Sunday 22 September 2019

பேரூராதீனமும் ஈரோட்டுப் பெரியாரும்


பேரூராதீனமும்  ஈரோட்டுப் பெரியாரும்
                                (ஆத்திகமும்        நாத்திகமும்
              காவியும்           கருஞ்சட்டையும் நேர்)
            சிலேடை (இரட்டுற மொழிதல்)      
வெண்தாடி நீவிடுவார் கோலொன்றைத் தாங்கிடுவார்
கண்ணாய் மனிதரைக் காத்திடுவார் --- பெண்தனைப்
போற்றியே பேசிடுவார் பேரூரும் ஈரோடும்
சாற்றியதே ஒன்றென இன்று.

      *கடவுளே யில்லை எனவுரைத்தார்  நாளும் 
      திடமான எண்ணத்தில் நின்றார்  --- மடத்தினில்
      உள்ளார்த் திருந்த வழியுரைத்தார் இவ்வுலகில்
      கள்ளொழியக் கண்டார் வழி.
     
      இருவர் பெயரும் இராமசாமி என்றும்
      சருகான மக்களுக்குச் சாந்தத்  -- திருமுகம்
      காட்டி களிப்பூட்டப் பேசிடுவார் ஈரோடும்
      வாட்டமில் பேரூரும் நேர்
 
      ஆரியப் பேயோட அன்றாடம் தாமுழைத்தார்
      வீரியப் பேச்சாலே மக்களைப் ---- பாரிடத்தில்
      சாதிப்பேய் ஓட்டிடவே சந்தியெலாம் செப்பியே
      வீதியெல்லாம் சென்றார் நடந்து.

      கல்லூரி கட்டினார் கன்னித் தமிழரின்
      அல்லலுக்குக் காரணத்தை அன்றாடும் -- சொல்லான
பேருரை மந்திரத்தால் மாற்றியே  வைத்ததால்
      பேரூரும் ஈரோடும் நேர்
     
      நம்தமிழர் வாழ்வுக்காய் நாளும் உழைத்தாரே
      தம்பால் அனைவரையும் ஈர்த்தாரே ---சம்பளம்
      பெற்றிடா வேலையாள் ஆனாரே எந்நாளும்
      பேரூரும் ஈரோடும் நேர்

  *கடவுளேயில்லை = கடவுளே+ இல்லை
  கடவுளேயில்லை = கடவுள்+ ஏ(ன்)+ இல்லை
            ஆக்கம்
     தொல்காப்பியச்செம்மல்   
  புலவர் ஆ.காளியப்பன்
  தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
     அலைபேசி 9788552993

No comments:

Post a Comment