Monday 20 January 2020

போகிப் பண்டிகை


                            போகிப் பண்டிகை                                                 
                      புலவர்.ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
பொன்னுல காளியும் பாம்பும் போகி (பிங்கல நிகண்டு3902)
போகி என்றால் அரசன், இந்திரன், ஒருபண்டிகை, இன்பம் அனுபவிப்பவன், பாம்பு, சுக்கிரன், நல்ல அனுபவம் உடையவன், சிவிகை சுமப்போன்.என்று கழகத்தமிழ் அகராதியில் காணப்படுகிறது.
       பழையன கழிதலும் புதியன புகுதலும்
       வழுவல கால வகையி னானெ (நன்னூல்402)இது மொழிக்கான இலக்கணமாகக் கருதப்பட்டாலும் இதை போகிப்பண்டிகைக்கும் எடுத்துக்கொள்ளலாம்.
     போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும்விதமாகக் கொண்டாடப்பட்ட விழாஎன்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய காலத்தில் மழையை வரவழைக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா இந்திரா விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக போகிஎன்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது. போகி என்றால் மகிழ்ச்சியானவன்’, ‘போகங்களை அனுபவிப்பவன்என்று பொருள். நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் வேளாண்மை மக்கள் அதை போகம் என்றனர். முப்போகம் விளையும் நிலம் என்பதிலிருந்து அறியலாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவே போகிப் பண்டிகைஎனப்படுகிறது.
       தை நோம்பியே தமிழர் அனைவரும் கொண்டாடும் பண்டிகையாகும். அதற்காகவே மார்கழி மாதமே ஆயத்தம் ஆகிவிடுவார்கள். வீடுகள் ஒட்டடை அடிக்கப்படும். சுற்றுப்புறங்களில் இடிந்த பகுதிகள் சரிசெய்யப் படும். சுண்ணாம்போ வண்ணமோ பூசப்படும். ஊரில் உள்ள கோவில்களும்,பொது மன்றங்களும்  அவ்வாறே செய்யப்படும். வீதி ஓரங்களில் முளைத்து புதர்கள் எல்லாம் சுத்தம் செய்யப்படும். குப்பை கூளங்கள் தீவைத்துக் கொளுத்தப்படும். இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், தேவையற்றவற்றையும் தூக்கி எறியும் நாளாகக் கருதப்படுகிறது. இந்திரவிழா நடக்கும்போது எவ்வாறு ஊர் புதுப்பிக்கப்பட்டதோ (காண்க சிலப்பதிகாரம், மணிமேகலை) அவ்வாறு ஊர்கள் அழகுபடுத்தப்படும். பழமையான துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை "போக்கி' எனப்பட்டது. அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது.என்றும் சிலர் கூறுவர்.
தமிழர் மரபுப்படி மழைதரும் தெய்வம் இந்திரனுக்கு போகி என்ற ஒரு பெயரும் உண்டு.  அவனுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். (சிலம்பு மணிமேகலையில் காண்க) இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும்  தீயில் இட்டுப்     பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்
      தைப்பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் முதல் நாள் கொண்டாடப்படுவது. போகி. இது மார்கழி  மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.     போகிப்பண்டிகைக்கு முன்பே.   வீட்டு வாசல்கள் சாணத்தால் மெழுகப்படும். காவியும் கோபியும் கொண்டு அழகு படுத்தப்படும்.
 வீ ட்டுத் தாழ்வாரங்களில் காப்புக்கட்டுவார்கள். அதற்காகவே கிராமங்களில் ஊர் மாதாரி இருப்பர். அவர் ஒவ்வொருவர் வீட்டைச் சுற்றிலும் வேப்பிலை, ஆவிரம்பூ, மாவிலை, பூளைப்பூ கருந்துளசி சேர்த்து  கூரையின் மேற்பகுதியில் செருகி வைப்பர். பூசை அறையிலும் பூளைப்பூ இல்லாமல் வேப்பம் கொத்தை வைப்பர்.  வண்டி வாகனங்களில் முக்கியமாகப் பயன்படும் பொருள்கள் மீதும் வைப்பர்.  இதைக் காப்புக்கட்டு என்பர்.
          சில ஊர்களில் போகி அன்று நிலைப்பொங்கல் வைக்கும் வழக்கம் இன்றும் நமது தென்மாவட்டப் பகுதிகளில் இருக்கிறது. அதாவது வீட்டுத் தெய்வங்களை எண்ணி பொங்கலிட்டு, மறைந்துபோன சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களுக்குச் சேலைவைத்து வணங்கும் வழக்கம் இது பொங்கலிடுவதற்குமுன் காப்புக்கட்டி , சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது., வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர்.  இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்    
    போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். மேலும் சிலர் போகி அன்று  இறந்தவர்களின் நினைவாக சர்க்கரைப்  பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்து வழிபடுவார்கள்
அன்று மாலை அரசாணிக்காய் மொச்சைக்கொட்டை போட்டுச் சமைத்த சோற்றைப் பூசை அறையில் வைப்பார்கள். அதைச் சங்கராந்தி என்னும்   தெய்வம் வந்து உண்பதாக நம்புகிறார்கள். அந்த உணவைக் காலையில் வயதுக்கு வராத பெண்குழந்தைக்கோ,பசுமாட்டுக்கோ தருவார்கள். சங்ராந்தி பற்றிய ஒருகதையும் உள்ளது. ஓராண்டு சிறைவைக்கக்கப் பட்டிருந்த சங்கராந்தி  விடுவிக்கப்பட்டு, அன்று மட்டும் குளிக்க வைத்து அழகுபடுத்தி ஊருக்குள் சென்றுவர அனுமதிப்பார்களாம். முதல் நாளான தை மாதம் முதல் நாள் ஏற்படக்கூடிய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மகர சங்கராந்தியின் பலன்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.  மகர சங்கராந்தி புருஷன் வரும் ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயர் அவர் ஏறிவரும் வாகனம், அணிந்து வரும் ஆடை அணிகள், தாங்கிவரும் ஆயுதம், சூடி வரும்மலர், குடை, விசிறி ஆகியவை எல்லாம் உண்ணும் உணவு ஆகியவை எல்லாம் பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும். அதற்கேற்றவாறு அந்தந்த ஆண்டுக்கான பலன்கள் சொல்லப்படுகின்றன.
     முக்கியமாக விவசாயக் குடும்பங்களில் பெண்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது. முன்காலத்தில் விவசாயக் குடும்பங்களில், குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் அதிகமாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் உழைப்பு விவசாயத்திற்கு முக்கியம். குடும்பத்தார் தவிர மற்றவர்கள் உழைப்பை கூலிக்காக அக்காலங்களில் பயன்படுத்தியதில்லை. எனவே அதிக அளவில் ஆண்கள் உள்ள குடும்பமே நிலத்தைத் தொடர்ந்து பராமரித்து வளர்ச்சி அடையும் என்ற நிலை இருந்தது. அதே நேரத்தில் அதிகக் குழந்தைகள் பிறப்பதற்கு பெண்கள் பழைய ஆடைகளைத் தவிர்ப்பதும் அவசியமாக இருந்தது. இதுதான் போகி பண்டிகைக்கு அடிப்படை. எனவே பழையன கழிக்கும் போகிப் பண்டிகைக்கு நமது கலாச்சாரத்தில் சுகாதார நோக்கமும், அர்த்தமும் இருந்தது                                    
     தமிழ் ஆண்டின் சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி   எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியநூல்களில் சங்க இலக்கியங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.
இன்பம் என்பது எல்லா உயிர்கக்கும்
தாமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (தொல்காப்பியம்)
          இன்பமே என்னாளும் அடைதல் வேண்டின்
                     ஈடில்லா இந்திரனை வேண்டிக் கேட்போம்
              துன்பமதை என்னாளும் போக்கி நாமும்
                     போகத்தைப் பெற்றிடுவோம் போகி நாளில்.
             கட்டுரையாளர்      புலவர்.ஆ.காளியப்பன்
            தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
            போற்றவும்/ தூற்றவும்9788552993
                           பெட்டிச்செய்தி
                      
    சூரியன் அன்று மகர ராசியில் நகர்கிறது என்றும் ஒரு மகரராசிப் வருகைக்கும் அடுத்த மகர ராசி  வருகைக்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு என்றும் கூறப்பட்டது. அன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழக்கம் ஆதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர். அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர்.  ஆகத்து 23, 2011ல் தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.]. அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
.

மெய்ப்பாடு


                      
தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
முத்தம்மாள் நிலையம்,பூலுவபட்டி(அஞ்சல்),கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232  Email amuthankaliappan@gmail.com
                    மெய்ப்பாடு
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரையார் கழற்கென்          
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.
                                                ---மாணிக்கவாசகர்
முன்னுரை: பண்டைத் தமிழ் மக்களது அன்பும் அறிவும் நிறைந்த இன்ப வாழ்வின்இயல்புகளையும் அவற்றில் உண்டாகின்ற புறவெளிப்பாடுகளையும் எடுத்துரைப்பது மெய்ப் பாடாகும். அகம் புறம்எனும் ஒழுகலாறுகளைப் பின்பற்றி நடப்பது மக்கட் சமுதாயம் ஆகும்.அவரவரின் சூழலுக்கு ஏற்ப உள்ளத்தில் பல குறிப்புகள் தோன்றும். அக்குறிப்புகளுக்கு ஏற்ற செயற்பாடுகள் உடம்பில் தோன்றும்.மெய்யில் படுவது மெய்ப்பாடு. அதாவது உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது. மெய்ப்பாடு  என்பது அக உணர்வுகளின் புற வெளிப் பாடாகும். மெய்ப்பாடு என்ற சொல் தற்காலத்தில் சுவை என்ற பொருளைக் குறிக்கின்றது.  அவ்வாறு புலனாகும் சுவைகள் எட்டு என்று வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுடன் சமநிலை என்பதையும் சேர்த்து ஒன்பான் சுவை என்பார்.  இவ்வொன்பான் சுவைகளே எந்தவொரு கலை இலக்கியத்திற்கும் உயிராக உள்ளன.
       பேச்சு மொழி தோன்றும் முன்னரே  தன் கருத்தைப் பிறர்க்கு உணர்த்த மனிதனுக்குப் பயன்பட்டவை மெய்ப்பாடுகளே ஆகும் .மெய்யின் அசைவைக் கொண்டும்உள்ளத்து உணர்ச்சிகள் தாமே வெளிப்படும்.. பண்டைத் தமிழர் தம் இல்வாழ்வு, அவ்வாழ்வுக்குத் துணையைத் தேடுதலாகிய காதல் வாழ்வு மெய்பாட்டிலேயே தொடங்கிற்று அதனால் தான்
நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரையாகும். (தொல்.கள5) என்கிறது தொல்காப்பியம்.காதல் வாழ்வன்றி அன்றாட அரசியல் வாழ்விலும் மெய்ப்பாடுகள் பயன்பட்டன. முன்னம் முகத்தில் உணர்ந்தவர் இன்பம் தீர்த்தல் வன்மையான (புறம் 3) முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து (குறள்) என்ற கூற்றுகளால் முகத்தால் உணரும் மெய்ப்பாட்டினை அறியலாம். இவ்வாறு மெய்ப்பாடுகள் என்ற பாகுபாடும், அவற்றிற்கு இலக்கணமும் அவை இலக்கியத்திற்கு அளிக்கும் நலனும் உலகமொழிகளில் வேறு எந்த மொழியிலும் காண்டற்கரிது. தண்டமிழ் மொழியில் மட்டும் காணப்படும் அம்மெய்ப்பாடுகள் பற்றி இவண் காண்போம்..                
மெய்ப்பாடுவரையறை:  இலக்கியங்களில் வரும் ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு எனக் கூறப் பெறுகின்ற சொற்கள் எல்லாம்  உலகவழக்கில் மனத்தினால் உணரமுடியுமே தவிர அவற்றிற்கு வடிவு கொடுக்க இயலாதுவடிவம் இல்லாத அப்பொருள்களை மனத்தினால் உணர்வதற்கும் பொறிகள் வாயிலாக மனம் கொள்ளுவதற்கும் உடலில் ஏற்படுகிற மாற்றமே மெய்ப்பாடுகளாகும்.
       உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்
       மெய்ப்பாடு என்ப மெய் உணர்ந்தோர் (செயிற்றியம்)
   ஒரு மனிதனின் உடலின்கண் தோன்றும் உணர்வுகளின்  வெளிப்பாடே மெய்ப்பாடு ஆகும். ஐம்பொறிகளின் இயல்பினையும் உணர்வுகளையும் அதன் மூலம் வெளிப்படும் எழுச்சியின் வெளிப்பாட்டையும் அவற்றோடு புறஉடல் மாறுபாட்டையும் உடலசைவுகளால் வெளிக் காட்டப் பெறும் உள்ளக் கிளர்ச்சியே மெய்ப்பாடு எனக் கூறுவர்..செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகிய மெய்ப்பாடு இலக்கியங்களில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது,  . காரணம் உள்ளத்து உணர்வினை தூண்டுவதே கவிதை ஆகும்.இம்மெய்ப்பாட்டின் 
இயல்பினைத் தொல்காப்பியர்                                                                                 ,பண்ணைத் தோன்றிய எண்நான்கு பொருளும்
கண்ணிய புறனே நால்நான்கு என்ப (தொல்1195)என்றும் ‘‘நாலிரண்டாகும் பாலுமாருண்டே"(மெய்- சூ.2) என்றும் உணர்த்துகிறார்.மெய்ப்பாடு பற்றி உரையாசிரியர்கள்        
1. மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்றுஎனக் கூறுகிறார்.
இளம்பூரணர்
2.‘உலகத்தார் உள்ள நிகழ்ச்சி, ஆண்டு நிகழ்ந்தவாரே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றால் வெளிப்படுதல்’ மெய்ப்பாடு என்பார் பேராசிரியர். மேலும்’‘முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாகினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காம நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும், அடங்கும் நாடக நூலாசிரியர்க்கு" என்று உரை எழுதி   விளக்கம் தருகிறார். . 
3. உள்ள நிகழ்ச்சி நிகழ்ந்தவாறே உய்த்துணர வேண்டிய தேவை இல்லாமல் கண்ணீரரும்பல்,  மெய்ம்மயிர் சிலிர்த்தல் ஆகிய புறச் சலனங்கள் மூலமாக வெளிப்படுவது  மெய்ப்பாடுஎன்றுரைக்கின்றார் நச்சினார்க்கினியர்                                                              4. அகவுணர்வுகளை ஆழ்ந்து  ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற்புற
உடற்குறி மெய்ப்பாடுஎன்று விளக்கம் தருகின்றார் ச. சோமசுந்தர பாரதியார்.
5.ஒருவரின்  உள்ளுணர்வுகளை மற்றவர்கள் கண்டும் கேட்டும் அறிந்திட வெளியிற் காணும் உடற்குறிகள், வாயிலாகப் புலப்படுத்தப் படுபவையே மெய்ப்பாடு எனப்படும்என்கிறார் கலைஞர் மு. கருணாநிதி. (தொல்காப்பியப் பூங்கா, ப.402)..                                 பக்கம் 2                            



6 .மெய்என்பது பொருட்பிழம்பு, பாடுஎன்பது தோன்றுவது.  கவிதை தான் மெய்யாகிய பொருட் பிழம்பைத் தோற்றுவிக்கிறது என  ளக்கம் தருகிறார் முனைவர் தமிழண்ணல்  
7 உலகத்தாரது உள்ள நிகழ்ச்சி அவரது உடம்பிலே தோன்றும் கண்ணீர் அரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல், வியர்த்தல் நடுக்கம் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலப்படும் தன்மை.என்கிறார் புலவர் வெள்ளை வாரணம் அவர்கள்
8. சுவாமிநாத தேசிகர் மெய்ப்பாடு என்பது, வெளிப்படுவது என்று பொருள்படும். உள்ளத்து உணர்ச்சிகளால் செயல்களில் தோன்றும் வெளிப்பாடு மெய்ப்பாடு. என்கிறார்.
9. திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர் கண்ணினும் செவியினும் உளத்து நிகழும் உணர்வுகளை உளப்பட உணர்த்துதலே மெய்ப்பாடாகும்.. என்கிறார்  வீரசோழிய உரைகாரர்.
இம்மெய்ப் பாட்டினை நாடக, செய்யுள் வழக்கிற்கும் அங்கமாகக் கொள்ளுதல் மரபாகும்.
உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளின்
மெய்ப்பட முடிப்பது மெய்பாடாகும்.(தொல்பொருள்505)
மெய்ப்பாட்டின் வகைகள். மெய்ப்பாடுகள் தோன்றும் இடங்களை உரையாசிரியர்கள் சுவை என்கின்றனர். வடநூலார்இரசம்எனவும் குறிப்பிடுகின்றனர். சுவை என்பது உள்ளத்தில் தோன்றும் சுவை-உணர்ச்சி இவை உடலின் மெய்ச்சுவைகள்.. இவை அனைத்தும் புறப்பொருளில் தோன்றுவன. இவையே யன்றிக் காதல் வாழ்க்கையில் காதலர்களிடையே தோன்றும் மெய்ப்பாடுகள் அவத்தை, அழிவில்-கூட்டம், ஒப்பு, ஒப்பின்மை என்னும் உணர்ச்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன. இவை பற்றி இக்கட்டுரையில் கூறப்படவில்லை பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல் முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத்தெழுச்சி உணர்வுகள். சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் - ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள். தொல்காப்பியம் காட்டுவன உணர்ச்சிகள் உந்திய வெளிப்பாடு
மனிதன் தோன்றிய நாள் முதலே மெய்ப்பாடு காணப்படுகின்றது.  அதன் வளர்ச்சி சிறப்பாக இருந்தது என்பதற்குத் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாடுகளையும் அவற்றின் வகைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.
பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப (தொல்பொருள்245) பண்ணைத் தோன்றிய என்றதனால் கற்றோர் அடங்கிய அவையில் இவை தோன்ற வாய்ப்பில்லை. விளையாடும்போது தோன்றுகின்ற  மெய்ப்பாடு என்று சொல்லப்படுபவை,     
நகையே அழுகை இளிவரல் மருட்கை        அச்சம்
பெருமிதம் வெகுளிஉவகையென்னும்
  
அப்பால் எட்டேமெய்ப்பாடென்ப”.   (தொல்-பொருள்-247).பாடலில் சுவைபொருள்  பொருள் புலப்பாட்டால் தோன்றுவதாகும். உள்ளத்தில் தோன்றும் குறிப்பு உடம்பில் வெளிப்படுவதாக


தொல்காப்பியர் எட்டு வகைக்குள் மெய்ப்பாட்டை அமைத்துள்ளார்.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். காரணம் அகவுணர்வானது முகத்தின் வழியே வெளிப்படும் என்பதே.  இதனையே தொல்காப்பியர் நூற்பாவின் வழி எட்டு வகையாக பிரித்து பொருள் தந்துள்ளார். அவற்றுள்
நகை:  நகை என்பது சிரிப்பு, மனிதரோடு மனிதரை இணைக்கும் ஆற்றல் கொண்டது சிரிப்பு.  இச்சிரிப்பு கவலையை விரட்டும் பொருளாக உள்ளது அதனால் தான் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர்.நகை முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்றாகும். தொல்காப்பியர்
,பிறருடைய ஏளனத்திற்கு ஒருவர் ஆளாதலை எள்ளல் என்றும்  இளங்குழந்தைகள் பேசுகின்ற மழலைப்பேச்சு குறித்த நகைத்தல் என்றும்,  அறியாமையின் காரணமாக தோன்றுகின்ற நகை என்றும்,  பேதமை என்னும் ஒன்றை மற்றொன்றாக உணர்தல் போன்ற நான்கின் அடிப்படையில் நகைத்தல் தோன்றும் என்றும் வகுத்துள்ளார்.அதற்கான கட்டளை
  எள்ளல் இளமை பேதமை மடன் என்று
   
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப”  (தொல்.மெய்.1198)
.அழுகை  மனிதனின் முதல்மொழி. கருவறையை விட்டு வந்தவுடன் வாழ்வின் தொடக்கமே அழுகை தான். அந்த அழுகைதான் எல்லோரையும் சிரிக்க வைக்கிறது.அவனே மற்றவரை அழவைத்து கல்லறைக்குச் செல்கிறான்.அழுகையை அவலம், இரக்கம், துயரம் என்றும் கூறுவர். அவை அரற்றல், இரங்கல், விம்மல், விசும்பல், புலம்பல், கம்பலை எனப் பலவகைப்படும். , நகைச்சுவையின் எதிர்சுவை அழுகை.   என்பதே. தொல்காப்பியர் இதனை,
 
இழிவே இழவே அசைவே  வறுமையென
   
விளிவில் கொள்கை அழுகை நான்கே  (தொல்.மெய்.1199 )என்கிறார். பிறரால் தாழ்வு
படுத்தப்பட்டு எளியராய் நிற்கும் அவல நிலையில்   அவற்றை எதிர்க்க முடியாத நிலையில்
வரும் அழுகை இழிவு படுத்தலால் வருவது. வாழ்வுக்கு உறுதி பயக்கூடிய நம்மை ஆதரிக்கும் தாய், தந்தை முதலிய சுற்றத்தாரையும், பொருளையும் இழத்தலால் வரும் அழுகை இழவு பற்றி வந்ததாகும்.சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தவர் பிறர் முன்னிலையில்  செல்வாக்கோடு வாழ்ந்த நிலைமாறி ஏழையாகும் (அயற்சி) போது வரும் அழுகை அசைவு எனப்படும்.கும்பிக்குக்கூழ் இன்றி, குழந்தைகளுக்கும் உணவின்றி வாடும் வறுமை உற்ற போது வரும் அழுகை  என நால்வகைப்படும்.   



இளிவரல் பிறரால் இழிவாகப் பார்க்கப்படும் நிலை அதாவது எளியன் ஆதல் என்பதாகும்   முகம் சுழித்தலால் உண்டாகின்ற முக மாற்றத்தையே இளிவரல் எனலாம். இதனை,
 மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
 
யாப்புற வந்த இளிவரல் நான்கே”  (தொல்.மெய்.1200) என்கிறார் தொல்காப்பியர்
முதுமையை இகழ்வோடு பார்க்கும் மூப்பு, தீராத பிணியால் ஒருவர் இழிவாக பார்க்கப் படுவதால் உண்டாகும் இளிவு, பயனற்ற முயற்சிகளால் இளிவுற தோன்றும் இளிவு, வலிமையின்றித் தோல்வி அடையும் இளிவு என நான்கு வகைக்குள் இளிவரலை தொல்காப்பியர்.வரையறுத்துள்ளார். .    
மருட்கைபுதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
 
      மதிமை சாலா மருட்கை நான்கே”  (தொல்.மெய்.1201)  இதை வியப்பு என்றும்..   மருட்கைஎன்றும் கூறுவர். இவ்வுணர்வினைத் தொல்காப்பியர், “மதிமை சாலா மருட்கைஎன்கிறார்.எவ்விடத்தும் எக்காலத்திலும் தோன்றாததோர் பொருள் தோன்றிய வழி வியத்தல் புதுமை. மனம் மருளும் வியப்புண்டாகும். அளவு கடந்து பெருமை பெற்றவை, மிகமிக நுண்ணியதாய் விளங்கும் சிறுமை, ஒன்றனிடம் காணப்படும் புதிய ஆக்கம் என்ற நான்கு  வகையில் மருட்கை சுவையைத் தொல்காப்பியர் வகுத்துள்ளார்.
அச்சம்:அச்சம்என்பது உள்ளத்திற்கு துன்பம் விளைவிக்கும் பய உணர்வினைக் குறிக்கின்றது. மனிதனின் மெய்ப்பாடுகளுள் எல்லோரும் ஆட்படுகின்ற, தவிர்க்க முயலுகின்ற  மெய்ப்பாடு அச்சம் ஆகும். இதனையே,
 அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப்   
பிணங்கல் சாலா அச்சம் நான்கே”  (தொல்.மெய்.1202) என்று விளக்கியுள்ளார்.
 
அச்சம் என்ற மெய்ப்பாடு மிகவும் கொடுமை வாய்ந்ததாகும். அச்சமானது வாழ்வின் முன்னேற்றத்தினைத்  தடைபடுவதாகும்.யாரும் கண்டு உயிருடன் மீள முடியாத அழகின் எல்லையானது காண்பாரை வருத்தும் அணங்கு உரு, பேய், பூதம், பதினெண்கணங்கள்,  ஆகியோரைக் கண்டால் அச்சம் பிறக்கும். சிங்கம், புலி, கரடி, வெறி நாய்கள் போன்ற
விலங்குகளுக்கு அஞ்சுதல், வழிசெல்வோர் பொருளையும், உயிரையும்  பறித்துக் கொடுஞ்
செயல் புரியும் தீத்தொழில் கொண்ட கள்வர்களைக் கண்டால் அச்சம் பிறக்கும். இறை என்பது தந்தையரும், ஆசிரியரும், அரசரும் ஆகியோரைக் கண்டால் அச்சம் கொண்டு வணங்குதல் வேண்டும். தம்இறைஎன்றதனால் அவரவர் மேலே உள்ளவர்களுக்கு (அரசன்,மேலதிகாரிபோன்றோர்) அஞ்ச நேரும் செயலைக் குறிக்கிறது.
பெருமிதம்: பெருமிதம் என்பது யாவரோடும் ஒப்ப நில்லாது மேம்படுதல் எனப் பொருள்படும்.   அச்சமானது ஒரு மனிதனை எந்த அளவிற்கு முடக்கிப் போடுகிறதோ அந்தளவுபெருமிதமானது ஒரு மனிதனை புகழ், சிறப்பு ஆகியவற்றால் முடக்கத்திலிருந்து வெளிவரச் செய்கிறது.  எனவே அச்சத்திற்கும் பெருமிதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பொதுவாக மனிதன் இன்பத்தையே விரும்பவன். மனிதன் இன்பமாகவோ மகிழ்ச்சியாகவோ உள்ளபொழுது எடுப்பான தோற்றத்தையும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் காணப்படுவதை நாம் அறியலாம். மிகுந்த புகழ், இன்பம், பொருள் ஆகியவை கொண்டு சிறப்புப் பெற்றிருப்பவர் ஆயினும் அவர்களுக்குப் பழிச்சொல் வந்து சேராத முறையில் வாழ்வதற்கு கல்வி, தறுகண் (அஞ்சாமை), புகழ், கொடை முதலியவை வெளிப்படுவதே காரணமாகும்.இதனையே கல்வி தறுகண் புகழ்மை கொடையென
 சொல்லப்பட்ட பெருமிதம நான்கே”   (தொல். மெய்ப். 9)வழுவின சொற்களைச் சொல்லாத படி தெள்ளிய நாவினாலே வல்லார்முன் சொல்லச் செய்யும் கல்வி பற்றிய பெருமிதம் தறுகண், அஞ்சத்தக்கன கண்ட இடத்தில் அஞ்சாமை,  இன்பமும் பொருளும் அளவு கடந்து கிடைப்பதாயினும் பழியொடு வரும் செயலைச் செய்யாதிருத்தல் புகழ்மை எனப்படும், கொடை என்பது உயிரும் உடம்பும் முதலிய எல்லாப்  பொருட்களையும் கொடுத்தல்.   
வெகுளி.  வெகுளி என்பது சினம். கள்ளம், கபடம் அறியாத சூது வாது தெரியாத அப்பாவி மனிதர்களைவெகுளி என்று சொல்லுவர். வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது கெட்டது தெரியாத தன்மை என்று கருதலாம். வெகுளி ஒருவருக்கு வருமானால் அவர் தன்னிலையிலிருந்து அறவே நிலையை மறந்து, அறிவை இழந்து, தம் மனம் போன படியெல்லாம் பேசத்தகாத வார்த்தைகளைப் பேசுவர். செய்யத் தகாத வகையிலெல்லாம் செயல்படுவார்.உயிர்கள் ஒன்றோடு ஒன்று போரிடக் காரணமாக உள்ளது வெகுளி தான்.  “கோபம் குணத்தைக் கெடுக்கும்”“ஆத்திரமானது அறிவை மழுங்கடிக்கும் என்ற வரிகள் அனுபவத்தால் அறிந்தவை. அவ்வாறு அவர் வெகுளியினால் செயல்படும் பொழுது அவருடைய உடலிலும் வேறுபாடுகள் தோன்றுகின்றன.  இதனைத் தொல்காப்பியர்,
உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
 
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே”  (தொல்.மெய்.1204 )என்கிறார்.
உறுப்பறை உடலின் உறுப்புகளாகிய கையினை வெட்டுதல்,கண்ணைத் தோண்டுதல் முதலிய கொடுமைகள்  குடிகோள் என்பது மனைவி, சுற்றம், குடிபிறப்பு ஆகியவற்றுக் கேடு சூழ்தலாகும். அலை என்பது அரசியல் நெறிமுறைக்கு மாறாக மக்களை அலைக்கழித்தல்,   கொலை கொல்லுதற்கு ஒருப்படுதல்  இவ்வாறு நால்வகையாகக் கூறப்பட்ட இக்கொடுந் தொழில்கள் காரணமாக மனித மனதில் வெகுளி தோன்றுவது இயல்பு. 
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்  தன்னையே கொல்லும் சினம் என்று வள்ளுவர் கூறியிருப்பினும், சூழல் காரணமாக மாந்தர்கள் கோபம், ஆத்திரம், சினம் என்றெல்லாம் அழைக்கப் பெறும் வெகுளியை வெளிப் படுத்துவது உண்டு. வெகுளி அறிவை இழக்கச் செய்துவிடும்.  வெகுளி இன்றி வாழ்ந்தால் வளத்துடன் வாழலாம் என்று சான்றோர் கூறுவதுண்டு. 
உவகை: மகிழ்ச்சி  அன்பு, இன்பம் காமம், இன்பச்சுவை என்று சொல்லக் கூடிய துன்பத்தை நீக்கும் உவகை பெரும்பாலும் காமஇன்பத்தின் கண் சேர்ந்துரைக்கப் பட்டுள்ளது.    இம்மெய்ப்பாடு மனித உள்ளத்திற்கும், உடலுக்கும், வாழ்விற்கும் ஆக்கமும் ஊக்கமும் தருபவையாகும்.அவையேசெல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
     
                           அல்லல் நீத்த உவகை நான்கே”   (தொல்-பொருள்-1005)
செல்வம் என்பது பல்வகைப் பொருள்களின் நுகர்ச்சி.  புலன் என்பது கல்வியின் பயனாகிய அறிவுடைமை எனும் நுகர்ச்சி. புணர்வு என்பது அன்போடு இருவர் இணைந்து வாழும் நுகர்ச்சி. வெறும் உடலால் ஏற்படும் காமப்புணர்ச்சி மட்டுமே குறிக்காது, அன்போடு இணைந்து வாழும் வாழ்க்கைப் புணர்ச்சியைச் சுட்டுகிறது. அந்த வகையில், இளமையும்  இருவர் உள்ளத்தே ஒத்த காமத்தையும் ஒன்றாகப் பெற்றவர்கள் பெறும்ஐம்புலன் நுகர்ச்சி என்னும் காமபுணர்ச்சி.  ஆறும் குளம் சோலையும் முதலாகிய வனப்பு மிக்க இடங்களில் தங்கித் துணையொடு ஒன்று சேர்ந்து விளையாடி மகிழுவது விளையாட்டுஆகும். உவகை எனும் மெய்ப்பாட்டையே அனைவரும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமென்கின்றனர். 
முடிவுரை: தொல்காப்பியம் காட்டும் மேற்கூறிய மெய்ப்பாடுகள் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. படிப்போரின் கற்பனை, உய்த்துணரும் அறிவு, பொருளறியும் திறன் இவற்றினால் மட்டுமே இந்த நயங்களை, சுவையை அறிந்து சுவைக்க முடியும். சங்க இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்ற கருவூலங்களை அள்ளி உண்டு களித்து இன்புறலாம்.குறிப்பு: அகப்பொருள் மெய்ப்பாடுகள் ஈண்டு உரைக்கப்படவில்லை. கட்டுரைக்கு உதவிய நூல்கள் தொல்காப்பியம் பேராசிரியர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ,கா.வெள்ளைவாரணம் ஆகியோர் உரை, திருக்குறள், கலைஞர் தொல்காப்பியப் பூங்கா.ஆகிய நூல்கள்.