Saturday 15 September 2018

கோர்ட்டார் நினைவு அஞ்சலி



                          கோர்ட்டார் நினைவு அஞ்சலி
           காந்தி கலா நிலையம் மேனிலைப் பள்ளி நிறுவனர் நினைவு நாள்(18-௦6-2௦15)
ஞானமும் கல்வியும் நாளும் நல்கிடும்
காந்திகலா நிலையம் கண்டெடுத்த முத்து
கோதில்  கோர்ட்டார்தாள் போற்றி
ஆடைமட்டும் அல்ல அகமும் வெள்ளை
சிவந்த வாயின் சொல்லோ செம்மை
சுற்றமே ஆயினும் குற்றம் பொறாஅர்
நற்றமிழ் பள்ளிக்கே நாளும் உழைத்திடும் 
நம்பள்ளிச் செயலருக்கு சிரம்தாழ்ந்த வணக்கம் 
அகன்ற அறிவோடு அனுபவ நெறியோடு
புகழ்மிகு பள்ளியை பொறுப்புடன் வழிநடத்த
தலைமைப் பொறுப்பேற்ற தஞ்சைச் செல்வமே
ஓங்கு கல்வியோடு ஒழுக்க நெறியையும்
தீங்குஅகல எடுத்துரைக்கும் எனதருமை ஆசான்களே
கலாநிலையப் பெருமையை காசினியில் விதைப்பதற்கு
கடுமையாய் உழைப்பதற்குக் காத்திருக்கும் செல்வங்களே
வள்ளுவன் தமிழால் வணக்கம் கூறுகிறேன்
கோர்ட்டார் நினைவுநாள் கொள்கை மறவன் மறைந்தநாள் அவர் புகழ் பாடி அத்தோடு விட்டு விடும் நாளல்ல இது அவரது கொள்கையை எண்ணத்தில் கொண்டு செயல்பட உருட்டி ஏற்கும் நாளிது அவரது எண்ணம் இதோ

*அனைவரிடத்திலும் அன்பாய் இருத்தல்
*ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்
*இளகிய மனதுடன் ஏழைக்கு உதவுதல்
*ஈகை செய்யவே செல்வம் தேடல்
*உழைப்பைக் காட்டிலும் உயர்ந்த தில்லை
*ஊரின் நன்மைக்கு ஒருப்பட்டு நிற்றல்
*எண்ணமும் ஆடையும் வெள்ளையாய் இருத்தல் 
*எர்த் தொழிலுக்கு இணை  ஏதுமில்லை
*ஐயம் கொண்டால் அனைத்தும் வீண்     
*ஒழுக்கமும் பண்பும் சிறப்பைத் தரும்                                                                                          *ஓதிய கல்வியே உயர்வைத் தரும்                                                                            *ஔவியம்(பொறாமை)பேசாது அனைவரையும் நேசி
இப்பன்னிரண்டு கட்டளைகளை நம் நினைவில் கொண்டு அவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிப்பதே நம் பள்ளித் தந்தைக்குச் செய்யும் நன்றிக்கடனாகும் .இத்திருநாளில் ஐயாவைப் பற்றிப் பேசி செஞ்சோற்றுக் கடன் கழிக்க  வாய்பளித்த தலைவர் அவர்களுக்கு என்நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி வணக்கம். 

 


கையறுநிலை திருவள்ளுவர் நாராயணசாமி


  நமைவிட்டுப் பிரிந்த நாராயணசாமியின்             பெரியார் படிப்பகம்,
நினைவேந்தல் நிகழ்வு                     காந்திபுரம், கோவை,
தொல்காப்பியர் பேரவையின் தொடக்க உறுப்பினர்      11-05-2018.
தொல்காப்பியப் பூங்கா நூலினைக் கைத்தந்து
தோள்மேல் சால்வையும் அணிவித்தார் அழகாக
நாள்தோறும் பேரவைதான் நன்றாய் வளர்வதற்கு
ஒருவரும் அறியாது உறுபொருள் தந்தவர்
கருஞ்சட்டைப் படையில் வெண்தாடி வேந்தர்க்காய்ப்
பச்சைத் தமிழனாய்ப் பதாகை தூக்கியவர்
அச்சமிலாத் தமிழனுக்கு அஞ்சலி செய்கின்றோம்!
சொன்மலர் தூவியே தொழுது பணிகின்றோம்!
நஞ்சம்மாள் காளியண்ணன் நற்றவப் புதல்வரே! 
நாக ரத்தினத்தின் நற்றுணை நாயகரே!
அந்தமிலா பேரறிவும் ஆழ்ந்த புலமையும்
இந்தப் புவியில் உன்னைப்போல் யார்பெற்றார்?
உந்து சக்தியாய் உலகிற்கு இருந்தவுன்னை
அந்தக் காலன்தான் அழைத்துச் சென்றானே!
ஆரியப் பாம்படிக்க ஈரோட்டுக் கோலெடுத்தாய்!
அருந்தமிழ் வளர்க்கவே கலைஞர் கரம்பிடித்தாய்!
மானமுறு தமிழருக்கு மறுமலர்ச்சி வேண்டுமென
மாதவிதழ் ஒன்றினை வெளியிட்டுச் சிறந்தவரே!
முந்தியவர் தமிழர் உலகிற்கு என்றுதான்
எந்நாளும் உரைக்கும் ஏற்றம் உடையவரே!
சிந்தனை யாளர் பேரவையைக் கூட்டியே
முந்தைய விதியென்று உரைக்கும் மூடரை
நிந்திக்கத் தயங்கா நிமிர்ந்த நெஞ்சினனே!
மந்தம் ஆக்கியது மனிதரை மதமென்றாய்!
நந்தமிழர் வாழ்வில் நலம்பல பெற்றிடவே
எந்நாளும் உழைத்தவரே ஏனோய்வு எடுத்தாய்?  
வள்ளுவன் குறளுக்குத் தெளிவுரை நீர்தானே!                                           









உள்ளுவதும்  செய்வதும் ஒன்றென இருப்பவரே!
கள்ளாமையும் கல்லாமையும் கற்பித்த வள்ளுவனை
உள்ளாத நாளெல்லாம் வீணான நாளென்றாய்!
வள்ளுவமே வாழ்க்கையாய் வாழ்ந்து காட்டியவா!  
வள்ளுவர் புகழ்பரப்ப வானுலகம் சென்றாயோ?
உள்ளங்கவர் நாயகா! நாராயண சாமியே!
வள்ளுவன் குறள்போல வையம் உள்ளவும்     
வள்ளுவரை நேசித்த வண்டமிழா உன்பேச்சை
உள்ளத்தில் இருத்தியே உழைப்போம் உன்வழியே!  

தனக்குவமை இல்லாத பகுத்தறிவுப் பகலவனின்
   தாளினுக்கு மலர்சூட்ட தனியாகச் சென்றாயே!
மனக்கவலை உற்றே மாந்தர் நாங்கள்
மாநிலம் தன்னில் மயங்கி நிற்கிறோம்
உனக்கிது தகுமோ? ஓலமிட்டு அழுகின்றோம்
எங்களை விட்டுநீ எப்படித்தான் சென்றாயோ!
இனவுணர்வை எங்களுக்கு ஊட்டிய ஏந்தலே!
   இனிமேல் யாருளார் உன்னைப்போல் எங்களுக்கே!

படிமிசை குறளினைப் பகர்ந்த வள்ளுவர்         (படி-உலகம்)
அடியவர்க்(கு) அடியனாய் ஆட்படுத்திக் கொண்டு
செடியாய வல்வினைகள் தீர்க்கும் பெரியாரின்     (செடி-கொடிய)
அடியை அடைந்து அமைதி கொண்டாயே!
                   இப்படிக்கு
                நீங்கா நினைவில்
         தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன் எம்ஏ.,எம்எட்.
              (தொல்காப்பியர் பேரவைத்தலைவர்)
         அகவைமுதிர்ந்த தமிழறிஞர் புலவர் ப.வேலவன்
              (தொல்காப்பியர் பேரவைச் செயலாளர்)
         கவிச்சுடர் கா.உமாபதி எம்ஏ.,பிஎஸ்ஸி.,பிஎட்,எம்ஃபில்
             (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்).

கையறுநிலை கலைஞர்


 கலைஞர்க்கு கையறுநிலைப் பாடல்

உயிர்கொடுத்தப் புகழ்கொண்ட உதயசூரியனே!
இடைத்தமிழ்க் குடியில் இவ்வுலகில் வந்துதித்து
கடைத்தமிழில் கால்பதித்துக் கலைஞன் ஆனாய்
முதற்தமிழில் முகிழ்த்த முதல்வரே  வாழி!

வடக்கில் கோட்டமும் தெற்கில் சிலையும்
வள்ளுவன் குறளுக்கு ஓவியம் வரைந்து
வள்ளுவ நாடாக்கி வைத்தவனே வாழி!

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியப் பூங்காவில்
சொல்லாம் செடிவளர எழுத்துவிதை ஊன்றிப்   
பொருளைப் பூக்கவைத்த புண்ணியா வாழி!

காற்சிலம்பைக் கையேந்தும் கண்ணகிக்குச் சிலைவடித்து
பூம்புகார் கண்டெடுத்து நெஞ்சுக்குநீதி தந்து
இளங்கோவிற்கு ஏற்றம் தந்தவரே வாழி!

மந்திரி குமாரியும்  மலைக்கள்ளன் திரைப்படமும்
மனோகர வசனமும் தந்து மயக்கியவா
இந்திரன் சபைக்கு எழுதச் சென்றாயோ!

பொன்னர் சங்கரும் பூமிதனில்  பொலிவுறவும்
மன்னுபுகழ் ராமானுசர் வாழ்க்கை வரலாறும்
திண்ணமாய் உம்பேரை திக்கெல்லாம் உரைத்திடுமே!

ஆட்சித் தலைவருக்கும் அலுவலகப் பணியாளர்க்கும்
இறந்தபின் என்செய்வோம் என்று தவித்தோர்க்கு
ஈபிஎப் முறையாலே இன்பம்தந்தவரே வாழி!

அன்னைக் கருவறையே அனைவருக்கும் பொதுவென்றாய்  
ஆண்டவன் கருவரையும் அப்படியே ஆக்கிவைத்தாய்
இரட்டைக் குவளையை ஒழித்தவா வாழி! 

மட்குடிசை வாழ்வோரை மாடிவீட்டில் குடியேற்றி
திட்டுவோர் திட்டனைத்தும் திட்டத்தால் வென்றெடுத்தாய்
மட்டற்ற சோகத்தால் மக்கள் கதறுகிறோம்.

பதிமூன்று முறைவென்று பாரதத்து அரசியலில்
பதினான்கு பிரதமரை  பார்த்த பகலவா!
மாண்டபின்பும் வென்றெடுத்தாய் மண்ணில் ஓரிடத்தை





முத்தமிழ் வித்தகரே முழுணர்ந்த பேரறிவே!
சித்தம் கலங்கிடவே  சீர்கெட்ட தமிழ்நாட்டில்
பித்தராக்கி எங்களைப் பிரிந்து சென்றீரே!

மெரினா கடற்கரையில் மெத்தென்ற மணலறையில்
சரிந்ததையா உன்மேனி சந்தனப் பேழைக்குள்
எரியும் எம்மேனி எப்போது தணியுமையா?

 எழுதுகோல்  முறிந்ததையா இலக்கியங்கள் சரிந்ததையா
அழுத கண்ணீரை யார்வந்து துடைப்பார்கள்
தொழுதான் எமனென்று தொடர்ந்தாயோ அவன்பின்னே!.

முத்தமிழ் வித்தகரே மூதறிஞர்க்கு மூலவனே!
கத்தும் கடற்கரையில் கண்ணுறங்கும் திருமகனே
உத்தம புத்திரனே உனைப்பிரிந்து வாடுகின்றோம்

திருக்குவளை முத்து வேலர் மகனா?
திராவிட முன்னேற்றக் கழகம் தானா?
திமுகவே திமுக உள்ளவரை நீயிருப்பாய்!

           ஆக்கம்
தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் பேரவை,
முத்தம்மாள் நிலையம்,
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232                                                         Email amuthankaliappan@gmail.com