Thursday 27 April 2017

பண்புடைமை



         

.                    பண்புடைமை                                                                                                 வள்ளுவன் உரைத்த வான்மறையின் நூறாவது
             அதிகாரம் பண்புடைமை. அதன் பிழிவேஇக்கவிதை
     (எண்சீர் ஆசிரிய விருத்தம்)                              
பண்பெனப் படுவ பாங்குறப் பகரின்
    பல்லோர் தன்னொடு பழகும் பான்மை 
நண்பர் தன்னிடம் நகைத்தல் செய்திட     
   நயமிலா மொழிகளை நவிலல் குற்றம் 
சண்டையில் பகைவன் ஆயுதம் இழந்தால் 
   சட்டெனச் சமரினை நிறுத்தல் பண்பே
தண்டனை பெறுகிற கைதியே யாயினும்
    தனதுசொல் உரைக்கவே இடந்தரல் நலமே.

உறுப்பால் ஒத்ததால் மனிதன்  அல்லவே
    உயர்குடிப் பிறப்பும் அன்பொடு அருளையும்
பொறுமையும் உடையோன் பண்புடை மனிதன்
    பொருந்தும் நன்மையே புரியும் மாந்தனால் 
அறுந்து வீழா(து) அண்டம் உள்ளது
   அரும்பண் பின்றியே அரிதில் ஈட்டிய                                                    
உறுபொருள் அனைத்தும் ஊரினர் தமக்கு       .           
     ஊறுசெய்யும் உண்மையும் யதுவே  
 
  படித்தும் பட்டும் தேடிய அறிவு
        பல்லினைப் உடைய கூரரம்பு எனினும்
  துடிக்கும் மாந்தர் துன்பம் போக்காத் 
                                   துட்டன் பட்ட காய்மரம் யுலகினில் 
  மடிவரும் பசுப்பால் உள்ள செம்பில்  
      மாய்க்கும் நஞ்சினைக்  கலந்தாற் போன்றது
  இடித்துக் கூறும் நண்பர் இல்லா
      பண்பிலான் அடைந்த  செல்வம் தானே

நகுதல் அறியா பண்பிலான் தனக்கு
    நண்பகல் கூட நள்ளிருள் ஆகும் 
தகுதி யற்றவன் பதவி தன்னால்
    தரணி மாந்தர் துன்பம் கொள்வர்   
பகுத்துண் டறியா பண்பிலான் பெரும்பொருள்
    பயன்படா தழியும் உச்சிமரத் தேனென
வகுத்த குறட்படி வானுறை தெய்வமாய்
   வளம்பட வாழ்வோம் பண்புடன் நாமே.
26-07-2015அன்று முத்தமிழ் அரங்கில் வாசிக்கப்பட்டது                                                                            ஐஸ்வரியம் ஆகஸ்டு   இதழுக்குஅனுப்பி வைக்கப்  பட்டது

 

No comments:

Post a Comment