot.in