Thursday 1 December 2016

இன்றைய இலக்கணம்

             இன்றைய இலக்கணம் 2-12-16
            முல்லைக்குரிய தெய்வம்
       மாயோன் மேய காடுறை உலகமும்—தொல்
      திருமால் முல்லைக்குரிய தெய்வம்
     மால் என்றால் வெண்மை தூய்மை என்று பொருள். காத்தல் கடவுள்
    மக்கள் தம் தலைவனை-அரசனை திருமாலாகவே கருதினர்.
காத்தல் என்பது தம் ஆனிரைகளையும்,தம்மையும் மழை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து காத்தல்.கண்ணனே முல்லை நிலத்தெய்வம் ஆகையால் அவனை
இடையன்  என்றனர்.காடும் காடுசார்ந்த நிலம் முல்லை எனப்படும் காடு என்பது  மலையிலிருந்து வயல்வெளிகள் வரை பரந்துள்ள நிலப்பரப்பு.ஆகவே இந்நிலத்தைக் குறிஞ்சி நிலமக்களும் ,மருதநில மக்களும் பயன் படுத்துவர்.உழவுத் தொழில் செய்ய முடியாத குறிஞ்சி நிலத்திற்கும், உழவுத்தொழிலே நிரம்பிய மருத்திற்கும் இடைப்பட்ட நிலத்தை முல்லை என்றனர். அங்கு வாழ்ந்த மக்களை இடையர் என்றனர்.
           மருத நிலத்திற்குரிய தெய்வம்
        வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வேந்தன்என்பது இந்திரனைக் குறிக்கும். வயலும் வயல்சார்ந்த இடமும் மருதம்ஆகும்.
குறிஞ்சியில்அருவியாய்த் தோன்றி முல்லையில் காட்டாறாய் ஓடிய ஓடை மருதத்தில் அகன்று விரிந்து பேராறாக ஓடிகிறது. குளம்,குட்டைகளை நிரப்புகிறது. மேலும் வீடுகள் தோறும் மனைக் கிணறுகளும் இருந்தன.அதனால் உழவுத்தொழில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.உணவுப் பஞ்சம் இன்றி மனநிறைவுடன் மக்களும் வாழ்ந்தனர். ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைத்ததால் விழாக்கள் நடைபெற்றன. எனவே இன்பம் நுகரும் இந்திரனே மருத நிலத்தெய்வம் ஆனான்.
                  நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம்
           வருணன் மேய பெருமணல் உலகமும்
வருணன் இடிமின்னலுக்கு உரிய தெய்வம். பெருமணல் என்பது இங்கு கடலும் கடல் சார்ந்த பகுதியைக் குறிக்கிறது.ஆனால் சிலர் மணலும் மணல்சார்ந்த நிலம் பாலை எனத் தவறாகக் குறித்துள்ளனர். பெருமணல் என்பது மணல் நிரம்பி கடற்கரையையே குறிக்கும்.தமிழ்நாட்டில் பாலை என்ற ஒருதனி நிலம் இல்லை.அதுபற்றி பிறகு பார்ப்போம். உயிரை ஒருபொருட்டாக நினையாது உள்நாட்டு மக்கள் உணவுப் பஞ்சத்தைப்போக்கப் பாடுபடும் மீனவனைப்போற்றுவோம். இடியுடன் கூடியமழை வரும் போது நடுக்கடலில் எங்கே செல்லுவான்.எனவே அவனது தெய்வம் இடிமழைக்கு முதல்வனான வருணன் நெய்தல் நிலத்தெய்வம் ஆனான்.
பாலை நிலத்திற்குரிய தெய்வம்
பாலை என்றவுடன் சகாரா,தார் போன்ற பாலை வனங்களை நினைத்துக்  கொண்டு,மணல் நிரம்பிய பகுதி என்றும் அங்கு ஒட்டகம் இருக்கும் என்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது.
 தமிழ் நாட்டில் பாலை என்பது முல்லை நிலமோ,குறிஞ்சி நிலமோ மழையின்றி வரண்டு போனால் மரம் மட்டைகள் வரண்டு,விலங்குகள் உணவின்றி வலிமையின்றித் திரியும்.  சிலப்பதிகாரமும்,பாலை உண்டாகும் முறையைக் கூறுகிறது.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்று கூறுகிறது.

அங்குள்ள மக்கள் குறிஞ்சி மற்றும் முல்லை நிலமக்களே இருப்பர். அவர்களே வறுமை காரணமாக ஆறலைக் கள்ளவர்களாக மாறிடுவர். அம்பும், வில்லும் கைக்கொண்டு திரிவதால் எயினர் எனப்பட்டனர்.எயில் என்றால் அம்பு என்று பொருள்.
எனவே இவர்களது தெய்வம் கொற்றவையாக அதாவது காளியாகத் தானே இருக்க முடியும் .பதிவு புலவர்.ஆ.காளியப்பன்



No comments:

Post a Comment