Monday 7 May 2018

விழாமல் எழமுடியாது கவிதை


விழாமல் எழமுடியாது       
விழுந்தால் விதையாய் விழவேண்டும்
விதைபோல் முளைத்து எழவேண்டும்
முளைக்கும் வாய்ப்பு இல்லென்றால்
உரமாய் மாறிப் போயிடுக.

எழுந்தால் மலைபோல் எழவேண்டும்
எவர்க்கும் அஞ்சாநிலை வேண்டும்
அஞ்சிடும் நிலையென வந்திடினே
ஆருயிர் தன்னைப் போக்கிடுக

உளியடி படுகிற காரணத்தால்—கல்
உயர்ந்தோர் சிற்பம் ஆகிறது
உளியடி படாது போனாலும்—வாயிற்
படியென நீயும் ஆயிடுக

ஒளியடி படுகிற காரணத்தால்—இருள்
ஓடி ஒதுங்கிப் போகிறது
ஒளியடி படாது போனாலும்—இருளாய்
நிழற்படம் எடுக்க உதவிடுக

கையடி படுகிற காரணத்தால்—மேளம்
களிப்புறும் ஓசையைத் தருகிறது
கையடி படாது போனாலும்—எலி
கடித்திடும் உணவாய் மாறிடுக

மெய்யடி படுகிற காரணத்தால்—தங்கம்
மின்னிடும் நகையாய் மிளிர்கிறது
மெய்யடி படாது போனாலும்—பெட்டில்
வைக்கும் பொன்னாய் ஆயிடுக

எழுதுகோல் மிதிக்கும் காரணத்தால்--தாள்
இலக்கிய ஏடெனச் சிறக்கிறது
எழுதுகோல் மிதிக்காது போனாலும்—கடையில்
பொட்டலம் மடிக்கப் போயிடுக

கொழுமுனை கிழிக்கிற காரணத்தால்-நிலத்தில்
குலுங்கிப் பசும்பயிர் சிரிக்கிறது
கொழுமுனை கிழியாது போனாலும்-மனை
கட்டிடும் இடமாய் மாறிடுக

தரையில் துளையிடும் காரணத்தால்-தரை
தண்ணீரை ஊற்றெனத் தருகிறது
தரையில் துளைக்காது போனாலும்—மண்ணாய்
சட்டிகள் செய்திட உதவிடுக

மூங்கிலைத் துளையிடும் காரணத்தால்—அதில்
மோகன இசையென்று வருகிறது
மூங்கிலைத் துளைக்காது போனாலும்-கூடை
முடைந்திடும் தப்பை ஆகிடுக

மண்ணைக்  குழைத்துச் சுட்டாத்தான்—அது
மனைகட்டும் செங்கல் ஆகிறது
மண்ணைக் குழையாது போனாலும்— அதில்
மரம்செடி  எல்லாம் வளர்க்கிறது

தன்னை நினைத்துப் பார்த்தால்தான்—தன்
தரமும் தாழ்வும் தெரிகிறது
தன்னை நினையாது போனாலோ-மண்ணில்
தாழ்ந்து உதவாப் பொருளாவாய்

அநுபவ அடிபெறும் மனிதர்களே-மண்ணில்
அறிஞர்கள் ஞானிகள் ஆகின்றார்
அடிக்குப் பயந்த மனிதர்களோ—ஒரு
பயனும் இன்றி மாய்கின்றார்.

அழுக்காறு கொண்டோர் ஒருபோதும்
அவனியில் என்றும் ஒளிர்வதில்லை
ஒழுக்கம் கொண்டோர் எந்நாளும்
உயர்ந்து நிற்பார் உலகினிலே.

இனிப்பே உணவாய் இருந்தாலோ
இன்பம் என்பது புரியாது
துன்பம் ஒன்று இருந்தால்தான்
சுடப்பட்ட பொன்னாய் நாம்மிளிர்வோம்


No comments:

Post a Comment