Wednesday 14 June 2017

பொறாமை



                                பொறாமை (அழுக்காறு)     
     அறம் என்பது அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல் இந்நான்கும் இல்லாது இருப்பதே.அவற்றுள் பொறாமை(அழுக்காறு)கொண்டவன் தருமத்திலிருந்து தவறுவதோடு தன்னையும் தன் சுற்றத்தையும் அழிப்பவன் ஆகிறான். பொறாமை கொண்டவன் என்ன ஆவான்..பொறாமை என்ற சொல்லை திருப்பி படித்துப் பாருங்கள். ஆம்அப்படித்தான் போவான். இனிய சொற்களைப் பேசுகிறவன் அதிக நண்பர்களைப் பெற்று இருப்பதைப் போல பொறாமை இல்லாதவனே புகழைப் பெறுகிறான்
     வானமே இடிந்து வீழ்ந்தாலும் அஞ்சாதவன் பொறாமைப்படும் போது அவன் மனம் கல் மலை ஒன்று  வெப்பத்தால் உருகி குழம்பாவது போலவும் பூமிக்குள் உள்ள வெப்பம் வெளிப்படுவதைப் போலவும் புழுங்கும்.. பொறாமை கொண்டவன் மானம் ,குலம்,கல்வி தானம் உயர்ச்சி வீரம் புகழ் அனைத்தையும் மறந்த பேடி ஆகிறான். பொறாமை கொண்ட துரியோதனன் என்ன ஆனான் என்பதை நாம் அறிவோம்.பொறாமை கொண்டவன் வீட்டில் திருமகள் தன் தமக்கை மூதேவியைக்  குடி அமர்த்தி விட்டு, தான் வெளியேறி விடுவாள்..பொறாமை தன் செல்வத்தை அழிப்பதோடு தீய வழியில் மனதைச் செலுத்தும். பொறாமை கொண்டவன் பெருஞ்செல்வந்தன் ஆனதாக வரலாறு இல்லை.பிறர் வாழ்வு கண்டு பொறாமை கொண்டவன் சுற்றாத்தார் உடுக்கத்துணியும் உண்ண உணவும் இன்றித் தவிப்பார்கள்.பொறாமை கொண்டவன் தன் வளர்ச்சியை எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறான்.எனவே நாம் பிறர் ஆக்கம் கண்டு பொறாமை கொள்ளாது நம் வாழ்வையும் வளத்தையும் எண்ணிச் செயல் படுவோம்
    செல்வம் வரும் போது நாடக அரங்குக்குக்  கூட்டம் வருவதைப் போல மெதுவாக வரும். போகும் காலத்தில் நாடகம் முடிந்தவுடன் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு போவதைப் போல ஒரே அடியாகப் போய்விடும்.செல்வம் நம்மிடம் வரும்போதே செல்வோம்(உன்னைவிட்டுச் செல்வோம்)என்று வருவதால்தானே அதற்குச் செல்வம் எனப் பெயர் வைத்தோம் நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைவன் என்றாலும் நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்டக் காட்டுக்குப் போகத்தான் வேண்டும். மாமரத்தின்  உச்சியில் ஏறி மடார் எனக்  காட்டாற்று வெள்ளத்தில் குதித்து கையில் மணல் கொண்டு வந்து காரிகைகளுக்குக் காட்டிய காளை கடைசியில் ஒருநாள் தடியூன்றித்  தள்ளாடி நடக்கத்தான் போகிறான். ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன் கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன் என்பதை உணர்ந்து இருக்கும் செல்வத்தை இல்லார்க்கு ஈந்து பொறாமை இன்றிப் புகழோடு வாழ்வோமாக.   

No comments:

Post a Comment