கவிதை முழக்கம்!
திருக்குறளைத்
தேசிய நூலாக்கு.......
உலக மானுடம் உயர்த்திப் பிடித்த
உன்னதப் பனுவல்
திருக்குறளே
கலங்கரை விளக்காய் கவின்பெற் றவனியின்
கண்ணொளி யான அரும்பொருளே
நிலமகள் மகிழ்ந்திட நிறைவுகள் பேசி
நித்தில மாகும் தெளிவருளே
அலையலை யாயெழும் அன்பின் வடிவாம்
அகிலத்தை வடித்திடும்
பெருங்குரலே.
வேதங்கள் எல்லாம் மதங்களாய்ப் பிளந்து
வேள்விகள் நூறாய்
வெடித்தனவே
பேதங்கள் வீழ்த்தி மனிதங்கள் வாழ்த்தும்
பெருமையைத் திருக்குறள்
வடித்ததுவே
யாதும் ஊரென அனைவரும் உறவென
அகிலத்தை ஒன்றெனக்
கூட்டியதே
தீதும் நன்றும் பிறர்தர வாராத்
தெளிவினை நெஞ்சினில்
நாட்டியதே
குழலையும் யாழையும் விஞ்சிய தாக
குழந்தைகள் மழலையைக்
கொஞ்சியதே
பழமையும் புதுமையின் ஊற்றெனச் சொல்லி
பண்பலை விரித்திடும் சஞ்சிகையே
தொழுத கையுள்ளும் படையொடுங் கிடுமால்
துரோகங்கள் காட்டித்
திருப்பியதே
அழுதகண் ணீரே செல்வத்தைத்
தேய்த்திடும்
அரும்படை யென்றே
நிறுவியதே.
ஈன்ற பொழுதினும் அன்னையர் மகிழ்கிற
இனிய தருணத்தைச் சொல்லியதே
சான்றோன் என்றே தன்மக்கள் உயர்வதே
தாயின் மகிழ்வென அள்ளியதே
சான்றாண் மைதான் மேதைமை யல்ல
தன்னின் குற்றங்கள்
ஒப்புவதே
ஆன்றவிந் தடங்கி அகிலத்தை நடத்திட
அறிவின் வழியைச்
செப்பியதே.
எண்ணும் எழுத்தும் கண்ணெனச் சொல்லி
ஏற்றங்கள் ஆயிரம்
படைத்ததுவே
மண்ணக மகத்துவம் மாண்புகள் பேசி
மானுடம் உயர்வென
வடித்ததுவே
எண்ணங்கள் உயர்ந்திட
ஏற்றங்கள் மலர்ந்திடும்
என்பதை நமக்கு உணர்த்தியதே
வண்ணங்கள் பலவாய் வாழ்க்கையை விரித்து
வளங்கள் பொலிய
நிறுத்தியதே.
அறம்பொரு ளின்பமாய் அகிலத்தை வகுத்து
ஆலம் விழுதென வளர்த்தியதே
புறம்அகம் பொலிந்திடப் பொருண்மையை ஊட்டி
பொல்லாங் குகளைத்
தளர்த்தியதே
மரமென மனிதப் பண்புக ளற்ற
மாந்தரின்
நெஞ்சை இடித்ததுவே
வரமென இயல்பு வாழ்க்கையைச் சொல்லி
வஞ்சகப் போக்கினை முடித்ததுவே
இருவரி கொண்டு முந்நெறி கண்டு
இதய வாசல்கள் திறந்ததுவே
அரும்பிப் போதாய் மலர்ந்திடும் இல்லறம்
அன்பினைப் பேசிடச்
சிறந்ததுவே
திரும்பிப் பார்நீ தெளிவுகள் பிறக்கும்
சிற்றோ டைபோல்
வாழ்வொளிரும்
பெரும்புகழ் குவிந்திட பேதைமை அவிந்திடப்
பேசிடு வாயுன்
தாழ்வுதிரும்.
பாரதம் பேசிப் பார்அத மாகிடும்
பான்மைய தான பாரதமே
நாரதர் கலகமாய் நஞ்சுகள் கொட்டி
நாசங்கள் விளைக்கும்
மதரதமே
வாரணம் ஆயிரம் வழங்கிய திருக்குறள்
வண்ணத்தில் தேசியம் மலராதா?
காரணம் கூறிக் காரிருள் தேக்கும்
கயமைப் பொழுதிங்கு போகாதா?
முப்பத் தெட்டு அறஅதி காரம்
முப்பால் வடித்தது எதற்காக
தெப்பத் தேரென மாந்தர் ஒற்றுமை
தேடிக் குவித்திடு வதற்காக
செப்படி வித்தைகள் தெய்வங்க ளாகிடத்
தேங்கிடும் பேதங்கள் ஒருகோடி
அற்புத ஒளியில் அவனியே பொலிந்திட
அய்யன் வள்ளுவம் உயிர்நாடி
பொருளதி காரம் எழுபது என்றே
பொலிகிற அரசியல்
பூத்திடுமே
அருளெனும் அன்பீன் குழவியென் றாகி
அரியணை மக்களைக்
காத்திடுமே
ஒருவருள் ஒருவர் இரண்டறக் கலந்து
ஒப்பற் றதுவாம் இல்லறமே
இருபத் தைந்து அதிகா ரங்களில்
இன்பங்கள் மலர்ந்திடும்
நல்லறமே.
விவிலியம் படிக்கக் கிறித்துவ னாவோம்
விந்தியம் கடந்து போவோமே
செவிமகிழ்ந் திடவே குர்ஆன் ஓதிடச்
சிறந்தொரு இசுலாம் ஆவோமே
புவிசிறந் திடவென வேதங்கள் பரப்பி
பொன்னென இந்துவும் ஆவோமே
கவின்பெற் றுயரும் மனிதன் ஆகிட
கண்ணொளி யாகும்
திருக்குறளே
வான்மறை வள்ளுவம் தேசிய நூலென
வழிவகை காண்போம் நெஞ்சுயர்த்தி
நான்மறை போற்றும் நல்லவர் எல்லாம்
நயம்பட உரைக்கட்டும்
கையுயர்த்தி
தேன்மழை பொழிய சர்க்கரைப் பந்தலாய்
திருக்குறள் பொலியட்டும்
காசினியில்
கான்மயில் தோகை விரித்தெழு தல்போல்
கண்மலர்ந் தொளிரட்டும்
தேசியமே.
கவிஞர் பூவரசி மறைமலையன்,126,அசோக்நகர் மேல்பகுதி,
49, கவுண்டம் பாளையம்,
கோவை.30
அலைபேசி 8144415956
No comments:
Post a Comment