Sunday 14 May 2017

திருக்குறளில் விருந்தோம்பல்



                   திருக்குறளில் விருந்தோம்பல் 
முன்னுரை:  
          உலக நாகரிகங்களுள் மூத்தது முதன்மையானது தமிழர்  நாகரிகம். நாகரிகத்தின் அடையாளமே அறக்கோட்பாடுகளே. அறந்தான் செல்வத்தையும்  சிறப்பையும் தருவது. அதனால்தான் அறம் செய விரும்பு என்றார் ஔவைப்பிராட்டி. அறம் இல்லறம், துறவறம் என இருவகைப்படும் இல்லறமே நல்லறம். அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை. இல்லறத்தை மேற்கொண்டு வாழ்பவர்கள் அந்த அறத்திலேயே நின்று நிலைத்து கடமையாற்றி வாழ்தல் வேண்டும். அன்புடைய இல்லறத்தான் அறமே விருந்தோம்பல்தான்!.
        ஒன்று கூடி உலக உயிர்கள் வாழ விருந்தோம்பல் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. விருந்தோம்பல் மனிதனுக்குக் கிடைத்த மகத்தான பண்பு எனலாம். தீமை,பகைமைகளை மறக்கவும் பல புதிய உறவுகளை ஏற்படுத்தவும் கணவன் மனைவியரிடம் உண்டாகும் ஊடலைப் போக்கவும் விருந்து உறுதுணையாக உள்ளது. தமிழர்களின் தனித்த பண்பு விருந்தோம்பல் பண்பாகும். சிவஞான சித்தியார் என்னும் நூலும் தர்மம் என்பது விருந்தோம்பல் தான் என்கிறது. தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் விருந்தோம்பலையே முதன்மை அறமாக வலியுறுத்தி வருகின்றன.
        அவ்விலக்கியங்களில் திருக்குறள் முதன்மையானது. எல்லா நூல்களை விடப் பொதுத் தன்மையில் சிறந்து விளங்குவதால் திருக்குறள் முதலிடம் பெறுகிறது ஒட்டு மொத்த மனித சிந்தனையின் சிறந்த பிழிவு என்று போற்றப்படும் குறட்பாக்களின் அருமையினை உணர்த்த உலகோர்  இந்நூலாசிரியரைத் தெய்வப்புலவர் என்று உயர்த்திக் கூறினர்.                              
        அத்தகு திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கு என்றே தனி அதிகாரம் படைத்து உள்ளார். அது மட்டுமின்றி நூலின் பல்வேறு இடங்களில் விருந்தோம்பலின் பெருமையை எடுத்து உரைக்கிறார். எனவே திருக்குறளில் விருந்தோம்பல் பற்றி ஆய்வதே இக்கட்டுரை.
  விருந்தோம்பலின் சிறப்பு:
             நற்றமிழ் சேர்ந்த புகழ்
             ஞாலத்தில் என்ன வெனில்
             உற்ற விருந்தை
             உயிரென—பெற்று உவத்தல் (குடும்ப விளக்கு-இரண்டாம் பகுதி)
 விருந்தோம்பல்   என்பது இல்லம் தேடி வரும் புதியவர்களை இன்முகத்துடன்  வரவேற்று இனிய மொழி கூறி உபசரித்து உணவளிக்கும் உயரிய  பண்பாகும்.
    


 

                                2
    விருந்தோம்பல் என்பதன் ஆங்கிலச் சொல்லான ஹாஸ்பிட்டாலிட்டி என்பது   இலத்தீன் மொழிச்சொல்லான ஹாஸ்பெஸ் என்பதிலிருந்து பெறப்படுகிறது.
இதற்கு ஈடுகட்டுவது அல்லது சரிக்கட்டுவது என்று பொருள்.விருந்தோம்பல் என்பது நடத்தையின் ஒருபொது விதியாக, ஒரு நெறிமுறையாக பண்பாடாகக் கருதப்பட்டு வந்துள்ளது. கோமரின் காலத்தில் கிரேக்க மதக்கடவுளின் தலைவராக இருந்த சீயசு என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைய கிரேக்கர் மற்றும் ரோமர்களுக்கு, விருந்தோம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. விவிலிய மற்றும் மத்திய கிழக்குக் கலாசாரத்தில், தம்மிடையே வாழும் அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டினரைக் கவனித்துக் கொள்வதானது ஒரு கலாசார விதிமுறையாகவே கருதப்பட்டது. பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப் பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசிஸ் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது இஸ்லாமியச் சமயத்திலும் வலீமா என்னும் சொல்லால் விருந்து குறிப்பிடப்படுகிறது. இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் எனப் பொருள்படும் "அதிதி தேவோ பவ:" என்னும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். பிறநாட்டினரை விட விருந்தோம்பல் பண்பில் நமது மக்கள் என்றென்றும் சிறந்து  விளங்குகின்றனர் விருந்தோம்பல் என்ற சொல்லில் உள்ள விருந்துஎன்ற சொல்புதுமைஎன்றும், ‘ஓம்பல்என்ற சொல்பாதுகாத்தல்சிறப்புச் செய்தல்என்றும் பொருளினைத் தருகின்றன.              
      விருந்தின் தோற்றம் மிகவும் பழமையானது அச்செயல் மொழி உருவாக்கம் நிகழ்வதற்கு முன்பே நடைபெற்றிருக்கலாம்.அதனால்விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (தொல்காப்பியம்.செய்யுள்.231) என்று தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியம் வெட்சித் திணைக்குரிய துறைகளாகக் கூறியவற்றில் மூன்று துறைகள் விருந்தின் தோற்றத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக அமைகின்றன.  பாதீடு, உண்டாட்டு, கொடை,  (தொல்,பொ,புறத்.3) ஆகிய இவை ஆநிரைகளைக் கவர்ந்து வந்த சிறுகுடிக்குப் பகுத்துத் தரப்பட்டன. பகுத்துக் கொடுத்தல் நூலோர்  தொகுத்த அறங்களில் முதன்மையானது இதைத் திருக்குறள்     
     பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்322).என்றுகூறுகிறது
‘‘விருந்தில்லாச் சோறு மருந்து என்ற பழமொழி குறிப்பிடுகின்றது  நம்முன்னோர்கள் விருந்தினருடன் உண்பதை மிகச் சிறந்ததாகக் கருதினர்
மருந்தே யாயினும் விருந்தோடு உண்க” – கொன்றை 70                                                      என்ற ஔவையின் வாக்கு விருந்தில்லா வீடு வீழல். (தனிப்பாடல் திரட்டு

                        3
.“விழுப்புண் படாத நாளெல்லாம் வீழ்நாள்” என்று மறவன் கருதுவது போல விருந்தினர் வாரா நாளெல்லாம் வீண் நாளாகப் பண்டையோர் கருதினர்.
கிடைத்தற்கரிய அமிழ்தம் கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் விருந்தினர்களோடு பகுத்துண்டார்கள் என்பதை
      “இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்                                                                      .      இனிதெனத் தமியர் உண்டலும் இலரே (புறம்182)
எனப் புறநானூறு காட்டும். அதியமான் கிடைத்தற்கரிய நெல்லிக்கனி கிடைத்தும் தான்உண்டு நீடித்து வாழாமல் ஔவைப்பிராட்டிக்கு ஈந்தது விருந்தோம்பலின் சிறப்பினைக் காட்டுவதாகும்
தம் இல்லத்திற்கு ஒருவன் வர நேர்ந்தால் அப்போது வறுமையுற்று விருந்து ஓம்பா நிலையிலும் முதல் நாள் தன் பழைய வாளை விற்றும் அடுத்த நாள் யாழை அடகு வைத்தும் விருந்தோம்பினான். வீட்டிற்கு வந்த விருந்திற்காக எவரும் கொடுக்க முன் வராத தன் மகவை அறுத்துக் கறி சமைக்க முன் வந்தார் சிறுத்தொண்டர். ஒரு மழைக் காலத்தில் வந்த சிவனடியாருக்கு விருந்து அளிக்க ஒரு பொருளும் இல்லாத போது தான் முந்திய நாள் வயலில் விதைத்திருந்த நெல்லை வாரி வந்து மனைவிடம் கொடுத்து உணவு சமைத்து விருந்து அளித்த நிகழ்ச்சியை பெரியபுராணத்தில் இளையான்குடிமாற நாயனார் புராணம் (பாடல்17,18) உரைக்கிறது. இதனை விளக்குவதாக அல்லவோ
        வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
        மிச்சில் மிசைவான்  புலம். (குறள்85) என்னும் குறள் அமைந்துள்ளது.
அப்பூதி அடிகள் வரலாற்றிலும் இவ்வாறு கூறப்படுகிறதுஇல்லற வாழ்வின் இணைப்புப் பாலமாக விருந்தினர் அமைந்துள்ளனர். மருதநிலத்  தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயிலாக விருந்தினர் இருந்தனர்.என்பதைதொல்காப்பியம்
         தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
          பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
          கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
          யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப (தொல்காப்பியம்.கற்பு.52) என்று கூறுகிறது.  தலைவி ஊடாமல் இருக்கத் தலைவன் விருந்தினரோடு வருவது வழக்கம். தலைவியின் மாண்புகளில் ஒன்று விருந்தோம்பல் ஆதலால் தலைவி ஊடல் நீங்குவாள்.நண்பர்களுக்கும் நட்பின்றிப் புதிதாக வந்தவர்க்கும் தம்மிடம் உள்ள சிறிதளவு உணவாக இருந்தாலும் உணவைப் பகுத்துக் கொடுத்து உண்ணுதலே சிறந்ததாகும் அவ்வாறு இல்லாமல் வாயிற்கதவை அடைத்துக் கொண்டு சமைத்த உணவை தாம் மட்டும் உண்டு வாழ்கின்ற பயனில்லாத மக்களுக்கு மேலுலகக் கதவு மூடப்படும்                               


                            4
                  நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
                  அட்டது பாத்துண்டேல் அட்டுண்டல்—அட்டது
                  அடைத்திருத் துண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
             அடைக்குமாம் ஆண்டைக் கதவு   (நாலடிஈயாமை2 )
நாலடியார் கூறுகிறது இதனையே   வந்த விருந்தினரை வரவேற்று நல்ல விருந்தளித்து இனிமேல் வரும் விருந்தினரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பவனை வானுலகத்திலுள்ள தேவர்கள் நல்ல விருந்தினனாக ஏற்றுக் கொள்ளக் காத்திருப்பர்  என்று  
             செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
            நல்விருந்து வானத் தவர்க்கு  ( குறள்86 )
 என்ற திருக்குறள் கூறுகிறது.அத்துடன்
             வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
             வாழ்நாள் வழியடைக்கும் கல் (குறள்86)என்றும் கூறுகிறது.
தாளாற்றித் தந்த பொருளை விருந்தினருக்கு ஈந்து,அற்றார் அழிபசி தீர்த்து, உணவைப் பகுத்துண்டால் இசையென்னும் எச்சம்பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் என்பது உறுதி.எனவே விருந்தோம்பலே சிறந்த அறமாகும்.

விருந்தோம்பலுக்கு உரியவர் இல்வாழ்வானே: விருந்தோம்பல் இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லா வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. இல்லறத்தார் பேணவேண்டிய ஐவருள் ஒருசாரார் விருந்தினர்..இதைத்    திருக்குறள் சிறப்பாக எடுத்துரைக்கிறது 
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு                                      ஐம்புலத்தாறு ஓம்பல் தலை(குறள்43).என்பது குறள் இதில் தென்புலத்தார் தெய்வம் என்ற இரண்டும் கண்ணுக்குப் புலன் ஆகாதோர் ஆவர். ஒக்கலும் தானும் தமக்குத் தெரிந்தவர்களே விருந்து என்பது தனக்கு அறிமுகமில்லா ஒருவருக்குச் செய்யும் அறமே சிறந்தது என உணர்த்தவே நடுவில் வைத்ததாக பரிமேலழகர் உரைப்பார் அகநானூற்றில் பெருந்தேவனார் பாடிய பாலைத்திணைப் பாடல் விருந்தோம்பலைஇல்வாழ்க்கைத் தொழில்என்றே சுட்டுகின்றது. அச்செய்யுள்                    
     நாளும் மனைமுதல் வினையொடும் உவப்ப,
              நினை - மாண்நெஞ்சம் நீங்குதல் மறந்தே(அகம்.51
             விருந்து புறந்தருதலுஞ் சுற்றம் ஓம்பலும்
             பிறவு மனை கிழவோன் மாண்புகள் (தொல். 3:150)
என்றுதொல்காப்பியமும் மனைவிக்குரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது..


                              5
விருந்தில்லா வீடு வீழல் ,மருந்தேயாயினும் விருந்தோடுஉண், வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்ற முதுமொழிகள் விருந்தின் சிறப்பை உணர்த்துவனவாகும். அதன்படி பண்டைத் தமிழர்.தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காராகிய விருந்தினரைப் போற்றிப் பேணி உதவி செய்யவே எனக்கருதினர்.திருவள்ளுவரும்                                                             
     இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
      வேளாண்மை செய்தற் பொருட்டு(குறள்81) என்னும் குறள்மூலம் விளக்குகிறார்.உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் என்பதற்கு ஏற்ப
பழிக்கு அஞ்சி விருந்தினருக்கு உணவை பகுத்துக் கொடுத்து உண்பவனுடைய பரம்பரை எக்காலத்திலும் மறைவதில்லை.என்பதை
       பழியஞ்சி பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
       வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (குறள்44) என்று குறள் கூறுகிறது
       பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’நூலோர்
      தொகுத்தவற்றில் எல்லாம் தலை என்றும் இயம்புகிறது.
விருந்தினர் புறத்தில் இருக்க தான் மட்டும் உண்ணுதல் முறையற்ற செயலாகும்  என்று கருதினர்..
    இந்திரர் அமிழ்தம் இயைவதா யினும்
     இனிதெனத் தமியர் உண்டலும் இலரே (புறம்182)-என்கிறது புறம் இதை
         விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
        மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (குறள்82) என்று குறள் கூறுகிறது.விழுப்புண் படா வீரன் வருந்துவது போல விருந்தினர் தம்வீட்டுக்கு   விருந்தினர் வரவில்லையெனில் வருந்துவர்     
 அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
       முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் (நற். 142) என்னும் பாடல் இரவு நேரமாக இருந்தாலும் விருந்தினர் வந்தால் உவக்கும் என்பது.  விருந்தோம்புவது மனையறத்தின் மாண்புடைய நோக்கம் என்பதை உணர்த்துகிறது.
பண்டைத்தமிழர் முகம் மகிழ்ந்து தகுதியுடைய விருந்தினரைப் பேணிப் போற்றுபவனுடைய இல்லத்தில் செல்வமாகிய திருமகள் மனமகிழ்ச்சியுடன் உறைவாள் என்று எண்ணினர் இதையே தெய்வநூல்
      அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
      நல்வருந்து ஓம்புவான் இல்(குறள்84) என்று
      வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
      பருவந்து பாழ்படுதல் இன்று (குறள்83) என்றும் கூறுகிறது.
    

                        6
       ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
      ஊதியம் இல்லை உயிர்க்கு என்னும் குறள் விருந்தின் உயர்ந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் இல்லறத்தானை எண்ணும்போது வள்ளுவர் மிகுந்த சினம் கொண்டவராகிவிடுகின்றார். விருந்தோம்பாமல் இருத்தலை மடமை என்றும், விருந்து  பேணாதாரை மடையர்கள் என்றும் நேரடியாகவே கடுஞ்சொற்களால் சாடுகின்றார்.மன அளவில் வறுமையில் வாடுகிறார்கள் என்று சொன்னதோடு விட்டுவிடாமல் 'மடமை" என்றும் "மடவார்" என்றும் ஒரே குறளில் ஒன்றிற்கு இரண்டாகச் சொல் பயின்று விருந்தோம்பாமையின் அறிவுகெட்ட தன்மையை அவர் அழுத்திச் சொல்வது புலனாகும்.அக்குறள்
    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
     மடைமை மடவார்கண் உண்டு(குறள்89) என்பதாகும்.
  மனைவியோடும் காட்டிற்குச் செல்லாது வீட்டிலேயே இருந்து கொண்டு பொருள்களை தேடி வாழும் வாழ்க்கை எல்லாம் விருந்தினரைப் பேணி அவர்க்கு விருந்து அளிப்பதற்காகவே வேளாண்மை என்ற பண்பு இல்லை என்றால் இல்வாழ்க்கை தேவையில்லை. விருந்தினரைப் பேணாவிடில் இல்லறத்தில் இருத்தலும் பொருள் செய்தலும் அவற்றின் காரணமாக வரும் எண்ணங்களும் பயனில்லாமற் போகும். வந்த விருந்தினருக்கு எப்பாடு பட்டாவது சிறந்த உணவு வகைகளைச் சமைத்து உண்ணச் செய்து அவர்கள் மகிழ்ச்சியடையச் செய்வதே இலலறத்தான் கடமையாகும்.. விருந்தினர்களின் மனம் வருந்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். வீட்டின் திண்ணையில் விருந்தினன் இருக்க தான் மட்டுமே உண்ணாமல் பிறருக்கு உதவி செய்து வாழ்கின்றவனே சிறந்த இல்லறத்தான் ஆவான். பசியோடு வந்த விருந்தினர்  இருக்கையில் தனித்த உண்ணாமல் வீட்டுக்கு வந்த விருந்தினர் பேணுதலே சிறப்பு
           தாளாளன்  என்பான் கடன்படா வாழ்பவன்   
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் 
கேளாக வாழ்தல் இனிது   திரிகடுகம் பா--12               
என்று திரிகடுகம் கூறகிறது. இதே கருத்தை திருவள்ளுவரும் கூறுகிறார்
           விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
           மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று(குறள்82)                                 .
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லா தகுதி உடையவர்க்கு விருந்து செய்வதற்கே ஆகும் என்பதை
    

7
    தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (திருக்212)                                     
எனத் திருவள்ளுவர் கூறுகிறார் வறுமையிலேயே மிகக் கொடிய வறுமை வீடு தேடி வந்த விருந்தாளியை வரவேற்று விருந்தளிக்க முடியாமல் போவதேயாகும் இதனையே வள்ளுவர்
            இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
             வன்மை மடவார்ப் பொறை ( குறள்153)  என்கிறார். பெருங்குன்றூர்க்கிழார் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெறச் சென்ற போது எனக்கு எந்தக் குறையும் இல்லை என்றாலும் விருந்தினர் வந்தால் அவர்களை உபசரிப்பதற்குத் தேவையான செல்வம் இல்லாத வறுமைநிலை மட்டும் என்னிடம் இருக்கின்றது.அதனை மட்டும் தீர்த்து வைப்பாயாக என்று கூறுவதன் மூலம் விருந்தோம்பலின் சிறப்பு  வலியுறுத்தப் படுகின்றது
         விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை
          பொறிபுன ருடம்பிற் றோன்றியென்
              அறிவுகெட நின்றநல் கூர்மையே. (புறம்266)      என்ற பாடல் வரிகள் விருந்தோம்பலின் இன்றியமையாமையைக் கூறுகின்றதுஇதையே குறளும்
இனைத்துணைத்து என்பதொன் றில்லை விருந்தின்
      துணைத்துணை வேள்விப் பயன்(குறள்87) கூறுகிறது                      
விருந்தை ஓம்ப இணையராய் இருத்தல் வேண்டும்:                                 இல்லறத்தில் கணவனும் மனைவியும் இணைந்தே விருந்தை ஓம்பவேண்டும்.
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்                                                                            துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னைநும்
பெருமகள் தன்னொடும் பெரும் பெயர்த் தலைத்தாள்(சிலம்பு:16:71-74 ) என்று கண்ணகி வாய் மொழிமூலம் விருந்தினரைப் பேணக் கணவனும் மனைவியும் இணைந்தே இருத்தல் வேண்டும் என்று புலனாகிறது.  .
அதேபோல் கம்பர் இயற்றிய இராமாவதாரத்தில் இராமனைப் பிரிந்த சீதை விருந்தினர் வந்தால் அவர்களை ஓம்ப இயலா நிலையை எண்ணி இராமன் என்ன துன்பம் அடைவானோ எனச்சீதை வருந்துவதாக கம்பர் கூறுகிறார்     
அருந்து மெல்லடகு ஆரிட அருந்து மென்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்
மருந்தும் உண்டு கொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்         இருந்த மாநிலம் செல்லரித் திடவு மாண்டெ ழாதாள்"   (கம்பர்) என்கிறது.
மற்றோர் இடத்தில் சுக்ரீவனுடன் இராமன் விருந்துண்ணும் போது கேட்கிறான்.  




                 8
விருந்தும் ஆகிஅம் மெய்ம்மை அன்பினோடு 
  இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா
  "பொருந்து நன்மனைக்கு உரிய பூவையைப்
          பிரிந்துளாய் கொலோ நீயும் பின்" என்றான்.. என்னைப் போலவே  நீயும்  உன் மனைவியைப்   பிரிந்திருக்கிறாயா?" - என்று கேட்கிறான் இதன்மூலம்
 ஒருவரில்லாமல் ஒருவர் மட்டும் செய்யும் காரியமாகாது விருந்தோம்பல்.        
    நல்விருந்தோம்பலில் பெரும்பங்கு பெண்களுக்கே உண்டு
குடநீர் அட்டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
        மாதர் மனைமாட்சி யாள்  (நாலடி32) என்றுநாலடியார் கூறுகிறது சங்ககால மகளிரின் மனையற மாண்புகளில் முதன்மையானதாக விருந்தோம்பல்முன் வைக்கப்பட்டுள்ளது தொல்காப்பியமும் மனைவிக்குரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
      விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
      பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (தொல்கற்பியல்சூ.11)
      காமம் சான்ற கடைக்கோள் காலை
       ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
       அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
        சிறந்தது பயிற்றல் சிறந்ததன் பயனே(தொல்.கற்பு.51)
கற்பொழுக்கத்தின் பயன் பற்றி கூறும் தொல்காப்பியர் அறம்புரி சுற்றமொடு           
சிறந்தது பயிற்றல் என்று விருந்தோம்பும்பாங்கினை வலியுறுத்தியுள்ளார். 
விருந்து செய்வதற்கு முதற்காரணமாக இருப்பவர்கள் பெண்களே ஆவர்  அதை
       உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
            மடமை மடவார்க ணுண்டு. (குறள்89) என்று குறள் கூறுகிறது  
அகநானூற்றுப் பாடல்(அகம்384 :8-13 )அடிகள் தலைவன் உடன் அழைத்து வந்த தேர்ப்பாகனையும் விருந்தாக எண்ணி தலைவி விருந்தோம்பிய நிலையினைக் குறிப்பிடுகின்றன. கணவன் அழைத்துவரும் விருந்தினரை பாதுகாத்தலால்
கணவனுக்கு நல்ல நட்பினை உடையவள் ஆவாள் மனைவி என்று நல்விருந்தோம்பலின் நட்டாளாம் எனத்திரிகடுகம் கூறுகிறது. இதையே குறளும்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் என்றும்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை என்றும் கூறுகிறது.  


                          9
நல்ல குணமில்லாப் பெண்களும் விருந்தினர் இல்லாத வீடும் வீண் பயனற்றது என்கிறார் ஔவைப்பிராட்டி. மேலும், கணவன் மனைவி இணைந்து நிகழ்த்தும் தொழிலாக விருந்தோம்பல் கூறப்பட்டுள்ளது. விருந்தினரை உபசரிக்காத குடும்பத்துப் பெண்டிரைப் பற்றியும் ஔவைப்பிராட்டி பலஇடங்களில் சாடியுள்ளார்.வந்தவிருந்தினரை உபசரிக்காத மனைவியைப்  பெற்றவனைக் கூறாமல் சந்நியாசம் கொள் என்றும் நெருப்பினில் வீழ்ந்திடுதல் நேர் என்றும் கூறுகிறார்.   
விருந்தோம்பும் முறை:
     தம் இல்லத்திற்கு வந்த விருந்தினருக்கு எப்பாடு பட்டாவது சிறந்த உணவு வகைகளைச் சமைத்து உண்ணச் செய்து அவர்கள் மகிழ்ச்சியடையச் செய்வர். விருந்தினர்களின் மனம் வருந்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் விழுப்புண் படா வீரன் வருந்துவது போல விருந்தினர் தம்வீட்டுக்கு விருந்தினர் வரவில்லையெனில் வருந்துவர் விருந்து நேர்ந்த போதெல்லாம் வருகின்றவர்களை ஒக்கல்-சுற்றத்தார்கள் என்று  கூறுவர் விருந்தினர்களாக வருகின்ற மேலோர்களை விரும்பி வரவேற்பது மிக உயர்ந்த செயலாகும் அத்தகையோரைப் போற்றுவதெல்லாம் நமக்கு பெரிய நன்மைகளை, நாமே உண்டாக்கிக் கொள்வதாகும் விருந்தினர்களைப் போற்ற வேண்டுமென்று கூறுகின்ற ஆசிரியர் நிலத்திற்கு விதைக்கின்ற விதைநெல் வைத்திருந்தாலும் அதையும் கூட விருந்தினருக்கு உணவாக்கிப் போடத் தயங்க மாட்டான் என்ற முறையில் சிறப்பாக அமைத்து பெருமைப்படுத்திக் கூறுகிறார்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் (குறள்85) என்பதுகுறள்    
    கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி, உணவு மற்றும் திராட்சை ரசத்தை   அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்பார்.     என்கிறது கிரேக்க வரலாறு.
 தமிழகத்து வீடுகளின் வெளியில்திண்ணைகள் வைத்துக் கட்டினர். அத்திண்ணை வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்காகக் கட்டப்பட்டன. இரவில் உணவு உண்டு முடித்த பின்னர் படுக்கப் போவதற்கு முன்னர் திண்ணையில் யாராவது இருக்கின்றார்களா? என்று பார்த்துவிட்டு அவ்வாறிருந்தால் அவர்களுக்கு உணவிட்டு உபசரித்துவிட்டுப் படுக்கச் செல்வர்.இது நம் தமிழர் பண்பாட்டிலும் உண்டு


                       10
சான்றாக பொழுது கண்டு இரங்கிய நெய்தல் நிலத்தலைவி, தலைவன் வருகை நீட்டித்த வழி, தோழியிடம் உரையாடிய பாடலில், “பலர் புகும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை அடைப்பதற்கு முன்னம் வீட்டிற்குள் உணவருந்த வரவிருப்பவர் யாரும் உள்ளீர்களா? என்று அறிவிக்கும் வீடுகள்இருந்ததாகக் கூறுகின்றாள் அந்தக் குறுந்தொகைப்பாடல்
       புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
        நள்ளென வந்த நார்இல் மாலை,
        பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்,
       வருவீர் உளரோ?’ எனவும்,
        வாரார் தோழி நம் காதலரே. (குற.118)  இதையே நம் குறள்   
      வருவிருந்து வைகலும் ஓம்பவான் வாழ்க்கை
       பருவந்து பாழ்படுதல் இன்று(குறள்83)என்கிறது
அகஇலக்கியத்தில் எக்காலமும் விருந்திற்குஉகந்தகாலமாக குறிப்பிடப் பட்டுள்ளது.    அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
                 முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் (நற். 142) என்னும் பாடல் இரவு நேரமாக இருந்தாலும் விருந்தினர் வந்தால் உவக்கும் விருந்தோம்புவது மனையறத்தின் மாண்புடைய நோக்கம் என்பதை உணர்த்துகிறது
.பண்டைத்தமிழர் முகம் மகிழ்ந்து தகுதியுடைய விருந்தினரைப் பேணிப் போற்றுபவனுடைய இல்லத்தில் செல்வமாகிய திருமகள் மனமகிழ்ச்சியுடன் உறைவாள் என்று எண்ணினர் இதையே தெய்வநூல்
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்வருந்து ஓம்புவான் இல்(குறள்84) என்று  
.விருந்தோம்பலில் உபசரிக்கும் பாங்கே முதன்மையானது. “கன்று ஈன்ற பசு கன்றிடம் காட்டும் அன்பு போல விருந்துனரிடம் அன்பு காட்டி எலும்பே குளிரும்படியான இன்பால் நெகிழச் செய்ய வேண்டும்என்று பொருநராற்றுப்படை கூறுகிறது முகம் மலர்ந்து உபசரிக்கும் போது, விருந்துப்பொருள் உப்பில்லாத கூழாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும்
 ஓப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மை பேசி
உப்பில்லாத கூழிட்டாலும் உண்பதே அமுதமாகும்
முப்பழமொடு பாலன்னம் முகம் கருத்து ஈவாராயின்,
கப்பியபசியினோடு கடும்பசி ஆகுமன்றோ(விவேக சிந்தாமணி) என்கிறது.
விவேகசிந்தாமணி முகமலர்ச்சியுடன் தரும் பொருளின் தன்மை, முகம் கருத்து தரும் பொருளின் தன்மை என்று வேறுபடுத்திப் புலப்படுத்துகின்றது.


                    
                          11
சேறு நிறைந்த சாக்கடை நீரினுள் முளைத்த சிறுக் கீரையாயினும்  அதனை அன்போடு படைக்கும் போது சிறந்த அமிழ்தமாக இருக்கும். அன்பில்லாதார் தலை வாழை.இலையில்  சிறந்த முறையில் சமைக்கப்பட்ட வெண்மையான சோறு அறுசுவையோடு கூடியதாய் இருப்பினும் எட்டிக்காயைப் போன்று கசப்புடைய தாகும் இதனை நாலடியார்
                  கழுநீருட் காரட கேனும் ஒருவன்
            விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்—விழுமிய
            குய்த்துவையார் வெண்சோறே ஆயினும் மேவாதார்
            கைத்துண்டல் காஞ்சிரங் காய்  ( நாலடியார் 217 )       
தன்மீது சிறிதும் அன்பில்லாத உறவினர் வீட்டில் நமக்காகத் தனியாக விருந்து வைக்கின்றார்கள். விருந்தின் போது நால்வகையான உணவினை ஆறு சுவைகளோடு பரிமாறுகின்றார்கள் அதில் தனக்குப் பிரியமான கருணைக்கிழங்குப் பொரியலைப்  பரிமாறினாலும் அது அவனுக்கு வேப்பங்காய் போலவே கசக்கும். ஆனால் தன்மீது  அன்புடையவர்கள் பிரியமோடு கொடுக்கின்ற உப்பில்லாக் கூழேயானாலும் அது தேவர்கள் உண்ணும் இனிமையான அமிழ்தத்தைப்போன்றது  
            விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும்
               வெருக்குக்கண்  வெங்கருணை வேம்பாம்—விருப்புடை
               தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
  என்போ டியைந்த அமிழ்து. (நாலடி-104)
என்னும் நாலடிநானூறு சுற்றம்தழால் என்னும் அதிகாரத்தில் மிகச்சிறப்பாக எடுத்துக்கூறுகிறது திருவள்ளுவரும் விருந்தோம்பும் பான்மையை,
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து (குறள்.90)
அனிச்ச மலரினும் மெல்லியர் விருந்தினர். அவர்களை நோக்கும் தன்மையில் மென்மை வேண்டும். இன்முக வரவேற்பே விருந்தோம்பலில் முதன்மையானது என்கிறார். அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது;
விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் அனிச்ச மலர் மூக்கின் அருகில் வைத்து மோந்த போதுதான் வாடும் ஆனால் விருந்தினரோ கடுமையாகத் தூரத்திலிருந்தே பார்த்த போதே வாடுவர். மூக்கின் காற்றைவிட பார்வை மென்மையானது முகம் திரிந்து  நோக்கக்  குழையும்  விருந்து  என்று சொன்ன வள்ளுவர் ஒரு உளவியல் வல்லுனர் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்? விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்ற மகளிரை முல்லை சான்ற கற்பினள்என்று குறிப்பிடுகின்றது.


                      12
விருந்தோம்புவதற்குச் சில அடிப்படைத் தகுதிகள் வேண்டும் . அவை, இல்வாழ்வான் அன்புடையவனாக இருத்தல் வேண்டும். அதன் காரணமாகவே அன்பு உடைமைக்குப் பின் விருந்தோம்பல் பேசப்படுகிறது. விருந்தோம்பலுக்குப் பின்னும் சில அடிப்படைப் பண்புகளைக் கடைபிடித்தல் வேண்டும் எனத் திருக்குறளில் அதிகார தலைப்புகளாக வரையறுத்துள்ளார் அவை இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை அன்பு உடைமை  ஒழுக்கம் உடைமை அறிவு உடைமை,பண்பு உடைமைஎனவைத்தார்.  .
.முடிவுரை:  
இல்வாழ்க்கையிலிருந்து வாழ்பவன்  நோக்கம் பல அரிய செயல்களைக் கடமைகளாக மேற்கொண்டு செய்வதற்கே ஆகும். அவற்றுள் சிறப்பான தொன்று விருந்தோம்பல் இது துறவறம் மேற்கொண்டவர்களால் செய்யமுடியாது. விருந்தோம்பல் என்பது புதிதாக நம்வீட்டிற்கு  வந்தவர்களை மகிழ்ந்து போற்றி வரவேற்பது.. சிறந்த பெரியோர்கள் ஞானிகள் சான்றோர்கள் ஆகிய மேலோர்களை வரவேற்றுப் போற்றி உபசரிப்பதையே முதன்மையாக வைத்து விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் மற்றும் பல்வேறு இடங்களிலும் எடுத்தோதிய வள்ளுவத்தைப் போற்றுவோம் திருக்குறள் மனித குலத்திற்கே ஒளி வீசிகின்ற நிறைவான பேரறநூல்.மக்கள் சமுதாயம் பெருமை பெற்று வாழ்வதற்கு, ஒழுக்கத்தினைப் பற்பல இடங்களில் பல் வேறு முறைகளில் சுட்டிக்காட்டிகிறது. உண்டவர்களுக்கு இறவாத இன்பத்தை அளிப்பது அமிழ்தம் என்று கூறுவார்கள்..அதேபோல் கற்று உணர்ந்தவர்களுக்கு அழியா அமைதியையும்,அறிவினையும், இன்பத்தினையும் கொடுப்பது திருக்குறள். வேற்றுமைகளைப் பல்வேறு முறைகளில் உண்டாக்கிக் கொண்டிருக்கும் உலகியல் தன்மைகளில், ஒற்றுமையினை நிலைநிறுத்தி ஒன்று பட்டு வாழ்வதற்கு வழிவகுக்கும் நூல் திருக்குறள் நம் உள்ளத்தில் தோன்றுகின்ற  எண்ணங்கள் எல்லாம் உயர்ந்த எண்ணங்களாக இருக்கட்டும்.வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற கடமை உணர்ச்சி தோன்றி, புகழுடன் வாழ்வதே வள்ளுவப் பெருமானை நாம் போற்றும்நெறியாகும்.
          வாழ்க திருக்குறளாய்! வளர்க குறள்நெறியாய்! 
    தொல்காப்பியச் செம்மல்.புலவர்.ஆ,காளியப்பன்
    முத்தம்மாள்நிலையம்,79(1) பூலுவபட்டி(அஞ்)
     ஆலாந்துறை(வழி) கோவை 641101
     அலைபேசி 9788552993


No comments:

Post a Comment