பத்தி இலக்கியங்களில் மெய்ப்பாடு
திருமுறைகளில் மெய்ப்பாடு
முன்னுரை: பண்டைத் தமிழ் மக்களது அன்பும் அறிவும் நிறைந்த இன்ப வாழ்வின் இயல்புகளையும் அவற்றில் உண்டாகின்ற புறவெளிப்பாடுகளையும் எடுத்துரைப்பது மெய்ப்பாடாகும். அகம் புறம் எனும் ஒழுகலாறுகளைப் பின்பற்றி நடப்பது மக்கட் சமுதாயம் ஆகும். அவரவரின் சூழலுக்கு ஏற்ப உள்ளத்தில் பல குறிப்புகள் தோன்றும்.அக்குறிப்புகளுக்கு ஏற்ற செயற்பாடுகள் உடம்பில் தோன்றும். மெய்யில் படுவது மெய்ப்பாடு. மெய்ப்பாடு என்ற சொல் தற்காலத்தில் சுவை என்ற பொருளைக் குறிக்கின்றது. அவ்வாறு புலனாகும் சுவைகள் எட்டு என்று வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுடன் சமநிலை என்பதையும் சேர்த்து ஒன்பான் சுவை என்பார். இவ்வொன்பான் சுவைகளே எந்தவொரு கலை இலக்கியத்திற்கும் உயிராக உள்ளன.
பேச்சு மொழி தோன்றும் முன்னரே தன் கருத்தைப் பிறர்க்கு உணர்த்த மனிதனுக்குப் பயன்பட்டவை மெய்ப்பாடுகளே ஆகும். .மெய்யின் அசைவைக் கொண்டு உள்ளத்து உணர்ச்சிகள் தாமே வெளிப்படும். பண்டைத் தமிழர் தம் இல்வாழ்வுக்குத் துணையைத் தேடுதலாகிய காதல் வாழ்வு மெய்பாட்டிலேயே தொடங்கிற்று அதனால் தான்
நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரையாகும். (தொல்.கள5) என்கிறது தொல்காப்பியம்.காதல் வாழ்வன்றி அன்றாட அரசியல் வாழ்விலும் மெய்ப்பாடுகள் பயன்பட்டன. முன்னம் முகத்தில் உணர்ந்தவர் இன்பம் தீர்த்தல் வன்மையான (புறம் 3) முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து (குறள்90) என்ற கூற்றுகளால் முகத்தால் உணரும் மெய்ப்பாட்டினை அறியலாம். இவ்வாறு மெய்ப்பாடுகள் என்ற பாகுபாடும், அவற்றிற்கு இலக்கணமும் அவை இலக்கியத்திற்கு அளிக்கும் நலனும் உலகமொழிகளில் வேறு எந்த மொழியிலும் காண்டற்கரிது. அத்தகைய மெய்ப்பாட்டினை சமய இலக்கியங்களில் காண்போம்..
மெய்ப்பாடு–வரையறை: இலக்கியங்களில் வரும் ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு எனக் கூறப் பெறுகின்ற சொற்கள் எல்லாம் உலகவழக்கில் மனத்தினால் உணர முடியுமே தவிர அவற்றிற்கு வடிவு கொடுக்க இயலாது. வடிவம் இல்லாத அப்பொருள்களை மனத்தினால் உணர்வதற்கும் பொறிகள் வாயிலாக மனம் கொள்ளுவதற்கும் உடலில் ஏற்படுகிற மாற்றமே மெய்ப்பாடுகளாகும். 1
உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்
மெய்ப்பாடு என்ப மெய் உணர்ந்தோர் (செயிற்றியம்)
இதற்குச் சரியான சான்று
‘மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரையார் கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே’ என்னும் .
மாணிக்கவாசகர் பாடலாகிய. திருச்சதக முதற்பாடல்.இதே போல திருநாவுக்கரசரைப்பற்றி
கூறும்போது பெரியபுராணம்
கையும் தலைமிசை புனையஞ்சலியன
கண்ணும்
பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும் உடன்
உருகும்
பரிவின் பேறெய்தும்
மெய்யும் தரைமிசைவிழும் முன்பெழுதரும்
மின்தாழ்சடையொடு
நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும்பிடும் அவர்
ஆர்வம்
பெருகுதல் அளவின்றால் என்று கூறுகிறது (பெரியபுராணம் திருநாவுக்கரசு- தில்லை
தரிசனம் 167)
ஐம்பொறிகளின் இயல்பினையும் உணர்வுகளையும் அதன் மூலம் வெளிப்படும் எழுச்சியின் வெளிப்பாட்டையும் அவற்றோடு புறஉடல் மாறுபாட்டையும் உடலசைவுகளால் வெளிக் காட்டப் பெறும் உள்ளக் கிளர்ச்சியே மெய்ப்பாடு” எனக் கூறுவர்..செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகிய மெய்ப்பாடு இலக்கியங்களில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது, காரணம் உள்ளத்து உணர்வினை தூண்டுவதே கவிதை ஆகும். இம்மெய்ப்பாட்டின் இயல்பினைத் தொல்காப்பியர்,பண்ணைத் தோன்றிய எண்நான்கு பொருளும்
கண்ணிய புறனே நால்நான்கு என்ப (தொல்1195)என்றும் ‘‘நாலிரண்டாகும் பாலுமாருண்டே"(மெய்- சூ.2) என்றும் உணர்த்துகிறார்.
மெய்ப்பாடு பற்றி உரையாசிரியர்கள்
உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளின்
மெய்ப்பட முடிப்பது மெய்பாடாகும். (தொல்பொருள்505) இதில் வரும் மெய்ப்பாடுஎன்பதற்கு
1. மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று” எனக் கூறுகிறார் இளம்பூரணர்
2.‘உலகத்தார் உள்ள நிகழ்ச்சி, ஆண்டு நிகழ்ந்தவாரே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றால் வெளிப்படுதல்’ மெய்ப்பாடு என்பார் பேராசிரியர். மேலும்’‘முடியுடை வேந்தரும் குறுநிலமன்னரும் முதலாகினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காம நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும், அடங்கும் நாடக நூலாசிரியர்க்கு" என்று உரை எழுதி விளக்கம் தருகிறார். .
3. “உள்ள நிகழ்ச்சி நிகழ்ந்தவாறே உய்த்துணர வேண்டிய தேவை இல்லாமல் கண்ணீரரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் ஆகிய புறச் சலனங்கள் மூலமாக வெளிப்படுவது மெய்ப்பாடு” என்றுரைக்கின்றார் நச்சினார்க்கினியர்
4. அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற்புற
உடற்குறி மெய்ப்பாடு” என்று விளக்கம் தருகின்றார் ச. சோமசுந்தர பாரதியார்.
5.“ஒருவரின் உள்ளுணர்வுகளை மற்றவர்கள் கண்டும் கேட்டும் அறிந்திட வெளியிற் காணும் உடற்குறிகள், வாயிலாகப் புலப்படுத்தப் படுபவையே மெய்ப்பாடு எனப்படும்” என்கிறார் கலைஞர் மு. கருணாநிதி. (தொல்காப்பியப் பூங்கா, ப.402)..
6 .‘மெய்’ என்பது பொருட்பிழம்பு, ‘பாடு’ என்பது தோன்றுவது. கவிதை தான் மெய்யாகிய பொருட் பிழம்பைத் தோற்றுவிக்கிறது என விளக்கம் தருகிறார் முனைவர் தமிழண்ணல்
7 உலகத்தாரது உள்ள நிகழ்ச்சி அவரது உடம்பிலே தோன்றும் கண்ணீர் அரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல், வியர்த்தல் நடுக்கம் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலப்படும் தன்மை.என்கிறார் புலவர் வெள்ளை வாரணம் அவர்கள்
8. சுவாமிநாத தேசிகர் மெய்ப்பாடு என்பது, வெளிப்படுவது என்று பொருள்படும். உள்ளத்து உணர்ச்சிகளால் செயல்களில் தோன்றும் வெளிப்பாடு மெய்ப்பாடு. என்கிறார்.
9. திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர் கண்ணினும் செவியினும் உளத்து நிகழும் உணர்வுகளை உளப்பட உணர்த்துதலே மெய்ப்பாடாகும்.. என்கிறார் வீரசோழிய உரைகாரர்.
மெய்ப்பாட்டின் வகைகள். மெய்ப்பாடுகள் தோன்றும் இடங்களை உரையாசிரியர்கள் சுவை என்கின்றனர்.வடநூலார்“இரசம்” எனவும் குறிப்பிடுகின்றனர். சுவை என்பது உள்ளத்தில் தோன்றும் சுவை-உணர்ச்சி இவை உடலின் மெய்ச்சுவைகள். இவை அனைத்தும்
புறப்பொருளில் தோன்றுவன. இவையே யன்றிக் காதல் வாழ்க்கையில் காதலர்களிடையே தோன்றும் மெய்ப்பாடுகள் அவத்தை, அழிவில்-கூட்டம், ஒப்பு, ஒப்பின்மை என்னும் உணர்ச்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல் முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத்தெழுச்சி உணர்வுகள். சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் - ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள். தொல்காப்பியம் காட்டுவன உணர்ச்சிகள் உந்திய வெளிப்பாடு. மனிதன் தோன்றிய நாள் முதலே மெய்ப்பாடு காணப்படுகின்றது. அதன் வளர்ச்சி சிறப்பாக இருந்தது என்பதற்குத் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாடுகளையும் அவற்றின் வகைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.
பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப (தொல்பொருள்245)
பண்ணைத் தோன்றிய என்றதனால் கற்றோர் அடங்கிய அவையில் இவை தோன்ற வாய்ப்பில்லை. விளையாடும்போது தோன்றுகின்ற மெய்ப்பாடு என்று சொல்லப்படுபவை,
“நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம்
பெருமிதம் வெகுளி உவகை யென்னும்
அப்பால் எட்டேமெய்ப்பாடென்ப”. (தொல்-பொருள்-247).“பாடலில் சுவைபொருள் பொருள் புலப்பாட்டால் தோன்றுவதாகும்.
திருமுறைகளில் மெய்ப்பாடு
ஐந்து பக்கங்கள் வரையறை என்பதால் சமய இலக்கியங்களில் நால்வர் பாடிய திருமுறைகளில் உள்ள மெய்ப்பாடு பற்றி விளக்க உள்ளேன். திருமுறைகள் பன்னிரண்டு. முதல் எட்டுத் திருமுறைகள் பற்றியே எடுத்துள்ளேன்.
வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பத்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பத்தி இலக்கியம் இருவகைப்பட்டது. தனித்தனிப் பதிகங்களால் பத்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் எனப்படும். தனித்தனிப் பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப் பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன
அடியார்கள் தாம் புலப்படுத்தும் உணர்ச்சியை வரிசையாக அமைத்துக் காட்டுவதற்குப் பதிக முறையைப் பயன்படுத்தினர். அந்த வரிசைப்படி ஒவ்வொரு மெய்ப்பாடுகளுக்கும் உரிய திருமுறைபாடல்களைப் பார்க்கலாம் எண்வகை மெய்ப்பாடுகளும் அவை பாடலுள் பயின்று வந்துள்ளமை பற்றியும் பார்ப்போம் 4
முதலி்ல் அவற்றின் தொகை
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப (தொல்காப்பியம்1197) அவற்றுள் நகை என்பது
எள்ளல் இளமை பேதைமே மடன்என்று
உள்ளப் பட்ட நகைநான்கு என்ப (தொல் 1198) என்ற நான்கின் அடிப்படையில் வரும்.
சான்றாக
திருஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்து
ஞானப் பேறு பெற்றது சீர்காழி ; இது நெய்தல் நிலத்தின் நீர்மை நிறைந்த
பழம்பதியாகும். இங்கு
வாழை வளமாகக் கனிந்திருப்பது கண்ட மந்தி உண்ண
விரும்பி நின்று நோக்க,
அதன் கனம் தாங்காமல் இலை மட்டை சரிய கீழிறங்கவே
மாட்டாமல் குரங்கு தவிக்கிறது. இதில் நகை என்னும்
சுவை விளக்கப்படுகிறது "தேனார்ந்தெழு கதலிக்கனி உண்பான்
திகழ்மந்தி
மேனோக்கி நின்று இறங்கும் பொழில்
வேணுபுரம் இதுவே''
எனச் சம்பந்தர் உரைக்கின்றார்
அழுகை: இளிவேஇழவே
அசைவே வறுமைஎன
விளிவில் கொள்கை அழுகை நான்கே (தொல் 1199) இதில் வறுமைபற்றி வரும் மெய்ப்பாட்டிற்கான பாடல் உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை(திருவாவுக்கரசர் தேவாரம் திருவீழிமிழலை) 5)
இளிவரல்:மூப்பே பிணியே வருத்தம் மென்மையே
யாப்புற வந்த இளிவரல் நான்கே(தொல் 1200) இதில் மூப்பிற்கான திருமுறை
புறந்திரைந்து நரம்பெழுந்து
நிரைத்து நீயுரை யால்தளரந்
தறம்புரிந்து நினைப்தாண்மை
அரிதுகாண் இஃதறியேல் (திருவாசகம் திருப்புறம்பயம்3)
பிணி பற்றியதற்குப்பாடல்
தம்மைத் தாக்கி வருத்திய சூலைநோய் செய்த துன்பத்தால் மருட்சி நீங்கினார்
அடைவிலமண் புரிதரும சேனர்வயிற் றடையும் அது
வடஅனலும் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம்
கொடிய எலாம் ஒன்றாகும் எனக்குடரின் அகங்குடையப்
படருழந்து நடுங்கி அமண் பாழ்டறை யிடைவிழுந்தார்.(பெரியபுராணம் திருநாவுக்கரசு சூலைநோய் 49)
வருத்தம் என்பது தன்நிலைகண்டு இரங்குதல் வருத்தம் பற்றியதற்குப்பாடல்
கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே உணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கண் பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேந் இறைவனேநா னென்செய்வான் தோன்றி னேனே.(திருவாவுக்கரசர் தேவாரம் பொது2)
அசைவு என்பது அருவருப்பு ஏற்பட்டு முகம் சுழிக்கச் செய்யல்
கட்டும் பாம்பும் கபாலங்கை மான்மறி,இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
எனப் பெரியபுராணப் பாடல் அசைவுச்சான்றாக விளங்குகிறது.
மருட்கை
அதாவது வியப்பு அது புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே (தொல் 1201) என்ற நான்கின் காரணமாகத் தோன்றும் திருஞான சம்பந்தர் பிறந்து வளர்ந்து
ஞானப் பேறு பெற்றது. இச்சீர்காழி இது நெய்தல்
நிலத்தின் நீர்மை நிறைந்த பழம்பதியாகும். தென் தமிழ் நாட்டின் தென்பகுதியும் தென்கீழ்ப் பகுதியும்
கடற்கு இரையான போது பேரலைப் பெருக்கால் இப்பகுதி
முற்றும் கடல் நீர் புகுந்து பரவிற்று. அந்நாளில் இக்காழி நகர் ஒன்று தவிரப் பிற ஊர்கள்
பலவும் நீருள் மூழ்கின. இதனை அப்பெருமான், "கருமை யற்ற கடல் கொள்ள
மிதந்ததோர் காலம் இது என்ன
பெருமை பெற்ற பிரமாபுரம் இது வியப்புத்தானே..
புதுமை நாவுக்கரசர் வரலாறு நாடு நன்கறிந்தது. அவரை மருள் நீக்கியென்று சேக்கிழார் கூறுகின்றார், ''உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு
கதிரே போல், மலருமருள்நீக்கியார் வந்தவதாரம் செய்தார்'' என்பது இது புதுமைக்குச்சான்று.
அச்சம்: அச்சம் என்பது
அணங்கே விலங்கே கள்வர் தம்இறைஎன
பிணங்கல் சாலா அச்சம் நான்கே (தொல் 1202) என்ற நான்கின் காரணமாக அச்சம் தோன்றும் அவற்றுள் விலங்கின் காரணமாக வருவதற்குத் திருமுறை கையொர் பாம்பவை ஆர்த்தொர் பாம்பு கவித்தொர் பாம்பவை பின்புதாழ் மெய்யெ லாம்பொடி கொண்டு பூசி (திருவாசகம் வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர் பைங்கண் யானையின் ஆருரி போர்த்தவர்
செங்கண் மால்விடையார் செம்பொன் பள்ளியார்(திரு நாவுக்கரசு தேவாரம் திருச்செம்பொன் பள்ளி 8)
பெருமிதம்:
கல்வி தறுகண் இசைமை கொடைஎனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே (தொல் 1203)
அண்டர் வாழ்வும் அமரர் இறுக்கையும்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையான்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே(திருவாவுக்கரசர் தேவாரம் மயிலாடுதுறை 3) இது தறுகண் காரணமாக வந்த மெய்ப்பாடு
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன்
அடியவர்க் கடியேன் ஆனேன் என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம் இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை.சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லலோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்(திருநாவுக்கரசர் பொது5)
கொடை கொடுப்பதால் வரும் பெருமிதம்
சொற்ப தப்பொருள் இருளறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடியனா என்னை ஆளது கொண்டார் சிவன் என்று இறைவன் அருட்கொடையைக் கூறுகிறார் (திருவாசகம் திருநள்ளாறு6)
வெகுளி: உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே(தொல் 1204)
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றெரி தானை
நிரம்பிய தக்கன் ரன்பெரு வேள்வி
நிரந்தரஞ்செய்த நிட்கண் டகனை (சுந்தரர் தேவாரம் திருக்கச்சி மேற்றளி) சுந்தரர் ஈசன் வெகுளியை எடுத்துரைக்கிறார்.
உவகை: இன்பச் சுவைக்கு நான்கு அடிப்படை வகுத்த தொல்காப்பியர் அவற்றைச்
"செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
அல்லல் நீத்த உவகை நான்கே" என்றார். இவற்றுள் புலன் என்பது பொறி புலன்களாற் கண்டவற்றை மனத்தில் வைத்து எண்ணியின்புறுதல்.திருவாசகத்தில் "கீதங்கள் பாடுதல் ஆடுதல்லால் கேட்டறியோம். உனைக் கண்டறிவாரை'' எனவரும் தொடர் உறுதிப் படுத்துகிறது. 7
முடிப்பு: பன்முகப் பார்வையில் சமயஇலக்கியங்கள் என்ற தலைப்பினைக் கொடுத்து கட்டுரை வரைவுக்கு ஊக்கம் தந்து அவரவர் சமயம்சார்ந்த இலக்கியங்களை அறிமுகம் செய்ய வைத்த பூசாகோஅர கிருஸ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு வாழ்த்துகளையும் போற்றுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் போற்றும் ஒல்காப்பெரும் புகழ் தொல்காப்பியன் இயற்றிய தொல்காப்பியத்தின் மெய்ப்பாடுகள் நம் சைவக்குரவர் நால்வர் அருளிய திருமுறைகளில் விரவிக் கிடந்தாலும் சிலபாடல்களை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன். இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் பலர் ஆய்வுசெய்து தொல்காப்பியத்தின் பெருமையைப் பாரறியச் செய்வாராகுக
தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன்
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
முத்தம்மாள் நிலையம் பூலுவபட்டி(அ.நி)
கோயம்புத்தூர் 641101 அலைபேசி 9788552993