வாழ்க நீ!
உலகமெனும் பள்ளியிலே
நான்படிக்கும் புத்தகம்நீ!
உடன்பிறப்பே கொல்லிமலைத்
தேன்போன்ற தத்துவம்நீ!
கலகமெனும் கடப்பாரைக் கசையாத மாமலைநீ!
காலத்தால் அழியாத தனித்தமிழ் பாநிலைநீ!
திலகமெனும் கழகத்தின் தொண்டர்களின் முதல்வன்நீ!
தீந்தமிழ் தாய்க்குநிதம் தாள்பணியும் புதல்வன்நீ!
விலகவரும் பிரிவினிலே வளர்கின்ற நட்பும்நீ!
உலவிவரும் தென்றலெனத் தவழ்ந்துவரும் தட்பம்நீ!
என்போன்றோர் இதயத்தில் எழுதிவைத்த சித்திரம்நீ!
என்னினத்தில் எழுச்சியை உரைக்கின்ற பத்திரம்நீ!
பொன்போன்று சோதனையில் ஒளிர்கின்ற தங்கம்நீ!
என்னறிவை நன்னெறியில் வளர்க்கின்ற சங்கம்நீ!
அன்றிருந்து இன்றுவரை அயராது உழைப்பவன்நீ!
அண்ணாவின் சொல்லெல்லாம் அமுதமென்றே திளைப்பவன்நீ!
இன்றிருந்து நாளையிலா இலக்கணத்தைக் கடந்தவன்நீ!
இதயமெனும் நிலையத்தில் இலக்கியமாய்ப் படர்ந்தவன்நீ!
பெரியாரின் பள்ளியிலே பகுத்தறிவைக் கற்றவன்நீ!
பேரறிஞர் அண்ணாவின் பண்பிதயம் பெற்றவன்நீ
நரியாரின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வல்லவன்நீ!
நாடுநலம் பெற்றிடவே பாடுபடும் நல்லவன்நீ!
விரிவான அறிவிற்கு விளக்கமென நிற்பவன்நீ!
அறியாமைப் புண்ணாற்றும் அருமருந்து விற்பவன்நீ!
அரிதான செல்வமென நான்மதிக்கும் நிதியும்நீ!
அழகுதமிழ் சொல்லின்பத் தேன்வதியும் நதியும்நீ!
புறப்பாடல் மறத்தினிலே புதுநோக்குக் கொண்டவன்நீ!
அறப்பாடல் அகத்தினிலே எழுதிவரும் புலவன்நீ!
அறிவுவிதை அகம்ஊன்ற உழுதுவரும் உழவன்நீ!
சிறப்பாடும் சிந்தனைக்குச் சிறப்பாகும் சாவியும்நீ!
செந்தமிழில் பற்றுடையோர் மறக்காத காவியம்நீ!
மறப்பாடல் நான்பாட மதியிருக்கும் தலைவன்நீ!
மாறாத புகழ்கூடும் விதியிருக்கும் கலைஞன்நீ!
No comments:
Post a Comment