Monday 20 June 2022

தொல்காப்பியர் கூறும் கற்பு

 

                 தொல்காப்பியர் கூறும் கற்பு 

     கற்பு என்பதற்குக் கழக அகராதி கல்வி, நீதிநறி, மகளிர் நிறை, மதிலுள்மேடை, மதில், முல்லைக் கொடி, முறைமை, விதி எனப்பல பொருள்களை உரைக்கிறது   

களவுக் கூட்டத்திற்குப்பின் தலைவன் தலைவியை முறைப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கத்தையே  கற்பு எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

 . கற்பு என்பது ஒரு நடைமுறை விழுமியம்.அன்றாட வாழ்க்கையில் செயல் படுத்தப்படும் ஒரு வாழ்க்கைநோக்கு அது. ஒழுக்கம் என்ற ஒட்டுமொத்த வரையறைக்குள் வரக்கூடியது.  குடும்பம்செயல்படுவதற்குச் சாதகமாக இருப்பவை எல்லாமேகற்புதான் என்றே நம்முடைய முன்னோர் கண்டிருக்கிறார்கள் .கற்பொழுக்கம் இல்லை எனில் நன்மக்களைப் பெறுதல் இயலாது. ஆதி மனிதன் கற்பை மாந்தீரிகச் சொல்லாகக் கருதினான் நாகரிக மக்கள் சிறந்த அறமாகக் கருதினர்.

  கற்பு என்ற சொல் பழங்கால நூல்களில் பாலியல் ஒழுக்கம்என்ற பொருளிலோபெண்ணுக்கான குலக் கட்டுப்பாடுஎன்ற பொருளிலோ பயன்படுத்தப்பட்டதில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்

கற்பு என்ற சொல்லைக் கல்+பு எனப் பிரித்தால் கல் என்பது பகுதியாகும் கல் என்பதற்குக் கற்றல், தோண்டுதல், கல் என்ற மூன்று பொருள்கள் உள்ளன கற்றலாவது வாழ்வுக்கு உரிய கலைகளைக் கற்றல்,, தோண்டுவது உள்ளத்து உணர்வுகளைப் பண்பட்ட நிலையில் வெளிக்கொணர்தல், கல்லாவதுஊசலாடஉறுதிநிலை.கற்பு என்றால்கற்பிக்கப்படுவது அல்லது கல்வி என்று நேரடிப் பொருள்.. கற்பு என்ற சொல் கல்வி என்பதுடன் சம்பந்தப்பட்டது. பலநூல்களில் கற்பு என்பது கல்வி என்றே சொல்லப்பட்டுள்ளது. எழுதாக் கற்புகொண்டது வேதம் என்று சங்கப்பாடல் சொல்லும் போது அங்கே குறிப்பிடப்படுவது கல்வியையே. இதன்பொருள் எழுத்து வடிவம் இல்லாத மொழி என்பதாகும்                                      அமண்சமணர் கற்பழிக்க திருவுளமேஎன சம்பந்தர் பாடுவது சமணர்களின் நூற்கல்வியை  வெல்வது  பற்றித்தான் கற்பு என்பதற்கு பெரிய திருமொழியில் திருமலைமன்னர்

ஆழி யேந்திய கையனை அந்தணர்

கற்பினை கழுநீர் வளரும் வயல்

கண்ண மங்கையுள் கொண்டேனே. இங்கு அந்தணர் கற்பு என்பது அந்தணர் கல்வி என்ற பொருளிலேயே வருகிறது. சங்க காலத்தில். கற்பு என்பது நூல்வழியும் சமூக மரபுப்படியும் கற்கப்பட்டதுஎன்ற பொருளிலேயே கற்பு என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது

கற்பினுட் பிரிந்தோன் பரத்தையின் மறத்தந்து

அப்பொருட் படுப்பினும் வரைநிலை இன்றே (இறையனார் அகப்பொருள் 44)

இங்கு கற்பு என்பது பூப்பு என்னும் பொருளில் வந்துள்ளது.

அருங்கடிக் காப்பின் அஞ்சுவரு மூதூர்  

திருநகர் அடங்கிய மாசில் கற்பின்   இல்வரை கடவாத கற்பு  திட்பத்தைக் குறிக்கிறது

கற்பு என்பது தெய்வத்தன்மை பொருந்தியது என்பதை

கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு(அகம்184)

கடவுள் கற்பின் மடவோள்  கூற(அகம்114) என்ற தொடர்களால் அறியலாம்

ஔவையாரும் கற்பெனப்படுவது சொற்திறம்பாமை என்பது  சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதே கற்பு என்கிறார். கற்புக்குச் சொன்ன சொல் மாறாமை என்கிறார் மு.வ

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

செயிர் தீர்காட்சிக் கற்புச் சிறந்தன்று (தொல்1059) இதில் கற்பாவது இருமுதுகுரவரும் கற்பித்த ஒழுக்கம்- நச்சினார்க்கினியர்

கற்பெனப்படுவது உயரிய ஒழுக்கம் பிறர் நெஞ்சம் புகாமை -இளம்பூரணனர்

நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணையாக
என்னோடு போந்து (சிலம்பு)

நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி (சிலம்பு)

கற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்என்று கூறக் காண்கிறோம். இவள் தெய்வம் ஆவதற்கு வேண்டிய தகுதிகள் உள்ளன என்று கோடிட்டுக் காட்டுகிறார்.

தையல் தன் கற்பும், தன்தகவும் தம்பியும்
மையறு கருணையும், உணர்வும் வாய்மையும் (கம்பர்)

வறன்ஓடின் வையகத்து வான்தரும் கற்பினள் (பாலைக்கலி 16-20) என்றெல்லாம் தமிழ் இலக்கியங்கள் கற்பைப் பற்றிப் பேசுகின்றன.

காதலனும் காதலியும் ஒரிடத்தில் சந்தித்துக் கலந்து இன்பம் துய்க்கின்றனர். இதனைக் களவு என்றும்.. இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள் பிறகு, பல்லோரறிய மணந்து கொள்வர். இதனைக் கற்பு என்று கூறுவர் .இதில் ஏமாற்றுத் தனங்கள் தோன்றின .                                                             பொய்யும் வழுவும்தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்பன(தொல்1091) ஆண் பெண் இருவரும் காதலுக்குப்  பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கினையே  கற்பு என்கின்றனர். தொல்காப்பியர் .

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதே(பொருள் 140)

 கற்பு என்பது தான் இல்லறவொழுக்க மாகும்.அதை

மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே (தொல்.செய்யுளியல் 179)

என்று குறிப்பிடுகின்றார். பெண்ணின் பெற்றோர் தம் பெண்ணைக் கொடுக்க, ஆணின் பெற்றோர் அவளைப் பெற்றுக்கொள்வர்  பெண்ணைத் தரவேண்டியவர்கள் திருமணம் செய்து தராமல் காதலி காதலனுடன் சென்று வாழும் வாழ்க்கைச் சடங்கு முறையும் கற்பு எனப்படும். கற்பு என்பது- இல்லற ஒழுக்கம் அதாவது களவொழுக்கம் ஒழுகி மணம் செய்து கொண்டோர் கூடியும் ஊடியும் வாழ்வதே கற்பெனப்படும் அவ்வொழுக்கத்தின் பாற்படும் மன உறுதியே கற்பெனப்படும்.

கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்(குறள்54) என்று குறளும் கூறும்.

தொல்காப்பியத்தில் கற்புஎன்று வரும் இடங்களை யெல்லாம் ஆராயின் அது இல்லறம்" என்ற பொருளையே குறித்தல் அறியலாம் அவர் களவியல்   வகுத்தது போலவே  கற்பியல் என்பதையும்  வகுத்துள்ளார். திருவள்ளுவரும் களவியலுக்குப் பின் கற்பியல் வைத்துள்ளார். இறையனார் களவியலும் அவ்வாறே வைத்துள்ளது. வாழ்க்கையில் கற்பு நெறிக் காலத்துள் என்னென்ன நிகழும் என்று தொல்காப்பியம் தொகுத்துக் கூறுகிறது ,

திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்றபல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது மனிதனால் மனிதசமுதாயத்தின்நலன் கருதிபடைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஓர் உலகளாவிய பொதுமையாக  உள்ளது. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும்.கற்பு களவொழுக்கத்தின் கனி என்பதும், அன்பின் வெற்றி என்பதும் பெறப்படுகின்றது.

சங்க கால மகளிர் வாழ்வில் கற்புநெறி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், கணவன் இறந்தவுடன் மனைவி தேர்ந்தெடுக்கும் வாழ்வு முறை அல்லது வாழ்வை இழக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டே அவளுடைய கற்பொழுக்கம் அடையாளம் காணப்பட்டது. அதனைக் கொண்டே அவளின் கற்பு நெறி சோதிக்கப்பட்டது. அவ்வகையில் கணவனை இழந்த பெண்ணின் தேர்வுக்காக மூன்று வகையான கற்பு நெறிகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டன.
1. தலைக்கற்பு கணவன் இறந்தவுடனேயே தன்னுடலில் உயிர் தங்காது உடனுயிர் மாய்தல் 2 இடைக்கற்பு கணவன் இறந்ததும் சான்றோர் முன்னிலையில் அவனுடைய ஆமத்தீயில் விழுந்து உயிர் விடுதல் 3.கடைக்கற்பு கணவன் மறைவிற்குப்பின் உலகில் இன்பங்களைத் துறந்து கைம்மை நோம்பு நோற்றல்

 தொடக்கக் காலத்தில், ஓர் ஆணும் பெண்ணும் திருமணமாகி ஒருவரை யொருவர் புரிந்து கொண்டு, இல்லறம் என்ற நல்லறம் பயிலுதலைக் கூற வந்த கற்பு என்ற சொல், பிற்காலத்தில், பெண்ணைச் சார்த்தியே பேசப்பட்டு, அவளுடைய பதிவிரதா தன்மையும், ‘பொறுமையும்(முல்லைத்திணை ஒழுக்கமாகிய இருத்தல் என்ற பண்பு) குறிக்க வந்த சொல்லாக மாறிவிட்டது

இக்காலத்தில் கற்பு என்று கூறுவது திருமணமாகாத பெண் ஆண் உடலுறவு கொள்ளாதிருக்கும் கன்னித் தன்மையையும் திருமணம் ஆன பெண் கணவன் ஒருவனோடு மட்டும் உடலுறவு கொள்ளும் பழக்கத்தையும் நடைமுறையில் உள்ளது.    

ஔவையாரும் கற்பென்பது ஒருவனைப்பற்றி ஓர் அகத்திரு (கொன்றைவேந்தன்) என்கிறார். உலகில் எல்லாச் சமயங்களும்  கற்பினைப் போற்றுகின்றன.

இசுலாம் மதத்தில் கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இசுலாம் மதச்சட்டப்படி திருமணத்திற்கு முன் கற்பிழந்த பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்

கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தவரை கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கடவுள் மனிதருக்குத் தந்த பத்துக்கட்டளைகளில் ஏழாவது கட்டளை விபச்சாரம் செய்யாதே என்றும் ஒன்பதாவது கட்டளையில் பிறர் மனைவியைக் கவர்ந்திட விரும்பாதே என்றும் கட்டளையிடுகின்றன.  

எனவே கற்பு என்பதைப் பெண்களுக்குரியது என்றும் அஃது அவர்கள் இடம் மட்டுமே உள்ளது என்றும், அது பெண்ணின் கன்னித்தன்மை சார்ந்த செய்தியாகக் கொள்ளக்கூடாது. அதனால்தான் பாரதி கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்குவோம்,என்றார்

நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகொண்டு தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரமான பெண்ணே கற்புள்ளவள். கற்பு என்பது அந்த நெறியைக் கற்றுக்கொள்வது மட்டும்தான்

  கற்பு என்பதற்குக் கல்வி என்று பொருள் கொண்டு பெண்களைக் கல்வி அறிவுடையவர்கள் ஆக்குவோம். கற்பு என்பதற்கு இல்லறவொழுக்கம் எனப்பொருள் கொண்டு வீட்டின்கண் மனையறம் புரிதலைப் பெண்களும், வினையறம் புரிதலை ஆடவரும் மேற்கொண்டு இல்லறம் சிறக்க வாழ்வோமாக. பதிவு தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமத்தலைவர் புலவர் ஆ.காளியப்பன் 9788552993

 

 

No comments:

Post a Comment