Saturday 11 August 2018

தொல்காப்பியம் ஓர் அறிமுகம் 1 சூன் 2018


தொல்காப்பியம் ஓர் அறிமுகம் 1 சூன் 2018
 பண்டைத்தமிழர் ஒழுக்கம்:
       உலகம் தோன்றிய முதலாய் மனித குலத்தில் ஒழுக்க நலன்கள் அமைந்து விளங்கியிருந்தன என்பதும், காலப்போக்கில் தான் ஒழுக்கக் கேடுகள் தலைப்பட்டன என்பதும், மனிதகுல வரலாற்றை அறிவியல் உணர்வுடன் அணுகிறவர்கள் அறிவார்கள் பண்டைத்தமிழர் ஒழுக்கம் (திணை)  குறிஞ்சி,முல்லை,மருதம் நெய்தல்,பாலை- ஐந்து ஒழுக்கங்கள் ஆகும்.
ஆனால் பாலைக்கெனத் தனிநிலம் இல்லை.முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்  திரிந்து நல்யியல்பு அழிந்து நடுங்கு துயர் உறுத்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்று சிலம்பு கூறுவதால் நிலம் நான்கு வகைப்படும். எனவே இந்த உலகம் நானிலம் எனப்பட்டது. இப்பாலை நிலத்தினும் வறட்சி,.உணவின்மை காரணமாக மக்கள் வாழாது ஏனைய நிலங்களுக்குச்செல்ல  ஐந்திணை ஒழுக்கம் நான்கில் அடங்கின. அஃதாவது பாலை ஒழுக்கம் நான்கு நிலங்களிலேயே அடங்கின. பாலையில் மக்கள் வாழ்வு பொருள்வயிற் பிரிவாகக் கருதப்பட்டது. காலப்போக்கில் வாழ்வியல் வளர்ச்சி காரணமாக ஓதல், தூது, செலவு, இகல்,வென்றி எனப் பல்வகையாகப் பெருகிற்று.காலச்சூழலில் மக்கள் வாழ்க்கை மாற்றங்களுக்கு இணங்க கைக்கிளை, பெருந்திணை என எழலாயின. 
பண்டைத்தமிழர் வாழ்வு:
   மன்னர் ஆட்சியில் மக்கள் கவலையில்லாது களித்தே வாழ்ந்தனர். மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகமாக மாண்புற்றது. அறம் பொருள் இன்பம் மூன்றும் முகிழ்த்தன
சமுதாயத்தில் பல்குடியினர், பல்பிரிவினர், பல்தொழிலினர் வேறுபாடின்றி ஒருமை உற்றிருந்தனர். பசியும் பிணியும் பகையும் நீங்கி, மக்கள் வசியும் வளனும் சிறக்க வாழ்ந்தனர். சாதிப் பிரிவே இல்லை. குறிஞ்சி,முல்லை மருதம்,நெய்தல் என்ற நானிலப் பகுப்பும், பரதவர் ,எயினர், ஆயர் போன்ற குடிமுறைமையுமே நிலவின. பிறநாட்டினர் தமிழகத்தை நாடி வந்து வாணிகம் நடாத்தும் அளவிற்கு வளம் கொழித்து விளங்கியது. உரிமை வாழ்வால் எல்லாத் துறையிலும் மக்கள் ஏற்றம் பெற்று விளங்கினர்
    அரசியலுக்கோ அல்லது தன்மனிதனுக்கோ உரியதாக எச்சமயமும் ஏற்றமுறவில்லை. அவையவை தத்தம் முறையில் அமைதி பெற்று ஒளிர்ந்தன. சமயம் என்று ஒன்று தனித்து இயங்கவில்லை. தமிழர் வாழ்வோடு ஒன்றி நின்றது கடவுள் நம்பிக்கை.முருகன், இந்திரன் வேந்தன்.திருமால் என நிலத்தெய்வங்கள் குறிக்கப் பெறுகின்றன. சமயப்பூசலும் மதமாறுபாடும் இல்லாத காலம்.வடநாட்டுச்சமயங்கள் வந்திருந்தாலும் வேரூன்றாத காலம். புறமாகி இயற்கைச் சூழலும்,அகமாகிய அன்றாட வாழ்வு முறையும் நிலைபெறக் கொண்டு, அகம் புறம் எனும் இருகரையினில் அமைந்து காட்சி நலனும் கருத்து வளனும்பெற்றொளிர்ந்தது. உலக வாழ்வில் பற்று மிகக் கொண்டு, அறவழியில் பொருள் ஈட்டி இன்பம் துய்த்தனர்.
       
   பண்டைத் தமிழர் நெறியில் வடபுலத்து நெறிகள் ஊடுருவிக் கலந்தமையால் ஏற்பட்ட சமய, சமுதாய,மொழிச் சீரழிவை வெளிப்படுத்த வேண்டும் எனில் தொல்காப்பியம் பற்றி அறிதல் வேண்டும். பண்டைத்தமிழர் வரலாற்றை காவியம் போல் இலக்கியச் சுவையும், கற்கும் தோறும் இன்பமும் நல்கும் இலக்கண நூலாக அமைந்திருப்பது போற்றுதலுக்குரியது
பெயர்: தொன்மை வாய்ந்த காப்பியக்குடியில் தோன்றியமையால் இப்பெயர் பெற்றதாக இளம்பூரணர் இயம்புவர். பழமைமிக்கக் காப்பியக்குடி என்ற ஊரில் பிறந்தமையால் இப்பெயர் ஏற்றதாகச்சிலரும் பழைய நூல்கட்குக் காப்பாக அமைந்த காரணத்தால் இப்பெயர் வந்ததாகச் சிலரும் விளம்புவர். காப்பியன் என்பது இயற்பெயர் நக்கீரர், பல்காப்பியனார் என்பது போல, தொல் என்னும் அடைமொழி சேர, தொல்காப்பியர் ஆனார் என்றும்,தொல்காப்பியம் என்னும் நூலைத்தந்தமையால் தொல்காப்பியர் எனப்பட்டார் என்றும் இயம்புவர்.
    அகத்தியருடைய மாணவர் என்றும் அகத்தியத்தை முதல் நூலாகக் கொண்டு இலக்கணம் இயற்றினார் என்பர். அப்படி இருப்பின் பாயிரம் சுட்டி இருக்கும். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பதால்  பாண்னிக்கு முந்திய ஐந்திரம் என்ற நூலை ஓதிய வடமொழிப்புலமை ஆளர்  என்றும் எழுத்து, சொல், பொருள் யாப்பு, அணி ஐந்து கூறுபாடுகளை அலசி உணர்ந்த தொல்காப்பியன் என்றும் விண்,மண்,அனல் புனல் வாயு என்னும் ஐந்தின் அறிந்தவர் என்றும் இயம்புவர்.
     என்ப, மொழிப, என்மனார் புலவர் யாப்பென அறிப யாப்பறிபுலவர்
 தோலென மொழிப தொன்மொழிப்புலவர் என 250க்கும் மேற்பட்ட இடங்களில் எடுத்து மொழிவதால் இவற்றிற்கெல்லாம் தொல்காப்பியருக்கு முன்பே இலக்கிய இலக்கணங்கள் எண்ணற்றன இருந்திருத்தல் வேண்டும். முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி எனப்பாயிரம் பகர்வதும் ,நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்றபுலநெறிவழக்கு எனக்காப்பியரே கூறியிருப்பதையும் அறிக. வரும் திங்கள் முதல் தொல்காப்பியத்தை இன்னும் ஆய்வோம்

ஆக்கம்:தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தொல்காப்பியர் பேரவைத்தலைவர்,
முத்தம்மாள் நிலையம்,
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232
திபி 2049 ஆனி  சூன் 2018
   

No comments:

Post a Comment