Saturday 28 April 2018

கோல்கள் கவிதை


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.என்று  படித்தபோது உதித்த கவிதை
   கோல்கள் எத்தனை கோல்கள்!
அறத்திற்கு ஆதியான மன்னன் கோலை
பயனடைந்தோர் செங்கோல் என்றே கூற
பாதிக்கப் பட்டோர் தாமும் நாளும்
பயனிலாக் கொடுங்கோல் என்று கூற
இருவரும் கன்னக்கோல்  திருட னென்பார்
உண்மையை உணர்ந்த சான்றோர் என்றும்
ஆசானின் பிரம்பு கோலுக்கு அஞ்சாதான்
காவலரின் லத்திக் கோலால் மொத்துண்டார்
நட்டுவனார் இசையாம் திறவு கோலும்
கட்டிய பாட்டாம் ஊன்று கோலும்
கைதட்டி பாராட்டும் தூண்டு கோலும்
கிட்டாத நடன மங்கைதான் பெற்ற
தலைக்கோல் பட்டமும் வீணே யாகும்
கண்ணிலான் பெற்ற வெண்மைக் கோல்போல்
காந்தியின் கையிலுள்ள வளைந்த கோலும்
காட்டினவே பாதைனை நாட்டிற் கன்று
அன்புக்கு அளவுகோல் உண்டோ பாரில்
நட்புக்கு கத்திரிகோல் (பிடி)வாத மாகும்
கிட்டிக்கோல் போட்டுதான் நெருக்கும் போதும்
சூட்டுக்கோலால் சூட்டினை வைத்த போதும்
வைக்கோல் தின்னா மாட்டை வாயில்லாச்
சீவனென்று வற்புறுத்தி வேலை வாங்கா
ஒளைக்காக் கோல்கூட மிஞ்சா உழவன்
கவைக்கோலால் எளிதில் தள்ளி முள்ளின்
வாதினை வசமாய் வெட்டல் போல 
ஆவியாய்ப் போகும்  குளத்து நீரைத்
தெரமாக்கோல் போட்டு மூடிச்  சேரவே
பெவிக்கோலால் ஒட்டு வேண்டும் என்று
மந்திரிக்கு புத்தி சொன்ன மேதாவி
ராசுக்கோலுக்கு பஞ்சப்படி குறைத்தல் நியாயம்
சன்னக்கோல் நெம்புகோல் போட்ட போதும்
சடுதியில் நகராத கோப்புத் தானும்
துன்னு கோலாய்  லஞ்சம் நுழைந்தால்
அங்குசக் கோலுக்கு அடங்கும் யானையாகி
துலாக்கோல் நானென்று உரைப்போர் சகுனி
தாயக் கோலாய் மாறிப் போவார்  
கொத்தனார் மட்டக்கோல் கொஞ்சமும்மா றாதய்யா
மந்திர வாதியின் கையுள்ள கருப்புக்கோலால்
மணியத்தின் அடிக்கோல் கவர்கோலாய் மாறுதய்யா
பாட்டியின் புட்டுக் கோலும் பஞ்சாய்
இராகிக் களியினைக் கிளறும் களிக்கோலும்
குக்கரின் கூச்சலாலே மறைந்துதான் போனதய்யா
முக்கோல் தண்டக்கோல் கொண்ட முனிவனும்
கைக்கோலுக்கு அஞ்சும் குரங்காய்  நாளும்
காசுக்கு அடிமையாகி காலத்தைக் கழிக்கிறாரே!
      ஆக்கம் புலவர் ஆ.காளியப்பன்

No comments:

Post a Comment