Saturday 11 August 2018

தொல்காப்பியரே துணை கவிதை


தொல்காப்பியரே துணை
காசினி தனக்குக் கதிரவன் நடுவென
கண்டும் விண்டும் உரைத்தவர் தமிழர்
மற்றவர் மரத்தில் வாழும் போது
மாளிகை கட்டியே வாழ்ந்தவர் தமிழர்
கோளினை ஒன்பதாய்க் கூறிய தமிழர்
நாளிகை முதலாய் பருவம் ஆறென
வகுத்த தமிழரின் இலக்கியத் தோப்பில்
செழித்த மரமே முப்பால் நூலாம்
முப்பாலுக்கு முன்னோடி உயர்தொல் காப்பியமே
உலகின் முதன்நூல் ஒப்பற்ற பெருநூல்
நலமிகு தமிழர் நல்வாழ்வை நவில்வது
வண்டமிழர் வாழ்வுதனை வகையாய்ப் பிரித்து
அகமென்றும் புறமென்றும் அளந்து கூறுநூல்
அகமெனப் படுவது அதனது இலக்கணம்
உள்ளத்திலும் இல்லத்திலும் உள்ளதைப் பிறர்க்கு
உரைக்க இயலா உள்ளுணர்வு உடையது
களவென்றும் கற்பென்றும் கவையாய்ப் பிரித்து
கன்னித் தமிழர் காதல் வாழ்வை
முதல்கரு உரியென முறைபட உரைப்பது
ஒருவன் வாழ்வை இருகூ றாக்கி
முப்பொருள் தன்னை நால்வகை நிலத்தொடு
ஒழுக்கம் ஐந்தையும் அறுவகைப் பருவமும்
புறமெழு திணையும் மெய்ப்பா டெட்டும்
ஒன்பான் சுவையும் பத்துப் பொருத்தமும்
நற்பனுவல் ஆக்கினான் தொல்காப் பியனே.
அன்னோர் புகழை அகிலத்தில் பரவ
அனுதினம் உழைப்பேன் இதுவென் சத்தியமே!

No comments:

Post a Comment