Thursday 27 April 2017

அடக்கம் உடைமை

                                     

                  அடக்கமுடைமை
பண்பான மனிதன் பாரினில் யாரெனில் 
    பணிவோ டடக்கம் பனிமொழி உடையான்
திண்ணிய மனமும் திடமான மெய்யும் 
    திக்காத நாவும் திசைமாறிச் செல்லாது
நண்ணிய வழியில் நாடியே உய்ப்பது
    நற்றமிழ் வள்ளுவன் நாட்டிய அறத்துள்
விண்ணினும் உயர்ந்து விளங்கு நல்லடக்கம்
   வேண்டிய பொழுது விரும்பிய நல்குமே

தருநிழல் தன்னில் தங்க வைப்பது
     அருநர கிடையே ஆழ்த்தா திருப்பது  
வருபொருள் தன்னைக் காப்பது  போல
      வருந்தியே காக்க ஆக்கமாம் அடக்கத்தை  
பொருப்பினைக் காட்டிலும் உயர்ந்து நிற்பது
      பொறுமையும் அடக்கமும் பொருந்தி நிற்பது
பொருள்தனைப் பெற்றவன் பணிதல் என்பது
      பொன்மேல் மெருகு பூசுவ தாமே 

உறுப்பைந்தும் உள்வாங்கும் ஆமைபோல் இப்பிறப்பில் 
     ஐம்பொறி தன்னை அடக்கி வாழ்பவன்
மறுபிறவி ஏழிலும் மகிழ்வோ டிருப்பான்
      மணமிகு சுவையோடு சொல்லினை அடக்கான் 
 செறுநர் பலராகிச் சீரழிந்து போவான்
      சினம்நீங்கி கற்றுணர்ந்து அடங்கியான் பிறவி
அறுத்து பேரின்பம் பெறுவதோ  டிப்புவியில்
      அல்லலின்றி அளவிலாப் புகழ்பெறு வானே.
   புலவர்.ஆ.காளியப்பன் எம்.ஏ;எம் எட்                  
முத்தம்மாள்நிலையம்                                                                                                                              பூலுவபட்டி (அஞ்) கோவை 6411௦1                                    அலைபேசி 9788552993                   


 

No comments:

Post a Comment