உலகின் உயிரே நீர் 18-06-17
தமிழ்ச்சோலை தன்னைச் சாலையிலே வளர்க்கும்முத் தமிழரங்கம் கூட்டும் கவிமன்ற நிகழ்விலே
தமிழோடு விளையாடும் வித்தகர் நடுவிலே
உமிபோலப் பயனிலா உமாபதி நிற்கின்றேன்
வானத்து அமிழ்தை வையத்து மருந்தைக்
கானம் பாடிக் கட்டுரைக்க நிற்கின்றேன்.
அனைவருக்கும் வணக்கம்
உலகின் உயிரே நீரே என்ற
தலைப்பில்
கவிதை படைக்கின்றேன்.
நீர்மம் திண்மம் நிறைந்த காற்றாய்ப்
பேர்பெற்ற ஒருபொருள் நீர்மட்டுந் தானே
விண்ணிற் பிறந்து மண்ணில் தவழ்ந்து
உண்ணும் உணவை உண்டாக்கித் தரும்நீரே
அருவியென்றும் ஆறென்றும் அணிசேர் குளமென்றும்
பெருகிய கடலென்றும் பேர்பல பெறும்நீரே
நஞ்சாகிப் போனது அமிழ்தாய் வந்தது
கொஞ்சமும் கருணையின்றிக் கொலைதனைச் செய்கின்றோம்
ஆலைக் கழிவுகளை அளவின்றிக் கொட்டுகிறோம்
சோலைவளர் மரமெல்லாம் சொல்லாமல் வெட்டுகிறோம்
துள்ளிக் குதித்தநீரைத் தூக்கிட்டுத் தொங்கவைத்தோம்
அள்ளிக் குடித்தநீரை அண்ணாந்து குடிக்கின்றோம்
நதியில் நீராடி புண்ணியம் தேடியநாம்
மதியின்றி மாசாக்கி மரணத்தைத் தேடுகிறோம்
சித்திரம் வாங்கத்தான் கண்ணைத்தான் விற்கின்றோம்
பத்திரத்தை எழுதியே பாதையில் வீசுகிறோம்
பனிமலர் தன்னையே கசக்கிமோந்து பார்க்கிறோம்
நுனிக்கொம்பில் உட்கார்ந்து அடிமரத்தை வெட்டுகிறோம்
தண்ணீரை மாத்திரையாய்த் தருவான் அன்னியனும்
தங்கத்தைத் தந்தே வாங்கத்தான் போகின்றோம்
உண்ணும் நீருக்காய் உலகப்போர் உண்டாகும்
கண்ணீரும் வற்றியே கதறப் போகின்றோம்
போனது போகட்டும் புத்திதான் வளரட்டும்
நீரின்றி அமையாது உலககென நினைப்போம்.
நன்றி வணக்கம்
கவிச்சுடர்.கா
உமாபதி.BSc;MA.BEd;MPhil
முத்தம்மாள்நிலையம் பூலுவபட்டி(அஞ்) கோயமுத்தூர்-மா.வ 641101 அலைபேசி 9942411498
முத்தம்மாள்நிலையம் பூலுவபட்டி(அஞ்) கோயமுத்தூர்-மா.வ 641101 அலைபேசி 9942411498
No comments:
Post a Comment