Wednesday 8 June 2022

கள் விகுதி வரும் இடங்கள்

 

              விகுதி – கள் தரு மயக்கம்

 தலைப்பே விகுதிகள் தரும் மயக்கமா?  விகுதியாக வரும் கள் தரும் மயக்கமா? என்று மயக்கம் தருவது போல் உள்ளது. ஈண்டு விகுதியாக வரும் கள் தரும் மயக்கம் என்பதை எடுத்துக்கொள்வோம்.

   முற்காலத்தில்  பல விகுதிகள் பன்மையைச் சுட்டும் விகுதிகளாகப் பயன்பட்டு வந்தன. (அர், ஆர், ஓர், இர், ஈர், அர்கள், ஆர்கள், ஓர்கள் அ ஆ வ).

தொல்காப்பியத்தில்

உயர் திணைக்கு 'அர்' போன்ற விகுதிகள் பன்மையை உணர்த்தின.

ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்

மாரைக் கிளவியும் உளப்பட மூன்றும்

நேரத் தோன்றும் பலரறி சொல்லே (தொல்காப்பியம்490)
சான்று: உழைத்தனர், என்ப, தம்பிமார்.
  

அஃறிணைக்கு

 அ ஆ வ என வரூஉம் இறுதி அப்பால் மூன்றே பல அறிசொல்லே (தொல்492)

சான்று;  ஓடின, நடைபெறா, வருவ

   சங்க காலத்தில் உயர்திணையில் பலரைக் குறிக்கும் பெயர்ச் சொற்களில் அர்

என்னும் பன்மை விகுதி வழங்கியது.

சான்று: அவர், காதலர், சான்றோர், அரசர்.

காலப்போக்கில் சமய வளர்ச்சியால் ( சமணம் ) அர் என்ற பலர் பால்விகுதி மரியாதையைக் குறிக்கும் விகுதியாக மாறிப்போனது.

சான்று:  சமணர்

இருப்பினும் இங்கு நாம் பார்க்க இருப்பது 'கள்' எனும் பன்மை விகுதியைப் பற்றி மட்டும்தான்.

 

     தமிழில்  கள் என்ற சொல்லுக்குக் களைதல் ( நீக்குதல், பிடுங்குதல் ) என்று பல  பொருள்கள் உள்ளன. . களை , களவு , கள்வன் என்ற சொற்கள் கள் என்பதன் அடியாகப் பிறந்தவை. ஆனால் -கள்  என்பது பலவின்பால் விகுதியாகவும் பயன்பட்டது.  

ஒருமையைப் பன்மை ஆக்க 'கள்' சேர்ப்பது வழக்கம்.
இப்படிக் 'கள்' சேர்ப்பது தொல்காப்பியர் காலத்திலேயே (ஏன் அதற்கும் முன்னால் கூட) இருந்திருக்கிறது.
சங்ககாலத்திலும்  கள் என்னும் பன்மை விகுதி வழங்கியது
இயற்பெயர்ச் சொற்களைப் பன்மையாக்குவதற்கு, அச்சொற்களின் பின்
 கள் என்னும் விகுதி சேர்த்துக் கொள்ளும் இடமும் உண்டு என்கிறார் தொல்காப்பியர்.
'கள்ளொடு சிவணும் அவ்இயற் பெயரே
கொள்வழி உடைய பலஅறி சொற்கே'
    (தொல்.654).
செடி - ஒருமை ; செடிகள் – பன்மை

    அவர் காலத்தில் அஃறிணைப் பொருள்களுக்கு மட்டுமே இப்படி வரும்.
மேல் குறிப்பிட்ட நூற்பாவில்,
 தொல்காப்பியர், ‘கள் விகுதி சேர்த்துக் கொள்ளும் இடமும் உண்டுஎன்று கூறியிருப்பதை உணர்க.!
அவர் காலத்தில்
 கள் விகுதி சேர்க்காமலும் அஃறிணைப் பன்மை உணர்த்தப்பட்டது என்பதைக்  குறிப்பால்  அவர்  உணர்த்துகிறார் .
கள்
 விகுதியோடு வாராத அஃறிணை இயற்பெயர்கள், அவை கொண்டு முடியும் வினைகளை வைத்து ஒருமை, பன்மை தெரியப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

    தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
    ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே             (தொல்.656)

சான்று:     ஆ வந்தது (ஒருமை)

ஆ வந்தன (பன்மை)  

      இந்தக் கள் விகுதி அஃறிணைப் பலவின்பால் இயற்பெயர்க்கு வரும் என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் என்று உரைவிளக்கம் தருகின்றனர். ஆகத் தொல்காப்பியர் காலத்திலேயே  கள் விகுதி இருந்துள்ளது.                           திருவள்ளுவரும் கள் விகுதியைப் பயன் படுத்துகிறார்  கீழ்க்கண்ட குறள்களைக் காண்போம் :

   வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

      பூரியர்கள் ஆழும் அளறு  குறள் 919

     

   அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

      அவாஉண்டேல் உண்டாம் சிறிது குறள் 1075

 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும் 271

 

மாக்கள் 329,420 இடும்பைகள் 347 துன்பங்கள் 1045 வாய்ச்சொற்கள்1100

     ஆக இந்த எட்டு  குறள்களிலும் கள் விகுதி வந்துள்ளது.

அந்தக் கால முறைப்படி உயர்திணைச் சொற்களுக்குக் கள் விகுதி வராது. அஃறிணைச் சொற்களுக்கு மட்டும்தாம் கள் விகுதி வரும். அந்த வகையில் பூரியர்கள், கீழ்கள் ஆகிய சொற்கள் உயர்திணையாகிய மக்களைச் சுட்டுகின்றன. ஆனால் வள்ளுவர் ஏன் உயர்திணையில் கள் விகுதியைச் சேர்த்தார் என்ற கேள்வி எழுகிறது?  அவர்கள் மக்கள் என்றாலும் அவர்களிடத்தில் உயர்பண்புகள் இல்லாமையால் அஃறிணையாக உணர்த்திக் கள்விகுதியைச் சேர்த்து எழுதி உள்ளார் என்பது அறியலாம்.

    தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய     சங்க இலக்கியங்களில், அஃறிணைப் பன்மை உணர்த்தும் முறையில் கள் விகுதி சேராமலும் சேர்ந்தும் வருகின்ற இருநிலைகளையும் காணலாம்.

சான்று: கள் விகுதி சேராமல் வந்தமைக்குச் சான்று 

1 'காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே (குறுந்தொகை.44 : 1)
 கலுழ்ந்தன கண்ணே     (நற்றிணை.12 : 10)
 நெகிழ்ந்தன வளையே (நற்றிணை.26 : 1). இங்குக் காலே, கண்ணே என்ற சொற்கள் பன்மை, அவற்றின் வினைகள் பன்மையாக இருப்பதால்.இவ்வாறு பன்மை உணர்த்தும் முறையே சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.

     அஃறிணை ஒருமைப் பெயர்ச்சொற்களோடு கள் விகுதியைச் சேர்த்துப் பன்மையாக்கும் முறையும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.                   சான்று:                                                                                        மயில்கள்     (ஐங்குறுநூறு.29
    கண்களும் கண்களோ (கலித்தொகை.39: 42)
    அரண்கள்     (பதிற்றுப்பத்து.44: 13)
    சொற்கள்     (கலித்தொகை.81: 13)
    தொழில்கள்     (கலித்தெகை.141: 4)                                                           மயில்கள், கொண்டல்கள், வண்டுகள்' (கம்ப.பாலகாண்டம் - நாட்டுப் படலம்-36).        

   காலப்போக்கில் இச்சொற்கள் பலரைக் குறிக்க வழங்குவதோடு அல்லாமல், உயர்வு காரணமாக ஒருவரை மட்டும் குறிக்கவும் வழங்கலாயின. சங்க இலக்கியங்களில் இத்தகு வழக்குகளைக் காணலாம்.                                    சான்று:

    யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே     (குறுந்தொகை.75 : 5)

    சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே  (குறுந்தொகை.102 : 4)

    கண்ணீர் அருவி ஆக
    அழுமே தோழி அவர் பழமுதிர் குன்றே  (நற்றிணை-88 : 8-9)

    இங்கே காதலர், சான்றோர், அவர் என்ற சொற்கள் பலரைக் குறிக்காமல் ஒருவரை (தலைவனை) மட்டும் குறிக்கும் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்கின. இவ்வாறு அர் என்னும் உயர்திணைப் பன்மை விகுதி ஒருவரை மட்டும் உணர்த்தவே, பலரை உணர்த்த அர் + என்னும் அவ்விகுதி மட்டும்
போதவில்லை. எனவே அர் என்பதோடு கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியையும் சேர்த்து அர்கள் என்னும் இரட்டைப் பன்மை  விகுதி உருவாக்கப்பட்டது. அர்கள் என்ற இரட்டைப் பன்மை விகுதி கொண்டு உயர்திணையை உணர்த்துதல் முதன்முதலில், சங்க காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய கலித்தொகையில் காணப்படுகிறது.                                              சான்று:                                                                                   
 உலகு ஏத்தும் அரசர்கள் (கலித்தொகை.25) இடைக்காலம்                                                                         இடைக்காலத் தமிழில் கள் விகுதியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. சங்க காலத்தில் இருநிலைகளில் பயன்படுத்தப் பட்ட கள் விகுதி, இடைக்காலத்தில் ஐந்துவகை நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.                                                                         1) அஃறிணைப் பன்மை உணர்த்தும் விகுதியாக வழங்குகிறது

சான்று:

    உயிர்கள்     (சிலப்பதிகாரம்.10 : 175)
    மீன்கள்     (மணிமேகலை.29 : 118)
    யானைகள்     (கம்பராமாயணம்.7318:3)

    2) உயர்திணைப் பன்மைக்கு உரிய அர் விகுதியுடன் சேர்ந்து, அர்கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதியாக அமைந்து உயர்திணைப் பன்மையை உணர்த்த வழங்குகிறது.                                                        சான்று:

    தேவர்கள்     (திவ்வியப் பிரபந்தம்.3775 : 2)
    அசுரர்கள்     (திவ்வியப் பிரபந்தம்.3779 : 3)
    தொண்டர்கள் (பெரியபுராணம்.1608 

இவ்விரு நிலைகளும் சங்ககாலத்தில் வழங்கி வந்தவை. இனிக் காணப்படும் மூன்று நிலைகளும் இடைக்காலத்தில் வழங்கி வந்தவை ஆகும்.

 3) உயர்திணைப் பன்மை உணர்த்தும் விகுதியாக வழங்குகிறது.

சான்று:

    இரட்டையம் பெண்கள் இருவரும்
            (சிலப்பதிகாரம்.30 : 49)
    ஒன்பது செட்டிகள் உடல்என்பு இவைகாண்
             (மணிமேகலை.25 : 165)
    நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும்
             (கம்பராமாயணம்.6328 : 4)

4) கள் என்னும் பன்மை விகுதி, உயர்வு ஒருமைப் பெயர்களில் உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது.                                                          சான்று:                                                                                       சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்   (சிலப்பதிகாரம்.16: 18)

 இவ்வடியில் வரும் நோன்பிகள், அடிகள் ஆகிய சொற்கள் கோவலனைக் குறிக்கின்றன. இங்கே கள் விகுதி உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது.

    5) மூவிடப்பெயர்கள், சுட்டுப்பெயர்கள் ஆகிய பதிலிடு பெயர்களில் உள்ள பன்மை வடிவங்களில் சில உயர்வு ஒருமைப் பெயர்களாகவும் வழங்கின. எனவே பன்மை உணர்த்தவேண்டி அவற்றோடு கள் விகுதி சேர்த்துக் கூறப்பட்டது.

    யாம் + கள் = யாங்கள்
    நாம் + கள் = நாங்கள்
    நீர் + கள் = நீர்கள்
    நீயிர் + கள் = நீயிர்கள்
    தாம் + கள் = தாங்கள்
   அவர் + கள் = அவர்கள்                                                              சான்று:

    நீ போ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்
         (சிலப்பதிகாரம்.11 : 161)

    நாங்கள் உன் உடம்பதனில் வெப்பை
            (பெரியபுராணம்.2660 : 3)

    அன்னையர்காள் ! என்னைத் தேற்ற வேண்டா
    நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு?
         (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.3474)

    நூல் அவையார் போல் நீங்கள் நோக்குமின் என்றாள்
             (சீவகசிந்தாமணி.1046: 4)

    அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
    பிழைப்பில் பெரும்பெயரே பேசி
     (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.2230 : 1)

தற்காலம்

 தற்காலத்தில் 'கள்' விகுதி இலக்கியங்களில் பன்மையைச் சுட்டி வருகின்றது.

சான்று:    'நான்கு மாடுகள் வந்தன'

 வழக்குத் தமிழில் இவ்விகுதியை அவ்வளவாகப் பயன் படுத்துவது இல்லை எனலாம்.

சான்று:

    'நாலு மாடு வந்தது'
    'நாலு காலு'                                                                                   

 

இக் 'கள்' விகுதி கடந்த ஆண்டுகளைச் சுட்டும்போது பயன் பாட்டுக்கு வருகிறது.

சான்று:

    '1950களில்' அது போன்ற முக்காலங்களை (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) ஒருங்கே இணைத்துக்கூறும் இடங்களில் கூட 'கள்' விகுதி வருகிறது.

சான்று:

    'நான் வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்குப் போவேன்
 
               எது எப்படி இருப்பினும் தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் சங்கப் புலவர்கள் காலத்திலும் கள் விகுதி இருந்துள்ளது.   முற்காலத்தில் கள் விகுதியின் பயன்பாடு மிகக்  குறைவாக இருந்துள்ளது. பிற்காலத்தில்தான் அதன் பயன்பாடு அதிகம் ஆனது என்று அமைதி கொள்ளலாம்.     

    அடுத்ததாகக் கள் விகுதியை அஃறிணைக்கு மட்டும்தான் சேர்க்க வேண்டுமா? உயர்திணைக்குச் சேர்க்கக் கூடாதா? எனக் கேள்விகள்  எழுகின்றன..

  பொதுவாக முற்காலத்தில் அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் கள் விகுதி.பொருத்தப்பட்டது.                                                        அரசர் என்ற சொல் ஒருமையா பன்மையா என்றால் பன்மை என்றே நம் இலக்கணம் சொல்கிறது. அரசர் என்ற சொல்லுக்கு ஒருமை என்ன என்று கேட்டால், அரசர் என்றே சொல்வார்கள். இருவராக இருந்தாலும் அரசர் என்றே எழுதுவார்கள். அரசர் என்பது ஒருமையா பன்மையா என்பதை எண்ணிக்கையை வைத்தே ஊகித்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அரசன் என்றால் ஒருமைதான் என்று முடிவாகத் தெரியும். ஆனால் தமிழ்ப் பண்பாட்டில் அரசன் என்று அன் விகுதி போட்டுச் சொல்வதை மதிப்புக் குறைவாகக் கருதுகிறார்கள். அதனால் அர் என்கிற பன்மை விகுதியை இட்டு அரசர் என்று மரியாதையாகச் சொல்வது வழக்கமாகி இருக்கிறது. இதனை மரியாதைப் பன்மை என்று இலக்கணம் சுட்டுகிறது. இது போலவே அரசி என்பது ஒருமையைக் குறிக்கும். ஆனால் அரசியார் என்று மரியாதைப் பன்மையில் சொல்வார்கள்.

          ஆனால் புலவர் அரசர் என வருகிற சொற்களில் ஏற்கனவே அர்விகுதி வந்துவிட்டது. புலவர்கள்,  அரசர்கள் ஆகிய சொற்களில் அர் என்ற விகுதியும் அத்துடன் சேர்ந்து கள் விகுதியும் உள்ளது. ஒரு சொல்லில் இரு விகுதிகள் இதைத்தான் விகுதிமேல் விகுதி என்று இலக்கணம் கூறுகிறது

   புலவர் என்ற சொல் ஒருவரைக் குறிக்கிறதா ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிக்கிறதா என்றால் இரண்டையும் குறிக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க என்ன வழி?    புலவர் என்றால் ஒருவரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். புலவர்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிப்பதாகச் சொல்லலாம் என்று முடிவு செய்துவிட்டால் ஒருமை பன்மை சிக்கல் தீர்ந்துவிடும். 

      மரியாதைப் பன்மையை முன்னிட்டு நாம், யாம் என்று சிலர் சொல்லியும் எழுதியும் இருக்கிறார்கள். நாம் என்பதும் யாம் என்பதும் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்ற கேள்வி முன்னரே எழுந்துள்ளது. அதனால்தான் நாங்கள் என்றும் யாங்கள் என்றும் உயர்திணையில் கள்சேர்த்து ஒருமை பன்மை மயக்கத்தைத் தெளிய வைத்துள்ளார்கள்.

      இவ்வாறு மரியாதைப் பன்மையில் ஏற்படும் ஒருமையா பன்மையா என்ற குழப்பத்தைத் தீர்க்க அர் விகுதியோடு கள் விகுதியைச் சேர்த்து வந்துள்ளோம். இது நெடுங்காலமாகவே பயன்பாட்டில் உள்ளது. எந்த இடரும் ஏற்படுவதில்லை

கை, கண், கால், காது போதுமானது கைகள், கண்கள், கால்கள், காதுகள் என்று கள்சேர்க்கும் தேவையில்லை                                               கள்வராத இடங்கள் / பெயர்கள்

ஐம்பூதங்கள் = வான், நீர், நிலம், காற்று, நெருப்பு / தீ

ஐந்திணைகள் = குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல், பாலை

 கடவுளர்கள் = ஈசன், கண்ணன் , புத்தன்

கோள்கள் = சூரியன், சந்திரன், பூமி

நிறங்கள் = வெள்ளை, சிவப்பு

திசைகள் = வடக்கு, கிழக்கு

அளவுகள் = அரை, பாதி, முக்கால், முழு.

மாதங்கள் = சித்திரை, வைகாசி.,………. (ஒவ்வொரு என்பது முன்னொட்டாய் வரும் ) ஒவ்வொரு சித்திரை,

தினங்கள் = திங்கள், செவ்வாய் ,,,,,,,, (ஒவ்வொரு என்பது முன்னொட்டாய் வரும் ) ஒவ்வொரு திங்கள்

 

தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் தலைவர் புலவர் ஆ.காளியப்பன் 9788552993

 

 

No comments:

Post a Comment