Saturday 11 August 2018

தொல்காப்பியம் ஓர் அறிமுகம் 2-- சீர்த்தி தொடர் 3 ஆடி சூலை2018


 தொல்காப்பியம் ஓர் அறிமுகம் 2-- சீர்த்தி    தொடர் 3 ஆடி சூலை2018
1.இன்றுவரை கிடைத்துள்ள நூல்களில் இதுவே மிகவும் பழமையானது.
2. இதுவே தமிழுக்கு முதல் நூலாகும் மற்ற நூல்கள் எல்லாம் இதற்கு வழி நூலாகவோ சார்பு நூல்களாகவோ தான் உள்ளன.
3. எத்தனையோ நூல்கள் இயற்கையாலும் செயற்கையலும் கனல் புனல் வாதங்களால் அழிந்த பின்னும் இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து இதுவரை வாழ்ந்து வருகிறது.
4. வளர்தமிழின் வரலாற்றுச் சுவடியாகவும் வருங்காலத் தமிழுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
5. தனக்கு முந்தைய இலக்கண நூல்களை எல்லாம் வென்று பின்வரும் நூல்களைத் தனது ஆணைப்படி நடக்கச் செய்கிறது.
6. ஐந்திலக்கணத்தையும் முத்தமிழையும் பல்கலைகளையும் பற்றிப் பேசுகிறது.
7. திருக்குறள் தமிழருக்கு உயிர் நூலாவது போல் தொல்காப்பியம் தமிழுக்கு உயிராக விளங்குகிறது.
8. எல்லா இலக்கண நூல்களும் செய்யுள் வழக்கைக் கொண்டுஎழுதப்பட்டன.
ஆனால் தொல்காப்பியம் உலக வழக்கையும் செய்யுள் நெறியையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வரும் உண்மை நூலாகும்.
9. குறள் அறத்திற்கு –வாழ்விற்கு- முதல் நூலாகும் ஆனால் தொல்காப்பியம் தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு, நாகரிகத்திற்கு முதல் நூலாகும்.
10.திருக்குறள் ஆட்சி செய்யாத நூல்களே இல்லை ஆனால் அந்தத்  திருக்குறளையே  ஆட்சி செய்வது தொல்காப்பியம்.
11. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியதாய் தற்காலத் தன்மை பெற்று விளங்குகிறது.
12. உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே என்னும் பகுத்தறிவுப் பகுப்பும் – அறிவியல் அடிப்படையும் கொண்ட அறிய நூல் இஃது ஒரு மொழி நூல்.
13. தமிழில் புதியதாகத் தோன்றியுள்ள மொழிஇயற்கலை நுட்பமிகு மூல நூலாக – மொழியியல் அறிஞர் போற்றும் நுண்ணியக் கருத்துக் களஞ்சியமாக விளங்குகிறது.
14. பண்டைத் தமிழர் வாழ்வு, தொழில், பண்பு, நாகரிகம், சமூக நிலை, பொருள் வளம், சமய நிலை, போர்முறை, ஆட்சிமுறை, மரபு, பழக்க வழக்கம் ஆகியன பற்றி அறியும் கருவூலமாக விளங்குகிறது.
15. உலகில் நிலவும் பல மொழிகளில் பாராட்டப்படும் எல்லா இலக்கணங்களிலும் இல்லாத இயல்வளமும் எழிலும் உடையது.
16. உள்ளத்து உணர்வுகளை ஆய்ந்து அவற்றால் உடலில் தோன்றும் மெய்ப்பாடுகள் இவையிவை என்று எடுத்தோதிய முதல் நூல் தொல்காப்பியமே.
17. ஏனைய மொழி இலக்கணங்கள் எழுத்தும் சொல்லும் மட்டுமே இயம்ப தமிழரின் உயர் ஒழுக்க வாழ்வினை எடுத்துச் சொல்வது தொல்காப்பியம்.
18. சொற்கள் பிறப்பினை அறிவியல் முறையில் இன்னின்ன ஒலிகள் சொற்களைத் தொடங்குவன இந்த ஒலிகள் சொற்களை முடிப்பன இவ்வொலிகளுக்குப் பின்தான் இவ்வொலிகள் வரும் என்று ஆய்ந்து கூறுவது இந்நூல் ஒன்று மட்டுமே.
19. இலக்கணமாகவும் மொழி நூலாகவும் அமைவதோடு இலக்கிய ஆராய்ச்சிக் கருவி நூலாகவும் உள்ளது.
20. முன்னிருந்த கருத்துக்கள் அதன் காலத்திருந்த கொள்கைகள் வரவிருக்கும் மாற்றங்கள் என முக்காலத்துக்கும் உரிய கோட்பாடுகளைக் கொண்டு எக்காலத்தும் இயன்ற ஒன்றாகத் தமிழினோடு ஒன்றி உயிர்நாடியாக விளங்குகிறது.
21. தொல்காப்பியம் தோன்றிய புகழோடு இயங்கி வருவதற்குக் காரணம் தொல்காப்பியர் மேற்கொண்ட தழுவு நடை ஆகும்.
22. பாணினியின் தெளிவும் பதஞ்சலியின் திட்பமும் அரிஸ்டாட்டிலின் தெளிவும் அவை அனைத்திலும் இல்லாத வளமும் வனப்பும் பெற்று, செறிவும் தெளிவும் நிறைந்தது தொல்காப்பியம்.
23. இக்கால அறிஞர்கள் இலக்கணத்தைப் புனைவியல், வரைவியல், தர்க்க நெறியியல், வரலாற்றியல் எனப் பல வகையாகப் பிரிப்பர். இப்பகுப்பு எல்லாவற்றிற்கும் பொருந்தி வருமாறு தொல்காப்பியம் உள்ளது.
24. இலக்கணம் படிக்கிறோம் என்ற உணர்வில்லாது இலக்கியம் பயில்வது போன்ற இனிய உணர்வை எழுப்பும் இந்த தொல்காப்பியம்.
25. தாய்மைப் பண்பு மிக்கது. இத்தாயின் ஆணையைத் தலைமேற் கொண்டு போற்றல் தமிழர் கடனே.
       “ கூறிய குன்றினும் முதல்நூல் கூட்டித்
         தோமின்றுணர்தல் தொல்காப்பியந்தன்
         ஆணையில் தமிழறிந்தோர்க்குக் கடனே”
எனப் பல்காப்பினார் பாராட்டுகிறார்.
26. தொல்காப்பியம் ஓர்ஒளி விளக்கம்.இப்பேரொளியைக் கொண்டு எந்நூலைப் பயின்றாலும் ஏற்படும் இன்பமே தனி.
27.எபிரேயம் பழைய பாரசீகம், சீனம் போன்ற பழைய மொழிநூல்களில் காணமுடியாத வருக்கப் பெருக்கமும், செய்யா வரன்முறை, இயற்கை வளர்ச்சி, வரலாற்றின் நெருக்கம் மிக்க உடையது.
28.கருதும் பொருளும்,பொருள்குறிக்கும் சொல்லும், சொல்லின் உறுப்பாம் எழுத்துமே இலக்கணநூலின் இயற்கைப் பகுதிகளாகும். இவ்வியன் முறைப்படி
எழுத்து,சொல்,பொருள் என முத்திறப்பட வகுக்கப்பட்டுள்ளது. 
வாழ்க்கையை அகமென்றும் புறமென்றும் பகுத்து அவற்றைப் பற்றிய இலக்கியப் படைப்பிற்கு வேண்டிய கூறுகளை யெல்லாம் நிரல்படத்தொகுத்துக் கூறும்பேரிலக்கணத்தைப் படைத்த தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி எனப்போற்றப்படுவதில் வியப்பில்லை.
எனவே தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து போற்ற வேண்டிய நூல் தொல்காப்பியம்.
ஆக்கம். தொல்காப்பியச்செம்மல்புலவர்ஆ.காளியப்பன்
 பூலுவபட்டி,கோயமுத்தூர் 641101


No comments:

Post a Comment