Thursday 4 January 2018

கொங்குநாட்டுப் புலவர்கள் பூ.அ.இரவீந்திரன்



           கொங்குநாட்டுப்புலவர்
            புலவர்பூ.அ.இரவீந்திரன்
சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்  
நல்லிருந் தீந்தாது நாறுதலால்—மல்லிகையின்
வண்தார் கமழ்தாமம் அன்றே மலையாத
தண்தாரன் கூடல் தமிழ்
என்னும் நல்லிசைப் புலவர் மாங்குடி மருதன் வாய்மொழிக்கு இலக்காக இலங்கும் நம் தமிழ்மொழிக்கண் நல்லிருந்தாது கமழ்வது புலவர் பூ.அ. இரவீந்திரன் அவர்களது கவிதைகள்.
தோற்றமும்தொடக்கக்கல்வியும்: கொங்கு நாட்டுப் புலவர்களில் முன்னேர் பிடிப்பவர் இரவீந்திரன் அவர்கள்.கவிதை விதை முளைத்து இலக்கிய மரமாய் தழைத்தோங்கி பூத்துக் குலுங்கும் மலர்களில் ஒன்றே நம் கவிஞர். மாச்சம்பாளையத்து அச்சையகவுண்டர் எனும் மரத்தைத் தழுவிய தீத்திபாளையத்து இராமக்காள் எனும் கொடியில் பூத்த மலர்கள் மூன்று. அவ்வண்ண மலரில் ஒன்றே நம் கவிஞர்.அம்மலர் 23-5-1947 ல் பூத்தது. ஏழுவயதாக இருக்கும் போது தந்தையாம் மரநிழலை இழந்தார். தந்தையுடன் கல்வி போம் என்னும் பழமொழியைப் பொய்யாக்கப் பூச்சியூர் போனார்கள். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவைக்கு மேற்கே வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைத் தொட்ட ஊரே பூச்சியூர்.  அந்த ஊர் எப்படிப்பட்டது அவரது   கவிதையாலேயே அறியலாம்
           வெள்ளிமலைச் சுனையூறி வந்த தென்றல்
                விதைப்புக்கோ ஏர்உழுத புழதிக் காடு
           கள்ளருந்தி மகரந்தம் பூசும் தும்பி
                கார்மேகம் பொழிந்து வரும் ஆலங்கட்டி
           கிள்ளாத பூச்செடியில் வண்ணப் பூக்கள்
                கிடைப்பட்டிக் கால்நடைகள் குரலெ ழுப்பும்
           கொள்ளையெழில் தூவுகிற நிலக்கோ லங்கள்
                கொம்புத்தேன் வாழ்க்கையினைச் சுவைத்து வாழ்ந்தேன்.என்ற புலவர் வாயால் புகழப்பட்டது இதுவே புலவரை வளர்த்த ஊர். ஓனாப்பாளையத்து தொடக்கப்பள்ளியில் அரசு தந்த இலவசக் கல்வியை ஆழ்ந்து கற்றார். ஒழுக்க சீலர் என்னும் பேரும் பெற்றார்.
புலவர்பட்டம்: வெள்ளி மலைக் காற்றைச் சுவாசித்தார். நூலகம் சென்று நூல்களை வாசித்தார். சுற்றத்தாரை மிகவும் நேசித்தார். சுவைமிகு சிறுவாணி நீரோடு சான்றோர்களின் உரைகளையும் பருகினார். கன்னடம் தாய்மொழி என்றாலும், செவிலித்தாய் தமிழோடுதான் காலத்தைக் கழித்தார். அவளுக்கே கவிதை அணிகளைப் பூட்டி மகிழ நினைத்தார். அதனால் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியின் தலைமாணாக்கர் ஆனார். அங்கு ஆசிரியர்ஐயா வையாபுரியார், பேராசிரியர் சென்னியப்பனார் முதலிய ஆசிரியப் பெருமக்கள்    இலக்கணச்சீனி கலந்து இலக்கிய பாலூட்டி வளர்த்தனர். அப்போதே கவிதை, கட்டுரை என்னும் களப்போர்களில் ஈடுபட்டார். வாகையும் சூடினார். வித்துவான் பட்டம் பெற்றார் வித்தகன் எனும் புகழும் பெற்றார்.



ஆசிரியப்பணி: சிறந்த குடிமகனை உருவாக்கும் ஆசிரியப் பணியும் கிடைத்தது. அப்பணி சிறக்க இளங்கலை,முதுகலைப் பட்டங்களையும் சேர்த்துக் கொண்டார். பணியில் சிறந்து விளங்கியதால் தலைமை ஆசிரியர் எனும் மகுடம் சூட்டப்பட்டார். தேசப்பிதா மகாத்மா பாதம் பட்ட சொக்கம்பாளையம் பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பினையும் பெற்றார். பன்னிமடை அரசு மேனிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். கொட்டிக் கிடந்த செங்கற்களைக் கோபுரமாக்குவது போல் மாணாக்கர்களைக்  கல்வியில் நல்ல தேர்ச்சி பெறச் செய்ததோடு விளையாட்டிலும் விருதுகள் பெறவைத்தார். நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் சுற்றுப்புறக் கிராமங்களில் தூய்மைப்பணியை மேற்கொண்டார்.
மனையறம்: தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகள் தலைமையில் வாழ்க்கை வண்டியை இழுக்க கீதா என்னும் இடது மாட்டைப் பூட்டி விட்டனர். இல்லற இன்பத்தில் திளைத்தனர். அதன் பயனாய் அறிவறிந்த மகனையும் பெற்றனர். அப்போதுதான் ஆழிப்பேரலை போல் ஆபத்து ஒன்று வலிய ஊழால் வந்தது. மூளைமிக்க இவருக்கு மூளைக் காய்ச்சல் வந்தது. முடம் மாக்கியது காலை. முடக்கிப் போட்டது வாழ்வை. பாண்டவர் வனவாசம் சென்றது பதின்மூன்று ஆண்டுகள் இவர் வாழ்வும் 13 ஆண்டுகள்  காரிருள் சூழ்ந்தது.
இராபர்ட் ப்ராஸ்டின் “உறங்கச் செல்வதற்கு முன் கடந்து செல்ல வேண்டிய தொலைவு நீண்டுகிடக்கிறது” என்ற  கவிதை வரிகள் தீக்குச்சியாய் உரசியது. அச்சிறு நெருப்பு திருவண்ணாமலை தீபமானது.  தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவரானார். நாற்காலி வண்டியில் நாடுமுழுதும் சுற்றினார். கவிதையைத் தூறலாக்கி கட்டுரையைத் தென்றலாகி, தமிழ்த்தாயைக் குளிர்வித்தார்.சென்னை திருவல்லிக்கேணி  பாரதி நினைவரங்கில் தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்க மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் காட்டினார். நம் எண்ணத்தை வெளிப்படுத்துவன நம் ஈரிதழ்கள் மட்டுமல்ல வார மாத இதழ்களுந்தான்.அந்த அடிப்படையில்தான் தமிழ்த்தாராமதி என்னும் மாத இதழின் ஆசிரியர் ஆனார். அதற்கென ஒரு வாசகர் வட்டமும் உருவாகிது. இவரது எண்ணத்தை இவர் மொழியாலேயே படிப்போம்.
கற்றவர்கள் பனுவலிலே புலமை பெற்றேன்
     கருவூலப் பெட்டகத்தைத் திறந்து கொண்டேன்
சுற்றிவந்த முற்றுகையின் வேர றுத்தேன்
     சூத்திரத்தில் எனையெழுதிச் சுருக்கம் கண்டேன்
பொற்றகட்டில் எழுதிவைத்த பொருள்நு கர்ந்தேன்
     புத்தகத்தை அசைபோட்டுப் புதுமை யுற்றேன்
முற்றிநிற்கும் புதர்கொன் றுதடம் சமைத்தேன்
     முகம்கழுவித் தலைதிருத்தி நேர்த்தி செய்தேன்.என்கின்றார்
கவிஞரின் படைப்புக்கள்.
      காலம் பிசைந்து தந்த சுவைபடு நுகர்பொருள் கவிதை; மெல்லக் காற்றில் அசையும் திரியின்தீ; கற்பவர்களைக் கவர்ந்து பரிவுடன் அழைத்துச் செல்லும் தடங்கலற்ற நடை; தொடர்ந்து ஒலிக்கும் குரல் மெல்லிய புன்னகையை வரவழைக்கும் அங்கதம்; பளிச்சென்று பிடிபடும் வைக்கும் சொற்கட்டுகள் என்று இன்னும் பலவற்றைக் கூறினாலும், இவையெல்லாம் கடந்த இன்ப வெளியே எனக்கூறும் கவிஞர் கவிதை மொழியை அனுபவித்து வாழ்கிறார். கவிதையே கவிஞர்; கவிஞரே கவிதை என்று கூறும் அளவிற்கு சமூகத்தில் தாம் உணர்ந்த அனைத்து உணர்வுகளையும் கவிதை மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
புதுக்கவிப்புலவன்: தென்கயிலை மூலிகைக் காற்றும், தெளிந்த சிறுவாணி நீரும் கொங்குத் தமிழும் நலமிகு நண்பர் கூட்டமும் என்றும் இருப்பதால் எழுபது அகவை ஆனாலும் இருப்பத்து நான்கு வயது இளைஞனாய் இயங்கி வருகிறார். மரபுக் கவிதைகள் ஆயிரம் பாடி இருந்தாலும் புதுக்கவிதையிலும் புகுந்து விளையாடியுள்ளார் இவர் கவிதையில் நயம் இருக்கும்,பரிவு இருக்கும்,மானுடம் இருக்கும் அறச்சீற்றம் இருக்கும். புதுக்கவிதையில் தன்னைப் புதைத்துக்கொண்டார். காரணம் அவரே கூறுகிறார். “புதியன கண்டபோது விடுவரோ புதுமை பார்ப்பார்” என்பார் கம்பர். “நவகவிதை” என்பார் பாரதியார். “புதியதோர் உலகம்” என்பார் பாரதிதாசன் இக்கூறுகளின் தொடர்ச்சியால் புதுக்கவிதையில் தன்னை ஆட்படுத்திக் கொண்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அப்படிப் பிறந்தவை தாம் ‘தூரிகையும் நிறங்களின் கடவுளும்’  ‘பௌர்ணமி இரவின் பேரலை’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஆகும்.
 “காலம் என்னைக் கிழித்துப் போட்டது
 கவிதை என்னைத் தைத்துப் போட்டது” என்ற தன்னம்பிக்கை உடன் வாழ்பவர்
இலக்கணத்திற்கு ஒருமன்றம்: யாவற்றிற்கும் மேலாக இலக்கியத்தின் வேராய் விளங்கும் இலக்கணத்திற்கு ஒரு மன்றம் வேண்டுமெனத் தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்களால் பேரூர்த் திருமடத்தில் தொல்காப்பியர் பேரவை தோற்றுவிக்கப்பட்டது. அப்பேரவை திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழிப்  பேரூராதீனம் கயிலைக் குருமணி சீர்வளர்சீர் இராமசாமி அடிகள் பெருந்தகையின் குருவருளும் நிறைந்த வாழ்த்தோடு தொடங்கப்பட்டது அப்பேரவையின் வளர்ச்சியில் முழு ஈடுபாட்டோடு உழைத்து வருவது பெருமைக்குரிய விடயம்.
நிறைவு: அடக்கம்,பண்பு,எளிமை,நிறைந்த கவிஞர். இளைய தலைமுறையினருக்கு இன்பத்தமிழை வழங்கி, சங்கத்தமிழ் வளர வழிகாட்டுபவர்.சமூக மாற்றத்தினை எதிர்நோக்கும் ஆரவலராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இவர் தம் கவிதைகளில் அம்மாற்றத்திற்கான வழிமுறைகளையும் கூறும் படைப்புக்களை உருவாக்கி மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை. தேடலும்,செறிவும் நிறைந்த கவிதைகளுக்குச் சொந்தக்காரர் இவர். தமது இதயப்பூங்காவில் அழகிய கவிதைப்பூக்களை மலரச்செய்து சமூக உணர்வாளர்களுக்கு விருந்தளிக்கும் கவிஞரின் ஆக்கங்கள் தொடர நாமும் ஊக்கம் தருவோம்.
 கட்டுரை ஆக்கம்
 தொல்காப்பியச் செம்மல்
 புலவர் ஆ.காளியப்பன்
 தொல்காப்பாயர் பேரவைத்தலைவர்
 முத்தம்மாள் நிலையம் பூலுவபட்டி(அஞ்சல்)
 கோயமுத்தூர் 641101
 அலைபேசி 9788552993

2 comments:

  1. சொல்ல வந்ததை விட்டு விட்டு எதையோ சொல்லி ... துன்பம்...

    ReplyDelete