தெரிந்த வரிகள் தெரியாத செய்திகள்
9-07-17
கற்றோன்றி மண்தோன்றாக்
காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி.
தமிழரின் பழமையையும் பெருமையையும் கூறும் போது
இந்த வரியைப் பயன்படுத்துகிறோம்.அதாவது கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே
தமிழன் வாளோடு தோன்றி விட்டான்.என்று அவன்வீரத்தை மிகைப்படுத்திக் கூறப் பயன்படுத்துகிறோம்.அப்படிக்
கூறும்போது வேறு சிலரோ கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பு மனிதன் எப்படித்
தோன்றி இருக்க முடியும். அதுவும் வாளோடு தோன்றினான் என்பது பச்சைப் பொய்யல்லவா? இப்படிச்சிலர்.
ஆகவே
இந்த வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டது
என்பதை நாம் ஆராய வேண்டும்.இந்த வரி பண்டைய தமிழ்மக்களின் கல்வி செல்வம், வீரம்
,புகழ்,கொடை இவற்றைப் பற்றி எடுத்துக்கூறும் புறப்பொருளை எடுத்துரைக்கும்
புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலே வரும்வரி. இந்த
நூலை இயற்றியவர் ஐயனாரிதனார்.
ஓர் அரசன் வேறொரு நாட்டின்
மீதுபோர் தொடுக்க விரும்பினால் முதலில் எதிரி நாட்டின் எல்லை ஓர ஊருக்குள் சென்று
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும்
பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிருக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மினென (புறநானூறு)
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்“
அதில் கூறப்பட்ட பசுவைத் தவிர மற்ற எல்லாரும் மனிதர்கள்.எனவே அம்மாடுகள் போரில் மடியாமல்
இருக்கக் கருதி அவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்துவருவர்.அப்படிப்பிடித்து வந்த
பசுக்கூட்டங்களை எதிரி நாட்டினர் மீட்டுச் செல்வர். அந்த வீரர்களைப் பாராட்டும்
போதே இந்த வரிகள் எழுதப்பட்டன.அதற்கு இலக்கணம்
மண்திணி ஞாலத்துத் தொன்மையும்
மறனும்
கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று
(புறப்பொருள்வெண்பாமாலை44)
அந்த சூத்திரத்திற்கு எடுத்துக்காட்டாக எழுதப்பட்ட செய்யுள் இது. அந்தப்பாடல்
.
பொய்யகல நாளும்
புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த
வயங்கொலிநீர்---- கையகலக்
கற்றோன்றி மண்தோன்றாக்
காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி.
இதன்பொருள் உலகம் தோன்றிய போது முழுவதும் நீராலேதான்
சூழப்பட்டிருந்தது. சிறிது சிறிதாக நீர் வற்றும்போது முதலில் தெரிந்தது மலைதான்
கல் என்றால் மலை முதலில் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலம் தோன்றிய பிறகே மண் நிரம்பிய முல்லையும் மருதமும் தோன்றின.ஏனைய நிலங்கள்
தோன்றுவதற்கு முன்பே குறிஞ்சியில் உள்ள மக்கள் வேட்டையாட வாளும் வேலும் வைத்திருந்தனர்.
இதைத்தான் வாளோடு தோன்றிய மூத்த குடி என்றனர்.இப்படி ஆரம்ப காலத்திலேயே வாளோடு
இருந்தவன் பொய்மை நீங்க நாள்தோறும் தன் மறப்புகழினை வளர்த்துக் கொள்வதில் எந்த
வியப்பும் இல்லை.
இப்பாடலில் எங்கும் தமிழர் என்ற சொல் வரவே இல்லை.குடிமக்களின் நிலையை
உரைப்பதே இப்பாடலின் நோக்கம். குடிமக்கள் என்றால் ஆண்,பெண் என்னும் இருபாலரையும்
குறிக்கும்.இந்தப்பாடலில் ஆண்மக்களின் வீரம் போற்றப்பட்டது.
இன்னொரு பாடலில் பெண்மக்களின் வீரம் போற்றப்படுகிறது.அந்தப்பாடல்
இதுதான் யானை தாக்கினும் அரவுமேற் செலினும்
நீல்நீற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை உடையவளாக இருந்தாள்.அதாவது மதம்கொண்ட
யானை தாக்க வந்தாலும் கொடிய விடமுடைய பாம்பு மேலே ஊர்ந்து சென்றாலும், நீலநிற
வானத்திலே கரிய மேகங்கள்பெரிய இடியை இடித்தாலும் கர்ப்பம் (சூல்) கொண்ட மறப்பெண்
அஞ்ச மாட்டாளாம்.
இதைத்தான் தொல்காப்பியம் குடிநிலை என்று கூறுகிறது.இப்பாடல் மூலம்
ஆணும் பெண்ணும் நிகர் என்றே அறியலாம். இவ்வாறு நம்முன்னோரின் வாழ்க்கை நெறிமுறைகளை
எடுத்துரைக்கும் தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியங்களையும் போற்றுவோம்.
ஆக்கம்:தொல்காப்பியச்
செம்மல்
புலவர்.ஆ.காளியப்பன்
முத்தம்மாள் நிலையம்
79(1)பூலுவபட்டி(அஞ்)
கோயமுத்தூர் 641101
அலைபேசி 9788552993
No comments:
Post a Comment