Sunday 25 December 2022

பொறையுடைமை வள்ளுவர் குறள்வழிக்கவிதை

                         

            

  பொறையுடைமை                                           பாரையால் இடிப்பினும் வெடியாற் தகர்ப்பினும்

கொழுக்கொண்டு போழினும் வருந்துறாப்

பார்போல் அறிந்தும் தெரிந்தும் பழியது

புரிவோர் பொறுத்தல் கடனே

ஈரமில் நெஞ்சினர் இழைத்த தீங்கினைப்

பொறுத்தலோடு மறத்தல் கடனே

     வீரத்தினுள் வீரம் வீணர்செய் வீம்பினை

           விவேகத்தால் பொறுத்தல் தானே.

 

பொறையுடை யாரே சான்றோர் ஆவார்

     பொறுத்தார் தாமே பொன்னெனப் படுவார்

ஒறுத்தாரைத் தண்டித்தால் அன்றுதான் இன்பம்

     பொறுத்துக் கொண்டால் என்றும் புகழே

உறுத்தும் பொல்லாங்கை உள்ளவன் செய்யினும்

     மறந்து விடுவர் மாண்புடை மாந்தர்

செறுக்கால் ஒருவன் செய்யும் தீங்கைச்

     செற்றம் இன்றிப் பொறுப்பதே தகுதி

                                                           

     சுற்றம் நீங்கிய துறவியைக் காட்டிலும்

           குற்றச் சொல்லைப் பொறுப்பவர் மேலோர்

     கற்றவர் பெற்ற மேன்மையைக் காட்டிலும்

           செற்றார் சொல்லைப் பொறுப்பவர் மேலோர்

     உற்ற பசியைப் பொறுப்பதைக் காட்டிலும்

           மாற்றார் இழிசொல் பொறுத்தல் மேலாம்

     பெற்றம் போலப் பொறுமை உடையோர்

           பெறுவார் உலகில் பெருமை தானே.

 

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

           தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்

              பேரூர் ஆதீனம் 9788552993

              

 

 

    

 

ஒழுக்கமுடைமை வள்ளுவர் குறள்வழிக் கவிதை

 

 

                             ஒழுக்கம் உடைமை                          17-08-2015

அவரவர் பணியை அவரவர் நாளும் 

     அலுப்பின்றிச் செய்தல் ஒழுக்கம்

தவறுகள் இன்றித்  தகுமுறைப் படியே

     தவறா தொழுகல் ஒழுக்கம்

புவனத் தோடு ஒட்ட ஒழுகி

     புரிவது தானே ஒழுக்கம்

கவனத் தோடு கருத்தினைச் செலுத்தி

    காரியம் செய்திடல் ஒழுக்கம்

 

விழுப்பம் தருவதை விரும்பி நாளும்

    வேண்டிப் புரிதல் ஒழுக்கம்

அழும்பு செய்வோர் அழிதல் உண்மை  

   அதனை உணர்தல் ஒழுக்கம்

நழுவல் இன்றி நன்மை புரிதல்

   நமது கடமை ஒழுக்கம்

கழுவாய் இல்லை ஒழுக்கம் தவறின்

   கவனம் இருக்கனும் உலகீர்

 

கற்ற கல்வி மறந்து போனால்

    கவலை யில்லை கண்டீர்

பெற்ற பிள்ளை ஒழுக்கம் தவறின்

    பெரும்பிழை ஆகும் உணர்வீர்

உற்றார் உறவினர் சுற்றம் தழுவி

   ஒழுகுதல் வேண்டும் உலகீர்

அற்றவர் பெற்றவர் அனைவர் நாளும்

   அவர்நிலை நிற்றல் ஒழுக்கம்

 

சான்றோர் சொல்லைச் சட்டமாய் நினைத்து

    சலிப்பின்றி நடத்தல் ஒழுக்கம்

ஆன்ற குலத்தில் பிறந்து விடுதல்

    அதுவன்று உயர்வு அறிவீர்

சான்றோர் உரைக்கும் சலமது நீக்கிச்

    சகத்தில் வாழ்தல் ஒழுக்கம்

ஊன்று கோலாய் உறுதுணை ஆகும்

     உண்மை வழுவா ஒழுக்கம்

 

 தானமும் தவமும் செய்வதைக் காட்டிலும்

     தவறின்றி நடத்தல் ஒழுக்கம்

ஊனம் என்பது பெருங்குறை இல்லை

     உண்மை  போற்றல் ஒழுக்கம்  

ஈனச் செயல்கள் இழுக்கினைத் தருமே

   என்று உணர்தல் ஒழுக்கம்

ஏனம் ஏந்தி பிச்சை எடுப்பினும்                                     இழிசெயல் நீக்கல் ஒழுக்கம் 

 அறனெனப் படுவது ஆன்றோர் உரைத்தது

    அதன்படி நடத்தல் அதுவே ஒழுக்கம்                        

மறவழி கொண்டு ஒழுக்கம் பிழைத்தோர்

    மனித னாயினும் மரக்கட்டை தானே

உறவினர் ஊரார் ஒழுகிய படியே

    ஒத்து நடத்தலே ஒழுக்கம் ஆகும்

குறவ ராயினும் குலக்குரு வாயினும்

    குலவழக்கம் தவறின் குப்பைக்கு நிகரே.

 

மழுவைக் காட்டினும் மறலியே வரினும்

    மானமே பெரிதென ஒழுக்கம் தவறார்

அழுது  புரளினும் அழிந்த ஒழுக்கம்

    அடைதல் என்பது ஆற்றில் கரைபுளி

அழுக்காறு கொண்டான் அழிதல் போலவே

    ஒழுக்க மில்லான் ஒழிதல் உறுதியே

விழுப்பம் வேண்டுவோர் விழைவுடன் மகிழ்ந்து

    ஒழுக்கக் கொடியை உயர்த்திப் பிடிப்பரே

 

படிப்பதை மறத்தல் பாவம் இல்லை

    பண்பினில் வழுவல் படுநரக உய்க்கும்

குடிப்பிறப்பு என்பது ஒழுக்கம் உடைமையே

    குன்றத்தில் வைத்துக் குவலயம் போற்றிடும

அடித்து நொருக்கினும் அணுவாய் நூறினும்

    அவரவர் நிலையில் நிற்றலே ஒழுக்கம்

நடிப்பால் வருவது ஒழுக்கம் அன்று

நாணமும் அடக்கமும் நல்கிடும் ஒழுக்கமே

 

ஒழுக்கம் உயர்வினைத் தருததால் தானே

      உயிரினும் மேலாய் உயர்த்தப் பட்டது

கழுமரம் ஏற்றினும் கைவிடார் ஒழுக்கத்தைக்

    கற்புநெறி தவறாக் காரிகை போல

ஒழுக்க உள்ளோர் நற்செயல் புரிவர்

    ஒற்றுமை வளரவும் உறுதுணை ஆவார்

வழுக்கியும் வாயாற் வசையும் பாடார்

    வாழ்க வளத்துடன் வாழ்க என்பார்.

 

ஆக்கம் தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

 தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்

         பேரூர் ஆதீனம்  9788552993

 

                                                  

 

 

ஊக்கம் உடைமை வள்ளுவர் குறள்வழிக் கவிதை

         ஊக்கம் உடைமை 6-04-49

 ஊக்கம் உடையான் உறக்கம் அடையான்

     உணவைக் கூட உண்பதை நினையான்

ஆக்கம் தேடிவரும் அயராது உழைத்தால்

     ஆசைப்பட்ட தெல்லாம் அடைந்தே தீரலாம்

தேக்கிய வெள்ளமெனத் திரண்ட செல்வம்

     வழிகேட்டு வந்து  வாசலில் நிற்கும்

தாக்கும் அம்பையும் பொருட்படுத் தாத

     தகரென ஊக்கம் கொண்டான் தனக்கே

 

நீரது ஆழத்துக்கு நீளும் ஆம்பல்போல்

     நெஞ்சில் ஊக்கம் கொண்டான் உயர்வாம்

ஊரது மெச்ச உறுபொருள் கொடுக்கலாம்

     உள்ளத்தில் ஊக்கம் கொண்ட செறுக்கால்

மாரது கொண்டு நகரும் பாம்பையும்

     மார்பில் மாலையாய்ச் சூட்டிட முடியும்

பாரது எதிர்த்துப் படைகொண்ட போதும் 

     பயப்பட மாட்டான்  பார்க்கலாம் என்பானே

 

எண்ணும் போதே  ஏற்றமாய் எண்ணிடில்

     எளிதில் வெற்றியை எட்டிப் பிடிக்கலாம்

மண்டியிட்டு இழுத்திடும் மாட்டினைப் போலவே

     மனதில் ஊக்கம் கொண்டவன் நினைத்தால

விண்ணையும் தொடலாம் உள்ளத்தின் ஊக்கத்ததால்

     வரிப்புலி கூட யானையை வென்றுடும்

கண்ணும் கருத்துமாய்க் காரியம் ஆற்றிடின்

     காலமும் இடமும் தப்பியனும் வெற்றியே!

ஆக்கம் தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

தலைவர்  தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் பேரூர் ஆதீனம் 9788552993

ஆள்வினை உடைமை வள்ளுவர் குறள் வழிக்கவிதை

                ஆள்வினையுடைமை     

இசைபெற வேண்டின் ஈதல் வேண்டும்                                       

ஈதலைச் செய்யப் இரும்பொருள் வேண்டும்                            

திசையெட்டும் சென்று  நசைபல கூடியே

   திரைகடல் ஓடியே தேடியே வந்தால்

அசையும் அசையா சொத்தும் சேரும்

       அயரா முயற்சியால் ஆகுமே செல்வம்!

வசையிலா வாழ்வும்  வந்து சேர்ந்திடும்

        வறுமையும் வழிதேடி ஓடிப் போகுமே!

 

விதியும் தெய்வமும் சதிசெய்த போதும்

       விடாது முயன்றால் விரும்பியது நடக்கும்

அதிகத் தூக்கமும் ஆகா மறதியும்

      அடுத்து வந்து கெடுத்த போதும்

நதிபோல் ஓடினால்  நம்மிடம் தேடியே

       நங்கையாம் திருமகள் நாடியே வருவாள்

முதியவள் அணைப்பாள் முயலாமை கொண்டானை

       முயற்சியும் பயிற்சியும் உயர்ச்சியைத் தருமே!

 

விதைத்தவன் உறங்கினும் விதையுறங் கிடுமா?

       விளைச்சல் பெருகிடும் வேளாளன் முயற்சியால்

சதைவருத்தி உழைத்தால் சம்பளம் உறுதியே

       சந்திரனும் காலடியில் சரணென வருமே

கதைபேசித் திரிவான் கஞ்சிக்கு வழியின்றி

       கால்கழுவி விடுவான் கசடருக் கெல்லாம்

எதையும் முடியும் என்று செய்பவன்

       எல்லா உலகிற்கும் எசமான் ஆவானே!

 

பயந்தவன் கையில் படையிருந்தாற் போலவே

       பாட்டாளி அல்லானும் பாரியாக முடியுமா?

கயவராய்ப் போவதும் கலக்கத்தில் ஆழ்வதும்

       காலத்தை எண்ணாது தூங்கிக் கழிப்பதும்

முயலாமைக் கதையை முழுதும் உணராது              (முயல்,ஆமை)

       முயலாது என்றும் முடங்கிப் போனதால்

அயலானை அண்டியை அன்றாடும் வாழனும்

       அருந்தமிழ் வள்ளுவன் அறைந்து சொன்னதே!

 

     ஆக்கம்  தொல்காப்பியச் செம்மல்

              புலவர் ஆ.காளியப்பன்

  தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்   பேரூர் ஆதீனம் 9788552993