Thursday 30 April 2020

குடும்பப் பெண்களின் குணங்கள்தொல்காப்பியம் கூறுவது


பெண்ணின் இயல்புகள் 13-04-20
      செறிவும் நிறையும் செம்மையும் செப்பும்
     அறிவும் அருமையும் பெண்பாலன 1155 பொருளியல் 15
  இவை பொதுவாக பெண்ணிற்குரிய குணங்கள் எனினும், ஒருபெண் பெற்றோரை விட்டுப் பிரிந்து, காளை ஒருவனைக் கைப்பிடித்து இல்லறம் நிகழ்த்தும் வாழ்க்கைத் துணையின் குணங்களாக எடுத்துக்கொள்ளலே நலம்.
இதன்பொருள்: நிலையில் திரியாத அடக்கமும், மறைபுலப்படாத வாறொழுகும் நிறையும் மனக்கோட்டமின்மையும்  காலமும் இடமும் அறிந்து கூறத்தகுவன கூறலும்    நன்மை   தீமைகளை  ஆராய்ந்து   கொள்ளும் அறிவும்  தம் உளத்தினைப்  பிறர்  எளிதின் அறிய முடியா  தொழுகும்  அருமையும் பெண்பாலார்க்குரிய திறன்களாகும்.
                  இவற்றுள்
செறிவு என்பது அடக்கம். செறிவறிந்து சீர்மை தரக்கூடியது அடக்கம் அவ்வடக்கத்தைப் சிறந்த பொருளாகக் காக்கக் கூடியவள் பெண். செறிவு என்பதற்கு இறுகுதல், நெருங்குதல் என்னும் பொருள் கொண்டால் மிகுந்த உள்ள உறுதி உடையவள் எனலாம்.   செறிவெனப் படுவது கூறியது மறாஅமை எனும் போது திருமணத்தின் போது இருபெரும் பெற்றோர்களும் மூத்தோர்களும்  கற்பித்ததை  மறவாமல் பின்பற்றுபவள் பெண்

நிறைவு என்பது-அமைதி.எனப்பொருள் கொள்ளின் எந்தச் சூழ்நிலையிலும் அமைதி காத்தல். நிறையுடைமை என்றதற்கு காக்க வேண்டியவற்றைக் காத்து   நீக்க வேண்டியவற்றை நீக்கி  ஒழுகும் ஒழுக்கம். நிறை என்பதற்கு சால்புடைமை, பெருந்தன்மை, மனத்தை ஒருவழி நிறுத்தும் ஆற்றல், நெஞ்சத்தின் உறுதிப்பாடு, நன்மை, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தும் உயர்பண்பு, பண்பாட்டு நிறைவு, தன்பெருங்குணம், நிதான குணம் உள்ளவள் என்ற பெருமை உடையவள் என்றும் உரையாளர்கள் பொருள் கூறியுள்ளனர். ஆகவே  அன்பு, நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்னும் எல்லாவிதமான நற்குணங்களால் நிறைந்திருக்கும் தன்மையோடு. அடங்கி இருத்தல். நிறை எனப்படுவது மறை பிறர்க்கு உரையாமை என்பதால் பிறர் குற்றத்தை வெளிப்டையாய்க் கூறாது நெஞ்சினுள் வைத்துக் காப்பாற்றுதல்

செம்மை என்பது-மனங்கோடாமை அதாவது நேர்மையான சிந்தனை உடையவன்
செப்பு என்பது காலம் கருதி இடத்திற்கும் சூழலுக்கும் தகுந்தவாறு பேச்சினைப் பேசுகின்றவள்
அறிவு என்பது- எப்பொருள் யார்யார் வாய்க் கேட்டபினும் எப்பொருள் எத்தன்மைத்தாயினும்  அதன் உண்மைத் தன்மையை அறிந்து நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் அறிதல்.
அருமை என்பது- தம் உளத்தில் உள்ளதைப்  பிறர்  எளிதில் அறிய முடியாத அளவு    அருமை உடையவளாக இருத்தல்.மேற்கூறிய அறுவகைக்குணங்களைப் பெற்றிருத்தல் ஒரு இல்லக் கிழத்தியின் திறன்களாகும்.  
பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993

1 comment:

  1. சிறப்பு. தற்போதைய நிலையில் உதவியாக இருந்தது தோழரே..

    ReplyDelete