Thursday 13 July 2023

கலைத்துறையில் கலைஞர்

 

இலக்கியத்துறையில் கலைஞர்

தொன்மைமிகு காப்பியத்தைப் பாமரரும் அறிந்திடவே

என்னைப் பணித்த இராமசாமி அடிகளாரின்

தாள்போற்றி! ஞாயிற்றின் சீர்செப்பும் மின்மினியாய்

ஆழ்கடல் புகழுரைக்கும் குட்டையே நானாவேன்

அரசியல் கோடைக்கு அணிநிழல் தேடியே                

உரைசால் இலக்கியத்தில் ஒதுங்கி நின்றவரே!       

சங்கத் தமிழ்க்கடலில் மூழ்கித் திளைத்தவரே!         

பொங்கும் குளிர்வனமாம் தொல்காப்பியப் பூங்காவில்

சொல்லெழுத்து பூவாலே சொன்மாலை தொடுத்தவரே!

கல்லிலும் சொல்லிலும் வள்ளுவரை வடித்தவரே!.(வள்ளுவர்கோட்டம் குறளோவியம்)

மனுநீதிச் சோழனுக்கும் மாதரசிக் கண்ணகிக்கும்

பனுவல்  பலதந்த இளங்கோ கம்பனுக்கும்

மேன்மைகொள் தமிழ்வளர்த்த மேனாட்டு அறிஞர்க்கும்

சிலையெடுத்துக் கலைவளர்த்த சிந்தனைச் சிற்பியே!

மலையின் திண்மையும் மலரின் மென்மையும்

ஆணவம் இன்மையும் அத்தனையும் பெற்றவரே!

மாணவ நேசந்தான் முரசொலின் ஆனதென்பார்

மாநிலத்து முதலமைச்சர் மானந்தான் காத்தவரே!(விடுதலைநாளில் முதலமைச்சர்கள் கொடியேற்ற உரிமை)

மாநில நலனுக்கு மாளாது உழைத்தவரே!

அஞ்சுகத்தின் அருமருந்தே! அஞ்செழுத்தின் அடியவரே!(அண்ணாதுரை)

நெஞ்சுக்கு நீதிசொல்லும் ஈரோட்டுப்  போர்வாளே!

பெற்றெடுத்த தன்மகனைத் தளபதியாய்க் காட்டிவிட்டு 

இற்றைக்கு விண்ணுலகில் என்னதான் செய்கின்றீர்?

கூற்றுவன் உன்னுயிரை கூத்தாடிப் பெற்றானா?

நாற்றங்கால் பயிராக நாங்கள் வாடுகிறோம்

தொல்காப்பிய நெறியில் தமிழரும் வாழ்ந்திட 

நல்லபடி எங்களுக்கு நல்லாசி தருவாயே!

No comments:

Post a Comment