Thursday, 13 July 2017

வள்ளுவன் தந்த வாழ்வு--கவிதை



வள்ளுவம்     தந்த வாழ்வு
             (மரபுக் கவிதை : கலிவிருத்தம்)
உலகெலாம்    உய்யவே       உயர்வழி       காட்டும்
நிலமிசை      புகழ்பெற       நீதியை        நாட்டும்
கலக்கம்       நல்கும்        ஊழ்தனை      வெல்ல
பலமதைத்          தருவதும்      வள்ளுவர்      குறளே.        1

அறமொடு     பொருளும்      அளவிலா      இன்பமும்
மறவழி       நீங்கி          மன்பதை       நிலைக்க
திறன்மிகு     வாழ்வும்       செழிப்பும்      சேரவே
உறவினைக்    கூட்டும்        வள்ளுவர்      குறளே.        2

இன்சொல்     ஈகை          விருந்தொடு    நன்றியும்
கன்னல்       மொழியார்      காதலர்        ஊடலும்
மின்னலாய்    மறையும்      மானிடர்       வாழ்வும்
நன்றாய்       உரைப்பதும்    வள்ளுவர்      குறளே.        3        

இல்லாள்      இயல்பும்       இல்லறச்       சிறப்பும்      
நல்லறம்      புரியும்         துறவியர்       ஒழுக்கமும்
அல்லல்       போக்கும்       ஆன்றோர்      துணையும்
எல்லாம்       சொல்வதும்    வள்ளுவர்      குறளே.        4          

அமைச்சர்     தூதுவர்        அரணது       வலிமையும்
நமையாள்     மன்னன்       நாட்டின்        சிறப்பும்
இமையாக்     கண்ணுடை         படையின்      செறுக்கும்
அமைத்துச்         சொல்வதும்    வள்ளுவர்      குறளே.        5

மதுவும்         சூதும்            மயக்கும்        கள்ளும்
பொதுமனப்      பெண்டிர்         பொல்லாக்      கயமையும்
இதுவெலாம்     நீங்கி            உழவால்        உயர
புதுவழி         புகட்டும்         குறளே          வாழி.            6


No comments:

Post a Comment