Monday 11 September 2023

கோவைக்குற்றாலம்

 

கோவைக் குற்றாலம் எனப் பெயர் வைத்தது நான்தான். நம்பினால் நம்புங்கள் 

     1980,81 வாக்கில்  படித்து முடித்து வேலை தேடுங்காலத்தில் நடத்துநர் உரிமம் பெற்றதால் பேருந்தில் பயணச்சீட்டு ஆய்வாளர்   பணி கிடைத்தது. நான் வேலை செய்தது. இரண்டு முதலாளிகளிடத்தில்  இருவருக்கும் ஆளுக்கு ஒரு வண்டி. ஒருவர் ஒரு வண்டிக்கு ஊதியம் கொடுக்க முடியாது  அதனால்  நான் இரண்டு மூன்று முதலாளிகளிடத்தில்   வேலை செய்தேன். ஒரு முதலாளி நாளும்3 ரூபாய் கொடுத்தார். ஒருவர் வாரம் 50 ரூபாய் கொடுத்தார். ஒருவர்  மாதம் 300 ரூபாய் கொடுத்தார்.

     அதில் ஒருவண்டி  பூண்டி என்னும் வெள்ளியங்கிரி மலைக்கும், மற்றொரு வண்டி சீங்கைப்பதி என்னும் சாடிவயலுக்கும் சென்றன. (சீங்கை ஒருவகை முள்நிறந்த கொடி நிரம்ப இருந்த்தால் இந்நிடம் இப்பெயர் பெற்றது)சீங்கைப்பதியிலே ஓர் அழகிய அருவி. வனப்பதுதியில் இருந்ததால்பெரும்பாலோர் கண்டு கொள்ளாத பகுதி. சிலர் அதில் குளிப்பர். குற்றால அருவி போல நீர் கொட்டும்.  சில கல்லூரி மாணாக்கர்கள் வந்து பார்த்து மகிழ்ந்தனர். குளித்துக் குதூகலித்தனர்.

   அந்த அருவியை விளம்பரப்படுத்த நினைத்தோம்,  அந்தக் காலத்தில் பெட்டிக்கடைகளில் வெற்றிலை பாக்கு விற்பர். கூடவே சுண்ணாம்பும் ஒரு குடுவையில் போட்டு  வைத்திருப்பர்.அதற்குள் ஒரு குச்சியும்  போட்டிருப்பர். நான் அந்தக் குச்சியில் சுண்ணாம்பைத் தொட்டு பேருந்தின்  கண்ணாடியில் கோவைக் குற்றாலம்  என எழுதி வைத்தேன். கொஞ்ச நாளில்  கூட்டம் பெருகியது, ஞாயிற்றுக்கிழமை என்றால் எங்கள் வண்டி கூட்டத்தால் நிறம்பி வழிந்தது.

  25 ஆண்டுகள் கழித்து  உடுமலைப்பேட்டை பகுதியிலிருந்த காந்தி கலா நிலையம் மேநிலைப் பள்ளியில்   பணியாற்றி பணிநிறைவு அடைந்து எங்கள் ஊரில் குடியேறினேன். அப்போது பேருந்தில் சீங்கப்பதி என்ற பெயருக்கு  மாறாக  கோவைக் குற்றாலம்  எனப்பெயர் எழுதப்பட்டு பேருந்துகள் சென்றன. நான் வைத்த கோவைக் குற்றாலம் எனும் பெயர் இவ்வளவு பெயர் பெறும் என்று நினைக்கவில்லை. எப்படியிருப்பினும் கோவைக் குற்றாலம்  அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது. அத்தகு கோவைக் குற்றாலத்தைப் பற்றியும்

     கோவை குற்றாலம், சிறுவானி(சிறுவாணி என எழுவது தவறு) மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான  நீர்வீழ்ச்சியுடன் கூடிய அழகிய இடமாக உள்ளது.  கோவைக் குற்றாலம் அருவி தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் நகரின் மேற்கே  35 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைகளின் கிழக்குச் சரிவில் அடிவாரத்துக்கு சற்று மேலே அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவி கரடு முரடான ஆபத்தான வழியில் ஓடி வரும் ஒரு சிறிய அருவியாகும். சற்று அகலமாகவும், குறைந்த உயரத்திலிருந்து விழும் பகுதியில் குளிக்கும் பகுதி உள்ளது. இந்த அருவி சிறுவானி மலைப்பகுதியில் கிழக்குச் சரிவில் நொய்யல் ஆற்றை உருவாக்கும் சிற்றாறுகளில் ஒன்றான பெரியாற்றில் இந்த அருவி உள்ளது. சிறுவானி  மலையின் கிழக்குச் சரிவில் உருவாவதால் சிறுவானி அருவி எனவும் அழைக்கப்பட்டாலும் இந்த அருவிக்கு சிறுவானி ஆற்றுடனோ சிறுவானி  அணையுடனோ தொடர்பு ஏதுமில்லை. கோடை காலத்தில் பொதுவாக நீரோட்டம் குறைவாக இருக்கும். இந்த அருவி இயற்கை எழிலுக்கும் குளிர்ச்சியான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது . இது மாநிலத்தின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கோவைக் குற்றாலம் வருகை தந்திட வனத்துறை அனுமதிக்க வேண்டும். நகரிலிருந்து பேருந்துகள் (14E,59,மற்றும் சிறுவானி.சாடிவயல் செல்லும்வம்டிகள்)இயக்கப்படுகின்றன, இந்த பகுதி மாலை3 மணிக்கு பின் அனுமதி இல்லை. கோயம்புத்தூருக்கு மிக அருகில் உள்ள ஓர் அருவி ஆகவே கோவைக்குற்றாலம் என என்னால் வைக்கப் பட்டபெயர்

  கோவையிலிருந்து சாடிவயல் வரை பேருந்து தனியார் ஊர்திகளில் செல்லலாம். சாடிவயல் வனத்துறை சோதனைச் சாவடியில் கட்டணம் 50 ரூபாய் செலுத்தி   அருவிக்கு செல்ல அனுமதி பெறலாம். அங்கிருந்து அடிவாரம் வரை வனத்துறை மூலம் இயக்கப்படும் வண்டியில் மட்டுமே செல்ல முடியும். அடிவாரத்திலிருந்து ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் மலைப்பகுதியில் நடந்து சென்று அருவியை அடையலாம்.பாதுகாக்கப்பட்டட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

 வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா செல்ல ஏற்றதாக விளங்குகிறது.

இது கோவையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கே பலவகையான பறவைகளையும் விலங்குகளையும் ஒருங்கே காண முடியும். இப்பகுதியில் குரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.  

  அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள், காட்டிற்குள் நடை பயணம், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர வீடுகள் என வியப்பான அனுபவங்களைக் கொண்டுள்ளது, கோவை குற்றாலம். ஒரு நாள் முழுக்க காட்டிற்குள் சென்று வந்த அனுபவத்தோடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது . இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது.  

வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக விளங்குகிறது. இங்கு மலையில் மிக உயரத்திலிருந்து அதிக அழுத்தத்துடன் நீர் விழுவதால் மக்கள் இங்கு அதிக கவனமுடன் குளிக்க வேண்டியுள்ளது.  

பிரபலமான மர வீடுகள்

மிகவும் அடர்ந்த காடுகளுக்கு நடுவே இந்த அருவி அமைந்து உள்ளது. இதனால் தண்ணீரின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அருவியில் தங்குவதற்காக வனத் துறை சார்பில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது . இங்கு உள்ள மர வீடுகள் மிகவும் பிரபலமானது. இரவு நேரங்களில் இங்கு தங்கி வனத்தின் சூழலை நம்மால் உணரும் வகையில் அமைத்து உள்ளனர். வன விலங்குகளை நாம் வீட்டில் மேலே இருந்து  ரசிக்கலாம். ஒரு வீட்டிற்கு ஒரு நாள் தங்குவதற்கு 2 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் அறையில் வைக்கப்பட்டு உள்ளது. வனத் துறை அலுவலத்தில் இதற்கான முன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விரைவில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதியை கொண்டு வர உள்ளார்கள்

பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானத்தில் வரும் மக்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்து அங்கு இருந்து கோவை குற்றாலத்திற்கு பயணிக்கலாம். பேருந்துகளில் வரும் மக்கள், கோவையில் உள்ள காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சாடிவயல் வரை அரசு பேருந்து செல்கிறது. சரியாக ஒன்றே கால் மணி நேரம் வரை பேருந்தில் பயணிக்க வேண்டும், இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தில் பயணித்தால் நாற்பது நிமிடங்களில் பயணிக்கலாம். அங்கே இறங்கியவுடன் கோவை குற்றாலத்தின் சோதனை சாவடியில் , பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்த தனியாக வசூலிக்கபடுகிறது. காலை பத்து மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன

 நுழைவு கட்டணத்தைப்  பெற்ற பிறகு குற்றால அருவிக்கு செல்ல உள்ள பாதை முழுவதும் அடர்ந்த காடுகளாக உள்ளதால் வனத் துறை சார்பில் உள்ள பேருந்து மூலமாகவே அனைவரும் அழைத்து செல்லப்படுவர். அங்கு அனைவரும் வாகனம் நிறுத்தி விட்டு அருவிக்கு செல்ல வேண்டும் . பின்னர் அருவியிக்கு முன்பே 750 மீட்டர் தொலைவில் இறக்கி விடப்படுவார்கள் பின்னர் அங்கு இருந்து சிறிது நேரம் நடந்து செல்ல வேண்டும். அருவிக்கு செல்லும் முன்பே அனைவரும் பரிசோதிக்கப்படுகின்றனர். இங்கு நெகிழி பொருட்கள் கொண்டு செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

 அருவிக்கும் முன்பே குடிப்பதற்கு தேவையான தண்ணீர் மற்றும் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தந்து உள்ளனர். அனைத்து திங்கள் கிழமைகளிலும் கோவை குற்றாலம் அருவிக்கு விடுமுறை விடப்படுகிறது. இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறியவர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு கோவை குற்றாலம் அருவிக்கு பேருந்து மூலமாக வர மொத்தம் 300 ரூபாய் செலவாகிறது. கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் , தென்கயிலாயம் என்னும் வெள்ளியங்கிரி என்னும் சிவன் கோயிலுக்கும் வழியில் மேலைச் சிதம்பரம் என்னும் பேரூர் பட்டீசுவ ரையும் வழிபட்டு வரலாம்
 
கோவை: குற்றாலம் சுற்றுலாவுக்கு இந்த நம்பரை தொடர்புகொள்ளுங்க இதற்கு http://coimbatore wilderness.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 78260 70883 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்,பேரூர் ஆதீனம்.9788552993 amuthankaliappan@gmail.com