Thursday 27 April 2017

அன்புடைமை



                                    அன்புடைமை        13-12-2015
 அன்பால் தாயைத் தந்தை அணைந்ததால்
           ஆருயிர் எல்லாம் அடைந்தன உலகை
 துன்பம் துயரம் துடைத்து எறிந்து
           தொல்லை போக்குவ(து) அன்பது தானே
 இன்பம் எல்லாம் எடுத்துக் காட்டி
           இன்னுயிர் வளர்ப்பதும் அன்பது தானே 
 அன்பினை அடைக்கும் தாளும் உண்டோ
           அவரவர் கண்ணீர் அதற்குச் சாட்சி

 உலகம் அனைத்தும் எமதே என்பார்
           உற்றார் மீதினில் அன்பே இல்லார்
 இலகுவில் அழியும் உடலைக் கூட
           எளிதில் ஈவார் அன்பினை உடையார்
 சலமிகு உலகில் சடலம் ஆவியைச்
           சார்ந்து இருப்பதும் அன்பால் தானே
 நலமிகு நட்பும் நிலவாய் வளர்வதும்
           நல்லவர் கொண்ட அன்பது தானே

 அறியார் செய்யும் அவலம் தன்னை
           அறமாய்ச் செய்வதும் அன்பது தானே
 சிறிய புழுவும் சிதையும் வெயிலால்
           அன்பில் லாரும் அழிவது உறுதி
 வறண்ட பாலையில் உலக்கை துளிர்ப்பதும்
           வன்மனம் கொண்டோர் செழிப்பதும் ஒன்றே
 அறத்தைச் செய்யக் கைகள் நீளா
           அகத்தில் அன்பு இல்லாப் போழ்தே.
 தாயால் தொடங்கி தரணியில் விரியும்
தன்மை கொண்டது அன்பது தானே
 காயும் மரத்தைத் தளிர்க்க வைப்பது
           காரது கொண்ட அன்பது தானே
 சேயும் மண்ணில் செழிப்புற வளர
           தாயது கொண்ட அன்பது தானே
 ஆயும் அறிஞரும் ஆய்வில் தோய்வது
           அகில மீது கொண்ட அன்பே.

           

No comments:

Post a Comment