Wednesday 21 June 2017

நிலமே மூலமுமுதற்பொருள்-கவிதை




நிலமே மூலமுதற்பொருள்    18-06-2017                              
பத்தோடு ஆறாண்டுப் பருவ மங்கையாய்
முத்தமிழ் அரங்கை வளர்த்தெடுத்த வாணிகரே!          
சித்தத்தில் எந்நாளும் சிவனையே எண்ணுகிற
முத்தான கவியரங்கின் மூலவரே! கோவைநம்பி       
தூய்மைப் பாரதத்தைத் தொலைக்கும் மாசதனை            
காய்சினம் கொண்டிங்கு கவிபாட வந்தோரே!
தெருவிலே தமிழ்வளர்க்கும் முத்தமிழ் அரங்கிற்கு
வருகை புரிந்துள்ள அருந்தமிழ் ஆன்றோரே!
தொல்காப்பியச் செம்மல் தொழுகிறேன் கையெடுத்து
நிலமுறு மாசுதன்னை நீருரைக்க வேண்டுமென
கூல வாணிகர் கூறிய காரணத்தால்
நிலத்தின் தன்மைதனை நீள்கவியாக் கிவந்தேன்
செம்பரிதிக் குழம்பின் சிதறிய ஒருதுளியாம்
ஐம்பெரும் பூதத்தின் அனைத்திற்கும் முதற்பொருளாம்
ஐந்திணை ஒழுக்கத்து ஆதாரக் கருப்பொருளாம்
பைந்தமிழர் பண்பாட்டை காக்கும் உரிப்பொருளாம்
பண்டையராம் பாண்டியர் ஆண்ட நிலந்தன்னை
குமரிக் கண்டமெனக் கூறினர் அந்நாளில்
ஆழிப் பேரலையால் அடுத்தடுத்து துண்டாகி
ஆறேழு கண்டமாய் ஆங்காங்கே சிதறியது
தண்டமிழ் நாட்டைவிட்டுத் தள்ளிய கண்டங்கள்
தமிழ்மொழி திரித்து தனிமொழி பெற்றன
கலங்கமிலா எண்ணத்தான் காய்கனி உண்டவன்தான்
விலங்காய்த் திரிகையிலே வில்லங்க மேதுல்லை
மரம்விட்டு இறங்கியே மண்மீது கால்வைத்தான்
பரம்பரை பெருக்கத்தால் பற்றாக்குறை மேலீட்டால்
பரநலத்தைக் கைவிட்டுச் சுயநலத்தை மேற்கொண்டான்
இயற்கைச் செல்வத்தை எந்நாளும் கொள்ளையிட்டான்
செயற்கைப் பொருளாலே சீர்கெடுது நிலமெல்லாம்
எரிபொருள் எந்திரத்தால் ஓசோனும் ஓட்டைவிழும்
கரிமில வாய்வுருஞ்சும் கனமரத்தை வெட்டியதால்
கணக்கிலா நோயாலே கடும்அவதிப் படுகின்றான்
வெப்ப மேலீட்டால் வெண்பனி உருகுவதால்
வெள்ளப் பெருக்கால் வெகுசனம் மடிகின்றார்
நெல்விளைந்த பூமிதனை கல்நட்டி விற்பதாலே
செல்வதெங்கே சோற்றுக்கு சொல்லுங்கள் அவையோரே!
மரத்தின்கீழ் தெய்வத்தை வைத்தான் மறத்தமிழன்
உரம்போட்டால் போதுமென்றான் இக்கால விஞ்ஞானி
பழுதுநீக்கிப் பயன்படுத்தும் பக்குவத்தை மறந்துவிட்டு
உழுதொழிலை புறம்தள்ளும் எந்திரக்  குப்பைதனை
எங்கே கொட்டுவது விழிபிதுங்கி நிற்கின்றோம்
சந்ததியை எண்ணியே சுயநலத்தை விட்டிடுவோம்
இந்தப் பூமிதனை இனியாவது காத்திடுவோம்

No comments:

Post a Comment