Wednesday 22 November 2023

சொல் என்றால் என்ன?

 

                                                    சொல் எனப்படுவது  

சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. ஒருமொழிக்கு முதற்காரணமாக இருப்பதுசொல்.  ஒலி அணுக்களின் காரியத்தால் உண்டாவது.

சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும்  மொழிக்கூறு. சொல்,கிளவி,மொழி, பதம், வார்த்தை, வாசகம் என்பன ஒரே பொருளுடையன. எழுத்துகளால் உருவானதாக இருந்தாலும் பொருள் தருவதாக இருந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது. பொருள் தராதவை சொல் எனப்படுவது இல்லை என்பதால்தான் ’எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

    சொல்லைத் தொல்காப்பியம்   ஓரெழுத்தொருமொழிஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது

உயர்தனி செம்மொழியாய் விளங்கும் நம் தமிழ்மொழிக்குப் பெருமைசேர்ப்பது அதன் சொல்வளமாகும்.. சொற்களின் இலக்கணத்தை உலகவழக்கு செய்யுள்வழக்கு என இரண்டாகப் பகுப்பர். அவ்விரண்டையும் போற்றி இலக்கணம் கண்டநூல் தொல்காப்பியம்.

                                சொல்லெனப் படுப பெயரே வினையென்று

                                ஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே.      (தொல். சொல். பெயரியல். 4)

        பொருள்:   தமிழ் போன்ற ஓர் உயரிய செம்மொழியில் சொல் எனச் சிறப்பித்து  அறிந்தோரால் கூறப்படுவது,  பெயர்ச்சொல், வினைச்சொல் என இரண்டு வகைப்படும். பெயர்ச்சொல் என்பது மனிதர்கள் உலகில் பார்க்கும், உயர்திணை அஃறிணைப் பொருள்கள், செயல்கள், காலம், இடம்,  எண், நிலை போன்ற அனைத்திற்கும் ஒரு நிலையான பெயரிட்டு அடையாளம் கண்டு கொள்வதற்காக உண்டான ஒருகுறியீடு எனலாம்

வினைச்சொல் என்பது பல்வேறு செயல்    வகைகளை அடையாளம் கூறப் பயன்படுவது. மற்ற சொல்வகைகள்   இடைச்சொல், உரிச்சொல். இவை       அனைத்தும் பெயர், வினைச் சொற்களின் இடமாகத்தான் தோன்றும். எழுத்துகளில் முதல் எழுத்துகளான  உயிர், மெய் இருப்பது போல், இவ்விரண்டு சொல் வகைகளும் தமிழ் மொழியின்      அடிப்படைச் சொல் வகைகள் எனலாம். மற்ற இடைச்சொல்லும்  உரிச்சொல் யாவும்  சார்புச்சொற்களே..

சொல்லை இலக்கணவகையால் பெயர்ச்சொல் வினைச்சொல்,இடைச்சொல் உரிச்சொல் எனப்பகுத்தாலும் இலக்கியவகையால் இயற்சொல் திரிசொல் வடசொல் திசைச்சொல் என்றும் பிரிப்பர்

       எனவே சொல் எனப்படுவது தனிமொழி தொடர்மொழி, பொதுமொழியாக நின்று,இருதிணை ஐம்பால் பொருள்களையும் தன்னையும் உணர்த்தி தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடத்திலும் உலக(பேச்சு) வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வெளிப்டையாகவும் குறிப்பாகவும் விரித்துச்சொல்வது சொல் எனப்படும். பதிவு தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் சார்பாக புலவர் ஆ.காளியப்பன் 9788552993



No comments:

Post a Comment