Sunday 25 December 2022

பொறையுடைமை வள்ளுவர் குறள்வழிக்கவிதை

                         

            

  பொறையுடைமை                                           பாரையால் இடிப்பினும் வெடியாற் தகர்ப்பினும்

கொழுக்கொண்டு போழினும் வருந்துறாப்

பார்போல் அறிந்தும் தெரிந்தும் பழியது

புரிவோர் பொறுத்தல் கடனே

ஈரமில் நெஞ்சினர் இழைத்த தீங்கினைப்

பொறுத்தலோடு மறத்தல் கடனே

     வீரத்தினுள் வீரம் வீணர்செய் வீம்பினை

           விவேகத்தால் பொறுத்தல் தானே.

 

பொறையுடை யாரே சான்றோர் ஆவார்

     பொறுத்தார் தாமே பொன்னெனப் படுவார்

ஒறுத்தாரைத் தண்டித்தால் அன்றுதான் இன்பம்

     பொறுத்துக் கொண்டால் என்றும் புகழே

உறுத்தும் பொல்லாங்கை உள்ளவன் செய்யினும்

     மறந்து விடுவர் மாண்புடை மாந்தர்

செறுக்கால் ஒருவன் செய்யும் தீங்கைச்

     செற்றம் இன்றிப் பொறுப்பதே தகுதி

                                                           

     சுற்றம் நீங்கிய துறவியைக் காட்டிலும்

           குற்றச் சொல்லைப் பொறுப்பவர் மேலோர்

     கற்றவர் பெற்ற மேன்மையைக் காட்டிலும்

           செற்றார் சொல்லைப் பொறுப்பவர் மேலோர்

     உற்ற பசியைப் பொறுப்பதைக் காட்டிலும்

           மாற்றார் இழிசொல் பொறுத்தல் மேலாம்

     பெற்றம் போலப் பொறுமை உடையோர்

           பெறுவார் உலகில் பெருமை தானே.

 

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

           தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்

              பேரூர் ஆதீனம் 9788552993

              

 

 

    

 

No comments:

Post a Comment