Saturday 11 August 2018

திருக்குறள் இலக்கணம் தப்பாது

வழக்குரைநர் இராசேந்திரன் ஐயாவின் வினாவிற்கு விடை       
வெண்மை யெனப்படுவதி யாதெனின் ஒண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு.
யாப்பிலக்கணம்:
வெண்/மை எனப்/படு/வது
யா/துஎ/னின் ஒண்/மை உடை/யம்/யாம் என்/னும் செருக்/கு.
இதில் எனப்/படு/வது  மூவசைச் சீர்.  நிரைநிரைநிரை. கருவிளங்கனி.
வெண்பாவில் கனிச்சீர் வாரா.
எவ்வாறு இங்கு இது அமையப் பெற்றது.? தமிழறிஞர்கள் அருட்கூர்ந்து விளக்கவும்
      இது தமிழ் இராசேந்திர ஐயாவின் வினா
வெண்மை யெனப்படுவதி யாதெனின் ஒண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு
    .     மேற்கூறிய குறளைப்போலவே
வாய்மை யெனப்படுவதி யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல் என்ற குறளும் வந்துள்ளது.
வெண்பாவின் பொது இலக்கணம்.
1 வெண்பா இரண்டு அடிகளுக்குக் குறையாமலும் பன்னிரண்டு      
  அடிகளுக்கு மிகாமலும் வரும்
2.எல்லா அடிகளும் 4 சீர்கள் கொண்ட அளவடியாகவும் ஈற்றடி மட்டும்   
   மூன்று  சீர்கள் கொண்ட சிந்தியாகவும் வரும்.
3.மாச்சீர் விளச்சீர் காய்ச்சீர்கள் மட்டும் கனிச்சீர் வரக்கூடாது.
4.செப்பல் ஓசை பெற்று வரும்
5.இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளை மட்டும் 
 வரும்.பிறதளைகள் வாரா
6.ஈற்றடியானது நாள்,மலர்,காசு,பிறப்பு என்னும் வாய்பாடுகளுள்   
 ஏதேனும் ஒன்றினைப் பெற்றுவரும்.
7. ஒருவிகற்பத்தானும் பலவிகற்பத்தானும்வரும்.
 மாச்சீர் விளச்சீர் காய்ச்சீர்கள் மட்டும்வரும். கனிச்சீர் வரக்கூடாது இந்தவிதியை மட்டும் பார்ப்போம்
முதலில் அசை பிரிப்போம்
வெண்/மை  யெனப்/படு/வதி        யா/தெனின்  ஒண்/மை
நேர் நேர்  நிரை நிரை நிரை(நேர்)    நேர்நிரை   நேர்நேர்
தே மா       கருவிளங்கனி(காய்)        கூவிளம்   தேமா
  
எனப்படுவதி யாதெனின் = எனப்படுவது+ யாதெனின் 
எனப்படுவது குற்றியலுகரம்  குற்றியலுகரச் சொல்லின் முன்னால் யகரம் வந்தால் குற்றியலுகரத்தில் உகரம் இகரமாகத் திரியும் இந்த இகரம் தனக்குரிய 1 மாத்திரை அளவிலிருந்து குறைந்து 1/2மாத்திரை அளவு ஒலிக்கும் .இதைக் குற்றியலிகரம் என்பர் அசை பிரிக்கும் போது 1/2மாத்திரை அளவாகக் கொண்டு எழுத்து எண்ணும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது மெய் எழுத்துகளைக் கணக்கில் கொள்வதில்லை
எனப்படுவத்உ +ய்ஆதெனின்
எனப்படுவத்இ+யாதெனின்-----உகரம் இகரமாகத் திரிந்தது
எனப்படுவதி குற்றியலிகரம் ஆகவே எனப்படுவத் என்றே இருக்கும்.
எனப்/ படு/வத்       யா/தெனின்
நிரை நிரை நேர்      நேர் நிரை
கருவிளங்காய்  காய்முன் நேர் வந்ததால் தளை தட்டவில்லை வெண்சீர் வெண்டளை
ஆகவே திருக்குறள் வெண்பா இலக்கணப் படியே உள்ளது.
இலக்கணம் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் மற்றவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை
இராசேந்திரன் ஐயாவிற்குப் புரியும். மற்றவர்களுக்குச் சிறிய குழப்பம் தான்

புலவர் ஆ.காளியப்பன்

1 comment:

  1. குற்றியலுகரமாகவே இருந்தாலும் இங்கு தளை தட்டாது!

    ReplyDelete