Thursday 27 April 2017

நாணுடைமை



              நாணுடைமை
மங்கையர் குணமதில் நாணமும் ஒன்றே
     மற்றதைக் கூறாது மற்றவர்க்கு வேண்டிய
எங்கும் தீயதைச் செய்ய நாணுதல்
     என்பது பற்றியே எடுத்துரைக் கின்றேன்
தங்கும் வீடும் தானணி  ஆடையும்
     தரணியில் யாவர்க்கும் பொதுவது தானே
பொங்கிவரும் நாணமோ பொல்லாங்கு யாருக்கும்
     புரியாத பெரியோரின் பண்பது தானே.

உடம்பால் உயிரும் பயனுறுதல் போல
உயர்சால்பும் நாணால் அடையும் பெருமையை
தடம்காட்டும் சான்றோர்க்கு நகையன்றோ நாணுடைமை
     தப்பியே நடப்போர்க்குத் தணியாத பிணியாகும்
குடத்தினில் பாம்பாய் பழியை அடக்கியோர்
     குவலயம் தன்னால் கும்பிடப் படுவார்
மடமையால் பழிபாவம் மாநிலத்தில் செய்யாது
     மதிலாய்க் காப்பதும் நாணமது தானே.

உயிரதைக் காட்டிலும் உயர்ந்ததும்  உளவோ
      உளதென உலகினில் உரைத்தனர் பெரியோர்
மயிரது நீங்கின் மாண்டிடும் கவரிபோல்
      உயிரது நீப்பர் நாணது நீங்கின்
அயில்வேல் கொண்டு ஆழமாய்க் குத்தினும்
      அடாத பழியை யார்க்கும் செய்யார்
உயர்குலம்  கெடுமென  ஒருபோதும் செய்யார்
      உலகினில் நாணிணை கொண்டோர் தாமே.

 

No comments:

Post a Comment