Saturday 11 August 2018

திருக்குறள் இலக்கணம் தப்பாது

வழக்குரைநர் இராசேந்திரன் ஐயாவின் வினாவிற்கு விடை       
வெண்மை யெனப்படுவதி யாதெனின் ஒண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு.
யாப்பிலக்கணம்:
வெண்/மை எனப்/படு/வது
யா/துஎ/னின் ஒண்/மை உடை/யம்/யாம் என்/னும் செருக்/கு.
இதில் எனப்/படு/வது  மூவசைச் சீர்.  நிரைநிரைநிரை. கருவிளங்கனி.
வெண்பாவில் கனிச்சீர் வாரா.
எவ்வாறு இங்கு இது அமையப் பெற்றது.? தமிழறிஞர்கள் அருட்கூர்ந்து விளக்கவும்
      இது தமிழ் இராசேந்திர ஐயாவின் வினா
வெண்மை யெனப்படுவதி யாதெனின் ஒண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு
    .     மேற்கூறிய குறளைப்போலவே
வாய்மை யெனப்படுவதி யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல் என்ற குறளும் வந்துள்ளது.
வெண்பாவின் பொது இலக்கணம்.
1 வெண்பா இரண்டு அடிகளுக்குக் குறையாமலும் பன்னிரண்டு      
  அடிகளுக்கு மிகாமலும் வரும்
2.எல்லா அடிகளும் 4 சீர்கள் கொண்ட அளவடியாகவும் ஈற்றடி மட்டும்   
   மூன்று  சீர்கள் கொண்ட சிந்தியாகவும் வரும்.
3.மாச்சீர் விளச்சீர் காய்ச்சீர்கள் மட்டும் கனிச்சீர் வரக்கூடாது.
4.செப்பல் ஓசை பெற்று வரும்
5.இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளை மட்டும் 
 வரும்.பிறதளைகள் வாரா
6.ஈற்றடியானது நாள்,மலர்,காசு,பிறப்பு என்னும் வாய்பாடுகளுள்   
 ஏதேனும் ஒன்றினைப் பெற்றுவரும்.
7. ஒருவிகற்பத்தானும் பலவிகற்பத்தானும்வரும்.
 மாச்சீர் விளச்சீர் காய்ச்சீர்கள் மட்டும்வரும். கனிச்சீர் வரக்கூடாது இந்தவிதியை மட்டும் பார்ப்போம்
முதலில் அசை பிரிப்போம்
வெண்/மை  யெனப்/படு/வதி        யா/தெனின்  ஒண்/மை
நேர் நேர்  நிரை நிரை நிரை(நேர்)    நேர்நிரை   நேர்நேர்
தே மா       கருவிளங்கனி(காய்)        கூவிளம்   தேமா
  
எனப்படுவதி யாதெனின் = எனப்படுவது+ யாதெனின் 
எனப்படுவது குற்றியலுகரம்  குற்றியலுகரச் சொல்லின் முன்னால் யகரம் வந்தால் குற்றியலுகரத்தில் உகரம் இகரமாகத் திரியும் இந்த இகரம் தனக்குரிய 1 மாத்திரை அளவிலிருந்து குறைந்து 1/2மாத்திரை அளவு ஒலிக்கும் .இதைக் குற்றியலிகரம் என்பர் அசை பிரிக்கும் போது 1/2மாத்திரை அளவாகக் கொண்டு எழுத்து எண்ணும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது மெய் எழுத்துகளைக் கணக்கில் கொள்வதில்லை
எனப்படுவத்உ +ய்ஆதெனின்
எனப்படுவத்இ+யாதெனின்-----உகரம் இகரமாகத் திரிந்தது
எனப்படுவதி குற்றியலிகரம் ஆகவே எனப்படுவத் என்றே இருக்கும்.
எனப்/ படு/வத்       யா/தெனின்
நிரை நிரை நேர்      நேர் நிரை
கருவிளங்காய்  காய்முன் நேர் வந்ததால் தளை தட்டவில்லை வெண்சீர் வெண்டளை
ஆகவே திருக்குறள் வெண்பா இலக்கணப் படியே உள்ளது.
இலக்கணம் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் மற்றவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை
இராசேந்திரன் ஐயாவிற்குப் புரியும். மற்றவர்களுக்குச் சிறிய குழப்பம் தான்

புலவர் ஆ.காளியப்பன்

பிழையின்றி எழுதுவோம்

               பிழையின்றி எழுதுவோம் இன்றைய இலக்கணம்16-12-16
      வெண்ணீர், தீவணம், சமர் பணம், சமர் பனம் என்று  வகை வகையான தவறுகள் கண்ணில் படுகின்றன. ஆனால் அதை எல்லாம் விட. வாழ்த்துக்கள் என்று எழுதவேண்டுமா? இல்லை வாழ்த்துகள்என்று எழுத வேண்டுமா?”
  இதுக்கு பதில் சொல்வதற்கு முன்னால்  ஒரு கேள்வி  . ஒருத்தரைப் பற்றிக் கிசுகிசுவாப் பேசினா வம்பு என்று சொல்லுவோம். இதோட பன்மை என்ன?”
   வம்பு இது ஒருமை. இதோட பன்மை வம்புகள். ஆமாம். வம்புக்கள், “இதில் இவ்வளவு தெளிவா இருக்க. அப்போ வாழ்த்து ஒருமை அதோட பன்மைக்கு  மட்டும் ஏன் இவ்வளவு குழப்பம்?”
வாழ்த்துகள் என்று தான் சொல்ல வேண்டும்.
  அதே மாதிரிதான் பாட்டுகள், எழுத்துகள் எல்லாமே. இங்கே எல்லாம் வலி மிகாது.
       இப்போ எதாவது ஒரு நிகழ்வு நடந்தா விருந்து கொடுப்பது வழக்கமா இருக்கு. விருந்து என்றால் பியர், விஸ்கின்னு சரக்கு இல்லாம இருக்கறது இல்லை. இதையே கொஞ்சம் தமிழ் மண் வாசனையோட விருந்து தரணும் என்றால் இந்த விஸ்கிக்குப் பதிலா கள்ளு கொடுக்கலாம். ஒருவரை வாழ்த்தத் தரும் கள் என்பதால் அதை வாழ்த்துக்கள் என்று சொல்லலாம்.
வாழ்த்துகள் என்றால் வாழ்த்துவது. வாழ்த்துக்கள் என்று சொன்னால் அப்படியே சியர்ஸ் சொல்லி வாய்க்குள்ள  கவுத்திக்கிறது   
   இந்த தப்பு எல்லா இடத்திலேயும் நடக்கறதுதான். ஒரு சினிமாப் பாட்டு பார்க்கலாமா?”
 பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்  என்று ஒரு பாட்டு இருக்கு தெரியுமா?”
. அந்தப் பாட்டில் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தி ல் என்று ஒரு வரி வரும். முத்து என்று சொன்னால் அதோட பன்மை முத்துகள்தான். ஆனா சந்தத்துக்காக அதை முத்துக்கள்என்று போட்டு இருக்கிறார்கள். இலக்கணப்படி முத்துக்கள் தப்புதான்.
எழுத்துக்கள்  கூட தப்பா? எழுத்துகள் தான் சரியா?”
எழுத்தாளர்கள்  சில பேரு எப்பவும் நான் இந்த பாருக்குப் போனேன் அந்த சரக்கை அடிச்சேன்னு குடிக்கிறதைப் பத்தியே எழுதுவாங்க பாரு. அதை வேணா எழுத்துக்கள்ன்னு சொல்லலாம். ஆனா எழுத்து என்பதன் பன்மை எழுத்துகள்தான்
    . என் கையில் இருக்கும் புத்தகம் என்னுடையது அல்ல.
அதுல என்ன தப்பு? ஒரு புத்தகம்என்று சொல்லும் போது அல்லஎன்று சொல்லக் கூடாது. இந்தப் புத்தகங்கள் என்னுடயவையல்ல. இப்படிச் சொன்னால்தான் சரி.
அப்போ  ஒரு புத்தகத்துக்கு என்ன சொல்லணும்?”
இந்தப்  புத்தகம்  என்னுடைய தன்று. இப்படித்தான் சொல்லணும்.
அஃதாவது ஒருமைக்கு அன்று. பன்மைக்கு அல்ல. இப்படித்தான் சொல்லணும்.  
  அன்று எல்லாம் இன்றைக்குப் பழக்கத்தில் இல்லை என்றாலும் இலக்கணப்படி எழுதும் பொழுதாவது சரியா எழுதவேண்டும். இதே மாதிரி அவன் தன் வேலையைச் செய்தான் என்றே எழுத வேண்டும். அதையே அவர் என்று வந்தால் அவர் தம் வேலையைச் செய்தார் என்றே சொல்லவேண்டும். அவர்கள் என்று பன்மையாக வந்தாலும் இதே மாதிரி அவர்கள் தம் வேலையைச் செய்தனர் என்றே எழுத வேண்டும்.
இதனால் தான் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா என்று பாட்டு எழுதினார்களா?”
ஆமாம் எந்தன், உந்தன், அவர்தம், அவர்கள்தம் என்று எழுதினால் தான் இலக்கணப்படி சரி
 இந்த இலவசம்  என்று சொல்லைப் பற்றிப் பார்போம்
 இன்றைக்குக் கூட கல்யாணம் மாதிரி விழாக்கள் ஆகட்டும் இல்லை ஒரு குருவைப் பார்க்கப் போகும் போது ஆகட்டும் வெற்றிலை பாக்கு எல்லாம் ஒரு தட்டில் வைத்துதான் பரிசு தரோம் இல்லையா? அதுக்கு இது உங்களுக்கானது. நீங்கள் திருப்பித் தர வேண்டாம் அப்படின்னு அர்த்தம். இப்படி இலையின் மூலம் தரும் பரிசுக்கு இலை வயம் என்று சொல்லி அது இலவசம் ஆயிற்று.
கட்சின்னு சொன்ன உடனே ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருதுடா. தேர்தல் வரப் போகுது. இப்பவே எதிர்மறையா பிரச்சாரம் செய்யக்கூடாது. நேர்மறையா செய்யுங்கன்னு சிலர் சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க. இது ரொம்பத் தப்பான விடயம்.
 எதிர்மறையா பேசாதேன்னு சொன்னா நல்லதுதானே?!”
எதிர்மறையா பேசாதேன்னு சொல்ல வேண்டியதுதான். ஆனா அதுக்காக நேர்மறையாப் பேசுன்னு சொல்லக் கூடாது. ஏன்னா நேர்மறை என்று தமிழில் ஒரு சொல்லே கிடையாது. எதிர்மறைக்கு எதிரா இருக்கவேண்டும் என்று நேர்மறை என்று சொல்லுகிறார்கள்.  உண்மையில் speak positively என்று சொல்லவேண்டும் அறப்பேசுஎன்று சொல்லலாம். நேராகப் பேசு, நல்லவிதமாகப் பேசுன்னு எல்லாம் சொல்லலாம். ஆனால் நேர்மறை என்று சொல்லக் கூடாது.
மறைஎன்றால் வேதம்தானே. அது எங்க இங்க வந்தது?”
மறை என்றால் சொல் என்று ஒரு பொருள் இருக்கிறது.. எதிர்மறை என்று சொல்ல அது காரணமா இருக்கும். நேர்மாறு என்று சொன்னால் முற்றிலும் எதிரானது. எதிர்மறைக்கு நேர்மாறானது நேர்மறை இல்லை!”“எதிர்மறை கூட சேர்த்துதான் எழுதவேண்டும்.. எதிர் மறைஎன்று எழுதினால் முன்னாடி இருக்கும் வேதம் என்று பொருளாகிவிடும்.  
 . மங்கலம் / மங்களம், பவளம் / பவழம் இது எப்படி எழுதினாலும் சரிதான்னு பேசினோமே. அதே மாதிரி மதில் / மதிள், உளுந்து / உழுந்து இதெல்லாம் கூட எப்படி எழுதினாலும் சரிதான்.
உழுந்து  கூட சரியா?  
 கம்பராமாயணத்தில்
    உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் என்று கம்பரே எழுதி இருக்கிறார். இந்த மாதிரி ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் வேற ஒரு எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வந்தால் அதற்குப் போலி என்றுபெயர்
போலியா? சாதாரணமாக ஒரிஜினலா இல்லை என்றால் தானே போலி என்று சொல்லுவோம்.
அதே பொருள்தான். ஒன்று போல இருக்கும் மற்றொன்று என்று சொல்லவேண்டும் அதைப் போல் +இருப்பது = போலிருப்பது என்று சொல்லுகிறோம். அதோட சுருக்கம்தான் போலி. எந்த எழுத்து மாறி வருது என்று பார்த்து அதை முதற் போலி, இடைப் போலி, கடைப் போலி என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.. ஆனை என்பதை யானை என்று சொன்னால் முதல் எழுத்து மாறி வருது. அதனால அது முதற் போலி. அதே போல் பவழம் / பவளம், உளுந்து / உழுந்து எல்லாம் நடுவில் இருக்கும் எழுத்து மாறி வருவதால்  இடைப் போலி. மதில் / மதிள் இதில் கடைசி எழுத்து மாறிப் போவதால் இது கடைப் போலி.
§  வாழ்த்துகள் என்பதுதான் சரி. வாழ்த்துக்கள் என்பது தவறு.
§  இதே போல் எழுத்துகள், முத்துகள், பாட்டுகள், வார்த்தைகள் என்றுதான் எழுதுதல் சரி.
§  ஒருமைக்கு அன்று. அல்ல பன்மைக்கு. (என் புத்தகமன்று, என் புத்தகங்களல்ல)
§  ஒருமைக்கு தன், பன்மைக்குத் தம் (அவந்தன், அவர்தம், அவர்கள்தம்)
§  இலை வயம் தரப்படும் பரிசு என்பதே இலவசம் என்றானது. வெற்றிலையில் வைத்துத் தரப்படும் பரிசைக் குறிப்பது இது.
§  எதிர்மறை என்பதை எதிர் மறை என எழுதுதல் கூடாது.
§  நேர்மறை என்ற வார்த்தை தமிழில் இல்லை.
§  மதில் / மதிள், உளுந்து / உழுந்து எப்படி எழுதினாலும் சரியே
§  ஒரு வார்த்தையில் ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் வேறு ஒரு எழுத்து வந்து பொருள் மாறாமல் இருந்தால் அது போலி எனப்படும்
§  மாறும் எழுத்து இருக்கும் இடத்தைப் பொருத்து முதற் போலி, இடைப் போலி, கடைப் போலி என மூன்று வகையாகப் பிரிக்கலாம்



பல்லாண்டு பிணியின்றி வாழ்க

 

தொல்காப்பியம் அகத்திணையியல் 1


                     தொல்காப்பியம்    அகத்திணையியல் 1     ஆவணி ஆகஸ்டு2018
    பைந்தமிழர் வாழ்வுதனை உரைப்பது தொல்காப்பியதின் பொருளதிகாரம். . எழுத்து ,சொல் பொருள் என்ற மூன்று அதிகாரங்களில் பொருள் அதிகாரத்தை முதலில் எடுத்துக் கொள்ள காரணம் உள்ளது. திருக்கயிலை மரபு மெய்கண்டார் வழிவழிப் பேரூராதீனம் கயிலைக் குருமணி சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகை அருள் ஆணைப்படி பொருளதிகாரம் முதலில் தொடங்கப்படுகிறது. பொருளை விளக்கதானே எழுத்தும் சொல்லும் என்கிறார். பைந்தமிழர் வாழ்வுதனை உரைப்பது தொல்காப்பியதின் பொருளதிகாரமே,என்ற காரணத்தாலும் தொல்காப்பியர் பேரவையின் நோக்கமும் அதுவே ஆதலாலும் பொருளதிகாரம்.முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
   பொருள் அதிகாரத்தில் முதலியல் அகத்திணையியல்.திணை என்றால் ஒழுக்கம், இயல்என்றால் இலக்கணம்.தொல்காப்பியர் மொழியைப் பற்றி எண்ணும் போது திணைகளை உயர்திணை அஃறிணை என்கிறார். இலக்கியங்களில் காணப்படும் பொருள்களைப் பற்றி எண்ணும் போது அகத்திணை, புறத்திணை என்னும் பெயர்களைக் கையாண்டு தமிழ் இலக்கண நெறியைத் தெளிவு படுத்தியுள்ளார். எனவே அகத்திணையியல் என்பது  இன்பமாகிய ஒழுக்கத்தினது இலக்கணம். அகத்திணையியல்   மக்களின்   அகவொழுக்கம் அல்லது  காதல்அற ஒழுக்கங்களின் பொது இலக்கணம்   கூறுகிறது.
    “நிலம்தீ நீர்வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கமே உலகம்”(தொல்635).இந்த
உலக உயிர்களில் மேன்பட்ட உயிரினம் மக்கள். அவர்களே ஆறறிவு உடையவர்கள் ஆறாவது அறிவு மனம்‘ஆறறிவதுவே அவற்றொடு மனனே’என்பது தொல்காப்பியம் மனம் என்பதை அகம் என்றும் கூறுவர். அகம் என்பதற்கு மனம், மார்பு, உள்ளே, ஞானம், பாவம், வீடு, நிலம், மருதம், மலை, அகக்கூத்து, அகப்பொருள், அகங்காரம், இருப்பிடம், உடல், உயிர், விண், ஆழம், ஆன்மா, ஒருமரம், துக்கம், நாள், பள்ளம், பாம்பு, தீவினை,எனப்பல பொருள்கள் உள.நாம் இங்கு அகம் என்பதற்கு மனம் வீடு, உள்ளம், இல்லம், அகப்பொருள் என்ற பொருள்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்
    பைந்தமிழ் இலக்கணத்தை  ஐந்தெனப் பிரித்தனர் ஆன்றோர். உலக மொழிகள் எல்லாம் எழுத்து,சொல் இவற்றிற்கு மட்டும் இலக்கணம் கூற, இன்றமிழ் மொழியோ பொருள் இலக்கணத்தைப் பெற்றுள்ளது. இங்கு பொருள் என்பது பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளைக் குறிக்காது, பொருள் பொதிந்த வாழ்க்கையையே பொருள் எனக் குறிக்கிறது. இங்கு பொருள் என்பதால் உலகத்துப் பொருள் எல்லாம் உணர்த்துதல் வேண்டும்.அவை எல்லாம் முதல் ,கரு உரிப்பொருள் என்ற மூன்றினுள்ளே அடங்கிவிடும். இவையே தொல்காப்பியம் உரைக்கும் பொருள். எனவே தொல்காப்பியம் கூறும் வாழ்க்கை முறைகளைக் கற்காமல் விட்டதால் தான் தரணியை ஆண்ட தமிழர் வாழ்வு தறிகெட்டுப் போயிற்று.
   தொல்காப்பியம்  மனித வாழ்வை இருவகையாக பிரிக்கிறது. ஒன்று அக வாழ்வு  அதாவது காதல் வாழ்வு. அது களவு என்றும் கற்பென்றும் இருவகைப்படும். திருக்குறளின் இன்பத்துப்பாலும் களவு, கற்பு என இரண்டு இயல்களாகவே பிரிக்கப்பட்டுள்ளது ஆணும்பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு அறிவறிந்த மக்களைப் பெற்று, விருந்தினரைப் பேணி இல்லறத்தின் பயனாகிய புகழ் பெறுதலே ஆகும்.இதனை மனதில் கொண்டே வள்ளுவரும் இல்லறவியலின் இறுதி அதிகாரமாக புகழ் என்னும் அதிகாரத்தை அமைத்தார். அதுவே அகவாழ்வு
     மற்றொன்று  உலகியல் வாழ்வு. புறம் என்பது ஆணும் பெண்ணும் புறத்தே உள்ள மற்றவர்களோடு உறவு கொள்ளும் வாழ்க்கை பற்றியது. உலகியல் வாழ்வு வீரம், செல்வம், கொடை, புகழ், கல்வி,  ஆட்சி, வணிகம், உழவு ஆகியவை பற்றியது. திருவள்ளுவர் கூறும் அறமும் பொருளும் புறப்பொருளில் அடங்கும். அதாவது அறஞ்செய்தலும் மறஞ்செய்தலும் புறப்பொருளே.



அகம் என்பது தலைவன் தலைவியர் உள்ளத்தே நிகழும் ஒழுக்கம் (திணை). அகத்தே நிகழும் உணர்வை இவ்வாறு இருந்ததெனப் புறத்தாருக்கு விளக்க முடியாது.  ஒத்த  அன்பால்  ஒருவனும்   ஒருத்தியும் கூடுகின்ற  காலத்துப்  பிறந்த  பேரின்பம்  அக்கூட்டத்தின்  பின்னர்   அவ்விருவரும் ஒருவருக்கு ஒருவர் தத்தமக்கு  விளங்கும்படி இவ்வாறு இருந்ததெனக் கூறமுடியாது. எப்பொழுதும்   உள்ளத்திலே    நுகர்ந்து இன்ப  முறுவதோர்   பொருள் என்பர். அதுவே இல்லறம். நம் குடும்ப வாழ்க்கையில் நிகழும் உள்ளத்து உணர்வுகள் வெளியார்களுக்குத் தெரியக்கூடாது  என்பதில் கவனமாகவும் இருந்தனர்.ஒருத்தரை ஒருத்தர் விரும்பிக் கூடி வாழ்வதற்கு அகம் என்றார்.உள்ளத்தால் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது அகம் எனவே இஃது அகவாழ்க்கை எனப்பட்டது.
       எனவே அகத்தே (உள்ளத்தே,இல்லத்தே) நிகழும் ஒழுக்கத்தை அகத்திணை என்றனர். அந்த ஒழுக்கம் வாழும் இடத்திற்கும் வாழும் காலத்திற்கும ஏற்றபடியே நிகழும். எனவேதான் நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆயிற்று.
      முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
       இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.(தொ.பொ4)
அப்படிப்பட்ட அகத்திணையினுள் நிலம் சார்ந்த ஐந்து திணைகளை(குறிஞ்சிமுல்லை மருதம்,நெய்தல்,பாலை)அன்பின் ஐந்திணை என்றும் எண்ணத்தைச்(உள்ளத்தே, இல்லத்தே)சார்ந்த திணை பெருந்திணை, கைக்கிளை என்றும் இரண்டும் சேர்த்து  அகத்திணை ஏழு என்றனர்.அதனால்தான் பொருளதிகாரத்தின் முதல் நூற்பா அகத்திணைச் செய்திகள் சொல்லப்படுகின்றன. தொல்காப்பிய அகத்திணையைத்  தொடர்ந்துதமிழ் நெறி விளக்கம், வீரசோழியம், களவியல் காரிகை, நம்பியகப்பொருள்,    மாறனகப்பொருள்,  முத்துவீரியம்  போன்ற இலக்கண நூல்கள் அகத்திணைச்   செய்திகளைத் தருகின்றன.பொருளதிகாரம்கூறும் இலக்கண நெறியே தமிழுக்கேஉரியது. இஃது உலகறிய வேண்டிய பேருண்மை! அக இலக்கணம், தமிழர் அகவாழ்வு நெறி என அனைத்துப் பொருளும் தருவதை உணரலாம். திருமணத்துக்கு முன்னர் தலைவன் தலைவி ஆகியோரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் களவு வாழ்க்கை எனப்படும்.திருமணத்துக்குப் பின்னான வாழ்வின் நிகழ்வுகள் கற்பு வாழ்க்கை எனப்படும்.இதுவே அக ஒழுக்கம். இந்த அகநெறி ஒழுக்கங்களைப் பாடல்களாகப் புனைய தமிழர்கள் தெரிந்தெடுத்த முறை உயர்ந்தது-ஒன்றேயானது (unique) தெரிந்து கொண்ட உலகத்தோர் வியந்து போற்றுவது.
பூவின் மணமெனப் புனிதத் தமிழினுக்கு                                                                            ஆவி ஆகும் அகப்பொருள் இயல்பே!                  
கட்டுரை ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆகாளியப்பன்அனுப்பிய நாள்            27-05-18   திபி 2049ஆவணி ஆகஸ்ட் 2018