Monday, 20 July 2026

சாதி எப்போது தோன்றியது

 

தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

              இடையில் வந்தது சாதி  

 சாதிகள் இல்லையடிபாப்பா - குலத்
        தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம் --பாரதியார்

  ஆதி மனிதன் ஐந்து அறிவுடைய விலங்கோடு விலங்காகத் திரிந்தான். தாய் சகோதரி  வேறுபாடு இன்றி வாழ்ந்தான் பெரும்பாலும் பெண்ணுக்காகவே சண்டைகள் ஏற்பட்டன. வலுத்துவன் அனைவரையும் அடிமை கொண்டான். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு ஆட்களை நியமித்தான்..இவ்வாறு பல இடங்களில் பல குழுக்கள் தோன்றின. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது

   ஆதிக்காலத்தில் ஒரு குடும்பத்தின் வழி வந்தவர்கள் ஒரே கூட்டமாய் வாழ்ந்தனர். அதுவே குடி என்று ஆனது  ஒவ்வொரு தொழில்காரரும் ஒரே கிராமத்தில், அக்ரஹாரம், பண்டாரவாடை, சேரி, சேணியர்தெரு, கம்மாளர் தெரு என்று, தனித்தனியாக, ஒவ்வொரு சமூகமாக வசித்த போது சுற்றுச் சூழ்நிலையும்) சாதகமாக இருந்தது. இந்த இரண்டு அம்சங்களும் அழுத்தமான விதத்தில் ஒருத்தனுடைய குணத்தை அவனுடைய பரம்பரைத் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாகச் செய்து வந்தன

 .ஐந்து அறிவு  உள்ள விலங்காய்த் திரிந்த மனிதன் மனம் என்னும் ஆறறிவு கொண்ட

மக்கள் ஆகிறான், அதனால் நாகரிகத்தின் உச்சமான மொழியைப் படைத்தான். அதனால் இலக்கண இலக்கியங்கள் படைத்தான்.ஓர் அமைப்பை அமைத்து மொழியை ஆய்ந்தவன் தமிழன்  

தொல்தமிழ்(சங்க) காலம் பழமையானது மட்டுமில்லாமல் தமிழர்களின் உயர்வான வாழ்க்கை நெறிமுறைகளைப் பறைசாற்றும் காலம் எனலாம். அக்காலத்தில் கணக்கற்ற நூல்கள் தோன்றின. அவற்றுள் முதன்மையாய் முழுமையாகக் கிடைக்கப் பெற்றது தொல்காப்பியம். அதுவும் இலக்கண நூல். இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்புதல் என்பதால் தொல்காப்பியத்திற்கு முன்னரே ஏராளமான நூல்கள் இருந்துள்ளன என்பதை அறியலாம். அந்த இலக்கியங்களுக்கு முன்போ, சமகாலத்திலோ சாதிகள் இருந்தனவா? என்றும், அவை வேண்டாம் என்று எழுதி உள்ளனரா?என்று ஆய்வது இக்கட்டுரை நோக்கம்.

தமிழ் சமூகத்தில் சாதி குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இல்லை.   

தொல்காப்பியத்தில் 'சாதி' என்ற சொல் நேரடியாகப் பயன்படுத்தப்படவில்லை. அதில் 'அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நான்கு பிரிவுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.. இஃது பிறப்பால் அமையாமல், மக்களின் தொழிலை அடிப்படையாகக் கொண்ட 'குல'ப் பிரிவினையாகவே இருந்தது. தொல்காப்பியத்தில் சாதி என்ற சொல் ஒரு இடத்தில் மட்டும் வந்துள்ளது. அதுவும் நீர்வாழ்வன வகையைக் குறிக்க இச்சொல் வந்துள்ளது  

தொல்காப்பியர் காலம் வடமொழி தமிழில் கலக்கும் கால கட்டம். அச்சமயத்தில் தமிழுக்கு அரணாக இருந்து தமிழின் தொன்மையைக் காக்கத் தோன்றியதே தொல்காப்பியம்.அதனால் தான் வடசொல்லை நம்மொழியில் எழுதும் சூழல் ஏற்பட்டால் தமிழ் மரபு மாறாமல் எழுதவேண்டும் என்பதை வடசொற்கிளவி வடஎழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே (தொல்864) என்ற நூற்பா வகுத்தார். வடசொல் என்பதற்குச் சமசுகிருதம் என்று மட்டும்  எண்ணாமல் பாலி, பிராகிருதம் என்ற மொழிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.தொல்காப்பியத்திற்குப் பின்னரே வியாசர் வேதத்தைத் தொகுத்தார் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

 சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள், உள்ளூர் பெண்களுடன் கூடிப் பெற்றுக் கொண்ட பிள்ளைகளை, மற்ற உள்ளூர் பிள்ளை களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும், தம் மரபணு மற்றவ்ர்களிடமிருந்து வேறுபட்டது என்பதைக் காட்டவும்/காக்கவும்,உண்டாக்கிய ஒரு புதிய வழி.கோத்திரம். வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறைமட்டும்  இருந்தது.அவை மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம் (பிரமசரியம், கிரகசுதன், வானப்பிரசுதன், சந்நியாசி). என்பன . இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின நின்ற துணை  எனத் திருக்குறளும் கூறுகிறது

பௌத்தம் தோன்றி ஏறக்குறைய முன்னூறு நானூறு ஆண்டுகள் ஆன பிறகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகான காலக்கட்டத்தில் ஆரிய மதம் பேரளவில் மலர்ச்சி பெற தொடங்கியிருந்தது. அப்போதுதான் ஆரியர்களால் "மனுதர்ம சாஸ்திரம்" என்னும் நூல் இங்கே இயற்றப்பட்டது. அதிலிருந்தே சாதிய கட்டமைப்புகளும், அவைகளுக்கான விதிமுறைகள், சம்பிரதாயங்கள், பாகுபாடுகள் என தீண்டாமைக்குக் காரணமான அநேக அம்சங்களும் கலாசாரம் என்ற போர்வையில் பூர்வக்குடிகள் மீது போர்த்தப்பட்டதாக வரலாறு செப்புகிறது. அக்காலத் தமிழரிடை காணப்பட்ட நால்வகைத் தொழிற் பிரிவான அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்பவற்றையே, பிராமணன், சத்திரியன், வைஷ்யன், சூத்திரன் என்று பிறப்பின் அடிப்படையிலான வருணங்கள் ஆக்கி, இந்தியா முழுவதும் மனுதருமம் என்ற பெயரில் சட்டமாக்கினர். ஆரியர்கள் புகுத்திய வாழ்வியல் முறை, தமிழர்களின் வாழ்வியல் முறைக்கு பெரும் ஊறு விளைவிப்பதைக் கண்ட திருவள்ளுவர் தமிழ் மக்களை விடுவிக்கவே திருக்குறள் இயற்றினார்.- 'நால்வர்ணம் நான் உருவாக்கியதே'- என்று இறைவனின் பெயரால் சாதியை உருவாக்க, பகவத்கீதையில் இடைச்செருகல் செய்த ஆரியச் சதிக்கு மாற்றாக, சாதி வேறுபாடற்ற -ஒருகுல சமுதாயத்தைக் காண விரும்பிய வள்ளுவம் சொன்னதுதான்,"                                பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
”என்றார் – (குறள் 972 )இக்குறளானது பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று .

 , உலகில் பிறந்தவர் யாவரும் ஒரே  மாதிரியாகப் பிறந்திருந்தாலும், ஒருவர் செய்யும் தொழிலே அவருக்குப் பெருமையைத் தேடித் தருகிறது என விளக்கம்  தர முற்படுகின்றனர். அதாவது படிப்பு, தொழில் அதன் அடிப்படையில்தான்  வர்ணங்களை உருவாக்கியிருந்தனர்.. பிறப்பின் அடிப்படையில் இல்லை.  இந்த அடிப்படையில்தான் நம்பெரியவர்கள் பேசுகின்றனர். .

"ஒன்றே குலம்’ என்கிறது திருமந்திரம், "சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயகனை" என்று பேசுகிறது மாணிக்கவாசகம்.                                                           "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” - என்கிறது அப்பர் தேவாரம். தேவாரம், திருவாசகம் நெடுகிலும், சாதி, குலப் பாராட்டு முறையைச் சாடியே பாடல்கள் காணப்படுகின்றன முதன் முறையாக, பெரியபுராணம் 'சூத்திரத் தொல்குடி' என இளையான்குடி மாற நாயனாரின் நாலாம் வருணப் பிறப்பைக் குறிக்கிறது.

 

 

கீழடி அகழ்வாய்வில்   கண்டெடுக்கப்பட்ட 12,000 -இற்கும் மேற்பட்ட பொருட்களில் எதுவுமே சாதி – மத அடையாளத்தைக் குறிக்காமலிருப்பது, நமது ‘சங்க காலத்தில் சாதி இல்லை’ என்ற கூற்றினை வலுப்படுத்துகின்றது

 குறுந்தொகையிலுள்ள  .

யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே”
இப்பாடலானது தமிழர்களிடையே புறமணமுறை காணப்பட்டதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. புறமணம் உள்ள ஒரு சமூகத்தில் சாதியமைப்பு இருப்பதற்கான சாத்தியமேயில்லை

    தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக் கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன. வேடர்கள் குறவர்கள். இடையர்கள் பரதவர் என்று பெயர் வைத்தனர். மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தமிழர்களிடம் `சாதி`யினைக் கொண்டு வந்து சேர்த்ததே வேற்றினத்தவர்கள் என்பது தெளிவாகின்றது

    ஆதிக்காலத்தில் ஒரு குடும்பத்தின் வழி வந்தவர்கள் ஒரே கூட்டமாய் வாழ்ந்தனர். குடி என்று ஆனது.  சாதி என்பதும் குடி என்பதும் ஒன்றல்ல. அவையிரண்டும் வெவ்வேறானவை திருவள்ளுவர் குடிமை, குடிசெயல்வகை என்னும் அதிகாரங்களில் அதைத்தெளிவு செய்கிறார்..    

சாதி என்ற சொல்லே சங்க மருவிய காலத்திலேயே முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் வர்ணங்களை குறித்தே வருகின்றது.                                                   “நால்வகை சாதியும், நலம்பெற நோக்கி “-(வேனில் காதை41)

அடுத்ததாக மணிமேகலையில் இடம்பெறுகின்றது.                                   நாமம் சாதி..கிரியையின் அறிவது ஆகும்.”- (சமயக்கணக்கர் 23

தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் எதுவும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருந்ததாகத் தெரியவில்லை.

     இந்தியாவில் சாதி முறை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு. 200 முதல் கி.பி. 100 காலகட்டத்தில்) உருவானது. முதலில் இது தொழில் அடிப்படையிலான பிரிவாக இருந்தது பின்னர், இதுவே பிறப்பு அடிப்படையிலான பரம்பரை அமைப்பாகவும், சமூகத்தை ஏற்றத்தாழ்வாகப் பிரிக்கும் முறையாவும் மாறியது.

சாதி என்பது மக்கள் மனப் பிரிவினைத் தோற்றம் ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினையேயாகும். தற்போது ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகிறது முன்பு தொழில் வாரியான வகுப்புகள் இருந்தன, தொழில் மாறலாம் தீண்டாமையில்லை, பாகுபாடு இல்லை. பின் தொழிலை வாரிசு ரீதியாக செய்ய தொடங்கினர். பின் தொழிலின் அடிப்படையில் சாதி தோன்றி, அதன் தொடர்ச்சியாக, தீண்டாமை, உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்பின் அடிப்படையில் மாற்றம் பெற்றது

சாதீயக்கோட்பாடுகள்

1.சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும்

2.பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது எனக் குறிப்பிடுகிறது

3.சமுதாய அமைப்பே சாதியை உருவாக்கியது என்றும் மதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்

4.சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தது என்பதுவே தொழிற் கோட்பாடு.

5.உயர் சாதியினர் தமது சலுகைகளைத் தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துக்கொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.

6.ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு.

சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்பின் அடிப்படையில் மாற்றம் பெற்றது

தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய்த் தொழில் அடிப்படையில் (பரம்பரைத் தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது.

    அனைத்து உயிர்களும் பிறப்பால் சமமானவையே. . ஒருவருடைய பெருமை, அவர் செய்யும் நற்செயல்களாலும், உழைப்பாலும், தொழிலின் நேர்த்தியினாலும் மட்டுமே வேறுபடுகிறது     

    மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார். காக்கை குருவி எங்கள்சாதி என்று பாரதி கூறியதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

   தமிழ் நாட்டில் முதன்முதலில் வேளிர் என்ற இனத்தைக் கொண்டு வந்தவர் அகத்தியர் என்ற கதையை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுகிறார். அந்தக்கதை

  பார்வதி பரமசிவன் திருமணத்தைக் காண தேவரெல்லாம் ஒருசேரக்கூடியதால் மேரும் தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்கென்று அவரை வேண்டிக் கொள்ள அவரும் தென்திசை வந்தார். வரும்போது கங்காயாருழைச்சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு......... துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டுபோந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கண் இருந்தார். இப்படி அகத்தியர்தான் முதன்முதலில் சாதியைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார் என்பர்.

.     கிருஷ்ணர் காலத்திலிருந்த சாஸ்திரப்படி ஜாதிகள் பிறப்புப்படிதான் பிரிந்திருந்தன என்பது பாரத, பாகவத,விஷ்ணு புரணாதிகளிலிருந்து நிச்சயமாகத் தெரிகிறது

    ஒருத்தனின் குணம் உருவாகும் முன்பே அவன் தலைமுறை தத்துவமாக வந்த ஒரு தொழிலின் சூழ்நிலையிலேயே வளர்ந்து தானாகவும், கற்றுக் கொடுத்துத் தெரிந்து கொண்டும் அந்தத் தொழிலை எடுத்துக் கொண்டதால் குணமே தொழிலை அநுசரித்தல் ஏற்பட்டது

     ஒவ்வொரு ஊரிலும் இவர்களின் வாழிடத்திற்கு இந்த தொழிற்குழுக்கள் தங்களின் தொழிற்பெயரால் தெருக்களின் பெயர்கள் அழைக்கப்பட்டன.

     

 

    தொல்காப்பியத்தில் சாதிப்பிரிவுகள் இல்லை .திணைப்பெயரால் குறவர், வேட்டுவர், ஆயர், கானவர், உழவர், பரதவர், நுளையர், எயினர், மறவர் எனச் சுட்டப்பட்ட தமிழ்க்குடிகள் குறித்த செய்திகளை அறிய முடிகிறது. இத்தகைய குடிகளில் பார்ப்பனர் இடம்பெறவில்லை

     சங்ககாலச் சமுதாயத்தில் பல்வேறு சாதிப் பிரிவினர் இடம்பெற்றிருக்கின்றனர். நால்வகை வருணம் பேசப்பபடுகின்றன. சங்கச் சமுதாயத்தில் பார்ப்பணர்கள் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றனர் ஆனால் சாதி வெறி உணர்வு பேசப்படவில்லை ஆதிக்காலத்தில் ஒரு குடும்பத்தின் வழி வந்தவர்கள் ஒரே கூட்டமாய் வாழ்ந்தனர். குடி என்று ஆனது. இந்த குடி பெருகி இனம் , சமூகம் என்றானது. வட மொழியில் இது ஜாதி எனப்பட்டது.

    சங்ககாலத்தில் சாதி என்ற சொல்லோ அல்லது அந்தக் கருத்துருவாக்கமோ தமிழர்களிடமில்லை.. அதுதான் ‘குடி எனப்பட்டது. சாதி என்பது குடி-குலம் என்பதிலிருந்து வேறுபட்டது. தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன ஒன்றே குலம்" என்பது தமிழ் இலக்கியத்தில் மிகச்சிறந்த மனிதநேயக் கருத்துக்களை உணர்த்தும் ஒரு புகழ்பெற்ற பொன்மொழி. இந்த வரி திருமூலர் எழுதிய திருமந்திரம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது குலம் என்றால் எது? மனித குலம் மட்டுமா? அன்று வானிலே பறப்பன கண்டார்; கானிலே திரிவன கண்டார்; ஊர்வன கண்டார்; தவழ்வன கண்டார். புல் கண்டார். பூண்டு கண்டார். எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்டார். எல்லாவற்றிலும் ஒன்றே கண்டார்; யோகக் கண்களால் கண்டார். ஒன்றே குலம்’ என்றார்

மனிதன், நாய், மீன், மரம் இவை எல்லாம் புறத் தோற்றத்தில் வேறு வேறாகக் காட்சியளித்த போதிலும் அடிப்படை ஒன்றே என்கிறது சித்தர் நூல்

 

வள்ளுவர் 'குலம்' என்ற சொல்லை நான்கு குறள்களில் பயன்படுத்தி உள்ளார். ஈகை அதிகாரம் (குறள்:223), குடிமை அதிகாரத்தில் மூன்று குறள்கள் (குறள்: 956, 958 & 960). அப்பாக்களில் எல்லாம் அவர் குணத்தைத்தான் முக்கியமாகக் குறிப்பிடுகிறார்.

,'குலம் என்பது அழிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; குணத்தால் உயர்ந்து, வளம்பெறவும்' என்பதுதான் திருவள்ளுவரின் கொள்கையாகும்  

 

அன்றைய சமூகத்தில் மக்கள் தங்கள் தொழிலின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டனர். வணிகர்கள் (வைசியர்), அரசர்கள் (சத்திரியர்), வேளாளர்கள் (உழவர்கள்), மற்றும் அந்தணர்கள் என நான்கு முக்கியப் பிரிவுகள் இருந்தன. கோவலன் கண்ணகி இருவரும் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.  

மக்களின் குழுக்களில் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் சாதிகள் உதயமாயின பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
  எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே செய்யும் தொழில்களது வேறுபாட்டான். எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை எல்லா உயிர்களும் பிறப்பு சார்ந்து நிகரானவையே.

   - உலகில் பிறந்தவர் யாவரும் ஒரே  மாதிரியாகப் பிறந்திருந்தாலும், ஒருவர் செய்யும் தொழிலே அவருக்குப் பெருமையைத் தேடித் தருகிறது என விளக்கம்  தர முற்படுகின்றனர்  .

    நமது மதிப்பு நாம் செய்யும் தொழிலில் உள்ள நேர்மையில், உழைப்பில், நேர்த்தியில், செயல் தரத்தில் அடங்கியுள்ளது இவற்றையே நமது இலக்கியங்கள் பேசுகின்றன. “இனையதாதலின் எக்குலத்து யாவர்க்கும் 

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்” (கம்ப.வாலிவதை.115)
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
(தொல்  – மரபியல் –   571)

என்று சொன்ன தொல்காப்பியரோ தனக்கு முன்பே மரபியற்கூறு தமிழ் நிலத்தில் வகுக்கப் பட்டிருந்தமை அறிவிக்க “நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” என்றே முடிக்கின்றார். மெய், வாய், மூக்கு, கண், செவி என்ற ஐம்புலன்களோடும், நினைவு மற்றும் பகுத்துணர்ந்து ஒப்புநோக்கும் ஆற்றலும் கொண்ட மனத்தையும் சேர்த்து இந்த உயிர்ப் பகுப்பு வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. வள்ளுவர் சொல்லும் “எல்லா உயிர்க்கும்” என்ற சொல்லாட்சி இந்த அறுவகை உயிரினங்களைப் பற்றியதே என்று எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது

ஜாதியில் உயர்வு-தாழ்வு நிச்சயமாக இல்லை. மகான்கள் - அப்பர், நம்மாழ்வார், சேக்கிழார், நந்தனார், கண்ணப்பர் மாதிரியானவர்கள் - எந்த ஜாதியிலும் தோன்றியிருக்கிறார்கள்.
 தொல்காப்பியத்தில் நால்வகை இனங்களின் இலக்கணம் இடைச்செருகல் என்று உரைக்கும் அறிஞர்களும் உளர்.

 

 ஆக்கம்

தொல்காப்பியச் செம்மல் புலவர்ஆ.காளியப்பன் க.மு.,கல்.மு.,

தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் பேரூராதீனம்

பூலுவபட்டி(அஞ்) கோம்புத்தூர்641101

அலைபேசி+91 9788552993 Mobile  No 9788552993(whatsapp) 8610684232

Email: amuthankaliappan@gmail.com

Website:      www tholkappiyam.org 

  blogspot :               pulavarkaliappan.blogspot.in எனது கட்டுரைகள் படிக்க