Saturday, 15 August 2026

                     கொற்றவை

     இன்று கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்னும் ஒரு பிரிவு சொல்லப்படுகிறது. தொல்காப்பியம் பாலை நிலத்தின் கடவுளாகக் கொற்றவையை  வெளிப்படக் குறிக்கவில்லை எனினும், புறத்திணையில் ஒருதுறையாய்க் கொற்றவைநிலை என்பதனைப் படைத்துக் காட்டுகிறது.                    

வெட்சி தானே குறிஞ்சியது புறனே(தொல்1002) வெட்சியின் ஒழுக்கம் நிரை கவர்தல். ஆனிரை கவரச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத்தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே  கொற்றவை நிலை எனப்படுகின்றது  .

 ‘‘மறங்கடை கூட்டிய  குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே’’

என்பது தொல்காப்பியம். மாற்றாருடன் போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றி வேண்டி வணங்கிச் செல்லும் நிலையே ‘கொற்றவை நிலை’ என்பதாகும் 

      கொற்றவை என்பது பழந்தமிழர் இலக்கியங்களில் போற்றப்படும் வீரத்தின் அடையாளமான தாய் தெய்வம் மற்றும் வெற்றிக்குரிய கடவுள் ஆவார். "கொற்றம்" என்றால் வெற்றி, "அவ்வை" என்றால் தாய் என்று பொருள்படும். கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாகத் தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.        

    கொற்றம் – வெற்றி, கொற்றவை – வெற்றியைத் தரும் தாய் தெய்வம். நிலை – நிலைமை, முறைமை. வழிபடும் முறைமை. பல வகைப்படும். அவை, பராவல், பழிச்சுதல், பலி நேர்தல், சூளுரைத்தல் என்பனவாம்.. கொற்றவையைப் பராவியது  கொற்றவை நிலை எனப் பெற்றது . கொற்றவை ,ஞானப் பாவை; வெற்றியைத் தரும் சூலப் படையினை உடையவள். சற்றும் கருணையினின்றும் அகலாதவள். அவளது அருள் சிறப்பை வியந்து உரைப்பது கொற்றவை நிலை என்னும் துறையாம்

கொற்றவை

மழை வளம் இல்லாத பகுதியில் வாழும் மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும், அதற்குக் கைமாறாக வீரத்தன்மைக்கு அடையாளமான அவிப்பலியை எதிர் பார்ப்பவள் என்றும், நோலை  பொரி, அவரை, மொச்சை இவற்றின் புழுக்கல் (சுண்டல்), பிண்டி(அவல்), நிணம், குருதி, குடர், நெய்த்தோர் என்பவற்றால் நிறைந்த மண்டையை வலக்கையில் ஏந்தியவள். என்றும், மறவன் ஒருவன் ஆகோள் கருதுவானாயின் அவனுக்கு அருளவும், பகைவர் தமது பகை நீங்கவும் முற்பட்டு வருவாள் எனப். புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது   .

      கொற்றவையாம் தெய்வம், தம்முடைய பகைவரின் அரண் அழியும்படி, தம் தலைவனின் படை புறப்படுவதற்கு முன்பாகப் புறப்பட்டு எழுந்து சென்று, வெற்றியை அருளுகின்றாள் என்று
அவளது அருள்நிலையைப் போற்றிப் பராவுகின்றனர்.
கொற்றவை மறவர்களுக்குத் தொழிலில் வெற்றியைக் கொடுப்பவள் என இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. கள்ளர்‌, மறவர்களுடைய வழிபடு கடவுளான கொற்றவை ஆனிரை கவரும்‌ வெட்சிப்‌ போர்த்‌ தெய்வமாகும். பாலை நிலத்து (வேடுவர்‌) மறவர்‌ மக்களைக்‌ கள்ளர்‌ என்று சுட்டுகின்றது. பாலை நில மாந்தராகிய கள்ளர் மறவருக்கு, அவரது போர்த் தொழிலில் கொற்றத்தைத் தருபவள் கொற்றவை.. கள்ளர், மறவர் மற்றும் எயினர் (எயினர் என்பவர்கள் பாலை நில வேட்டுவர்கள்) கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. வேட்டுவர் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும், அவர்கள் ஐவகை நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர். கொற்றவை என்பவள் குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாகச் சில பழந்தமிழ் நூல்களிலே குறிப்பிடப்பட்டாலும், பிற்காலத்தில் கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய தெய்வமாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறாள்.. பாலைக்கு என்று தனி நிலம் இருந்திடாமல் முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என ஆனதால்குறிஞ்சி நிலத்தில் வழிபட்டதாகக் கருதப்படும் கொற்றவை பாலை நிலக் கடவுளாக ஆகியிருக்கலாமெனக் கருதவும் வாய்ப்புண்டு.       

         தொடக்கத்தில் மறவர் தமது தொழிலுக்கு வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகவே கொற்றவையைக் கருதி வழிபட்டனர்.. பழந்தமிழ்க் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டாள். கலித்தொகை முருகனைச் சிவனின் மகனாகக் காட்டுகின்ற போதிலும், சிவனுக்கும், கொற்றவைக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிச் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்கள் எதிலும் பேசப்படவில்லை

   கொற்றவை கானகத்தில் உறையும் மறவர்களுடைய கடவுள் ஆவாள். எனவே "ஓங்குபுகழ் கானமர் செல்வி" என அகநானூறு (345.4-5) குறிப்பிடுவது கொற்றவையையே எனலாம். அத்துடன் குறுந்தொகையில் "விறல் கெழு சூலி" எனவும், பதிற்றுப்பத்தில் "உருகெழு மரபின் அயிரை" எனக் குறிக்கப்படுவதும் கொற்றவையையே என்பது சில அறிஞர் கருத்து.. கலித்தொகையில், தலைவனின் தன்னிடம் கூறும் வஞ்சக வார்த்தைகளுக்கு உவமை கூறுவதாக, "பெருங்காட்டுக் கொற்றவைக்குப் பேய் நொடி சொல்வதுபோல" என்னும் பொருள்படும் பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்னும் வரி உள்ளது.. பரிபாடலிலும், நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஒரு பெண் என்ற வரியில் கொற்றவை பற்றிய குறிப்பு வருகின்றது. திருமுருகாற்றுப்படை, தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகனைக் "கொற்றவை சிறுவ",  "பழையோள் குழவி" என்னும் தொடர்களால் குறிப்பிடுகிறது.. இது கொற்றவையை முருகக் கடவுளின் தாயாகப் பழந்தமிழர் கருதியதைக் காட்டுவதுடன், "பழையோள்" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் கொற்றவை வழிபாட்டின் தொன்மையும் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம். இதிலிருந்து, திருமுருகாற்றுப்படைக்கு முந்திய பெரும்பாணாற்றுப்படையில் "சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும் அழகையும் உடைய இறைவி] என்னும் பொருள்படும். "கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி  என்னும் குறிப்பும் கொற்றவையையே குறிக்கிறது என்பது வெளிப்படை.. கொற்றவையைக் கலித்தொகை கொற்றி எனக் குறிப்பிடுகிறது சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னோனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவன் புலவுச்சோறு தந்து அயிரை (கொற்றவை) தெய்வத்தை வழிபட்டான் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது சோழமன்னர்களில்   கடாரம் கொண்டான் என்று புகழப்படுகிற முதலாம் இராசேந்திரன் தனது ஆட்சிக்காலத்தில் காஞ்சியில் ‘கருக்கினிலமர்ந்தாள்’ என்னும் பெயரில் கொற்றவைக்குக் கோவில் கட்டினான் என்று ஆய்வாளர் ஏ.ஏகாம்பரநாதன் அவர்கள் தனது ‘கோயிலும் இறைவழிபாடும்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்..      

    கொற்றவையின் இயல்புகள்.. சங்க காலத்துக்குப் பிற்பட்ட சங்க மருவியகால இலக்கியங்களில் கொற்றவை பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரமே கொற்றவை பற்றிய விரிவான பல தகவல்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது பற்றிய தகவலும், அத்தெய்வம் பற்றிய விளக்கமும் காணப்படுகிறது.. மழை வளம் இல்லாத பகுதியில் வாழும் மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும், அதற்குக் கைமாறாக வீரத்தன்மைக்கு அடையாளமான அவிப்பலியை எதிர்பார்ப்பவள் என்றும், அவள் நெற்றிக்கண்னை உடையவள், விண்ணோரால் போற்றப்படுபவள், குற்றம் இல்லாத சிறப்புக் கொண்ட வான நாட்டினை உடையவள் என்றும் கொற்றவையின் இயல்பும் சிறப்பும் விவரிக்கப்படுகின்றன

வெண்ணிறப் பாம்புக்குட்டி போன்ற பொன் இழையால் கட்டப்பட்ட நீண்ட சடைமுடி. பிறைச் சந்திரன் போலத் தோற்றமளிக்கும்படி அச்சடை முடியிலே சாத்திய காட்டுப் பன்றியின் வளைவான கொம்பு. கழுத்தில், அஞ்சாத வலிமை கொண்ட புலியின் வாயைப் பிளந்து பெற்ற அதன் பற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புலிப்பல் தாலி. இடையில் வரிகளும் புள்ளியும் பொருந்திய புலித்தோல் ஆடை. கையிலே வில் ஆகியவற்றுடன் கூடி நீளமான முறுக்கிய கொம்புகளையுடைய கலைமான் மேல் ஏறி இருக்கும் தோற்றமே கொற்றவையின் தோற்றமாகக் காட்டப்படுகின்றது.  கொற்றவையின் ஊர்தி கலைமான் என்கிற குறிப்பு சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரியில் காணக்கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்திற்கு பிறகு சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தான் அருளிய

 

 

கோளாறு திருப்பதிகத்தில் கொற்றவையின் வாகனமாக கலைமான் இருந்துள்ளதை, ‘கலையதூர்தி’ என்று தன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்

       கொற்றவைக்குப் பலி கொடா விட்டால் ஏற்படக்கூடிய நிலையையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.. மறவரின் மன்றங்கள் பாழ்படும், வழிப்பறி வாய்ப்பு இல்லாமல் மறவர் சினம் குறைந்து செருக்கு அடங்குவர், கொற்றவை மறவரின் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள், கள் குடித்து மகிழ்ந்து வாழும் வாழ்வு கிடைக்காது என்று மறவரின் தொழிலும், இயல்பும் வாழ்வும் பாழ்படும் நிலை கூறப்படுகின்றது.  

புறப்பொருள் வெண்பாமாலையில் கொற்றவையின் தோற்றம்

 இவள் சிங்கக் கொடியும், பசுங்கிளியும் ஏந்தியவள். கலைமானை ஊர்தியாக உடையவள். பேய்களைப் படையாகப் பெற்றவள். ஒளியோடு வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள். நோலை (எள்ளுருண்டை), பொரி, அவரை, மொச்சை இவற்றின் புழுக்கல் (சுண்டல்), பிண்டி (அவல்), நிணம், குருதி, குடர், நெய்த்தோர் என்பவற்றால் நிறைந்த மண்டையை வலக்கையில் ஏந்தியவள். மறவன் ஒருவன் ஆகோள் கருதுவானாயின் அவனுக்கு அருளவும், பகைவர் தமது பகை நீங்கவும் முற்பட்டு வருவாள். அரசனொருவன் படையெடுக்கும்போது அவனது பகைவர் கெடுமாறும் முற்பட்டு வருவாள்  பாவை, கிளி, காட்டுக்கோழி, மயில், பருந்து, கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்து மான் மீது கொற்றவையை உலாவரச் செய்து, பின்னால் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி, மணமுள்ள சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, புகை முதலியவற்றைத் தாங்கியபடி பெண்கள் வருவர். வழிப்பறியின் போது கொட்டும் பறை; சூறையாடும்போது ஊதப்படும் சின்னம், கொம்பு, புல்லாங்குழல் என்பவை முன்னால் இசைத்துக்கொண்டு வருவர்.                                                                   

கொற்றவை வழிபாடு

    உலகின் பல்வேறு பகுதிகளில் பாபிலோனியா, சுமேரியா, கிரேக்கம் மற்றும் எகிப்து போன்ற பல நாடுகளில் தாய் தெய்வத்தைத் தாயாகவும், என்றும் அழியாக் கன்னியாகவும் உருவகப்படுத்தி வணங்கியுள்ளனர் என்பதற்கு பல்வேறு சான்றுகள் காணக்கிடைக்கிறது.

  சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகிலுள்ள தூதை கிராமப்பகுதியில்‌ முற்காலப் பாண்டியர்‌ காலத்தினைச்‌ சார்ந்த கொற்றவையின்‌ சிற்பம்‌ ஒன்று வழிபாட்டில்‌ உள்ளது. இது எருமைத் தலைமீது எட்டுக் கரங்களுடன்‌ எழிலுடன்‌ காட்சியளிக்கும்‌ எட்டாம்‌ நூற்றாண்டு முற்காலப்‌ பாண்டியர்‌ சிற்பம்‌.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொற்றவை பெயர் கொண்ட பிற்காலத்தில் கொற்றிகோடு என்ற பெயர் கொண்ட மறவர் ஊர் உள்ளது.. இந்த ஊரில் உள்ள மக்கள் கொற்றவை வழிபாட்டைச் செய்து வந்தவர்கள்.

    பொன்னமராவதி பக்கத்தில் பாலைக்குறிச்சி என்ற ஊரில் பழங்காலத்து கொற்றவை கோவில் உள்ளது.. இந்த தேவதையின் பெயர் ஸ்ரீ அழகுநாச்சியம்மன். இது அம்பலக்காரர்கள் என்னும் கள்ளர் மரபினரால் பேணப்பட்டு வரும் கோயிலாக உள்ளது. இன்றும் கொற்றவை தெய்வம் வணங்கப்பட்டுதான் வருகிறது!அம்மன்,மாரியம்மன்,காளி,துர்க்கை என்ற பல்வேறு பெயர்களில் நாம் கொற்றவையை வணங்கி வருகிறோம். பதிவு தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993

 .