Wednesday 14 June 2017

தையல் கலைஞர்கள்



        தையல் கலைஞர்கள் 11-6-17
வேலை வெட்டி தேடித்தான்
வெட்டி வேலை செய்பவர்கள்
அனைவரையும் அன்றாடம்
அளவெடுத்து வைத்தவர்கள்  
ஓடியாடி உழைக்காமல்
உட்கார்ந்தே உண்பவர்கள்
காலை ஆட்டிக் கொண்டு
களிப்பாய் இருப்பவர்கள்
பொத்தானுக்கும் காஜாவுக்கும்
பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்கள்
சக்கர ஆயுத்தால் மானிடர்
மானம் காக்கும் கிருஷ்ணர்கள்
இன்றுபோய் நாளைவா என்னும்
கலியுக ராமர்கள்
பாப்பாத் தாத்தா வென்று
பாகுபாடு இவர்க்கில்லை
நாளைக்கு வாவென்னும்
விநாயக மூர்த்திகள்
நாகரிக  உலகத்தை
நடைமுறைப் படுத்துவதாய்
பார்த்துப் பார்த்து எடுத்த
பட்டுத் துணித்தலையை
இரக்கமின்றி வெட்டும் பரசுராமர்கள்
கழுத்தை  வெட்டினாலும்
கம்பி எண்ணாத உத்தமர்கள்
மயக்க மருந்து கொடுக்காமல்
கையையும் காலையும்

நோகாமல் வெட்டும்
கத்தரியும் ஊசியும் கையில்
வைத்துள்ள மருத்துவர்கள்
ஜாக்கெட்டில் கைவைப்பர்
அடுத்தவர் பாக்கட்டை
அஞ்சாமல் கத்தரிப்பார்
இத்தனையும் செய்தாலும்
எவரும் வையார்கள்
கொடிகட்டிப் பறக்கும்
அரசியல் வாதிக்கே
கொடியைத் தந்தவர்கள்
எல்லாக் கட்சிக்கொடிக்கும்
இவர்களே மூலவர்கள்
தன்மானம் காக்கும்
வருமானம் குறைந்தாலும்
பிறர்மானம் காக்கும்
பிரியம் உள்ளவர்கள்
     தில்லிவீதி உழவன்போல்
     அனைவரும் அம்மணமானால்
     பிழைக்க முடியாதவர்கள்
     மானம் காக்கும் மகராசர்
     தையற் கலைஞர் வாழ்க
      தொல்காப்பியச்செம்மல்
      புலவர்.ஆ.காளியப்பன்
     அலைபேசி 9788552993
 

No comments:

Post a Comment