உலகத் தமிழரே! ஒன்று கூடுவோம்!
முல்லையும் மருதமும் முகிழ்க்கு முன்பே
கல்லாம் குறிஞ்சியில் கனையொடு திரிந்தவன்
மற்றவர்
மரத்தில் வாழ்ந்து போது
மாளிகை கட்டி வாழ்ந்தவன் தமிழன்
எண்ணையும் எழுத்தையும் எழுச்சியால் கண்டான்
மண்ணைத் திருத்தி மருதம் ஆக்கினான்
திரிபுறம் எரித்த விரிசடைக் கடவுளும்
குன்றம் தடிந்த குமரக் கடவுளும்
மன்றம் அமைத்து வளர்த்த தமிழில்
இலக்கிய இலக்கணத் தோப்பும் செழித்தன
தொல்காப்
பியமரமும் தோன்றி வளர்ந்தது
பாட்டும் தொகையும் பாங்காய் வளர்ந்தன
உலகப் பொதுமறை உரைத்தது அறத்தை
வலத்தையும் வளத்தையும் பெற்ற தமிழன்
அகம்புறம் என்று அமைத்தான் வாழ்க்கையை
தொடியோள் பௌவமும் நெடியோன் குன்றமும்
கொடிகட்டிப் பறந்த கொள்கைத் தமிழன்
பன்மலை அடுக்கத்துப் பஃறுளிக் கரையில்
நற்கலை பலவும் நயமுடன் வளர்த்தான்
கிரேக்கம் ரோமும் கீழ்த்திசை நாட்டினர்
கொற்கை முத்துவைக் கொள்ளக் குவிந்தனர்
அருந்தமிழர் பெருமையை அடுக்கிச் சொல்ல
ஆதி சேடனின் ஆயிரம்நாப் போதா
பாரதப் போரில் பெருஞ்சோ றிட்டான்
பாரத எல்லையில் தன்கொடி நாட்டினான்
மதுரைக் கோவில் மல்லைச் சிற்பமொடு
கல்லணை கட்டி காவிரி தேக்கினான்
பெரிய கோவிலும் பேரிசைத் தூணும்
கடல்கடந்து கம்போடிய நாட்டில் தானே
காசினி வியக்கும் கற்கோவில் தன்னை
கட்டிய தமிழனின் கற்பனை போற்றுவோம்
சிந்துவில் வாழ்ந்து சிறந்த தமிழன்
இந்தியாக் கடந்து எங்கும் பரவினர்
பரவிய தமிழரை பாங்குடன் இணைக்க
பாடுபடும் பண்பாளர்க்கு தோள்கொடுத்து
நிற்போம்.
No comments:
Post a Comment