Friday 26 May 2017

குறளடியான்



குறளடியான் மாணடி சேர்ந்தார் 24-05-2017
வள்ளுவன் குறளுக்குத் தெளிவுரை அவரேதான்
உள்ளுவதும் செய்வதும் உலகின் நலமென்றார்
தெள்ளுதமிழ் குறளைத் தேன்பாகாய் உண்டவர்
கள்ளாமையும் கல்லாமையும் கற்பித்த வள்ளுவனை
உள்ளாத நாளெல்லாம் வீணான நாளென்றார்
பத்துடைமை பாருக்குத் தந்த வள்ளுவரை
எத்திக்குச் சென்றாலும் ஏற்றியே பேசிடுவார்
எடுத்து வைக்கும் அடியால் எறும்பு சாகுமென்று
தாள்தழுவ வேட்டிகட்டி தள்ளியே சென்றவர்
ஈட்டிய பொருளெல்லாம் ஈவதே அறமென்றார்
காட்டினார் பாதையாய்க் குறளை எங்களுக்கு
முத்தமிழ் அரங்கின்  முடிசூடா மன்னரவர்
முப்பால் குறளடியை முத்தமிடச் சென்றாரே!   
ஆறாகப் பெருகும் எங்கள் கண்ணீரை
அணைபோட்டுத் தடுத்தாலும் கரையுடைத்து போகுதய்யோ!
வாரம் தவறாமல் வள்ளுவனைச் சொன்னவர்தான்
வானுலகத் தேவர்க்குச் சொல்லப் போனாரே!
வள்ளுவோ பதியென்று வழங்கினார் நூலொன்றை
பிள்ளையைத் தேடித்தான் பேருலகம் சென்றாரே!
முப்பாலை நாங்கள்தான் முட்டிமுட்டிக் குடித்தோமே
அப்பா அப்பா தப்பேதும் செய்யிலியே
எப்படித்தான் மனம்வைத்தாய் எங்களைப் பிரிவே.
    புலம்பும் புலவர். ஆ.காளியப்பன் 

No comments:

Post a Comment